சமயம் கெடுத்த தமிழ்

766

அலசுவாரம் – 91

அனைவருக்கும் சித்திரைப் புதுவருட வாழ்த்துக்களை முன்கூட்டியே தெரிவிக்கிறேன்.   சித்திரைப்  புத்தாண்டு வருகிறது.  தமிழ் சிங்கள வருடப்பிறப்பு என்று இதை நாம் காலங்காலமாகக் கொண்டாடி வருகிறோம். ஈழத்தமிழர்கள் தைப்பொங்கலையும் புதுவருடத்தையும் சமமாகக் கொண்டாடும் வழக்கமுடையவர்கள். சாத்திரம் சொல்பவர்கள் இந்தப் புதுவருடம் உங்களுக்கு எப்படி அமையப் போகிறதென்பதைக் கணித்து எல்லா ராசிக்காரர்களுக்கும் புத்தகம் அடித்து வெளிவிடுவது தொடங்கி வாக்கிய கணித பஞ்சாங்கங்களை வெளியிடுவது வரை இந்தக்காலத்திலேயே நடைபெறும்.  சமூகத்தில்  உள்ள பெரியவர்கள் தொடங்கி அரசியல், மதத் தலைவர்கள் வரை புத்தாண்டு கால வாழ்த்துச் செய்திகளை வெளியிடுவார்கள், அதைப் பத்திரிகைகள் பிரசுரிக்கும்.  ஆனாலும் கடந்து போன காலங்களில் கிட்டத்தட்ட ஒரு முப்பது வருடகாலமாக இந்தப் புத்தாண்டை ஈழத் தமிழ்மக்கள் அதிகம் சுவரரியமில்லாத ஒன்றாகவே கொண்டாடி வந்திருக்கிறார்கள்.  இன்னும் சொல்லப் போனால் அது ஒரு பேரினாவாதத்தின் சின்னமாகவே தமிழ் மக்களால் கருதப்பட்டு வந்திருக்கிறது.  இனிவரும் காலங்களில் அந்த நிலை மாறக்கூடும்.  

தமிழகத்தில் சித்திரைப் புத்தாண்டைப் பெரிதாக யாரும் கொண்டாடுவதில்லை.  தீபாவளிதான் அங்கு கிட்டத்தட்ட எழுபது வருடங்களாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.  அதற்குக் காரணம் இந்திய தேசியத்தில் ஏற்பட்ட ஒருமைப்பாடு. பிரிட்டஷ் ஆட்சிக்கெதிராக மொத்த இந்தியாவும் திரண்டெழுந்தபோது இந்துத்துவ ஒற்றுமையும் கூடவே வலுப்பட்டதனால் வடநாட்டில் கொண்டாடப்பட்ட இந்த இந்துப் பண்டிகை தென்நாட்டிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.   அதற்கு முந்தைய காலங்களில் தமிழர் திருநாளாக தைப்பொங்கலையே தமிழர்கள் கொண்டாடி வந்திருக்கின்றனர்.  சமீபத்தில்; தமிழக அரசு தமிழரின் பிரதான பண்டிகையாக தைப்பொங்கலை அறிவித்துள்ளது.

ஆகமொத்தத்தில் ஒரு இருபது மைல்களுக்கும் குறைவான பாக்கு நீரிணையின் வடக்கிலும் தெற்கிலும் வாழும் தமிழினம் தனது தனித்துவம் மிக்க பண்டிகை எது என்ற விடயத்திலேயே ஏனைய இனங்களின் ஆதிக்கத்தால் குழம்பிப் போயிருந்திருக்கின்றது.

“ஊரோடினால் ஒத்து ஓடு, ஒருவன் ஓடினாலும் கேட்டுக் கேட்டு ஓடு” என்பதற்கிணங்க, தமிழர்கள் தமக்கெனத் தனியான பண்பாட்டுக் கலாச்சார விழுமியங்களிருந்தும் அவற்றைச் சரிவரப் பின்பற்ற முடியாமல் மிகவும் குழப்ப நிலையிலேயே வாழ்ந்திருக்கிறார்கள்.  எல்லாவற்றையும் மதம் தனதாக்கிக் கொண்டது.  தமிழ் இனத்திற்கேயுரிய தைப்பொங்கல் போன்ற உழவர் திருநாள் கூட இந்துமதத்தின் வடிவமைப்புக்குள் உட்படுத்தப்பட்டு ஏனைய கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத்தவர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத பண்டிகையாகப் போய்விட்டது.  மதம்தான் தமிழரைப் பிரித்து வைத்திருக்கிறது.

உலகம் முழுவதும் இந்தப் பிரச்சனையுண்டு.  இனங்களைப் பிரித்து வைத்திருப்பது அந்தந்த இனங்களின் பல்வேறுபட்ட மதங்கள்தான்.  கால் மாக்ஸ் போன்ற மிகச்சிறந்த சமூக ஆய்வாளர்கள் மதத்தை அபினுக்கு ஒப்பிட்டுள்ளனர்.  மதம் இதயமில்லா உலகத்தின் இதயம் என்று அவர் மேலும் கூறுகிறார்.  மனிதனுக்கு உடல் வேதனையை தற்காலிகமாக நீக்க அபின் கலந்த மருந்துகள் உதவுவதைப் போல சமூகத்தின் வேதனையை மதம் தற்காலிகமாக நீக்குகிறது என்பது அவரது கருத்து.  துரதிஸ்ட வசமாகக் காலங்காலமாய் தமிழினத்தையும் மதப்பிரிவினைகள் கூறுபோட்டுவிட்டன.  

ஆரம்ப காலங்களில் சைவ, வைஷ்ணவப்பிரிவுகள் தமக்குள் சண்டையிட்டன பின்னர் காளமுகம், காணாபத்தியம் கௌமாரம் என்று காளி, கணபதி, குமரனான முருகன் என்று பல தெய்வங்களையும் வணங்கும் கோஷ்டிகள் உருவாகித் தமிழினம் பிளவுபட்டது.  பின்னர் புறச்சமயங்களென்று கூறப்படும் சமணம், பௌத்தம் போன்ற மதங்கள் உள் நுழைந்தன, பிற்காலத்தில் பிறதேசங்களிலிருந்து இஸ்லாம், கிறிஸ்தவ நெறிகள் வந்து மேலும் பிளவுகள் தோன்றின.  இத்தனைக்கும் நடுவில் ஆதிசங்கரர் போன்ற ஞானிகள் உருவாகி இந்தியாவிலிருந்த அனைத்து கடவுளர்களையும் சார்ந்த சமயங்களை ஒன்றாக்கி சனாதன இந்துத்வ நெறியை உருவாக்கினார்கள்.  சமணமும் பௌத்தமும் இஸ்லாமும் கிறிஸ்தவமும் தனித்த நெறிகளாகவே நிலைபெற்றுவிட்டன.  சங்கரர் போன்ற ஞானிகள் சமண பௌத்த நெறிகளையும் சனாதன இந்துதர்மத்திற்குள் கொண்டுவர முயற்சிக்காமல் விட்டதற்கான அடிப்படைக் காரணம் அச்சமயங்கள் சாதிப்பிரிவினையை ஏற்காமல் விட்டதுதான்.  மொத்தத்தில் இந்து சமயத்திலிருந்த சாதிப் பிரிவுமுறைமைதான் அடிப்படையிலிருந்தே சமர சன்மார்க்கமென்னும் சமயங்களின் ஒற்றுமையைக் கொண்டுவர விடாமல் தடுப்புச் சுவரைப் போட்டுவிட்டது.

மேற்கு நாடுகளில் கிறிஸ்தவத்தில் கத்தோலிக்கமும் புரட்டஸ்தாந்தும் மக்களைப் பிரித்ததுபோல, அரபுலகத்தில் சியா, சன்னி முஸ்லிம் மதப்பிரிவுகள் மக்களைப் பிரித்ததுபோல அல்லாமல் சங்கரர் காலத்தில் பிரிந்து நின்ற பலதெய்வ வணக்கம் இந்துதர்மம் என்ற ஒரே குடைக்குள் கொண்டுவரப்பட்டது என்னவோ வரவேற்கத்தக்க முயற்சியாக இருந்தாலும் சமண பௌத்த நெறிகள் புறச்சமயங்களாக்கப்பட்டது பெரிய பின்னடைவுகளையே ஏற்படுத்திவிட்டது.

சுங்கரருக்கு முற்பட்ட திருஞானசம்பந்தர் போன்ற சைவத் தீவிரவாதிகள் பல இரசாயன வேதி இயல் ஆய்வுகளை மேற்கொண்ட சமண பொளத்த பள்ளிகளை இடித்து நொருக்கவும் அத்தகைய ஆய்வுகளில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான புறச்சமயத் துறவிகளை கழுவேற்றிக் கொல்லவும் காலாயிருந்த காரணத்தினால் மேற்கு நாடுகளில் ஏற்பட்ட அறிவியற் புரட்சி போன்ற புரட்சியொன்று தெற்காசியப் பிராந்தியத்தில் ஏற்பட இடமில்லாமல் போய்விட்டது.  எப்போதும் சமயம் சார்ந்த சிந்தனைகள், இலக்கியங்கள்,  என்று உருவாகித் தமிழ் தன் அறிவியல் விரிவாக்கத்தை இழந்தது.

லத்தீன் போன்ற மேற்கத்தைய செம்மொழிகள் அறிவியலில் பெரிய முன்னேற்றங்களை அடைந்த அதே வேளையில் சமஸ்கிருதம், தமிழ் போன்ற தெற்காசியச் செம்மொழிகள் சமய தத்துவ ஞானங்களையே பேசிக்கொண்டிருந்தன.  இன்றைய விஞஞானத்தில் பயன்படுத்தப்படும் சொற்களில் அனேகமானவை லத்தீனிலிருந்தும் கிரேக்க மொழியிலிருந்தும் உருவானவை.  அம்மொழிகள் அக்கால அறிவியல் வளர்ச்சிக்குக் காலாயிருந்தன்.  ஆனால் அதே காலத்தில் மிக்க வளமுடனிருந்த தமிழோ
“நின்றுணுஞ் சமணும் இருந்துணும் தேரும் நெறியலதான பிற கூற…” என்று புறச் சமயங்களைத் திட்டிக்கொண்டிருந்தது.  

நிலம், நீர், தீ, காற்று, ஆகாயமென்னும் பஞ்ச பூதக் கூட்டினாலேயே இவ்வுலகம் உருவானதென்னும் மிக அடிப்படையான வேதியியல் கருதுகோளுடன் தமிழ் நிற்க, மேற்கில் நூற்றுக்கு மேற்பட்ட அடிப்படை மூலகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றிற்கு லத்தீன் போன்ற மொழிகளில்  பெயரிடப்பட்டது.  “காயமேயிது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா….” என்பதோடு உடற்றொழிலிய்ல் உடலமைப்பியல் ஆய்வுகளைத் தமிழ் நிறுத்திக்கொண்டது, மேற்கிலோ லத்தீனின் உதவியோடு மருத்துவவியல் ஓங்கி வளர்ந்தது.  

முற்போக்கான அறிவியல் விஞ்ஞான வளர்ச்சிக்குக் காலாயிருந்த எல்லா வகை அறிவியற் சிந்தனைகளும் சனாதன தர்மமென்னும் இந்துத்துவ நெறியின் ஆதிக்கத்தினால் அழிந்தொழிந்து போக சைவ வைஷ்ணவ நெறிகள் வலுப்பெற்றன.  அதன் விளைவாய் தமிழ் அறிவியலில் முன்னேற்றம் காணாதவோர் மொழியானது.  இதனாலேயே தமிழைக் காட்டுமிராண்டி மொழி எனத் தந்தை பெரியார் ஒருதடவை நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.  அந்த வார்த்தை அக்காலத்தில் பலரை   வேதனைப்படுத்தியது என்னவோ உண்மை.  பெரியார் தெலுங்கரானதால் அவரது தமிழைப்பற்றிய விமர்சனத்தைப் பலரும் எதிர்த்தனர்.  அவரே ஒரு தமிழராயிருந்திருந்தால் யாரும் பெரிதாகக் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள்.  தனது மொழியைத் தானே திட்டிவிட்டுப் போகிறான் என்று பேசாமல் இருந்திருப்பார்கள்.

இன்று சங்க நூல்களையும், பன்னிரு திருமுறைகளையும், இதிகாசபுராணங்களையும் மட்டும் வைத்துக்கொண்டு தமிழை நாம் செம்மொழியென்று பெருமையடித்துக் கொள்வதில் ஒரு அர்த்தமுமில்லை.  செம்மொழி மாநாடு என்ற போர்வையில் நடத்தப்படும் அரசியல் ஊர்வலங்கள் எந்தப் பலனையும் தரப்போவதில்லை.  தமிழை உலகின் மேம்பட்ட மொழிகளில் ஒன்றாயாக்க அறிவியலில் அதன் பயன்பாட்டை முழு அளவில் கொண்டு வருவதே முக்கியமாகின்றது.  தமிழக அரசு போன்ற மாநில அரசுகளால் தமிழைக் கல்விமொழியாக்கக் கூட முடியவில்லை.  ஆலயங்களில் சமஸ்கிருதத்திற்குப் பதிலாய் தமிழிற் சுலோகங்களைக் கூறி எல்லோரும் புரிந்து கொள்ளக்கூடிய வழிபாடுகளைச் செய்ய வைக்கவே முடியாதபோது எப்படி அறிவியல் ரீதியில் தமிழை வளர்த்தெடுக்கப் போகிறோமோ தெரியவில்லை.  எல்லாவற்றிற்குள்ளும் அரசியல் புகுந்து விளையாடுகிறது.  

இந்தியாவின் நூற்றுப் பதினைந்து கோடிக்கும் அதிகமான மக்களில் ஓர் ஆறே ஆறு கோடிப் பேரின்; தேசிய மொழியான தமிழுக்கு இந்திய நடுவண் அரசு செம்மொழி அந்தஸ்தை வழங்கியதே பெரிய காரியம். இந்த லட்சணத்தில் முழு நாட்டினது தலைவிதியை நிர்ணயிக்கும் கல்விக் கொள்கையை மாற்றி தமிழை ஒரு முக்கிய பிரதேசத்தின் அடிப்படைக் கல்விமொழியாக்குவது எப்படிச் சாத்தியம்.  தூரநோக்கில் தமிழிற்கான எதிர்காலம் அதன் செம்மொழி அந்தஸ்திற்குமேல் நகர்வதற்கு வாய்ப்பேயில்லை.  தமிழன் தனக்கெனவோர் சுய ஆதிபத்தியம் கொண்ட நாட்டைக் காணும்வரை. 

தொடருவம்…