கடந்த 29ம் திகதி இலண்டனில் நடைபெற்ற உலக தமிழ் குறும்பட விழாவுக்கு போகும் சந்தர்ப்பம் கிட்டியது. வன்னியில் வந்த குறும்படங்களை பார்த்து வியந்த பின் நீண்ட நாட்களாக ஒரு நல்ல குறும்படத்தையும் பார்த்தஞாபகம் இல்லை. வெளிநாட்டில் எடுக்கப்பட்ட குறும்படமாக இருப்பதால், அதிக எதிர்பார்பில்லாமல் மனதை, ஒரு மாலை பொழுதை களிப்பதோடு, வளர்ந்து வரும் தமிழ் இளம் கலைஞர்களை வரவேற்க்கும் வகையில் தயார்படுத்திக் கொண்டு சென்றிருந்தேன்.
60 படங்கள் வரை போட்டிக்கு வந்திருந்ததாகவும், சிரமப்பட்டு ஜந்தை போட்டியில் விருதுக்கு பரிந்துரை செய்வதாகவும் சொன்னார்கள். அவ்வாறு பரிந்துரை செய்யப்பட்ட படங்களாக இயக்குனர் கணபதியின் Hearticapped. சுசீந்தரின் (இந்தியா) நானாக நானில்லை, சிறிதயாளனின் (பிரான்ஸ்) ‘கோணல் சித்திரம்’, பிரசன்னாவின் (நோர்வே) ‘இருளின் நிழல்’, பிரேம் கதிரின் (லண்டன்) ‘ஏதிலிகள்’ என்பன காட்சிப்படுத்தப்பட்டன.
ஜந்து படங்களுமே ஒன்றுக்கொன்று சளைத்தவையில்லை என்று சொல்லும் வகையில் வேறு வேறு விடயங்களை மிகவும் அழகாகவும் ஆழமாகவும் தொட்டிருந்தன. நமது கலைஞர்களின் படைப்பு என்ற இறுமாப்பும், இவ்வளவு சிரமங்களின் மத்தியிலும் எப்படி இவ்வளவு தரமான படைப்பை வழங்க முடிந்ததுஎன்ற ஆச்சரியமும் தோன்றியது.
Hearticapped போரில் இரு கால்களையும் இழந்த போர்வீரனின் மனபோராட்டத்தையும், நானாக நானில்லை ஒரு விதமான மனநோயினால் (Bipolar disorder) பாதிக்கப்பட்ட இளைஞன் ஒருவனின் அநுபவங்களை சொல்கிறது. கோணல் சித்திரம் குடும்பங்களின் பிரச்சனைகள், எவ்வாறு அவர்களின் குழந்தைகளைப் பாதிக்கிறது என்று சொல்கிறது. ‘இருளின் நிழல்’ விசா இல்லாத எம்மவர்கள் வேலைத்தள முதலாளிகளால் ஏமாற்றப்படும் நிலையை சித்தரிக்கிறது. அடுத்ததாக ஏதிலிகள் போர்தந்த நினைவுகள் வடுக்களாக எம்மவர் வாழ்க்கையை நீண்ட காலத்திற்கு பின்னும் தாக்குவதை சித்தரிக்கிறது.
இதில் எல்லாப்பிரச்சனைகளும் எம்மவர்களால் விளங்கிக்கொள்ள கடினமாக, ஆனாலும்வாழ்க்கையில் நாளாந்தம் சந்திக்கும் விடையங்களாக உள்ளன. இவை இன்னும் எவ்வளவோ விழிப்புணர்ச்சிகளை எம்மவர் மத்தியிலும், எம்மை பற்றிய விடையங்களை அறிய விரும்பும்வெளிநாட்டவர்களுக்கும் உணர்த்தி உள்ளன. அந்த வகையில் முதலாம் இடத்தைத் தட்டிச்சென்ற ஏதிலிகள், மூன்றாம் இடத்தைத் பெற்ற`இருளின் நிழல்பீ என்பன உட்பட ஜந்து படங்களும் ஒன்றுக்கொண்று குறைந்தவை அல்ல என காட்டி நின்றன.
இந்த வகையில் இரண்டாம் இடத்தை தட்டிச்சென்ற கோணல் சித்திரம் என்னை மிகவும்கவர்ந்த குறும் படமானது. அதற்கு முக்கியகாரணம், நடிப்பு, சொல்லவந்த விடயத்தை வெளிப்படுத்தும் விதம் என்று எல்லாமே சொல்லத்தக்க வகையில் இருந்தாலும், அக் கதையின் கருப்பொருள் எம்மவர்கள் மத்தியல் சிந்திக்க படாததொன்று. முக்கியமாக வெளிநாட்டில் வாழும் எமது மக்கள் மத்தியில் தற்போது விவாகரத்து, பிரிந்து போதல் என்பனபிள்ளைகள் இருக்கின்ற குடும்பம், பிள்ளைகளே இல்லாத குடும்பங்கள் என்ற வேறுபாடுகள் இன்று மிகவும் சாதாரணமான ஒருவிடையமாகிவிட்டது.
விட்டுக் கொடுப்புக்கள், எதுவுமேயின்றி இருவருமே தங்களது சுகத்தையும், வசதிவாய்ப்புக்களைப்பற்றி மட்டுமே சித்திப்பதும், தனது தன்மானப்பிரச்சனை, தனது சுகந்திரம் என்று மிகவும் சுயநலமாக சண்டைபிடிப்பதுவும், சவால் விடுவதுவும் தாராளமாக இருக்கும் இவர்கள் ஒரு நிமிடமேனும், அது தமதுகுழந்தைகளை எப்படி பாதிக்கின்றது, என்றோ,அக்குழந்தைகளின் மனவிருப்பு, அவர்களின் சிந்தனை, அவர்களின் எதிர்கால கனவு, நிம்மதி,என்று எதையுமே சிந்திக்காது நடந்து கொள்கிறார்கள். முக்கியமாக தற்போது வெளிநாடுகளில் 40, 50 வயதில் கூட, வளர்ந்ந பிள்ளைகளை வைத்துக் கொண்டு அவர்களின் முன்னால் அநாகரிமாக சண்டையிடுவதும், சந்தேகம், பொறாமை, எரிச்சல் போன்ற இன்னோரன்னமான உணர்ச்சிகளை அறிவுபூர்வமாக சிந்திக்காது வெளிப்படுத்துவதும், அதையிட்டு சண்டைபிடிப்பதும் குடும்பங்களுக்குள் பிரிவினைகளை அதிகமாக்கிறது. சில குடும்பங்கள் கானல்நீர் போல ஒரு துணையை விட்டு, இன்னொன்றை நாடி பின்பு, முன்பு இருந்ததை விட கேவலமாக ஆனால் அதை வெளியில் சொல்லவும் முடியாத நரகவாழ்க்கை வாழ்கிறார்கள்.
இன்னும் சில குடும்பங்களில் பிள்ளைகளை பகடைக்காய்களாவும், தங்களின் இயலாமையை அவர்களை துன்புறுத்தி, மற்றவர்களைபணியவைக்கும் ஒரு வகை ஆயுதமாகவும் பாவிக்கிறார்கள். இப்படி நடந்து கொள்பவர்கள் தாங்கள் சிறுவயதில் இருந்ததையோ, எங்களின் அம்மா அப்பா இப்படி நடந்து கொண்டிருந்தால் நாம் சின்னவயதில் எப்படி வேதனைப்பட்டிருப்போம் என்றோ சிந்திப்பது இல்லை. இன்னும் சில குடும்பங்களில் பிள்ளைகள் வளர்ந்துவிட்டால் அவர்களைக் கொண்டு மற்றவரை பயத்தினாலேயோ அல்லத பாசத்தினால்பணியவைப்பது போன்ற கசப்பான மிரட்டல்களிலும் ஈடுபடுகிறார்கள்.
கோணல் சித்திரம் மிகவும் எளிமையாக சொல்லவந்த விடயத்தை ஆழமாக பதியும் வண்ணம் நாசூக்காக சொல்லிப்போகிறார்கள்.மிகவும் அழகாக வரையப்பட்ட சித்திரம், ஆழமாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தது. இயக்குனர் தயாளனின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.
சுகி
ஒரு பேப்பருக்காக