கூத்துப் பாக்கப் போன கூத்து..

106

மாப்பிள்ளை வாறார் மாப்பிள்ளை வாறார்
மாட்டு வண்டியில
பொண்ணு வாறா பொண்ணு வாறா
பொட்டு வண்டியில ..

எப்போதாவது அம்மம்மா வீட்டில் தங்க நேர்கிற சந்தர்ப்பங்களில் அம்மம்மா பாடுகிற பாடல்வரிகளில் எனக்கு நினைவிருக்கிற மிகவும் பிடித்த இரண்டு வரிகள் இவை.
அம்மம்மா எப்போதும் இரவுகளில் தூங்குவதில்லை மாலை ஆறுமணிக்கு மேல் துணையின்றித் தனியாக ஒன்றுக்கும் போகத் தைரியம்வராத வயசில் நான் இருக்கையில், வாசலை விட்டுக் கீழ இறங்கவே அம்மாவைத் துணைக்குக் கூப்பிட்டு அம்மாவின் சினத்தையும் சேர்த்துக் கூட்டிக் கொள்ள வேண்டும். ஆனால்அம்மம்மா வீட்ட நிண்டால் எந்த நடுச்சாமத்திலும் வெளியில போகலாம் ஏனெனில் அம்மம்மா எப்பவும் முழிச்சிருப்பா. கைவிளக்குப் பெரிசாகப் புகைஞ்ச படி எரிந்து கொண்டிருக்கும்.

அம்மம்மா வீட்டை பெரிய பித்தளைக் கைவிளக்கு இருந்தது அந்தக் காலந்தான். இரவு முழுதும் சத்தகத்தால் பனையோலையைக் கிளிக்கிற `சரக் சரக்` என்ற சத்தமும். பெட்டிகள், நீத்துப்பெட்டிகள், கடகங்கள், பின்னுகிற சத்தமும் கேட்டுக்கொண்டேயிருக்கும் தாலாட்டாய். லேசாக அருண்டாலும் என்னய்யா வெளியில் போகோணுமே என்று கேப்பா.
அம்மம்மா இரா முழுதும் பாடிக் கொண்டேயிருப்பா. அப்படி அம்மம்மா நிறையப்பாடல்கள் பாடிக் கேட்டிருக்கிறேன். அவையெல்லாம் அம்மம்மா சின்ன வயசில் பார்த்த கூத்துக்களில் இடம்பெறுகிற பாடல்கள் என்று சித்தி சொல்லியிருக்கிறார்.

எங்கள் அம்மப்பா ஒரு கூத்துக் கலைஞராம் அரசாங்க உத்தியோகம் பார்த்து வந்தாலும் கூத்திலும் நாடகத்திலும் அவருக்கு தனிஆர்வம் இருந்ததாக நான் பின்னாளில் அறிந்திருக்கிறேன். அம்மம்மாவின் கல்யாணம் காதல் கல்யாணம் என்று பொன்னம்பலம் ஆச்சி சொல்றவா.

ஒன்றும் ஒன்றும் மூன்றான ரகசியம் இதுதான். அவர் கூத்துக் கலைஞர் இவா கூத்தின்ரசிகைஎல்லாத்தையும் ஒன்றாக முடிச்சிட்டுப் பார்த்தா அம்மம்மா கூத்துப்பாடல்கள் பாடுவதன் ரகசியம் அம்பலமாகும் என்று நினைக்கிறேன்.

அந்தக் காலத்தில நடக்கிற மாதிரிக் கூத்துகள் இப்ப இல்லை என்று பெரியம்மா சொல்லுவா. எனக்கு கூத்து என்கிற கலை வடிவத்தின் சொற்பிரயோகங்கள், வடிவங்கள், விதிமுறைகள் வரலாறு இப்படி எதுவும் தெரியாது. ஒரு ரசிக மனோநிலையில் ஆர்வக் கோளாறாக சில விசயங்களை எழுதலாம் என்று வெளிக்கிட்டிருக்கிறன்.

எனக்கு கூத்து என்கிற கலைவடிவத்தின் சொல்லறிமுகம் அம்மம்மாவிடம் இருந்து கிடைத்தாலும் நான் கூத்து என்கிற பெயரில் முதல் முதலாகப் பார்த்ததாய் நினைவில் இருப்பது பிகளத்தில் காத்தான்’ சிந்து நடைக் கூத்து. ஆறு வயதில் என்று நினைக்கிறன். ஆனால் அதில் பாடப்பட்ட சில வரிகள் தான் எனக்கு இப்பவும் நினைவிருக்கு.
`பேப்பரெடுங்கடா விடுதலைப் பேப்பர்எடுங்கடா’

இப்படிப் பாடியபடி துவக்கேந்திய நாலைந்து பேர் `டேய் நைன்ரி பேப்பர் எடன்ரா’ என்று ஒரு கிழவரை வெருட்டுவார்கள். எதற்காக இந்தக் காட்சி எனக்கு நினைவிருக்கிறது எண்டு தெரியவில்லை. சிலவேளை வயது போனவர்களை `நைன்ரி’ என்று கிண்டலடிக்கிற சொற்பிரயோகத்தை அறிந்துகொண்டதாலா என்று தெரியவில்லை. ஏதோ நினைவில் நிற்கிறது.
பிறகு நான் பார்த்த கூத்து காத்தவராயன் கூத்து. `ஆரியமாலா குளிச்ச தண்ணியே இவ்வளவு வாசனையாயிருக்கே. அவள் எவ்வளவு வாசனையான அழகியாய் இருப்பாள்’ என்று ஆரியமாலையைத் தேடிக் காதலிக்கிற காத்தவராயனின் கதை.

காத்தவராயனின் தாய் (முத்துமாரி என்றுநினைக்கிறேன்) மகனே நீ ஆரியமாலாவைமணமுடிக்க வேண்டுமாயின் மலையைப் புரட்ட வேண்டும் மடுவைக் கிழிக்க வேண்டும் என்பது மாதிரியான ஏகப்பட்ட நிபந்தனைகள் வைப்பாள். மகன் அத்தனையும் செய்து ஆரியமாலாவை மணமுடிக்க சிரமப்படுவான் அந்தக் கூத்திலிருந்தும் ஒரு வரி நினைவிருக்கிறது. மலையிலே எதிலோ ஏறிக்கொண்டே காத்தவராயன் பாடுவான்.

”… எல்லாம் ஏறிவந்தேன் பெத்தவளே தாயே
என் பாதம் மிக நோகுதம்மா பெத்தவளே தாயே”

இப்படியாக எனக்குள் கூத்துப் பார்த்த நினைவுகள் கிடக்கின்றன. நான் மேலே சொன்ன பாடல் வரிகள் எல்லாம் சரியானவைதான் என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை.
பிறகு தெருக்கூத்துகள் வந்தன. அவை தெருக்கூத்துகள் என்று சொன்னாலும் அவை தெருக்களில் நிகழ்த்தப்பட்ட நாடகங்கள் அவ்வளவுதான் என்று நினைக்கிறேன்.(நான்பாÖர்த்தவை) போராட்டத்திற்கு ஆளெடுப்பதற்கு நிகழ்த்தப்பட்டவை. என்னுடையஅறிவுக் கெட்டியபடி கூத்து என்பதன் கதைநகர்த்தல் அதிகமாக பாடல்களினூடாகவும்கொஞ்சமாய் வசனமாகவும் இருக்கும். நாடகம்என்பதன் கதைநகர்த்தல் உரையாடல்களிற்கூடாக நிகழ்த்தப்படுவது. இப்படித்தான் நான்இரண்டையும் புரிந்து வைத்திருக்கிறேன்.

தமிழ் நாட்டில் நிறையக் கூத்துவடிவங்கள் இருக்கின்றன. அவை நிகழ்த்தப் படவும்செய்கின்றன. நிறையக் கூத்துக் கலைஞர்களும் வறுமையின் பிடியில் வாழ்கிறார்கள்.
சென்னைக்கு கிட்டவாய் காஞ்சிபுரம் பகுதியில் கூத்துகள் அதிகம் நிகழ்த்தப்படுகின்றனஎன்றும். சிறந்த கூத்துக் கலைஞர்கள் அங்கேதான் இருக்கிறார்கள் என்றும். எங்களைக் கூத்துப் பார்ப்பதற்காக காஞ்சிபுரம் அழைத்துக்கொண்டு போன நண்பர் முத்துக் கந்தன் சொன்னார்.

காஞ்சியில் இருக்கிற சுங்குவார்ச் சத்திரம் என்கிற கூத்து நடக்க இருந்த கிராமத்திற்கு நாங்கள் போகவே இரவு 9.30 மேலாயிற்று. நான் கூத்து நடக்க இருப்பது ஏதாவது கோயில்திருவிழாவாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் திருவிழாவின் வாடை கூட அந்தசுற்று வட்டாரத்திலேயே இல்லை. ஒரு வீட்டிற்கு முன்பாக கொஞ்சப் பேர் கூடியிருந்தார்கள் சிறிதாக ஒரு பந்தல் போடப்பட்டிருந்தது அவ்வளவுதான்.

நண்பர் முத்துக் கந்தன் அது ஒரு காரியக் கூத்து என்றார். நான் என்ன காரியமாக் கூத்து என்றேன். ஆட்கள் இறந்தால் பதினாறாம் நாள் காரியம் செய்வார்கள் இல்லையா அதற்காக நிகழ்த்தப் படுகிற கூத்துதான் காரியக் கூத்து என்றார் முத்து.(இலங்கையில் எட்டுச்சிலவு மாதிரியான சடங்கு).

எனக்கு இந்த விசயம் புதுசாக இருந்தது கூத்து என்பதை ஒரு கொண்டாட்ட விசயமாககருதி மகிழ்வான விழாக்களில் மட்டுமே நிகழ்த்தப்படுவதாக அது இருக்கும் என்றும்கருதியிருந்தேன். அது துயரத்திற்கும் நிகழ்த்த படுகிறது என்பது ஆச்சரியமூட்டியது.

கர்ண மோட்சம் கூத்து நிகழ்த்தப்படப் போவதாகச் சொன்னார்கள். இறந்தவர் மோட்சம் போவதற்காக என்று நினைத்துக்கொண்டேன். சென்னையில் இருந்து வந்திருக்கிறோம் என்பதும், நாங்கள் போயிறங்கியிருந்த வாகனமும் எங்கள் கையில் இருந்த கமாராக்களும் ( இரவல் தான்) எங்களை அவர்கள் ஒப்பனை செய்வதைப் பார்ப்பதற்கான அனுமதியைப் பெற்றுத் தர உதவியது.

ஒரு சின்னப் பையனும் அந்தக் கூத்துக் குழுவில் இருந்தான். எனக்கு அவனை மிகவும் பிடித்திருந்தது. அவனது அப்பாவும் அந்தக் குழுவில் இருக்கிறாராம் என்றான். சின்னவனைத் தவிர மற்றெல்லாருடைய கண்களும் குடித்துச் சிவப்பேறியிருந்தன. ஒப்பனை ஆரம்பமாகியது சின்னவன் உட்பட எல்லோரும் தமக்குத் தாங்களே ஒப்பனை செய்து கொண்டார்கள். நாங்கள் பார்த்துக்கொண்டிருக்க அவர்களதுமுகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. அவர்களது சொந்தமுகம் மறைந்து கதாபாத்திரத்தின் முகம் கண்முன்னே விரிந்தது. முகம் மாத்திரமல்ல அவர்களுடைய மனமும் அந்தப் பாத்திரமாகவே மாறிவிடுகிறதைப் பார்க்க முடிந்தது.

இங்கே அந்தப் பாத்திரமாக மாறிவிடுகிறது என்று சொல்வது வழக்கமாக எங்கள் சினிமாக்காரர்கள் சொல்கிற அர்த்தத்தில் கிடையாது. இது கலையாடிகள் மாறிவிடுவது போன்ற அர்த்தத்தில் என்று வேண்டுமானால்சொல்லலாம். அதாவது முனியம்மா அருள்வந்ததும் மாரியாத்தா ஆகிவிடுகிறது மாதிரி. அதைப் போல இங்கேயும் கர்ணன் வேசம் போட்டவர் கிட்டத்தட்ட கர்ணணாக மாறிவிடுகிறார்.

ஒப்பனைகள் முடிந்து பபூன் மேடையில் தோன்றவே மணி பதினொன்றரை ஆகிவிட்டது. கூத்து தொடங்கியது. கூட்டமாக நின்று கொண்டு சத்தமாக அவர்கள் பாடிய பாடல்கள் சுழன்று சுழன்று அரங்கைச் சுற்றிவந்து ஆடிய வேகம் எல்லாம் அவர்களுக்குள் நம்மை ஈர்த்தது இந்தக் கலைவடிவத்தை இத்தனை நாள் தவறவிட்டிருக்கிறோமே என்று கவலைப்பட வைத்தது. அது ஒரு அற்புதமான அனுபவத்தை கண்முன் விரித்தது.

ஒவ்வொரு பாத்திரமும் அறிமுகமாகும் போதும் கூத்து மேலும் சுவாரசியமானது. அதைவிட அவர்கள் மக்களோடு உரையாடிபடி தங்கள் கூத்தை நகர்த்திச் சென்ற விதம் ஆச்சரியமூட்டியது. அவர்களுடைய உரையாடல்கள் ஏற்கனவே தயார் செய்யப்பட்டவை அல்ல. கருப்பொருளை மட்டும் மனசில் வைத்து உடனடியாக நிகழ்த்தப் படுபவை. உதாரணத்திற்கு துரியோதனன் தன்னுடைய நாட்டைப் பற்றிச் சொல்லுவான்.

நான் துரியோதன மகாராஜா என்னுடைய நாடு பெரியது. அதிகாரங்கள் வாய்ந்தது என்றுசொல்ல எப்படி அதிகாரங்கள் வாய்ந்தது என்றுபார்வையாளரில் ஒருவர் கேட்க அது தில்லிமாதிரி என்று சட்டென்று பதில் வருகிறது. என்னுடைய நாட்டு மக்கள் செல்வச் செழிப்போடும் புன்னகையோடும் வாழ்வார்கள். இதோ இவர்களை மாதிரி என்று பார்வையாளர்களில் ஒரு சிலரைக் காட்டுகிறார். இப்படி பார்வையாளர்களையும் தங்கள் கூத்தில் பங்கேற்பாளர்களாக மாற்றி கூத்தை நிகழ்த்திச் செல்வார்கள். அது மிகவும் புத்திசாலித் தனமாக அரங்காக, கலைவடிவமாக எனக்குப் பட்டது.

தொடரும்

சென்னையிலிருந்து
த.அகிலன்