கோழியும் குஞ்சுகளும்…

806

கோழியும் குஞ்சுகளும்…
(ஒரு பேப்பருக்காக சுகி)

நாடு விட்டு நாடு வந்து நாம் படுகிறபாடு கொஞ்ச நஞ்சமில்லை என்று நாம் எல்லோருமே அலுத்துக் கொண்டாலும், இயல்பாகவே நாட்டில் ஏறக்குறைய எல்லா விடையங்களுமே ஒரு சின்ன போராட்டமாகவோ, போட்டியாகவோ அல்லது எமது பங்கை நாம் எடுத்து சேமித்து வைக்காவிட்டால், பிறகு வந்து எடுக்க இருக்கமாட்டாது என்ற நிலைமைக்குள் வளர்ந்ததால், ஒரு விழிப்புணர்வும், உசார்தன்மையும் அத்தோடு சின்ன வயதில்; இருந்தே நீதிக்கதைகளையும், நல்வழி, திருக்குறள் என்று தலைக்குள் புகுத்தப்பட்ட வாழ்வியல் சிந்தனைகளால், எமது போதாமைக்குள்ளும், ஒரு தாராளுன்மையுடன், ஊருடன் ஒத்து வாழ்ந்துவந்த நிலை, இங்குவந்ததும் எம்மில் பலருக்கு எதையும் தாங்கும் ஒரு மனோநிலையையும், சோதனைகளையும், வேதனைகளையும் உள்வாங்கிக்கொண்டு அதே தளராத மனேபாவத்துடன் புதிய, மொழி தெரியாத நாட்டில் கூட வாழப்பழகிக் கொள்ளவைத்தது.

நாம் பழகிக்கொண்டாலும், இங்கு எம்மில் பலருக்கு புரியாத புதிராக இருப்பது பிள்ளைகளை எப்பிடி கையாளுவது என்பது தான். அங்கு பிறந்து 10வயதளவில் இங்குவரும் பிள்ளைகளும், இங்கேயே பிறந்து இங்கேயே வளரும் பிள்ளைகள் என்றும், தாய்மொழி தெரிந்த, தெரியாத பிள்ளைகள் என்றும், தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியில் வளரும், வளராத பிள்ளைகள் என பல வேறு சூழ்நிலையில் வளரும் பிள்ளைகள் அந்தந்த சூழ்நிலை பாதிப்பை உள்வாங்கி வளர்கிறார்கள். அவர்களின் வாழ்கைமுறையும் அதற்கேற்ப இருக்கும் போது, சில நேரங்களில் தெரிந்தோ தெரியாமலோ பிள்ளைகளுக்கும் பெற்றேருக்கும் உள்ள இடைவெளி அதிகரிந்துக் கொண்டே போகிறது. அதிலும் ஊரில், நாட்டில் என்று வரும் பல்வேறு பொருளாதார, வதிவிடஉரிமை பிரச்சனைகளில் மூழ்கி போயிருக்கும், அல்லது குடும்பநலனுக்காக வியாபாராத்தை விஸ்தரிப்பதிலும், பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் முழுமூச்சாக இருக்கும் பெற்றோர், எல்லாம் வெளிக்க, குஞ்சுகள் பின்னாலே வருகின்றனவா என்று கொஞ்சம் தலையை திருப்பி பிள்ளைகளைப் பார்த்தால், அங்கு பிள்ளைகளுக்கும் இவர்களுக்கும் உள்ள இடைவெளி அதிகரித்து போன நிலையில், இழந்த நேரத்தையும், காலத்தையும் மீளபெறமுடியாத, ஒரு பெரிய இடைவெளி உள்ளதை உணரும்போது மிகவும் வேதனையும், தங்கள் மேல் கழிவிரக்கமும் படுவதோடு மட்டுமல்லாது பிள்ளைகள் மேல் தொடர்ச்சியான கண்காணிப்பு, இறுக்கமான கட்டுப்பாடு, வாக்குவாதம், என்பவற்றால் நிலைமையை விரைவாக சீர்படுத்த நினைத்து, இன்னும் சீர்குலைந்து, பிள்ளைகளின் தொடர்பை நிரந்தரமாக இழந்துவிடுவோமோ என்ற பயத்தில் வாழ்கிறார்கள்.

இங்குவளரும் பிள்ளைகள் சிலர் இரண்டு காலாச்சாரத்திலும் தமக்கு அனுகூலமானதை சந்தர்பத்திற்கு ஏற்றால் போல தமக்கு சாதமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள். பிள்ளைகளுக்கு நீங்கள் வழங்கும் தொடர்ச்சியான, நிபந்தனைகள் அற்ற அன்பு அவர்களை உடனடியாக இல்லாவிட்டாலும், காலப்பொழுதில் சரியான பாதைக்கு இட்டுச்செல்லும். அவர்கள் மேல் நாம் வைக்கும் நம்பிக்கையும், அவர்களின் பார்வையில் இருந்து அவர்கள் சொல்வதை விளங்கிக்கொள்ளும் பக்குவமும் இருந்தால் போதுமானது, அழுது ஆர்பார்ட்டம் செய்வதாலோ, உங்கள் அன்பை பயணமாக வைத்து மிரட்டுவதாலோ குறுகிய காலத் தீர்வைக் அடையக்கூடியதாக இருந்தாலும் அது நிரந்தரமான ஆரோக்கியமான தீர்வாக இருப்பதில்லை. இதற்கு சில வருடங்கள் கூட எடுக்கலாம்.

இங்கு வழிகாட்டுதல் (Mentoring) என்று அழைக்கப்படும் திட்டத்தின் கீழ் சில பகுதிகளில் councilஇலின் உதவியோடு 11 வயதிற்கும் 18 வயதிற்கும் இடைப்பட்ட பிள்ளைகளோடு சேர்ந்து, ஒரு வழிகாட்டுபவர்போல நம்பிக்கையான நட்பை பேணுவதற்கு, அந்தந்த சமூகத்தில் தொண்டர்களை, அவர்களின் விருப்பத்தின் பெயரின் தேர்தெடுத்து, பயிற்ச்சி அளித்து, அந்தந்த சமூகங்களோடு சேர்ந்து பணிசெய்வதற்கும், அவர்களின் குழந்தைகளுக்கு நம்பிக்கையான வழிகாட்டுபவராக இருப்பதற்கும் வழிகள் செய்யப்பட்டுள்ளன.

உதாரணமாக கரோபகுதியில் உள்ள வழிகாட்டுதல் Mentoring திட்டம், அப்பகுதியில் உள்ள 11 வயதிற்கும் 18 வயதிற்கும் உள்ள பிள்ளைகளுக்கு வழிகாட்டும் உதவியை இலவசமாக Middlesex Tamil Academy என்ற நிறுவனத்தின் ஊடாக தமிழ் பிள்ளைகளுக்கு வழங்கி வருகின்றது. உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் இப்படியான தனிப்பட்ட (one to one) வழிகாட்டும் உதவியிருந்தால் நன்று என்று நினைக்கும் இடத்து, உங்கள் பிள்ளைகளும் அதை விரும்பும் இடத்து அவ்வுதவியை பெறுவதற்கு இன்நிறுவனத்தை அணுகலாம். நன்கு பயிற்றப்பட்ட தொண்டர்கள் இத்திட்டத்தின் கீழ் பணியாற்றுவதற்கு முன்வந்துள்ளார்கள். மேலதிக விபரங்களுக்கு [email protected] என்ற முகவரியிலோ அல்லது அத்திட்டத்தின் இணைப்பாளர்களை பின்வரும் கைத்தொலைபேசியின் மூலமோ தொடர்பு கொள்ளலாம் 07780746218/07513350007.

இந்த வயது ஒரு பொல்லாத வயது, இந்த தடுமாற்றமான வயதைத்தாண்டிவிட்டால் ஒரளவு பிரச்சனை தீர்ந்தது மாதிரி என்று நினைக்கும் பெற்றோர் அதிகம், ஆனால் வேலை பளு, வயோதிபர் பராமரிப்பு, மற்ற குழந்தையின் உடல்நிலை, அவர்களின் நோய்கள், உடல்நிலை என்பவற்றால் 11 -18 வயதுக்பிள்ளைகளின் பிரச்சனைகளை மனம்விட்டு கதைத்து அவர்களோடு நேரத்தை செலவிட நேரமில்லாமல் அவர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அப்பிடிபட்டவர்களுக்கு இந்த திட்டங்கள் உறுதுணையாக இருக்கும். கோழிகுஞ்சுகள் எந்த நேரமும் தாயுடன் நிற்பதில்லை. அதைப் பருந்தில் இருந்து பாதுகாப்பதற்கு, அவற்றுக்கு நிறம் அடித்துவிடுவது உண்டு. அந்த குஞ்சு பருவத்ததை தாண்டிவிட்டால் அவற்றையிட்டு கோழி கவலை கொள்வதில்லை. பிள்ளைகளுக்கும் ஒரு வழிகாட்டல் துணை இருந்தால் அந்த குஞ்சுப் பருவத்தை ஒரு சரியான முறையில் கடந்து விடுவார்கள்.