எங்களின் சமூகத்திற்கு, மற்றைய இடம் பெயர்ந்த சமூகங்களைச்சார்ந்தவர்கள் போன்று,எமது இங்குள்ள சமூகத்திற்கோ, அல்லது தாய்நாட்டில் சொல்லொண்ணா அடங்குமுறைக்குள் புழுப்போல வாழும் எங்களின் சமூகத்திற்கோ உதவவேண்டும் என, ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலில் ஆளுக்கொரு நிறுவனமோ, உதவி நிறுவனமோ, கோயிலோ, பள்ளிக்கூடமோ என்று பலவிதமான சமூக சேவையில் ஈடுபட்டுக் கொண்டு, அதிலேயே அவர்களுக்கென தனியாக இருக்கும் நேரத்தில் (Me-Time)) பெரும் பகுதியையோ அல்லது முழுநேரத்தையுமோ இதற்கெனச் செலவு செய்கிறார்கள்.
முன்பு ஒருவர் ஒரு குடும்பத்தில் ஒரு சமூக சேவையில் ஈடுபட்டார் என்றால் மனைவி, பிள்ளைகள், மாமன், மச்சான், ஒன்றவிட்ட சகோதரங்கள் என்று எல்லோருமே இப்படி நல்ல வேலை செய்கிறார் என்று உதவ முன்வருவார்கள். இப்போ காலம் முன்னேறிவிட்டதோ, பிள்ளைகள் வளர்ந்து அவர்களும் ஏதாவது செய்யவேண்டும் என்று நினைகிறார்களோ, அல்லது பிரச்சனை கூடித் தேவைகளும்அதிகரித்து விட்டதோ என்னவோ, ஒரு குடும்பத்தில் பிள்ளை ஒரு உதவிநிறுவனத்திற்கென வேலை செய்தால், மனைவி இன்னெரு கோயிலோ, நிறுவனமோ என்று நிற்க, கணவர் வேறு ஒரு உதவிநிறுவனமோ, பள்ளிக்கூடமோ என்று நிற்க, மாமன் மச்சான்மாரும் ஆளுக்கெடு பழையமாணவர் சங்கம், ஊர் சங்கம் என்று நிற்க ஆகமொத்தம் ஒரு குடும்பத்திலேயே பல நிறுவனங்களில் ஈடுபாடாக இருக்கிறார்கள். அதனால் என்ன நட்டம், ஊருக்கும்,நாட்டுக்கும் நன்மைதானே என்று சொல்லலாம். எங்கு பிரச்சனை வருகிறது என்றால், குடும்பத்தின் பொது நேரம் (Family Time) இல்லாமலோ, குறைந்தோ போய்விடுகிறது.
அத்தோடு ஆளுக்கொரு நேரத்தில், இடத்தில் அலுவலாக இருப்பதால் ஒரு பொதுவான குடும்ப விடுமுறையைக் கூட சிந்திக்க முடியாது இருக்கும். அதை விட கொடுமை, சில நேரம் ஒரு குடும்ப உறுப்பினருக்கோ, அல்லது கணவன், மனைவியில் ஒருவருக்கோ இதில் ஒன்றிலும் ஈடுபாடு இல்லாவிட்டால் அவர் மனதளவில் தனிமையை அனுபவிக்க வேண்டியிருக்கும், அது குடும்ப பிரிவுக்கு இட்டுச்செல்லலாம். அவரின் உடலளவில் அதாவது வெளியே பார்க்கும் பொழுது, குடும்பத்தில், அவர் ஒருவர்தான் அதிக நேரம் உள்ளவராக படுவதால் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் தங்கள் விடையங்களுக்கு அல்லது நிகழ்வுகளுக்கு வரும் படி வற்புறுத்தலாம் அல்லது குடும்பத்தில் உள்ள எல்லா வேலையையும் அவரே செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கலாம் அல்லது குடும்பத்தில் பெறுமதி இல்லாத உறுப்பினரான நடத்தலாம்.
இது ஒருபக்கம் இருக்க நிகழ்வுகளுக்கு பணம் சேகரிப்பதுவும் இப்போ கடினமாகி வருகிறது. வியாபார நிறுவனங்கள் வைத்திருப்பவர்களும் எத்தனைக் கென்று கொடுப்பது, எதை விடுவது. ஆளுக்கொரு நிகழ்வு வைப்பதால், நிகழ்வுகளுக்கு மக்கள் வருவது குறைவாக உள்ளது, மானாட, மயிலாட போன்ற ஒரு செய்தியும் இல்லாத நிகழ்வுகளைத் தவிர. பல வேலைத்திட்டங்கள் உள்ளதால், ஆளுக்கொரு வேலைத்திட்டத்தை எடுத்துச் செல்வது நல்ல விடையம் என்றாலும், பொது நோக்கத்தையும், இலக்கையும் பற்றி சிந்தித்து எது இந்த சமூகத்தின் உடனடித்தேவை, எது உடனடித்தேவையில்லாவிட்டாலும் எமது வருங்காலத்திற்கு அவசியமானது என்று தீர்மானிப்பது அவசியம். வெள்ளைகாரன் எமக்கெனச் செய்வதால் எதுவும் எமக்கு நன்மையாகத் தான் இருக்கும் என நினைப்பதுவும் முட்டாள் தனம், குதிரையில் பணத்தைக் கட்டுமுன் குதிரை எவ்வளவு துÖரம் ஓடும் என்று பார்க்க வேண்டும்.
சிலபேர் நேரடி அரசியல் இல்லாத எவற்றுக்கும், முக்கியமாக NGO போன்ற அரசாங்க சார்பற்ற நிறுவனங்களுக்கு நன்றாக வாரிக் கொடுப்பார்கள். அரசாங்கங்களின் அரசியல் வேலைகளுக்கான ஒரு உபவிளைவுதான் (sub product) இந்த NGOகள் என்பதையும் அறிந்து வைத்திருத்தலும் அதுபற்றிய அறிவும் அவசியம். அத்தோடு இன்னொரு விடையம் யாராவது வெள்ளைக்காரர் எங்களின் பிரச்சனையைப்பற்றி புத்தகம் வெளியிட்டால் போதும் புத்தகத்தில் முதல் பக்கத்தைக்கூட வாசித்திருக்கமாட்டார்கள், அதை எழுதியவருக்கு கோயில் கட்ட எங்கு நிலம் வேண்டலாம் என்று யோசிக்க வெளிக்கிட்டு விடுவார்கள். அவருக்கு எப்பிடி புத்தக வருவாய்யைக் கூட்டலாம், எங்கு சிலை வைக்கலாம் என்று, இப்படி யோசிப்பதை விட்டு சின்னனாக ஒரு, அந்த புத்தத்தை பற்றி எமக்கிடையே, முதல் ஒரு கலந்துரையாடலை வைத்து,உண்மையா அதை வாசித்து முடித்து, அது பற்றி ஏன் இதை இப்படி சொல்கிறார், இந்த விடையம் எவ்வளவு துÖரம் உண்மை தன்மை வாய்ந்தது. இந்தப் புத்தகம் எமது சந்ததிக்கு சொல்லும் செய்தி என்ன? என்பது பற்றி வருகால எமது இளைய தலைமுறையையும் (அவர்களிடம் வெள்ளை என்றவுடன் எழுந்து சலாம் போடும் தன்மை இல்லை) உள்வாங்கி விமர்சிக்கலாம். அதற்கு பிறகு அவருக்கு மாலை போடுவது யார்? மைக் பிடிப்பது யார்? என்று யோசிக்கலாம். `இவர்தான் எங்களைப் பற்றி எல்லாம் எழுதியிருக்கிறார், நல்லவர். அப்பிடியா? என்ன எழுதியிருக்கிறார்? தெரியாது.. ஆனால் ஒரு வெள்ளை இனத்தவர்..எங்களைப்பற்றி எல்லாம் எழுதியிருக்கிறார்…..’ எங்கள் எல்லோருக்குமே நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று துடிப்பிருப்பதும், இன்னும் சிலர் குற்றவுணர்வில், தேவைப்பட்ட நேரத்தில் எம்மால் உதவ முடியாமல் இருந்தது, இப்போ செய்ய கூடியதாக இருக்கின்றோம் ஆனால் என்ன செய்வது என்று தெரியவில்லைஎன்று ஏதாவது இயன்றவரை செய்ய வேண்டும் என்று விரும்புவது, எல்லாம் செய்து விட்டோம் இனி செய்வதற்கு ஏற்றமாதிரி ஒருவரும் இல்லை என்ற விரத்தியில் இருப்பது, என பலதரப்பட்ட பின்னனியிலும், சிந்தனையிலும் எமது மக்கள் வாழ்கிறார்கள். அத்தோடு ஒரு போராட்டத்தின் மக்கள் அழிவின் பின் உள்ள சந்தேகங்கள்,குற்றச்சாட்டுகள், ஏமாற்றங்களோடு வாழ்பவர்களை திசை திருப்புவதும், பிரிந்தாளுவதும், சுலபம் என, மிகக்கவனமான எங்களில் சிலரைக் கொண்டே எங்களையே புத்தகம் போல எங்கு பலம், எங்கு பலவீனம் என ஆராய்கிறார்கள். அதற்கு போராட்டத்தின் ஆரம்பகாலங்களில் தீவிரமாக இருந்து பின்பு காணாமல் போய் இப்போ எம் மக்களின் அழிவுக்கு 5,6 வருடங்களுக்குள் மீண்டும் அரசியலுக்குள் பிரவேசித்தவர்களை இன்னும் கூடுதலாக கையாளுகிறார்கள்.
அவர்களுடன் கலந்துரையாடினால், காணாமல் போய் இருந்த காலப்பகுதி குற்றவுணர்வை மறைக்க, வேறு ஒரு திசையில் உரையாடலை திசை திருப்பி விடுகிறார்கள. 5,10 பேர் களுக்கு குறைய உள்ள ஒரு நிறுவனத்தையே சரியாகநடத்த முடியாமல் ஆளுக்கொரு பக்கமாக தள்ளாடும் நாம், ஒரு அரசையே கட்டி ஆண்டு இந்த உலகத்தையே திருப்பி பார்க்க வைத்தவர்களிடம் எங்கு பிழைபிடிக்கலாம், என்று பூதக் கண்ணாடி கொண்டு பார்த்து, அதைப்பற்றி பேசி தமது குற்றவுணர்வுக்குத் தீனி போடுகிறார்கள். இப்படி உள்ளவர்களாலும் எம் மத்தியில் புதிது புதிதாக பெயரில் நிறுவனங்கள் முளைகின்றன, ஏனெனில் அவர்கள் எலிக்கு தலையாக இருக்கவேண்டும் என்றே விருப்புவார்கள். ஊருக்கும் தெரியாமல், தாய்க்கும் தெரியாமல் காற்றாகி போனவர்கள் மத்தியில் இப்படிப்பட்ட பதர்களும் ஊருக்கு பாரமாகஇருக்கத்தான் செய்கிறார்கள்.