சமையலறைக் கத்திகளுடன் பலஸ்த்தீனியர்களின் எழுச்சி

131

ஜெருசலத்தில் இஸ்லாமியர்களால் மேதகு சரணாலயம் அதாவது Noble Sanctury எனவும் இஸ்ரேலியர்களால் Temple Mount எனவும் அழைக்கப்படும் புராதன புனித நிலையத்தில் வழிபாடு செய்வது தொடர்பாக இஸ்ரேலியர்களுக்கும் பலஸ்த்தீனியர்களுக்கும் இடையில் பெரும் மோதல் இப்போது நடந்து கொண்டிருக்கின்றது.

பலஸ்த்தீன அதிகார சபையின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்குக் கரையில் இருக்கும் Nablus உள்ள யூத இனத்தின் நிறுவனரானஜேக்கப்பின் சமாதிக்கு சில பலஸ்த்தீனியர்களால் தீயிடப்பட்டது. 2015-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16-ம் திகதி வெள்ளிக் கிழமை நடந்த இந்த வன்செயலால் ஏற்கனவே கல்லெறி மற்றும் கத்திக் குத்துப் போராட்டத்தால் உருவாகியருந்த இஸ்ரேலியர்களுக்கும் பலஸ்த்தீனியர்களுக்கும் இடையிலான இடையிலான மோதல் மேலும் மோசமடைந்துள்ளது.

பலஸ்த்தீனிய அதிகார சபையின் படையினரால் ஜேக்கப்பின் சமாதியில் வைக்கப்பட்ட தீ அணைக்கப்பட்டது. பலஸ்த்தீனிய அதிகார சபையின் தலைவர் மொஹமட் அப்பாஸ் இந்த தீவைப்புச் சம்பவத்தைக் கண்டித்துள்ளார்.

பலஸ்த்தீனத்தின் INTIFADA எனப்படும் மக்கள் எழுச்சி மூன்றாவது தடவை உருவாகி விட்டது எனவும் சொல்லப் படுகின்றது. முந்திய INTIFADA போராட்டத்தின் போது இஸ்ரேலியப் படையினர் மீது பலஸ்த்தீனியர்கள் கற்களால் எறிந்து போராட்டம் நடாத்தினர். ஆனால் இந்த முறை சமையலறைக் கத்திகள் அவர்களது படைக்கலமாகியுள்ளது. மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படையினரின் சோதனைச்சாவடிகளில் இந்தப் போராட்டம் நடந்து கொண்டிருக்கையில் இஸ்ரேலில் வாழும் பலஸ்த்தீனியர்கள் கைகளில் கத்திகளுடன் நடமாடி வசமாக மாட்டுப்படும் இஸ்ரேலியர்கள் மீது கத்திக்குத்து நடத்துகின்றார்கள். இந்தப் போராட்டத்தின் பின்னணியில் எந்த ஒரு அமைப்பும் இல்லை. இது ஒரு மக்கள் எழுச்சியாகவே நடக்கின்றது. இஸ்ரேலியப் படையினர் கத்தியுடன் தென்படும் எவரையும் கண்டபடி சுட்டுத் தள்ளுகின்றார்கள் போல் தெரிகின்றது. பலஸ்த்தீனியர்களின் முதலாவது INTIFADA எனப்படும் கல்லெறியுடன் செய்த எழுச்சிப் போராட்டம் இஸ்ரேலைப் பேச்சு வார்த்தைக்கு இழுத்துச் சென்று மேற்குக் கரையில் மட்டுப்படுத்தப் பட்ட பலஸ்த்தீன அதிகாரசபை உருவாக்க இஸ்ரேல் சம்மதித்தது.

யூதர்கள் புனிதமாகக் கருதும் ஜேக்கப்பின் சமாதிக்கு அவர்கள் மாதம் தோறும் இஸ்ரேலியப் படையினரின் பாதுகாப்புடன் பயணம் செய்வது வழக்கம்.

யூதர்கள், கிறிஸ்த்தவர்கள், இஸ்லாமியர்கள், கிரேக்க-ரோமர்கள் ஆகியவர்களால் புனிதவழிபாட்டிடமாகக் கருதப்படும் ஜெருசலம் நகரின் temple mount எனப்படும் கோவில் மலையில் இஸ்லாமியர்கள் மட்டுமே வழிபாடு நடத்தலாம் மற்ற மதத்தினர் உள்ளே சென்று பார்வையிட மட்டுமே அனுமதிக்கப்படுவர். இந்த ஏற்பாடு ஜெருசலத்தின் கிழக்குப் பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்ததில் இருந்து நடை முறையில் உள்ளது. ஆனால் இப்போது யூதர்கள் தமக்கு அங்கு வழிபாடு செய்யும் உரிமை வேண்டும் என வலியுறுத்துகின்றார்கள்.

2015-ம் ஆண்டின் இலையுதிர்காலத்தில் யூதர்களின் High Holy Days உடன் இஸ்லாமியர்களின் Eid-al-Adha holidayயும் ஒரே நாட்களில் வந்த படியால் ஜெருசேலத்தில் இருதரப்பினருக்கும் இடையிலான முறுகல் மோசமடைந்தது. 2015 ஒக்டோபர் 7-ம் திகதி பலஸ்த்தீனியர்கள் ஒரு கத்திக் குத்துப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இதையடுத்து இஸ்ரேலியக் காவற்துறையினரும் படையினரும் பலஸ்த்தீனியர்கள் வாழும் பகுதியில் தெருத்தடைகள் போட்டு ஒரு முற்றுகையைச் செய்தனர்.

காசா நிலப்பரப்பில் செயற்படும் ஹமாஸ் அமைப்பினர் மேற்குக் கரையினுள் ஊடுருவிக்குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர் என இஸ்ரேலியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இஸ்ரேலியச் சிறுவர்களைப் பலஸ்த்தீனியர்களும் பலஸ்த்தீனிய சிறுவர்களை இஸ்ரேலியர்களும் கடத்திச் சென்று கொலை செய்ததாக ஒரு தரப்பை மறுதரப்பினர் குற்றம் சாட்டுகின்றார்கள்.
இஸ்லாம் தோன்று முன்னர் கிறிஸ்த்தவம் தோன்றியது. கிறிஸ்த்தவம் தோன்ற முன்னர்யூதர்களின் மதம் தோன்றியது. மற்ற இருமதங்களுக்கு முன்னரே யூத மதம் ஜெருசலத்தைப் புனித நகராகக் கொண்டுவிட்டது என்பதுயூதர்களின் வாதம். ஜெருசலத்தின் முதலாவதுயூத வழிபாட்டுத் தலம் கிறிஸ்துவிற்கு 957 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டுப்பட்டுவிட்டது. அதாவது இஸ்லாமிய மதம் தோன்றுவதற்கு 1579 ஆண்டுகளுக்கு முன்னர் யூதர்களின் வழிபாட்டுத்தலம் ஜெருசலத்தில் கட்டப்பட்டுவிட்டது. மேலும் பலஸ்த்தீனம் என ஒரு நாடோ அரசோ ஒரு போதும் இருந்ததில்லை என்பதுயூதர்களின் வாதம். அதே வேளை ஜெருசலம் என்பது எப்போதும் குழப்பத்தின் உறைவிடமாகவே இருந்து வருகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் 0.9 சதுர கிலோ மைல்களும் 1967-ம் ஆண்டு 2.5 சதுர கிலோ மைல்களும் 2012-ம் ஆண்டு 49 சதுர கிலோ மைல்களும் கொண்ட பிரதேசம் ஜெருசலம் நகராகஇருக்கின்றது. புனித குரானில் ஒரு இடத்தில்கூட ஜெருசலம் நகர் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. பைபிளில் அறுநூற்றிற்கு மேற்பட்ட இடங்களில் ஜெருசலம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெருசலம் நகரில் உள்ள Temple Mount என்பது யூதர்களால் கட்டபப்ட்டது. பின்னர் உதுமானியப் பேரரசு ஜெருசலத்தைக் கைப்பற்றி அங்கு சுவர்களை எழுப்பி மூன்று மதத்தினரும் வழிபடக் கூடிய ஏற்பாடு செய்யப்பட்டது. உதுமானியப் பேரரசு 4.5 கிலோ மீட்டர்நீள சுவரை ஒரு சதுர கிலோ மீட்டர் பிரதேசத்தில் எழுப்பியது முதலாம் உலகப் போரின் பின்னர் ஜெருசலத்தைப் பிரித்தானியப் பேரரசுகைப்பற்றி அதை விரிவாக்கியது. சிலுவைப் போரின் பின்னர் ஜெருசலத்தைக் கைப்பற்றிய கிறிஸ்த்தவர்கள் அங்கிருந்து யூதர்களையும் இஸ்லாமியர்களையும் விரட்டினர். ஆனால் 1187ல்அதை மீளக் கைப்பற்றிய இஸ்லாமியர் அங்கு யூதர்களை மீளக் குடியேற அனுமதித்தனர்.

வழிபாட்டிட மோதல்கள்

ஜெருசலத்தில் உள்ள வழிபாட்டிடங்கள் தொடர்பான வரலாற்றைப் பார்ப்போமானால் Noble Sanctury அல்லது Temple Mountஇன் மையப்பகுதியில் இருக்கும் Dome of the Rock இல் முதலில் யூதர்களின் சொலமன் மன்னன் கட்டிய முதற் கோவிலாக இருந்தது. இந்த முதற்கோவில் ஆக்கிரமிப்பாளர்களால் கிறிஸ்த்துவிற்கு 587ஆண்டுகளுக்கு முன்னர் சிதைக்கப்பட்டது. கிறிஸ்த்துவிற்கு 516 ஆண்டுகளுக்கு முன்னர் Dome of the Rock இல் யூதர்களின் இரண்டாம் கோவில் கட்டப்பட்டது. கிறிஸ்த்துவிற்குப் பின்னர் 70-ம் ஆண்டில் ஜெருசலத்தை ரோமானியர்கள் கைப்பற்றியதில் இருந்து Dome of the Rockஇல் தமது தெய்வமான வியாழனுக்கு ஒரு கோவில் அமைத்தனர். யூதர்களின் வழிபாட்டிடம் குப்பை கொட்டும் இடமாக மாற்றப்பட்டது. உதுமானியப் பேரரசின் ஜெருசலத்தைக் கைப்பற்றிய பின்னர் Dome of the Rock இல் இஸ்லாமியர்களின் வழிபாட்டிடம் அமைக்கப்பட்டது. அவர்கள் அதை Haram Al-Sharif என அழைக்கின்றனர். இது இஸ்லாமியர்களின் மிகப் புரதான கட்டிடமாகும். முஹம்மது அல்பார்க் எனப்படும் பறக்கும் குதிரையில் மக்காவில் இருந்து சினாய், ஜெருசலம், பெத்தலேகம்ஆகிய நகரங்களுக்குப் பயணம் செய்தார் எனச்சொல்லப்படுகின்றது. Temple Mountஇல்Dome of the Chain என்னும் கிறிஸ்த்தவர்களின் வழிபாட்டிடமும் உண்டு. இஸ்லாமியர்களின் வழிபாட்டிடம் The great mosque of Jerusalem, Al Masjid al Aksa என அழைக்கப்படுகின்றது. ஹ்ரோடியன் சுவர்கள் Temple Mount இல் எழுப்பப்பட்டு வேறு வேறு மத வழிபாட்டிடங்கள் பிரிக்கப் பட்டன. அதில் உள்ள பத்துக் கதவுகள் முஸ்லிம்களின் பாவனைக்கும் ஒரு கதவு முஸ்லிம் அல்லாதவர்களின் பாவனைக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

1928-ம் ஆண்டு யூதர்கள் Temple Mount இன் மேற்குச் சுவரிற்கு அருகில் வயோதிபர்கள் அமர்வதற்கு என ஒரு வாங்கை வைத்த போது இஸ்லாமியர்கள் கடுமையாக எதிர்த்தனர். 1948-ம் ஆண்டில் இருந்து 1967-ம் ஆண்டு வரை ஜோர்தானின் கட்டுப்பாட்டில் ஜெருசலம் இருந்த போது யூதர்கள் Temple Mountஇல் வழிபட அனுமதிக்கப்படுவதில்லை.

1967-ம் ஆண்டு போரில் ஜெருசேலத்தின் கிழக்குப் பகுதியைக் கைப்பற்றிய இஸ்ரேல் பின்னர் அமெரிக்கா உட்படப் பல நாடுகளின் மத்தியில் தன்னுடன் இணைத்துக் கொண்டது, எல்லா நாடுகளும் கிழக்கு ஜெருசலத்தை இஸ்ரேலின் ஒரு பகுதியாகக் கருதாமல் ஆக்கிரமிக்கப் பட்ட பிரதேசமாகவே கருதுகின்றன. 1947-ம்ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கும் போது ஜெருசேலமும் பெத்தெலேகமும் எந்த ஒரு நாட்டின் பிரதேசங்கள் அல்ல என்றும் அவை பன்னாட்டுக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டும் எனப் பிரகடனம்செய்திருந்தது. இந்த ஏற்பாட்டை யூதர்கள் ஏற்றுக் கொண்டார்கள் அரபுக்கள் ஏற்றுக் கொள்ளமறுத்தார்கள். இஸ்ரேல் என ஒரு நாடு இல்லை என்றும் ஜெருசேலம் பெத்தேலேகம் ஆகியவைதம்முடையவை எனவும் அரபு நாடுகள் அப்போது சூளுரைத்திருந்தன. கிழக்கு ஜெருசேலத்தை தம்முடன் இணைத்த இஸ்ரேல் அங்குவாழும் பலஸ்த்தீனியர்களை தனது நாட்டுக் குடிமக்களாக ஏற்றுக் கொள்ளாமல் அவர்களைத் தமது நாட்டின் நிரந்தர வதிவிடமுள்ள மக்கள் எனச் சொன்னது. 1980-ம் ஆண்டு இஸ்ரேல் தனது நாட்டின் தலைநகர் ஜெருசேலம் என ஒருசட்டம் இயற்றியது. இதைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை ஜெருசேலத்தை தலைநகராக்கும் இஸ்ரேலின் சட்டம் செல்லுபடியற்றது எனத் தீர்மானம் நிறைவேற்றியது.

1995-ம் ஆண்டு ஜெருசேலம் இஸ்ரேலின் தலைநகர் என்ற படியால் இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதுவராலயத்தை ரெல் அவீவில்இருந்து ஜெருசேலத்திற்கு மாற்ற வேண்டும் என்ற சட்டததை நிறைவேற்றியது. அமெரிக்காவில் உள்ள யூதர்களின் செல்வாக்கால் நிறைவேற்றப்பட்ட இச் சட்டத்தை பில் கிளிண்டன் முதல்எல்லா அமெரிக்க அதிபர்களும் ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை செல்லுபடியற்றது எனநிறைவேற்று ஆணை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். பலஸ்த்தீனியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையில் ஓர் அரசுத் திர்வாஈர் அரசுத் தீர்வா என்ற பிரச்சனை தீர்க்கப்பட்டாலும் ஜெருசலத்தில் வழிபடும் உரிமை தொடர்பான பிரச்சனை தீர்க்கப்படமாட்டாது.