கூட்டமைப்பு மைத்திரிபாலவை ஆதரிக்கும் முடிவினை நாளை அறிவிக்கிறது

769

சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் தமது முடிவினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை கொழும்பில் வைத்து அறிவிக்க உள்ளதாகத் தெரியவருகிறது. இம்முடிவினை அறிவிப்பதற்கென நாளை காலை 10:30 மணிக்கு கொழும்பு ஜானகி ஹொட்டேலில் (Hotel Janaki, Fife Road, Colombo 5) ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினை கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

தமிழ் மக்களை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்குமாறு கூறிவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், யாருக்கு வாக்களிப்பது எனக் கூறுவதனை இதுவரை தவிர்த்து வந்தனர். அஞ்சல் வழியான வாக்கெடுப்புகள் ஏற்கனவே ஆரம்பித்துள்ள நிலையிலும், இந்தியாவிற்கு சென்றிருந்த கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுத் தலைவர் இரா. சம்பந்தன் நாடு திரும்புவதற்காக காத்திருப்பதாக தமது கால தாமதத்தினை நியாயப்படுத்தி வந்தனர்.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை ஆதரிக்கும் முடிவு ஏற்கனவே சம்பந்தன், சுமந்திரன் போன்ற உயர்மட்டத்தலைவர்களினால் எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் உள்ளக வட்டாரங்களிலிருந்து அறிய முடிகிறது. கூட்டமைப்பின் சில உறுப்பினர்களும், அவர்களது புலம் பெயர் ஆதரவாளர்களும், இதுபற்றி வெளிப்படையாகவே கூறி வருவதனை அண்மைய நாட்களில் அவதானிக்க முடிந்தது.

நேற்று (டிசம்பர் 28) சம்பந்தன் நாடு திரும்பியுள்ள நிலையில், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சியின் தலைவர்கள் ஒப்புக்கு ஒரு கூட்டத்தினை நேற்று மாலை கொழும்பில் நடாத்தியிருந்தனர். எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களையும் சம்பந்தன் நேற்று சந்தித்ததாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே நாளை பிற்பகல் 2 மணிக்கு நல்லூர் முத்திரைச்சந்தியில் எதிரணிகளின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்று நடைபெற ஏற்பாடாகியுள்ளது. மைத்திரிபால சிறிசேன, சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க உட்பட எதிர்க்கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் இக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளனர். இக்கூட்டத்திற்கு முன்னதாக தமது முடிவினை அறிவிக்கவேண்டியுள்ள நிலையில் கூட்டமைப்பு உள்ளமையினால், மேலும் தாமதிக்காது தமது முடிவினை நாளை வெளியிடவுள்ளதாகத் தெரியவருகிறது. இருப்பினும் மேற்படி கூட்டத்தில் கூட்டமைப்பின் சார்பில் யாராவது உரையாற்றவுள்ளனரா என்பதனை அறிய முடியவில்லை. மாவை சேனாதிராசா இக்கூட்டத்தில் கலந்துகொள்ளக் கூடும் எனத் தகவலறிந்த சிலர் கருத்து வெளியிட்டுள்ள போதிலும் அதனை உறுதி செய்ய முடியவில்லை.

தேர்தலுக்கு இன்னமும் பத்து நாட்கள் இருக்கையில், கூட்டமைப்பு வெளியிடவிருக்கும் அறிவிப்பு, தேர்தல் நிலவரத்தில் என்ன மாற்றத்தினை ஏற்படுத்தப் போகின்றது என்பதனை இன்னும் சிலதினங்களில் அறியக் கூடியதாகவிருக்கும்.