குந்தியிருந்தது போய்..

94

வெள்ளைக்காரருக்கு பொதுவாகவே ஏதும் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால், நன்றாக யோசித்து எங்கிருந்து தொடங்கினால் அதுஎப்பிடிப்போய் முடியும் என்று சிந்தித்து. அந்தந்த சமூகத்தில் செல்வாக்கு உள்ளவர்களை பிடித்து, அவர்கள் ஊடாக, அவர்களை மாற்றுவதன் மூலமோ அல்லது அவர்களை நாம் விரும்பியதை பின்பற்ற வைப்பதன் மூலமோதாம் விரும்பும் மாற்றங்களை அச்சமூகங்களில் கொண்டுவருகிறார்கள். இதற்கு எமது சமூகமும் விதிவிலக்கல்ல. அவர்களின் மதம்,நடை உடை பாவனை, மொழி, பழக்கவழக்கம் என்று பலவற்றைக்குறிப்பிடலாம். அவர்கள் நன்றாக மொழி, சமயம் என்று விருத்தியடையாத சமூகங்களில், இனங்களில் இப்படியான மாற்றங்களை கொண்டுவரமுற்பட்டு அதில் பெரும் வெற்றியும் கண்டுள்ளார்கள். அந்த சமூகங்கள் தமது தனித்தன்மையை எப்பவோ இழந்து, மொழியையும் இழந்து நூற்றுக்கு தொண்ணுற்று ஒன்பது விகிதம் ஆங்கிலோரைப் பின்பற்றும் இனமாக மாற்றம் அடைந்துள்ளன. இந்தவகையில் பார்க்கும் போது எமது தமிழ் இனம், மிகவும் பழமைவாய்ந்த அதே நேரம் மொழி, கலை. பண்பாடு,உணவு வகை என பலவிதத்திலும் விருத்தியடைந்த இனமாக இருந்தமையால், மாற்றங்கள் நிகழ்தாலும் நாம் முற்றாக எமது தனித்தன்மையை இழந்து விடவில்லை.

உண்மையில் இப்போது ஆழமாக சிந்தித்துபார்த்தால் சில மாற்றங்கள் எமது சூழ்நிலைக்கும், காலநிலைக்கும், வாழ்கை முறைக்கும்ஏதுவானதல்ல. அந்தோடு எமது முன்னோர்கள்ஒரு காரணத்தின் பொருட்டு கடைபிடித்த முறைகளை நாம் ஒரு காரணமும் இல்லாமல், வெள்ளைக்காரர் செய்கிறார் என்று கண்ணை மூடிக்கொண்டு பின்பற்ற வெளிக்கிட்டு அரையும் குறையுமாவும், சில எமது உடல்நிலைக்கு ஆரோக்கியமான முறைகளையும கைவிட்டு எங்கையோ போய்கொண்டு இருக்கிறோம்.

உதாரணத்திற்கு காலையில் இருந்து தொடங்கினால் வேப்பங்குச்சாலோ, உமிக்கரியாலோ பல்லு விளக்குவது கூடாது என்று யாரும்சொல்லவில்லை. நாம் அந்த செலவு குறைந்த முறையை இப்போது முற்றாகக் கைவிட்டு,பலவிதமாக பற்பசைகளை வைத்து கொண்டு இதைவிட அதில் இரசாயனப்பொருட்கள் கூட என்று தலையை பிய்த்து கொள்வதோடு மற்றுமல்லாது, இரசாயனம் குறைந்த இயற்கை பற்பசைகள் என்று வேப்பமர பற்பசை உள்பட அதிக விலை கொடுத்து வாங்குகிறோம். எனக்கென்னவோ அம்மாச்சியின் உமிக்கரியால் பல்லுவிளக்கியபின், நாக்கால் பல்லைத்தடவும்போது வந்த துÖய்மையான உணர்வு, அதன்பிறகு இதுவரை வரவில்லை என்றே கூறலாம்.

அடுத்து காலைக்கடனின் போது குந்தியிருந்தது போய், கதிரையில் இருப்பது போல் காலைக்கடனை கழிக்கும் மேற்கத்தைய வழக்கத்தை பின்பற்ற முயலுகிறோம். அது எமது நாட்டிலும் மூலைமுடுக்கிலும் வெளிநாட்டில் பிள்ளைகள் இருந்தால் அவசரம் அவசரமாக குளியல் அறை கட்டி அவர்களுக்கு உகந்தது போல மாற்றுகிறார்கள். ஏனெனில் அவர்கள் குந்தியிருக்க மாட்டார்களாம்! ஆனால் குந்தியிருப்பது உடம்புக்கு எவ்வளவோ நல்லது. முழங்காலுக்கு கீழே உங்கள் இடுப்பு பாகம் வருமாறுஒருநாளைக்கு ஒரு பத்து நிமிடம் குந்தியிருப்பதால் உங்கள் உடம்பில் உள்ள முதுகு, தோள்பட்டை, கால் எனப்பல தசைகள் ஒரேநேரத்தில் வேலை செய்து உங்கள் உடம்பை அந்தநிலையில் நேராக இருக்க வைக்கின்றன. எமதுவாழ்க்கைமுறையில் குந்தியிருந்து காலைக்கடன் கழிப்பது மிகவும் அர்த்தமுள்ள, எமது உடலுக்கு உகந்த ஒருமுறை. உண்மையில் வெளிநாட்டு உடல்பயிற்ச்சியில் பணத்தை செலவழித்து இந்த குந்தியிருக்கும், உடற்பயிற்சியில் தலைமைப்பயிற்சி என்று அழைக்கப்படும் பயிற்சியை பழகுகிறோம்!!

பின்பு சுடுதண்ணீரில் குளிக்காமல், நன்றாக கிணற்றுத்தண்ணியில் குளிப்பது உடம்புக்கு மிகவும் நன்று. குளிரான வெளிநாடுகளில் கூடசுடுதண்ணீரில் குளிப்பதை விட குளிர்தண்ணியில் குளிப்பதுவும், அதன் நன்மைகள் பற்றி,அதை ஒருசிகிச்சை முறையாக, முக்கியமாக உடல்பயிற்ச்சியின் பின் சிபார்சு செய்கிறார்கள். எமது நாட்டுக்கு சுடுநீர் குளியல் அறைவசதியுடன் கூடிய தங்குமிடவசதி என்று விளம்பரம் செய்கிறார்கள். எமது காலநிலைக்கு சாதாரண தண்ணியில் குளித்தாலே போதுமானது. இன்னும் கிணற்றில் தண்ணியை இறைந்து குளிப்பது அடுத்த உடல்பயிற்சியை சாரணமாக செய்வதும் போலகின்றது. அதிலும்ஒருவர் துலாவில் ஏறி துலா ஓட இன்னெருவர் வரும் தண்ணியை தொட்டியில் நிறைக்க, தொட்டியை சுற்றியின்று பிள்ளைகள், பெண்கள் குளிக்க அக்குளித்த தண்ணி வாய்கால் வழியேபக்கத்தில் உள்ள மரங்செடிகளுக்கு போக என்று காட்சியை நினைத்தாலே அற்புதமாக உள்ளது. இப்ப துலாவை கழற்றி விட்டு, கப்பிபோட்டு இறைத்து அதையும் விட்டு, குளியல்அறையில் முடங்கிவிட்டோம்.

பிறகு சாப்பாடு என்று வரும்போது எமது சிவப்பு பழங்சோற்றுக் கஞ்சியை போல இயற்கை உணவு இல்லை. அது போல ஆவியில் அவியும் இட்லியும், பல மரக்கறிகள் கொண்டசாம்பாரும் நல்ல திறமான உணவு என வெள்ளைக்கார் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களால் சொல்லப்படாத குரக்கன், தினை, ஒடியல்மா என்று நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். அங்கிருக்கும் போது பாண், பூசுவதற்கு வெண்ணை, கோதுமைமா என்று அலைந்து விட்டு, அங்கு வாங்காத தினை, வரகு, சாமை,குரக்கன், ஓடியல் என்பன இப்ப வெளிநாடுகளின் அதிக விலை கொடுத்து வாங்கி உண்ணுகிறோம்.

இங்கு குளிருக்கு தேவையுடன் கழுத்தை இறுக்கி அணியும் கழுத்துப்பட்டியையும், கோட்டுசூட்டையும், அங்கு நாம் அங்கு வெய்யில் வெக்கைக்கு போட்டுக்கொண்டு அலைகிறோம். தேவையில்லாமல், எமது காலநிலைக்கு ஏற்காத ஒன்றை, நாகரீகம் என்று ஒரு பொய்யான பிரமையில், எல்லோரும் செய்கிறார்கள் என்று நாமும் செய்கிறோம். வெள்ளை வேட்டி, சீலை,சட்டை என்பன காற்றோற்றமானவை, வேலைசெய்யும் போது கோவணம், குறுக்குக்கட்டு என்பன அந்த காலநிலைக்கு உகந்தன. ஆனால் நாம் அதை நாகரீகம் இல்லை என்று கைவிடுவது மட்டும் அல்லாது, இப்பவும் அணிபவர்களை அப்பு, ஆச்சி நீங்கள் இதைப்போடுவதுஎங்களுக்கு வெக்கமாக உள்ளது என்று, அணிபவார்களையும் கைவிடச்சொல்கின்றோம்.

இதைவிட சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் தமிழ் சடங்குகளுக்குள், வெள்ளையர்களின் முறைகளையும் புகுத்துகின்றோம். பத்துமணிக்கு தாலிகட்டு, பன்னிரண்டு மணிக்கு கேக்வெட்டு! பன்னிரண்டு மணிக்கு சாமத்திய வீடு,மூன்றுமணிக்கு கேக்வெட்டு! மத்தியானம் கோயிலுக்கு போய் ஜயரைக்கூப்பிட்டு தொட்டில் போடும் வைபவம், மரக்கறிசாப்பாடு. அன்றே பின்னேரம் மச்சச் சாப்பாட்டோடு மதுகுடிவகையயுடன் கொண்டாடம் என்று, என்ன செய்கிறோம் எதுக்கு செய்கிறோம் என்று ஒரு முறைதலை இல்லாது, எல்லாவற்றையும் கலந்து ஒரு சாம்பார்போல் சடங்குகளைச் செய்கிறோம்.

எமது தலைமுறையும் ஒன்றுமே விளங்காது எம்மைப்பின்தொடர்கிறார்கள். அவர்களும் இதுதான் தமிழ்சடங்கு, பழக்கவழக்கம் என்று தமக்குதெரிந்த மட்டும் விளங்கிக்கொள்கிறார்கள். எல்லாச்சடங்குகளிலும் வீடியோக்காரரும், போட்டோஎடுப்பவரும் என்ன சொல்கிறாரோ அதை சிரமேற்கொண்டு நிறைவேற்ற முயலுகிறோம்.

நாம் தமிழ்இனம், எமது மூதாதைகள் சிலவற்றை ஏன்செய்தார்கள், எதுக்கு செய்தார்கள் அது சரியா? அது பிழை என்றால் கைவிடலாம், சரி என்றால் ஏற்றுக்கொள்ளலாம். அதைவிடுத்து வெள்ளைக்காரர் செய்கிறார் என்று பலவற்றை அப்பிடியே ஏற்றுக்கொண்டு செய்யும் போது தான் சிக்கல் வருகிறது.

சுகி
ஒருபேப்பருக்காக