‘குட்பாய்’ லண்டன்

1133

‘குட்பாய்’ லண்டன்
கலை மா(மா)மணியின் பேட்டி

நாங்கள் இன்று பேட்டி காண இருப்பது குட்பாய் லண்டன் நிகழ்சியின் ஒருங்கணைப்பாளர் கலைமாமணி, கலைக்குயில் கலைக்காக்கா கலைக்கோழி கலைக்குருவி ஸ்நேக் பாபு அவர்களை புலம் பெயர்ந்த மண்ணில் நீங்கள் செய்து வரும் கலைச்சேவைக்கு முதலில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு பேட்டிக்குள் செல்வோம்.

வணக்கம் க…………

 • முதலாவதாக உங்களிடம் ஒரு கேள்வி ஸ்நேக் பாபு என்பது உங்கள் சொந்தப் பெயரா?? அல்லது வடைகைக்கு வாங்கிய பெயரா?அந்தப் பெயர் வரக்காரணம் என்ன??

பதில்:- சொந்தப் பெயர்தான்.அந்தப் பெயரை நான் பிறந்ததுமே எனக்கு நானே வைத்தபெயர். காரணம் மனிதன் கமறாவை கண்டு பிடித்து படம் எடுப்பதற்கு முன்னரேயே பாம்பு படம் எடுக்கத் தொடங்கிவிட்டது. அதைப் பார்த்துத்தான் மனிதன் கமறாவை கண்டு பிடித்து படம் எடுத்தான் பின்னர் வீடியோ கமறாவை கண்டு பிடித்து சினிமாப்படம் எடுத்து கலையை வளர்க்கத் தொடங்கினான். எனவேதான் கலை மீதும் கமறா மீதும் உள்ள பற்றினால். அதனை முதன் முதலில் மனிதனிற்கு அறிமுகப் படுத்திய பாம்பை என்னுடைய பெயரில் இணைத்து சினேக் பாபுவாகி விட்டேன்.

 • கேள்வி.புலம்பெயர் மண்ணில் எமது மக்கள் கலை கலாச்சாரங்களை தொடர்ந்து பேணி வருவதுக்கு நீங்கள் பெரும் பங்காற்றி வருகிறீர்கள் என்ற வகையில் இப்படியான பெரும் நிகழ்ச்சிகளை மிகுந்த பொருட்செலவின் மத்தியில் நடாத்த உங்களுக்கு எப்படி துணிவு வந்தது?

பதில்..எல்லாம் எமது புலன்பெயர்த்த மக்களின் கலைத்தாகமும் ஆதரவும்தான். எமது மக்கள் இங்கு பொழுது போக்குகள் எதுவும் இன்றி வீட்டில சும்மாதான் சுருண்டுபோய் இருக்கினம். இந்தியாவில் இருந்து நடிக நடிகைமார் வருகினம் எண்டா விழுந்தடிச்சுக் கொண்டு வருங்கள்.

 • கேள்வி….உங்கள் நிகழ்ச்சி பற்றி…

பதில்..இந்த முறை நாங்கள் பெரிய கோல் எடுத்து செய்யிறம். நடிக நடிகைமார் டான்ஸ் ஆடுவினம் பாட்டு பாடுவினம்.பிளையிங் கிஸ் அடிப்பினம். மக்களே நீங்கள் எல்லாம் வந்து கைதட்டி விசிலடிக்க வேணும்.

 • கேள்வி…இந்நிகழ்வில் பெரிய சினிமா பட்டாளமே பங்கேற்பது பற்றி…

பதில்:- நான் நினைக்கிறன் நாங்க அடிச்ச நோட்டிச பார்த்து கேக்கிறீங்கள் எண்டு. அதில எல்லாரின்ட படமும்தான் இருக்கு. அதுக்காக எல்லா கும்பலையும் இழுத்துக் கொண்டு வர நாங்கள் என்ன மாங்கா மடையங்களே. கனக்க பேரின்ட படத்தை போட்டாத்தான் டிக்கட் விக்கும். . இதில ஒரு சின்ன பிரச்சனை இருக்கு.. ஒண்டு ரெண்டு விசயம் தெரிஞ்சவங்கள் கிரடிட்காரடில புக் பண்ணுவாங்கள். நிகழ்ச்சியையும் பார்த்திட்டு கிரடிட் கார்ட் கொம்பனிக்கு போன் பண்ணி எல்லாரும் வரேல்லை எண்டு சொல்லி ரீபண்ட் கேப்பாங்கள். இதால கொஞ்ச நட்டம் வரும்.

 • கேள்வி..இந்த நிகழ்ச்சி மூலம் கிடைக்கிற பணத்தை வைத்து சமூக சேவையளும் செய்யப் போறதாய் அறிஞ்சம் அதுபற்றி

பதில்:-இதில வாற காசில யாழ்ப்பாண கோவிலுக்கு வெள்ளை அடிக்கிறம் எண்டும் போராலை பாதிக்கப் பட்டவைக்கு உதவுறம்.போட்டிருப்பமே. இது நாங்கள் மட்டுமே போடுறம். நிகழ்ச்சியள் செய்யிற எல்லாரும்தான் போடுறாங்கள்.இதல்லாம் வியாபார தந்திரங்கள்

 • கேள்வி..கலைச்சேவை எண்டு சொன்னீங்கள் இப்ப வியாபாரம் எண்டுறீங்கள்….

பதில்..தம்பி.. இது கலையோடை சேர்ந்த வியாபாரம்.கூட்டி வாற நடிகைமாரை வச்சு நாங்க என்ன பண்ணுறம் எண்டு உமக்கு தெரியுமோ? அவையள் நிகழ்சி நடத்துற பத்து நாளைக்கு முதலே இங்க வருகினம். அவைக்கு எவ்வளவு டிமாண்ட் எண்டு தெரியுமோ? எத்தனை பெட்ரோல் செட் காரன்கள் பெட்ரோல் அடிக்க கியுவில நிக்கிற மாதிரி நிக்கிறாங்கள் எண்டு தெரியுமோ ? இப்ப சிரிப்பு நடிகைக்கு என்ன ரேட் போகுது எண்டாவது தெரியுமொ? இதுகளை எல்லாம் எங்கட பாசையில கலைச்சேவை எண்டுதான் சொல்லுறது. உண்மையை சொன்னா காறித்து துப்புவாங்கள்.

 • கேள்வி..சரி எங்களுக்குத்தான் உதைப் பற்றி தெரியாது… உங்கட மனிசிக்காவது தெரியுமா?

பதில்:-அது ஒரு பேய்… நடிகர் மாரை பார்க்க ஆவெண்டு போய் நிக்கும். எங்கட ஒரு பார்ட்னரின்ட மனுசி மணந்து பிடிச்சிட்டுது. அவக்கு நிகழ்ச்சி முடிய BMW X5 வேண்டி தரலாம் எண்டு சொல்லி இருக்கிறம். இப்ப அமத்திக் கொண்டு இருக்கிறா. இருந்து பாருங்கோ நிகழ்ச்சி முடிய எப்படியும் வீட்டை ரீ மோட்கேஜ் பண்ணின எங்கட பார்டனசில ரெண்டு பேராவது துாக்கில தொங்குவினம். உதெல்லாம் வேண்டிக் குடுக்க எங்க காசு மிஞ்ச போகுது? இந்தியாவில இருந்து வாறவங்களே எல்லாத்தையும் சுருட்டிக் கொண்டு போடுவாங்கள். 5 ஸ்டார் கோட்டலில தான் அவையள் நிப்பினமாம். தம்பி நான் என்ரை வாழ்க்கையில் 5 ஸ்டார் கோட்டல் கார் பார்க்குக்கு கூட போனதில்ல.

 • கேள்வி…காசு மிஞ்சாது எண்டுறீங்கள் அப்ப நீங்கள் என்ன மாதிரி.

பதில்…தம்பி… நான் சைட்டில வேற பிளான் வைச்சிருக்கிறன். எண்ட பார்ட்னருகளுக்கு கூட உது தெரியாது. இந்த நிகழ்ச்சிக்கு மேளம் அடிக்க விளக்கு பிடிக்க எண்டு சொல்லி 20 பேரை இறக்கிறன். பாதி எங்கடையள் பாதி இந்தியன்.தலைக்கு 10 லட்சம். ஒரு சொலிசிட்டர் என்னோட கொன்ராட்க் வேற போட்டிட்டார். அவையள் இனி முள்ளிவாய்க்காலில ஆர்மி சுட்டான்… ஓடி வந்தன் எண்டு கதை எழுதுவினம். அது அவையின்ட பிரச்சனை. நீர் உம்மட கேள்விய கேளும்.

 • கேள்வி.இப்ப இந்த நாடு இருக்கிற நிலமையில நிகழ்ச்சி பார்க்க சனம் வருமோ?

பதில்:-தம்பி… வேலைக்குப் போய் கஸ்டப்பட்டு உழைக்கிறவன் எல்லாம் உதில மினக்கெட மாட்டாங்கள்.

3-4 எண்டு பெத்துப் போட்டு உலகத்தில உள்ள பெனிபிட் எல்லாம் எடுத்துக் கொண்டு இடைக்கிடை கள்ளவேலையும் செய்துகொண்டு வீட்டில சும்மா இருக்கிதுகளே… அதுகள் தான் அள்ளை கொள்ளையா வரும். நீர் நம்பாட்டி நான் வாசலில நிண்டு படம் எடுத்துத் தாறன். அடுத்த முறை பேப்பரில போடும்.

 • கேள்வி..இந்த நிகழ்ச்சிக்கு யாராவது எதிர்ப்பு தெரிவித்தார்களா?

பதில்:-உதை யார் தம்பி எதிர்க்க போறாங்கள்? காங் பொடியள்தான் பிரச்சனை படுத்துவாங்கள். அவங்களுக்கு நாங்கள் பிரீ டிக்கட் குடுத்திருக்கிறம். எல்லா காங் பொடியங்களையும் தெரியாத படியால் டிக்கட் கிடைக்காம யாரும் இருந்தால் தாராளமாக எஙகளை தொடர்பு கொள்ளலாம். பிரீ டிக்கட் நிச்சயம். குறைடன் தமிழ் கடைக்காராள் சொன்னார் உவங்களுக்கு பயந்து ஏன் பிரீ டிக்கட் குடுக்கிறாய் எண்டு. உவங்கள் எல்லாம் பயந்த பீச்சாண்டிகளாடாப்பா ரயட்ஸ் நடந்த நேரம் ஒரு நாயும் வரல்ல எல்லாம் ஓடி ஓழிச்சிட்டாங்கள்.இந்த பக்கம். ஓசிச் சோடா குடிக்க மட்டும் வருங்கள் எண்டு. நான் ஏன் ரிஸ்க் எடுப்பான் எண்டு குடுக்கிறன்.

 • கேள்வி.உங்கடை புறோக்கிறாம் ரிக்கற்றிலை கேள்வி பதில் குலுக்கல் பரிசு வேறை குடுக்கிறதாய் அறிவிச்சிருக்கிறீங்கள் அதைப்பற்றி.

பதில்.எங்கை போனாலும் எதையாவது ஓசியிலை எதிர்பாக்கிறது எங்கடை சனத்தின்ரை வழக்கம்தானே. லண்டனிலை கோயிலுக்கு போனலே அன்னதானம் இல்லையோ எண்டு கேக்கிற ஆக்கள் அதலைதான் றிக்கற்றிலை சில கேள்வியள் போட்டிருக்கிறம் அதுக்கு சரியான பதிலை சொல்லுறவைக்கு குலுக்கல் முறையிலை சில ஆறுதல் பரிசுகன் குடுப்பம்.

 • கேள்வி..குலுக்கல் முறை எண்டிறியள். குலுக்கிறது யார் நீங்க?னா??? ஆறுதல் பரிசு என்னென்ன??

பதில்:-நான் குலுக்கினால் ஆர்தம்பி பாப்பாங்கள். குலுக்கப்போவது நமீதா.. பரிசு ஆறுதல் பரிசுதானே அதாலை பரிசு விழுந்தவையளிட்டை விலாசத்தை வாங்கி வைச்சிட்டு ஆறுதலாய் அனுப்புறம் எண்டு சொல்லிவிடுவம்.

நன்றிகள்.

உங்கள் கடுமையான கவைச் சேவைகளிற்கு மத்தியிலும். இதுவரை எமக்காக நேரம் ஒதுக்கி பொறுமையாகப் பதில் அளித்த மா(மா)மணிக்கு எங்கள் சிரம் தாள்ந்த நன்றிகள்.

றிக்கற்றின் பின்னால் உள்ள சில கேள்வி.

ஒரே நேரத்தில் நூறு பேரை அடிக்கும் பலமுள்ள கீரோ.

 1. ரஜனிகாந்
 2. விஜயகாந்
 3. இரண்டு பேரும்.

ரகிகர்களே பதில் சொல்லதயாராகுங்கள் பரிசுகளை அள்ளுங்கள்.

நன்றி பருப்பு இணையம்…