புலம்பெயர் தமிழர்களிடம் தமது அரசாங்கம் பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாகவும்,இம்முயற்சிக்கு மகிந்த ஆதரவளித்துள்ளதாகவும் சிறிலங்காவின் அமைச்சரவை பேச்சாளாரன கெஹலிய ரம்புக்வெல என்பவர் அண்மையில் தெரிவித்த கருத்து மீதான அதிர்வலைகளை தமிழ் ஊடகங்கள் பிரதிபலித்தன. எந்த எந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அல்லது தனிநபர்கள் இவ்வாறான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிறார்கள் என்ற விபரங்களையும் சில ஊடகங்கள் வெளியிட்டன. இவ்வற்றின் உண்மைத்தன்மை கேள்விக்குரியது என்பது ஒருபுறமிருக்க, இவ்விதம் தொடர்புபட்டவர்கள் எனக் கருதப்பட்டவர்கள் உடனடியாகவே மறுப்பு அறிக்கைகளை வெளியிட்டமையானது சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்துவதனை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்பதனை அவர்கள் உணரந்துள்ளமையை வெளிக்காட்டுவதாக அமைந்திருந்தது. இருப்பினும் புலம்பெயர் மக்களுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையிலான தொடர்பாடலை ஏற்படுத்துவதில் ஒன்றுக்கு மேற்பட்ட சக்திகள் முனைப்பாகவுள்ளன என்ற தகவலை நாம் இலகுவில் புறந்தள்ளிவிட முடியாது.
புலம் பெயர் தமிழர்களின் முக்கியத்துவம்
தமீழீழம் நோக்கிய நீண்ட பெரும் திட்டத்தில் புலம்பெயர் அலைந்துழல்வு சமூகத்தின் வகிபாகத்தினை தமிழீழ விடுதலைப்புலிகள் நன்கு உணரந்திருந்தனர். தேசியத் தலைவர் அவர்கள் 2008ம் ஆண்டு மாவீரர் தினவுரையில், “தேசவிடுதலைப் பணியை தீவிரமாக முன்னெடுத்து வருகிற புலம்பெயரந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக்குறிப்பிட்டமையை வெற்று வார்த்தைகளாக எடுத்துக்கொள்ள முடியாது. ‘தமிழீழ தேச நிர்மாணம்’ என்ற ஒரேயொரு இலட்சியத்தை தவிர வேறெந்த நலனையும் முன்னிலைப்படுத்தாத தேசியத்தலைவர் அவர்கள் அவரது முக்கியத்துவம் வாய்ந்த மாவீரர்தின உரையில் சுட்டிக்காட்டிய விடயத்தை தமிழின விரோதிகளும், எதிர்ப்பு சக்திகளும் கண்டுகொள்ளாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை.
தமிழ் மக்களின் போராட்ட சக்தியான விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டு, அவர்களால் நிர்வகிக்கப்பட்டுவந்த நடைமுறை அரசு சிதைக்கப்;பட்ட பின்னர், சிறிலங்கா அரசுக்கு சவாலாகவும், அனைத்துலக அதிகார சக்திகள் தமது கொள்கைகளை நிறைவேற்றுவதற்கு இடைஞ்சல் விளைவிப்பவர்களாகவும் இரண்டு தரப்பினர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். ஓன்று தமிழ் அலைந்துழல்வுச் சமூகம், இரண்டாவது தமிழ்நாட்டில் உள்ள தமிழ்த்தேசிய சக்திகளும் மக்களும்.
சிறிலங்காவின் ஆக்கிரமிப்பில் ஈழத்தில் போராட விளையும் மக்களையும், அமைப்புகளையும் இராணுவ கிடுக்குப்பிடியில் வைத்திருப்பதில் சிறிலங்கா அரசிற்கு சிக்கல்கள் இருக்கப்போவதில்லை. தமிழகத்தில் இருக்கும் ஈழத்தமிழ் ஆதரவு சக்த்திகளை இந்திய மத்திய அரசினதும் மாநில அரசினது நடவடிக்கைகள் மூலம் கட்டுப்படுத்த முடியுமளவிற்கு, மேற்கத்தைய அரசுகளால் அவர்களது சட்ட ஆளுமைக்குள் இருக்கும் அலைந்துழல்வு சமூகத்தினை கட்டுப்படுத்த முடியாது. இதனை மேற்கில் வாழும் தமிழ் மக்களின் போராட்ட முயற்சிகளை கட்டுப்படுத்த முடியாதநிலையில் இங்குள்ள அரசுகள் உள்ளன என அர்த்தப்படுத்த முடியாது. மென்போக்கான நடவடிக்கைகள் மூலம் தமிழ் அலைந்துழல்வு சமூகத்தின் முயற்சிகளை திசைதிருப்பி விட முடியும் என மேற்கத்தைய அதிகார மையங்கள் திடமாக நம்புகின்றன.
இரட்டை அணுகுமுறை
போரின் இறுதியில் சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் அனைத்துலக மட்டத்தில் செயற்படும் சர்வதேச மன்னிப்புச் சபை, மனிதவுரிமை கண்காணிப்புக்குழு போன்றவை குறிபிடத்தக்களவு தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றன. சனல் நான்கு போன்ற ஊடகங்களும் இவ்விடயத்தில் அதிகளவு பங்களிப்பினை வழங்கி வருகின்றன. அதே சமயத்தில் Interantional Alert, Royal Commonwealth Society போன்ற அமைப்புகள் இலங்கைத் தீவினை பிறப்பிடமாகக் கொண்ட அனைவரையும் Sri Lankan என்ற அடையாளத்தில் கொண்டுவந்து சிறிலங்காவின் ஒற்றையாட்சி முறையை வலுப்படுத்தும் செயற் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இவை இரண்டும் நேரெதிரான நடவடிக்ககைள்போல் தோன்றினாலும் அவை மேற்கின் கொள்கைகளை ஒட்டியதாக அமைந்தள்ளமையைக் காணலாம்.
சிறிலங்காவிலிருந்து அனைத்துக்கட்சி பிரதிநிகளின் குழுவை அழைத்து தமிழ் அலைந்துழல்வு பிரதிநிதிகளுடன் உரையாட வைப்பது. இங்கிருந்து அனைத்து இனங்களையும் பிரதிநித்துவப்படுத்தும் இளையவர்களின் குழுவை இலங்கைத் தீவிற்கு அனுப்பி அங்குள்ள அரசியற்கட்சி பிரதிநிதிகளுடன் உரையாட வைப்பது என்பவை சிறிலங்காவின் ஒற்றையாட்சி முறையை ஏற்றுக் கொண்ட நடவடிக்கையாகவே அமைந்துள்ளன. மிகுந்த அவதானத்துடன் தமிழ் அலைந்துழல்வு சமூகத்தில் செல்வாக்குச் செலுத்தக் கூடியவர்களை இலக்கு வைத்தே இந்த மென்போக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த சதிவலைகளை புறந்தள்ளி செயற்படுபவர்கள் தேசியவாத சிந்தனையில் மூழ்கியுள்ள கடுங்கோட்பாளர்களாக முத்திரை குத்தப்படுகிறார்கள். தற்போது, எண்ணிக்கை அடிப்படையில் கடுங்கோட்பாளர்களின் தொகை மிக அதிகமாக இருந்தாலும், இதில் மாற்றத்தை கொண்டுவரமுடியும் என மேற்குலக அதிகார மையங்கள் நம்பிக்கை கொண்டுள்ளன.
இங்கு இரண்டு குழாம்களாக அடையாளங் காணப்பட்டுளள அரசுசாரா அமைப்புகள், நடைமுறையில் ஒத்திசைவான செயற்பாடுகளையே மேற்கொள்ளுகின்றன. இதனை சர்வதேச முரண்பாடுக்கான குழுவின் (International Crisis Group) அறிக்கைகளிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். நடந்தது இனப்படுகொலை என்பதனை மறுதலித்து, இரண்டு தரப்பாலும் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்ற விசாரணைகளை வலியுறுத்தவதும், மறுபுறத்தில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை மறுதலிப்பதும் இந்த இரண்டை அணுகுமுறையை தெளிவாக வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளன.
மேல்தட்டு மக்களை நோக்கிய நகர்வுகள்
தமிழ் அலைந்துழல்வு சமூகம் தொடர்பான சர்வதேச அதிகார மையங்கள் தங்கள் முகவர்கள் ஊடாக சமூகத்தில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய மேல்தட்டு (elitist) மக்களையே அணுகுகின்றன. அடித்தட்டு (grassroot) மக்களை திருப்திபடுத்துவதில் இலகுவான விடயம் என அவை கருதவில்லை. தமது இராசதந்திர நகர்வுகள் மூலம் மேல்தட்டினரின் பிரதிநிதிகளை திருப்பதிப்படுத்தி, அவர்களினூடாக தமது கருத்துகளை சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்லமுடியும் என்பது அதிகாரமையங்களின் உத்தியாகவுள்ளது. மேற்கு நாட்டு அதிகார மையங்களுடன்; நட்புறவை பேணிக்கொள்வது மேல்தட்டு மக்களுக்கு உவப்பான விடயம் என்பதற்கு அப்பால், அவர்கள் பொதுவாக தாராண்மை வாதக் கொள்கைகளை ஏற்பவர்களாகவும் இருக்கிறார்கள். இவ்விடத்தில், மேற்குலக இராசதந்திரிகள் என்பவர்கள் முகத்திற்கு நேரே பொய் சொல்பவர்கள் என்பதனை தனது குறுகிய கால அனுபவத்தில் அறிந்து கொண்டதாக அவர்களுடன் அதிகமான தொடர்புகளை பேணிவரும் தமிழ் அமைப்பின் பிரதிநிதி ஒருவர் அண்மையில் இக்கட்டுரையாளருடனான தனிப்பட்ட உரையாடலில் குறிப்பிட்டமையை இதனுடன் சேர்த்துப் பார்க்க வேண்டியுள்ளது.
அலைந்துழல்வு சமூகத்தில் உள்ள மேல்தட்டினை சேர்ந்த செயற்பாட்டாளர்களையிட்டு அவதானமாக இருக்குமாறு வெளிநாட்டில் உள்ள செயற்பாட்டளர்களுக்கு விடுதலைப்புலிகள் முன்னர் அறிவித்ததாக தகவல் ஒன்று உண்டு. உண்மையில் அவ்வாறானதொரு ஐயப்பாடு தற்போதும் நிலவுகிறது. இச்செயற்பாட்டாளர்கள தமது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்துவதன் மூலமும், முடிந்தவரை வெளிப்படைத் தன்மையுடன் நடந்துகொள்வதன் மூலம்; இந்நிலையை கடந்து செல்லமுடியும் என எதிர்பார்க்க முடியும்.