என்னடா சம்பந்தம் இல்லாம தலைப்பில குழப்பிறான் எண்டு யோசிக்கவேண்டாம். சம்பந்தம் இருக்கு… விளக்கம் சொல்லுறன்!!
இப்ப கொரோணா என்கிற கொடிய நோய் பரவீட்டு இருக்கு!! உலகம் மட்டுமல்ல இலங்கையிலும் சனம் கொஞசம் கொஞ்சமா சாகுது. கொரோணாக்கு இதுவரை தடுப்புமருந்து இல்லை என்பது உண்மை. பனடோல் சாதாரண காச்சலை குணப்படுத்தும் என்பதும் உண்மை. ஆனால் பனடோல் கொரோணாவுக்கு தீர்வு அல்ல!!
ஆக இப்ப இருக்கும் உண்மைகளை யதார்த்தமாக ஏற்றுக்கொண்டு அந்த அரசு தரும் ‘பனடோல்’ ஐ ஏற்றுக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக சாவது நல்லதா?
அல்லது, கொராணா பரவலை குறைப்பதற்கான “சமூக இடைவெளி” உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட வண்ணம், தொடர்ச்சியாக கொரோணாவுக்கு மருந்தை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது நல்லதா??
“கூட்டமைப்பு” என்ற பனடோல் பிசினஸ் செய்மும் அமைப்பு, பனடோலை ஏற்றுக்கொண்டு, அது கிடைக்கும் என நம்பி, பனடோல் தருவார்கள் என கருதப்படுபவர்களுடன் இணைந்து வேலைசெய்ய வேண்டும் என்று சொல்கிறது. பனடோலை நம்புக்கள். பனடோலை பெற்றுக்கொள்ள எங்கள் கரங்களை பலப்படுத்துங்கள் என்கிறார்கள்.
ஆனால் மக்கள் “முன்” நிற்கும் ஒரு “அணி” இன்னொரு விதமாக நினைக்கிறார்கள். அதாவது தொடர்ச்சியாக கொரோணாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகளை தொடர்வது தான் புத்தி சாலித்தனம் என்று. கொரோணாவுக்கும் பனடோல் தீர்வு இல்லை என்ற உண்மையில் உறுதியாக இருப்பதோடு, உண்மையான கொரோணா தடுப்பு மருந்தை எப்போது எப்படி கண்டுபிடிக்கப் போகிறோம் என்பது இன்று தெரியாது விட்டாலும், தொடர்ச்சியாக, மற்றநாடுகளின் ஆராட்சியாளர்களின் உதவிகளையும் பெற்று முயற்சித்தால் என்றோ ஒருநாள் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கலாம் என்ற கொள்கையுடன் நகர்கிறார்கள்! எது எப்படியோ கொரோணாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் பட வேண்டும் என்பதே முக்கியம். அதுவே மொத்த சனமும் அழிந்து போகாமல் இருக்க ஒரே வழி.
அதோடு மீதிமக்களை காப்பாற்றுவதற்காக, கொரோணாவுக்கு மருந்து உருவாக்கும் முயற்சியில் தங்கள் உயிரை துச்சமென மதித்து கொரோணா மேலும் பரவாமல் மக்களை ஓரளவு பாதுகாத்ததோடு மருந்து கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகளையும் நம்பிக்கைகளையும் உருவாக்கும் பணியில் பலகாலம் உயிரை கொடுத்து உழைத்த விஞ் ஞானிகள், டாக்டர்கள், தாதிகள் என பலரின் உழைப்பை உயிரையும் பனடோலை யதார்த்தமென நம்பி ஏற்றுக்கொள்வது அசிங்கப்படுத்தும். ஆக அர்ப்பணிப்புடன் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகளை தொடர்வது தான் நியாயம்.
நோயை தீக்காத ஒரு மருந்தை நம்பி முயற்சியை நிறுத்துவதால் மனிதன் அழிவது நிட்சயம். அதை தான் கூட்டமைப்பு, யதார்த்தம் என நம்பி விரும்புவதாக தெரிகிறது. அவர்கள் இப்போதெல்லாம் “சமூக இடைவெளி”யை கடைப்பிடிப்பதில்லை. கை கொடுத்து கட்டித் தளுவிக் கொள்கிறார்கள்!! பனடோலே கொரோணாவுக்கான தீர்வு அதனால் அது பெறுவதற்காக நெருக்கமாக இயங்கி முயற்சிக்கிறோம் என மக்களையும் முட்டாளாக்குகிறார்கள். இன்னொரு விதமாக சொல்வதானால், “சமூக இடைவெளி”யினை கடைப்பிடிக்க தவறுவதாலேயே, இவர்கள் மூலமாக மேலும் கொரோணா பரவிக்கொண்டு இருக்கிறது அல்லது பரப்பப்படுகிறது. சிலமக்கள் அதை புரிந்துகொள்ளாமல் அழிவை நெருங்கிக் கொண்டும் இருக்கிறார்கள்.
ஆனால் நோயை தடுக்கும் மருந்தை கண்டுபிடிப்பதற்கான போராட்டத்தை தொடர்வதில் பல அல்லது சில மனிதர்களையாவது காற்பாற்றிவிடக்கூடிய வாய்ப்பு இருப்பது தான் உண்மை!! சமூக இடைவெளியை கடைப்பிடித்த வண்ணம் கொரோணா தடுப்பு மருந்து கண்டு பிடிக்க போராடும் நியாயமான ஆராட்சிகளை வரவேற்பதோடு, ஆராட்சியாளர்களின் கரங்களையும் பலப்படுத்துவோம்!! அத்தோடு கொரோணா பரப்பிக்கொண்டு இருப்வர்களை சமூகத்தில் இருந்து அகற்றி வைத்து தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை எமது சமூகத்தின் இருப்பை தக்கவைப்பதற்கான தேவையும் உருவாகி உள்ளது.
மக்களாகிய நீங்கள், பனடோலையும் பனடோல் விற்பவர்களையும் நம்பி நாளடைவில் உங்கள் சந்ததியின் இறப்பை உறுதி செய்யப் போகிறீர்களா? அல்லது கொரோணாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதே ஒரே வழி என நம்பி அதற்கான முயற்சிகளில் நம்பிகையுடன் பயணிப்பவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டி ஊக்குவிப்பதோடு, பனடோல் விற்பதாக கொரோணோ பரப்புவோரை சமூகத்தில் இருத்து அகற்றும் புத்திசாலிகளாக இருக்கப் போகிறார்களா என்பதை அவரவர் சுயபுத்திக்கே விட்டுவிடுகிறேன்!!
-தயா
15.05.2020
Thirunavukkarasu Thayanthan