மீண்டும் அலசுவாரம் -3
மட்டைக்கிளக்கான்.
உலக முழுவதிலும் தற்போது கொரானா வைரஸ் பற்றியே பேசப்படுகிறது. உலகம் ஸ்தம்பித நிலைக்கு வந்துவிட்டது. பாடசாலைகள், பொது வணக்கஸ்தலங்கள், விமான நிலையங்கள், மக்கள் கூடுமிடங்கள், வியாபார ஸ்தலங்களென எங்கும் தற்காப்பு நடைமுறைகள் அன்றேல் மூடுதல் என்று எங்கும் வியாபித்து நிற்கிறது கொரனாவின் தாக்கம்.
கொரானா எப்படி வந்தது எதற்காக வந்தது என்பது பற்றிய தெளிவான விளக்கங்கள் இன்னும் புலப்படவில்லை. சீனாவே இதன் மூல இருக்கையென்கிறார்கள் பலர். அமெரிக்காவே இதனையுருவாக்கிப் பரவ விட்டிருக்கிறது என்கின்றனர் சிலர். எது எப்படியிருந்தாலும் உலக ஒழுங்கில் கொரனாவால் ஏதோ ஒருவகை மாற்றம் ஏற்படக் கூடிய சாத்தியங்கள் உருவாகிவிட்டன. இந்த மாற்றத்தையுருவாக்கி தற்போதுள்ள உலக அரசியல் பொருளாதாரச் சூழலைத் தம்வசப்படுத்த வல்லரசுகள் முற்படுகின்றனவா? அதனடிப்படையிலானவோர் நவீன மூன்றாமுலக யுத்தத்தின் வெளிப்பாடுதான் இந்தக் கொரானாவென்கின்ற ஆயுதமா? அந்த உயிரியல் யுத்தத்தின் (Bio War) நேரடிப் பங்குதாரர்கள் யார்? கேள்விகளையும் நாம் கேட்டேயாக வேண்டியிருக்கிறது. அப்படிக் கொரானா உயிரியல் ஆயுதமாகப் பரவி விடப்பட்டிருக்குமாயின் அதன் நோக்கமென்ன, என்ற கேள்விக்கும் நாம் விடைகாண வேண்டியிருக்கிறது.
உலகத்தின் முழுக்கட்டுப்பாட்டையும் தங்கள் வசம் வைத்திருக்க இலுமினாட்டீஸ் எனப்படும் ஒரு குழுவினர் இத்தகைய வழிகளில் முயல்கிறார்களா? அல்லது விண்வெளியிலிருந்து ஏலியன்களால் இத்தகைய நுண்கிருமிகள் எம்மை நோக்கி ஏவப்படுகின்றனவா என்றும் ஆராய வேண்டியிருக்கிறது.
சீனாவின் அசுரத்தனமான வளர்ச்சியும் அதையொட்டிய ஐக்கிய அமெரிக்கா உட்பட்ட மேற்குநாடுகளின் எச்சரிக்கையுணர்வும் இந்த உயிரியல் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதற்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும். இருப்பினும் வளர்த்தகடா மார்பிற் பாய்ந்த கதையாக கொரனா அதனை உருவாக்கியவர்களையே திருப்பித்தாக்க முற்பட்டு விடுமோ என்கிற ஐயப்பாடும் எழுந்துள்ளது.
வர்த்தக நோக்கில் இந்தக் கொரனா வைரஸைக் கட்டவிழ்த்து விட்டு அதற்கான மருந்து, தடுப்பூசிகள், வாயுறைகள் போன்றவற்றை உலக முழுவதும் வி்ற்பனை செய்து பணம் சம்பாதிக்க எடுத்த முயற்சியாகவும் கூட இது இருக்கலாம்.
பொருளாதார பலம் மிக்க மேற்கு நாடுகள் உலகமயமாக்கல் கொள்கையை நிலைநாட்டி சர்வதேசத்தைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயல்கின்றன. சீனா போன்ற நாடுகளின் பலம்மிக்க வர்த்தகத்தை எப்படியாவது அடித்து உடைத்துவிட வேண்டுமென்று அவை பெருமுயற்சி செய்கின்றன. வெளிப்படையாக சீனாவுடனான வர்த்தகத்தை எதிர்ப்பதும், சீன இறக்குமதிகளைத் தடைசெய்வதும் மேற்கு நாடுகளின் முகமூடியைச் சர்வதேச மட்டத்தில் கிழித்தெறிந்துவிடுமென்பதால் தகுந்த பொருத்தமான சூழலை அந்நாடுகள் எதிர்பார்த்திருந்தன. கொரானா தற்போது அதற்கு வாய்ப்பான சூழ்நிலையை ஏற்படுத்தித் தந்திருக்கிறது.
இனி கொரானா பற்றிச் சிறிது ஆராய்வோம். வைரஸுக்கள் உயிருள்ளவையா அல்லது உயிரற்றவையா என்பதில் சரியான முடிவுகள் இன்னும் தெளிவாகவில்லை. முறையே டிஎன்ஏ, ஆர்என்ஏ போன்ற உயிராதாரங்களைக் கொண்டு வைரசுக்கள் வாழ்ந்தாலும், நேர்த்தியான கலச்சுவர் இல்லாத ஒருவகை நுண்ணிய திண்மங்களாகவே அவையுள்ளன. ஆனாலும் தாம் சார்ந்திருக்கும் சூழலிலிருந்து தமது இனப்பெருக்கத்தைச் செய்யக்கூடிய வலிமைகொண்டனவாயுள்ளன. உதாரணமாக சர்பத்தெனப்படும் சீனிப்பாகினுள் தொங்கவிடப்படும் ஓர் சிறு கற்கண்டுத்துகள் வளர்ச்சியடைந்து பெரிய கட்டியாக வருவதைப்போல ஓர் வைரஸும் சூழலிலிருக்கும் சாதகமான புரதத்தையெடுத்து தன்னினத்தைப் பரப்பும் ஆற்றலுடையதாயிருக்கிறது.
அதனால் வைரஸுகளைக் கொல்வதென்பது முடியாத காரியம் (அவற்றிற்கு உயிர் இருந்தாற்தானே கொல்வதற்கு). ஆனால் அவற்றின் வளர்ச்சியை முன்கூட்டியே கட்டுப்படுத்த உடலில் நோயெதிர்ப்புச் சக்தி ஊக்குவிக்கப்படுகிறது. இவ்வளவு காலமும் வைசூரி, சின்னம்மை போன்ற கொடிய நோய்களுக்கு அம்மைப்பால் குத்தி மிக இளம் பருவத்திலேயே நோயெதிர்ப்புச் சக்தியை ஊக்குவித்து அதை உலகிலிருந்து முற்றாக அகற்றினார்கள். அதுவரை அந்த நோய்க்கு வேப்பிலையையும், மாரிமுத்து அம்மனையுமே நமது சமுதாயம் துணைக்கழைத்தது. தற்போது இறைவனருளால் அந்நோய் இல்லை ஆனால் கொரோனா என்னும் சுவாச நோய் வந்திருக்கிறது. இதுவும் இறைவனருளால் எமைக்கடந்து போகும். அஞ்சத் தேவையில்லை.