கோவிட்-19 : பேரச்சம் தருகிறது அமெரிக்கா

64

கோவிட்-19 வைரசை கையாள்வதில் அமெரிக்காவில் தொடரும் பெரும் குழப்பநிலை பேரச்சம் தருகிறது. இன்றைய இவ்வுல பெரும் சவாலுக்கு தலைமைத்துவம் வழங்கும் ஆற்றல் உள்ளதாக கருதப்படும் அமெரிக்கா, தனக்கே தலைமைத்துவம் இன்றி தடுமாறுகிறது. இன்றைய அமெரிக்காவின் சனாதிபதி ரம்பிற்கு தெரிந்ததெல்லாம் காலை எழுந்து பங்குச் சந்தை ஏறியதா? என்பதைப் பார்ப்பதும், தனது பெயர் செய்திகளில் அடிபடிகின்றதா? என்பதுவும் தான். அதில் எவ்வித தளம்பல் தென்பட்டாலும், ஒரு ருவிட்டைப் போட்டு அதை சரி செய்துவிடலாம் என்ற குருட்டு நம்பிக்கை. அதனாலேயே கோவிட்-19 குறித்து எவ்வித புரிதலும் இன்றி, வாய்க்கு வந்ததெல்லாம் பேசி வருகின்றார். இது கோவிட்-19 சவாலுக்கு பெரிதும் முகம்கொடுத்து நிற்கும் சுகாதாரத்துறை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி வட்டாரங்களில் பெரும் அதிருப்தியை அதிகரித்து வருகிறது. சுகாதாரத்துறை பல மட்டங்களிலான தட்டுப்பாடுகளினால் அல்லாடுகிறது. இதனை எதிர்கொள்ள வேறு வழியின்றி மாநில ஆளுனர்களே கடும் நடவடிக்கைகளை அறிவித்து வருகின்றனர். அவர்களோடெல்லாம் ரம் போர் தொடுக்கிறார்.

தேர்தல் ஆண்டில் பொருளாதாரம் பெரும் சவாலுக்கு உள்ளாவதை மட்டும் அவர் விரும்பவில்லை. பங்குச்சந்தை பெரும் சரிவை சந்தித்து நிற்பதை அவரால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. அதனால் தனிமைப்படுத்தலை உடன் நிறுத்தி, மக்களை வேலைக்கு திரும்புமாறு பணிக்க முனைப்புப் பெற்று வருகிறார். உலகமே தொற்றின் வேகத்தை உடன் கட்டுப்படுத்தவில்லையானால், தமது சுகாதாரத்துறையே உருக்குலைந்துவிடும் என்ற அச்சநிலையில், மக்கள் தனிமைப்படுத்தலை தீவிரப்படுத்தி வருகிறது. ரம் தனது அறிவிற்ப்பிற்கு வலுச்சேர்க்கும் வகையில், அவரால் தூண்டிவிடப்பட்டுள்ள ரெக்சஸ் மாநிலத்தின் இவரது கட்சியின் லெப். கவனர், அனைத்துக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட வேண்டும். அனைவரும் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்கிறார்..

ஆம், 70 வயதிற்கு மேற்ப்பட்டவர்கள் பாதிக்கப்படலாம். நானும் அவ்வயதினன் தான். அது பரவாயில்லை நாடு தான் முக்கியம் என்கிறார் இந்த அறப்படிச்சவர். ஜயா… யார் சொன்னது 70 வயதிற்கு மேல்த்தான் அனைவரும் சாவார்கள் என்று?… அனைத்து வயதிலும் சாவார்கள். ஆனால் 70 வயதிற்கு மேல் அதிகம் சாவார்கள் அவ்வளவு தான். இருக்க, எழும் அசாதாரண நிலையால், சுகாதார சேவை முழுமையாக சீர்குலைந்ததன் பின்னர், ஏனையவர்களின் சுகாதார தேவைகளைக் கூட யார் பூர்த்தி செய்வது கனவான்களே? மற்றும் நோய்த் தொற்று உடையவர்களை, தொடர்ச்சியாக எதிர்கொள்ள, எதிர்கொள்ள வைத்தியர்கள் எவ்வயதினராயினும், தொடர்ந்த தொற்றுகளால் பெரும் இழப்பை சந்திப்பர் என்பது தெரியுமா? இது தான் தற்போது இத்தாலியில் அரங்கேறும் பெரும் துன்பியல்… அமெரிக்காவில் இப்பெரும் குழப்பம் தொடர அனுமதித்தால், அது உலகளாவிய பெரும் குழப்பத்திற்கு வழிகோலும் என்பது மட்டும் நிதர்சனம்.

– Nehru Guna