கேள்விக்குள்ளாகும் கூட்டமைப்பின் இரட்டை நிலைப்பாடு

1620

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், அவரது உதவியளார்போல் செயற்படும் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட மதியாபரணம் சுமந்திரனும் அண்மையில் கனடாவிற்கும்,ஐக்கிய இராட்சியத்திற்கும் பயணம் மேற்கொண்டிருந்தனர். பிரிக்கப்பட்ட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக புலம்பெயர் தமிழ் மக்களுக்கு விளக்கமளிக்கப்பதற்காகவே இப்பயணம் மேற்கொள்ளப்பட்டதாக கூட்டமைப்புத் தரப்பில் கூறப்பட்டாலும், தேர்தல் செலவுக்கான நிதியினைச் சேகரிப்பதற்காகவே அவர்கள் இருவரும் இங்கு வந்ததாகத் தெரியவருகிறது. இலண்டனில் நடைபெற்ற கூட்டங்களில் மக்களை தமக்கு நிதியுதவி செய்யுமாறு வெளிப்படையாககே கேட்கப்பட்டதனாலும், ரொறொன்ரோவிலும் இலண்டனிலும் நிதி சேகரிப்பதற்காகவென தனியாககட்டணம் அறவிட்டு நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டதாலும், அவர்களது பயணத்தில் நிதிசேகரிப்பு முக்கிய இடத்தை வகித்தது எனலாம். இருப்பினும்இலண்டனில் நடைபெற்ற கூட்டங்களில் திரு. சம்பந்தன் வெளிப்படுத்திய சில கருத்துகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரட்டை நிலைப்பாட்டை துலாம்பரமாக வெளிக்காட்டுவதாக அமைந்திருந்தமையை அவதானிக்க முடிந்தது.

மக்களுடனான கலந்துரையாடல் என இலண்டனில் நடாத்தப்பட்ட இரண்டு கூட்டங்களிலும், திரு. சம்பந்தன் நீண்ட உரையாற்றினார். அவரது உரை சோல்பரி ஆணைக்குழுவிலிருந்து ஆரம்பித்து இன்று வரையான தமிழ் அரசியலின் வரலாறு பற்றியதாக அமைந்திருந்தது. இருப்பினும் 1976ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானம் பற்றியோ, அத்தீர்மானத்தை தேர்தல் விஞ்ஞாபனமாகக் கொண்டு போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியினர் பெருவெற்றியீட்டிய 1977ம் ஆண்டு பொதுத்தேர்தல் பற்றியோ சம்பந்தன்எதுவும் குறிப்பிடவில்லை. இத்தேர்தலில் வெற்றியீட்டிய திரு. சம்பந்தன் முதற்தடவையாக பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்ற தகவலை மனம்கொள்வோமாயின், ஒரு காலத்தில் தாம் தமிழீழக் கோரிக்கையை முன்வைத்தமையை மறைப்பதற்காகவே தமிழ் மக்களின் அண்மைய அரசியல்வரலாற்றின் முக்கிய அத்தியாயம் ஒன்றைப் பற்றிக் குறிப்பிடாது தவிர்த்திருந்தமை தெளிவாகும்.

மேற்படிகூட்டங்களில் மக்கள் தமது கருத்தை தெரிவிப்பதற்கென ஒதுக்கப்பட்டிருந்த கேள்வி நேரம் மிகக்குறுகியதாக இருந்தது ஒன்றும் தற்செயலானது அல்ல. மாறாக, மக்கள் மத்தியிலிருந்து எழக்கூடிய சிக்கலான கேள்விகளைத் தவிர்ப்பதற்காகவே இவ்வாறு ஏற்பாடு செய்யப்ட்டிருந்தன எனக் கருத இடமுண்டு. ஹரோவில் நடைபெற்றகூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க தனியார் பாதுகாப்பு நிறுவனமொன்றிலிருந்து பாதுகாப்பு ஊழியர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இதிலிருந்து உள்ளுர்தமிழ் மக்களுக்கும் கூட்டமைப்புக்கும் உள்ள உறவினை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.
இரண்டு கூட்டங்களிலும் மக்கள் மத்தியிலிருந்து எழுப்பப்பட்ட கேள்விகள் சமகால அரசியல் நிலவரத்துடன் தொடர்புடையதாக இருந்தன. ஹரோவில் நடைபெற்ற கூட்டத்தில், “எப்போது உங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடப் போகிறீர்கள், அதனை வெளியிடாமல் ஏன் எங்களின் ஆதரவு தேடி வந்தீர்கள்” என்ற மிக முக்கியமான இரு கேள்விகளை கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர்எழுப்பினார். அதற்கு பதிலளித்த திரு. சம்பந்தன், தமது தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்திருந்தார். ஆனால், தற்போதைய சூழ்நிலையில், கூட்டமைப்பை பொறுத்தவரை, தேர்தல் விஞ்ஞாபனம் போன்ற உத்தியோகபூர்வமான கொள்கை விளக்க அறிக்கையை எழுத்துருவில் தயாரிப்பது என்பது மிகவும் சிக்கலான ஒன்றாகவே அமைந்திருக்கிறது. இக்காரணத்தினாலேயே பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனம் எதனையும் வெளியிடவில்லை.

தெளிவான இலக்கும், அரசியல் கொள்கைகளும் இருப்பின், தமது கொள்கைத் திட்டத்தை வெளியிடுவதில் கூட்டமைப்புக்கு என்ன சிரமமிருக்கக்கூடும்?
இக்கேள்விக்கான பதிலைத் தேடுவதற்கு முன், இதனுடன் தொடர்புபட்ட இன்னொரு கேள்வியை பார்ப்போம். இலண்டனில் வாழும் இளம் தமிழ்ச்செயற்பாட்டாளர் ஒருவர் “கூட்டமைப்பின் தேர்தல்விஞ்ஞாபனம் ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒன்றுக்கொன்று வேறுபட்டதாக அமைந்திருக்குமா?” என்ற கேள்வியை இக்கட்டுரையாளரிடம் எழுப்பியிருந்தார். மேலோட்டமாகப் பார்த்தால், இது ஒரு அர்த்தமற்ற கேள்வியாகத் தெரியும். ஏனெனில் மொழிபெயர்ப்பில் ஏற்படும் பிறள்வுகளை தவிர்த்தால், அவை உள்ளடக்கத்தில் இரு வேறுபட்ட ஆவணங்களாக அமைந்திருக்க முடியாது என உறுதியாகக் கூறமுடியும். ஆனால் இக்கேள்வியில் பொதிந்திருக்கிற விடயங்கள் அலட்சியப்படுத்த முடியாதவையாக உள்ளன.

இங்குள்ள அடிப்படைப் பிரச்சனை இதுதான், தமிழ் மக்களுக்கு முன் ஒரு நிலைப்பாட்டையும், வெளித்தரப்புகளுக்கு முன் இன்னொரு நிலைப்பாட்டையும், காட்டவேண்டிய நிலையில் கூட்டமைப்பு உள்ளது. தமிழ் மக்கள் மத்தியில் அவர்களது உரிமைக்காகக் குரல்கொடுக்கும் ஒரு தமிழ்த் தேசிய அமைப்பாகவும், வெளித்தரப்பினர்முன்னிலையில், ஐக்கிய இலங்கைக்குள் ஜனநாயகநடைமுறைகளைக் கடைப்பிடிக்கிற ஒரு சிறுபான்மை இனக் குழுமத்தின் கட்சியாகவும் காட்டவேண்டியுள்ளது. மேற்குலக, மற்றும் இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் நிகழ்ச்சி நிரலுக்குள் நின்று கொண்டு, தமிழ் மக்களையும் திருப்பதிப்படுத்துவது இலகுவான விடயமாக அமைந்துவிடாது. கூட்டமைப்பு தமது பாதைக்கு தனது வாக்காளர்கள குழாமை அழைத்துச் செல்வதற்கு நீண்டகாலம் எடுக்கலாம். அல்லது வாக்காளர்கள் கூட்டமைப்பை தமது பாதைக்கு அழைத்துச் செல்லும் முயற்சி தோற்றுப்போய் அவர்கள் கூட்டமைப்பை கைவிடும் நிலை எதிர்காலத்தில் தோன்றலாம். ஏனெனில் கூட்டமைப்பு தனது இரட்டைஅணுகுமுறையை நீண்டகாலத்திற்கு கடைப்பிடிக்க முடியாது.

கூட்டமைப்பின் புலம்பெயர் தோழமை அமைப்புகளான உலகத்தமிழர் பேரவை போன்றவையும் இத்தகைய சிக்கல்களை எதிர்கொள்கின்றன. இருப்பினும் ஜனநாயக அமைப்புகள் என்று கூறிக்கொள்ளும் இவ்வமைப்புகளுக்?கு மக்கள் முன்சென்று கொள்கை விளக்கம் செய்து தேர்தலில்நிற்கவேண்டிய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. நாடுகடந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றவர்கள் தேர்தலில் நின்று மக்கள்ஆதரவை பெறவேண்டியவர்களாக உள்ளமையினால், அவர்களில் சிலர் கூட்டமைப்பின் கொள்கைகளுடன் ஒத்துப்போகிறவர்களாகவும், மறுபுறத்தில் தமிழீழக் கொள்கையை வலியுறுத்துபவர்களாகவும் இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுவதனை அவதானிக்க முடிகிறது.

இவ்விடயத்தில் கூட்மைப்பு எதிர்நோக்குகின்ற சிக்கல்களை மேற்குலகமும், இந்தியாவும் விளங்கிக்கொள்கின்றன. தமிழ்த் தேசிய அரசியல்அமைப்பு என தமிழ் மக்களுக்கு போக்கு காட்டுகிறகூட்டமைப்பு உடனடியாகவே முழுமையான மாற்றத்திற்கு உள்ளாவதற்கு கால அவகாசம் தேவைப்படும் என்பதனை இத்தரப்புகள் ஏற்றுக்கொள்ளும். இருப்பினும் காலக்கிரமத்தில் தமிழ் மக்களை கூட்டமைப்பு தமது வழிக்குள் கொண்டுவந்துவிடும் என்பதில் அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள்போல் தெரிகிறது.

கொழும்பு மேட்டிமை வர்க்கத்து `தாராண்மைவாத’ அலகுகளைத் திருப்பதிப்படுத்துவதற்காக கூட்டமைப்பு செய்கிற காரியங்களே தமிழ் மக்களை கலவரப்படுத்துகிறது. இதனால்தான் மேற்படி தரப்பினருக்காக ஆங்கிலத்தில் தெரிவிப்பதனை, தமிழ் மக்களை கருத்திற்கொண்டு தமிழில் மாற்றித் தெரிவிக்க வேண்டியுள்ளது. விடுதலைப்புலிகள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள், அவர்களது அழிவிற்கு அவர்களது நடவடிக்கைகளே காரணம் என பாராளுமன்றத்தில் உரையாற்றிய சம்பந்தன், இலண்டனில் வைத்து விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அல்ல விடுதலைப் போராளிகள் என்று குறிப்பிடுகிறார். கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் கலந்தாலோசிக்காமல் முடிவெடுக்கிற சம்பந்தன், நாடுகடந்த அரசாங்கம் உட்பட புலம்பெயர் தமிழ் அமைப்புகளுட்ன இணைந்து கூட்டாக முடிவெடுக்க விரும்புவதாகத் தெரிவிக்கிறார்.

கூட்டமைப்பின் இந்த அணுகுமுறை கொழும்பில் அவர்களுக்கு நண்பர்களைத் தேடிக் கொடுத்திருக்கிறது. ஆதலால் வடக்கு மாகாணசபையில் கூட்டமைப்பு வெல்லவேண்டும் எனச் சில சிங்களத்தேசியவாதிகள் கட்டுரை வரைகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை தமிழ்த் தேசிய அரசியலைசிதைப்பதில் கூட்டமைப்பு தங்களுக்கு பங்காளிகளாகச் செயற்படுகிறது என நம்புகிறார்கள் இந்தநம்பிக்கையை வளர்த்ததில் சுமந்திரனுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராகத் தெரிவு செய்தமை மூலம் இந்த நம்பிக்கை மேலும் வலுப்பட்டிருக்கிறது.

கூட்டமைப்பின் இந்த ஏமாற்று நடவடிக்கைக்கு, அதன் புலம்பெயர் எடுபிடிகள் இராஜதந்திரம் எனபுதிய வியாக்கியானம் கொடுக்கலாம், ஆனால் தமிழ் மக்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர் இதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதனை காலம் அவர்களுக்கு உணர்த்தும் என நம்பலாம்.