கூட்டமைப்பு பா.உ. சரா மகிந்தவிற்கு ஆதரவு?

894

சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் மகிந்த இராஜபக்சவை ஆதரிக்கவுள்ளதாக கொழும்பிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பாக சரவணபவன் தரப்பிலிருந்து எந்தச் செய்தியும் வெளியிடப்படவில்லை. இராஜபக்ச குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்புகளைப் பேணிவரும் சரவணபவன் மகிந்த இராஜபக்சவின் அழைப்பின் பேரில் அவரைச் சந்திப்பதந்காக இன்று (டிசம்பர் 30) காலையில் அலரிமாளிகைக்குச் சென்றதனை கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் செய்தியாளர்கள் உறுதிப்படுத்தினர். தேர்தல் நெருங்கும் நிலையில் நடைபெற்றிருக்கும் இச்சந்திப்பினைத் தொடர்ந்து ஊகத்தின் அடிப்படையில் மேற்படி செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

சிலகாலமாகவே கூட்டமைப்பின் உள்ளகச் சந்திப்புகளைத் தவிர்த்துவரும் சரவணபவன் மகிந்த தரப்புடன் பணப் பேரம் பேசலில் ஈடுபட்டுவருவதாக வதந்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

சரவணபவன் மகிந்தவிற்கு ஆதரவினை வழங்கும் பட்சத்தில் வடக்கில் பிரபலமான அவரது உதயன் பத்திரிகை மகிந்த இராஜபக்சவிற்கு ஆதரவான பரப்புரைகளுக்கு பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிப்படையான முறையில் பரப்புரைகளில் ஈடுபடாவிட்டாலும், தவறான தகவல்கள் மூலம் மக்களை குழப்புவதற்கு அல்லது இப்பத்திரிகையின் செய்தியை ஆதாரம் காட்டி சிங்கள மக்கள் மத்தியில் பரப்புரை செய்வதற்கு உதவக்கூடும் என்ற கருத்து ஊடகவியலாளர் மத்தியில் நிலவுகிறது. கடந்த வருடம் நடைபெற்ற வடக்கு மாகாணசபைத் தேர்தலின் போது உதயன் பத்திரிகை போன்று போலியாக வெளியிடப்பட்டு விநியோகிக்கப்பட்ட விடயத்தில் உதயன் நிர்வாகத்தின் மீது சந்தேகம் நிலவியதும் இங்கு கவனத்திற்குரியது.

இதனிடையே எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபாலவிற்கான தமது ஆதரவினை கூட்டமைப்பு இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தமது முடிவினை அறிவித்திருக்கும் கூட்டமைப்பு, நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழிப்பது, பதினெட்டாம் திருத்தச்சட்ட மூலத்தினை நீக்குவது, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது போன்ற விடயங்களில் மைத்திரிபாலவின் நிலைப்பாட்டை தாம் வரவேற்பதாகத் தெரிவித்துள்ளனர்.