சயந்தனின் “ஆறா வடு” பற்றிய ஒரு பதிவு

1042

ஆறா வடு

சயந்தனின் “ஆறா வடு” நெடுங்கதை எந்த ஆரவாரமும் இல்லாமல் ஒரு காலத்தின் கதையைச் சொல்லுகிறது. 1987ம் ஆண்டு ஓக்ஸ்ட் மாதத்தில் கைச்சாத்திடப்பட்ட இலங்கை- இந்திய ஒப்பந்தத்தினைத் தொடர்ந்து ஏற்பட்ட அமைதிக் காலத்திலிருந்து 2002ம் கைச்சாத்திடப்பட்ட பிரபா – ரணில் ஒப்பந்தத்தினால் ஏற்பட்ட அமைதிகாலம் வரை கதை நீண்டு செல்லுகிறது. விடுதலைப்புலிகள் இயக்க போராளி அமுதனின் கதையாக நகர்கின்றபோதிலும், அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதாக, பல்வேறு மனிதர்களினூடக கதை சொல்லப்படுகிறது.

முதன்மையான கதையிலும் அதனையொட்டிய கிளைக் கதைகளில் விபரிக்கப்படும் அவலம் நிறைந்த சம்பவங்களைக் கூட முழுக்க முழுக்க எள்ளல் தொனியில் சயந்தன் சொல்லியிருக்கிறார். அது அவரால் மட்டுமே முடியும் என நம்புகிறேன். அவரது எள்ளல் ஒரிரு இடங்களில் வாய்விட்டு சிரிக்க வைக்கிறது. உதாரணத்துக்கு பண்டராவன்னியன் நாடகத்தில் பங்கேற்ற அமுதனுக்கும் பண்டாரவன்னியானாக வந்தவருக்கும் இடையிலான உரையாடலை குறிப்பிடலாம்.

ஒரு இடத்தில், அமுதன் சொல்கிறான், “சண்டை என்று வந்து விட்டால் என் துப்பாக்கியிலிருந்து ரவுண்சும் எனது வாயிலிருந்து தூசணமும் பாய்ந்து கொண்டிருக்கும். ரவுண்சை அளவாகப் பாவிக்கச் சொல்லி இயக்கத்துக்குள்ளே ஒரு விதிமுறையிருந்தது. ஆனால் தூசணத்திற்கு அப்படியொன்றும் இருக்கவில்லை. நான் இயக்கத்துக்கு வர முன்னரே நாட்டுத் தூசணமெல்லாம் தண்ணி பட்ட பாடாய் இருந்தது. சண்டை வீடியோக்களை எடிற் செய்யும் போது சத்தங்களை நீக்கி பாட்டுகளை போட வேண்டியிருப்பதாக நிதர்சனம் போராளிகள் சொல்வார்கள். இந்தச் சண்டையும் நிரம்ப பாட்டுகளாலேயே நிரம்பியிருக்கும் …”

தூசண வார்த்தைகளை இயக்கத்தில் சேர்ந்த பின்னர் கற்றுக் கொண்டவை அல்ல என்பதை சொல்லியாக வேண்டும் என்பதிலும் சயந்தன் கவனமெடுத்திருக்கிறார்.

நீர்கொழும்பிலிருந்து இத்தாலிக்குச் செல்கிற வள்ளத்தில் வசதி எப்படியிருக்கும் என்பதை விபரிக்கும் சயந்தன் கழிப்பறை வசதிகள் இல்லாத நிலை பற்றி எழுதுகிறார், “குண்டியில் உடைந்து கிடந்த சூட்டு கட்டியில் உப்புத்தண்ணி பட்டு எரியத் தொடங்கியது. காற்றுப்பட சாரத்தை உயர்த்திக்கட்டி அங்கேயும் இங்கேயும் நடந்தான்”. எத்தகைய வசதி இருந்தது என்பதை அதிக விபரிப்பு இல்லாமல் வாசிப்பவருக்கு கற்பனை செய்து பார்க்க முடிகிறது.

இந்திய சிப்பாய்கள் நிலத்திற்க்கு அந்நியப்பட்டு நிற்பது, அவர்களால் கைது செய்யப்பட்ட அப்பாவி இளைஞர்களுக்கும் இடையில் மொழிப்பெயர்ப்பாளரின் துணையுடனான உரையாடல் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது.

” நமது ஆளை ஏன் கொலை செய்வதாக மிரட்டினீர்கள் அவர் நமக்கு பலவழிகளிலும் உதவுகிறார் என்பதாலா” இது சிப்பாய்கள் தரப்பிலிருந்து கேட்கப்படுகிறது.

“இல்லை சேர் உங்களது ஆள் என்று எமக்கும் இன்றுவரைக்கும் இந்த கணம் வரைக்கும் தெரியாது அப்படியிருக்க அதற்காக நாம் அவரை மிரட்டியிருக்க முடியாதல்லவா” என இளைஞர்கள் பதிலளிக்கிறார்கள்.
தேசத்துரோகிகள் என கொல்லப்படுகிறவர்கள் விடயத்தில் தமக்குரிய அதிருப்தியை, விடுதலைபுலிகளை ஆதரிக்கும் இளம்பெண் இப்படி அலட்சியமாக ஒரு போராளியிடம் வெளிப்படுத்துகிறாள். “உங்களுக்கு ஆயிரம் வேலைகளிருக்கும் ஆமியை சுடுறது மட்டுமில்லாமல் சும்மா வந்தவன் போனவனையெல்லாம் சுடவேண்டியிருக்கும்”

யாழ்ப்பாண இடப்பெயர்வின்போது அமுதனின் தாய் சுபத்திரை அகதியாக சிறிய கோவில் ஒன்றில் தஞ்சமடைகிறாள். அங்கு அவளது மகள் பருவமடைந்தவிடுகிறாள். விடயத்தையாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்கும் அவள், மகளுக்கு அம்மனுக்கு சுற்றிய துணியை தீட்டுத் துணியாக பாவிப்பது ஏதேச்சையாகச் சொல்லப்படுகிறது. இப்படி பல இடங்களில் சம்பிரதாயங்கள் (மூட நம்பிக்கைகள்) மீறப்படுவதை செயற்கையான அழுத்தமில்லாமல் சொல்லப்படுகிறது.

சயந்தன் விடுதலைப்புலிகள் மீது அதிகளவு விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார் என புத்தகத்தைப் படித்த சிலர் கருத்துவெளியிட்டிருந்தனர். ஆனால் அவ்வாறு இல்லாமல் விடுதலைப்புலிகள் இயக்கத்தினை நேர்மறையாகவே அவர் அணுகியிருக்கிறார்.

“இத்தனை களேபரத்துக்குள்ளும் இயக்கத்தின் வானொலி நாள் தவறாமல் ஒலித்துக் கொண்டிருந்தது. ஒரு இரவு கோகுலன் செய்திகளை வாசித்துக் கொண்டிருந்தபோது குண்டு விழும் சத்தங்கள் கேட்டன. கொஞ்சநேர அமைதிக்குபிறகு கோகுலன் செய்தியை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார்.”

விடுதலைப்புலிகள் மீதான விமர்சனங்கள் அறிவுரை போன்று வருகிறது. “சனங்களுக்கு அரசாங்கங்களை பிடிக்கிறதில்லே. இந்தியன் ஆமி காலத்தில் உங்களை பெடியங்கள் பெடியங்கள் எண்டு குஞ்சுகளை கோழி காப்பாத்தின மாதிரி வைச்சிருந்த சனம்தான் உங்கடை சோலியும் வேண்டாம் சுரட்டும் வேண்டாம் என்று ஒதுங்கி நிக்குதுகள்.” என்று நேரு ஐயா என்ற முதியவர் குறிப்பிடுகிறார்.

மற்றய இயக்கங்களை சயந்தன் வேறுவிதமாக அணுகியிருக்கிறார். அவர்களையிட்டான மக்களின் அதிருப்தியை நேரடியாகவே வெளிப்படுத்துகிறார்.

இந்திய இராணுவ காலத்தில் கட்டாயமாக ஈபிஆர்எல்எப் இன் தமிழ் தேசிய இராணுவத்திற்கு சேர்க்கப்பட்ட இளைஞன் பொறுப்பாளரைப் பார்த்துக் கேட்கிறான்.

“அண்ணன் எங்கடை தலைவர் யாரெண்டு சொல்லேல்லை” .. பொறுப்பாளர் “வரதராஜப்பெருமாள் ..” என்று பதிலளிக்கிறார்.

“இந்தச் சனியன்களிடமிருந்து தன்னைக் காப்பாற்றினால் பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு வருடாவருடம் காவடி எடுப்பதாக நேர்தியொன்றை வைத்தான்.” என சயந்தன் எழுதியுள்ளார்.
இன்னொரு இடத்தில் ஈபிஆர்எல்எப் இற்கு (பயத்தால்) ஆதரவளித்த ஒருவர் விடுதலைப்புலிப் போரளிக்குச் சொல்கிறார், “நீர் சொல்லுறது மெத்தச் சரி தம்பி. இப்ப பாரும். நீர் எப்படித் தன்மையா கதைக்கிறீர்.. ஆனால் அவங்கள் அப்பிடியோ கதைச்சவங்கள் .. அவங்கள் எங்கை கதைச்சவங்கள் .. துவக்குத்தான் கதைக்கும் எண்டவங்கள் ….”

மக்களுக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையிலான பிணைப்பு இப்படி வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

“அடுத்த முறை வெற்றியை (ஒரு விடுதலைப்புலி போராளி) காணும் போது முதல் வேலையாய் ஆமிக்கு அறிவிக்கின்றோம் என்று கற்பூரம் அணைக்காத குறையாக சத்தியம் செய்தவர்கள் அவனது ஒற்றைத் துப்பாக்கியையும் ஓன்றிரண்டு கிரேனைட்டுகளையும் பாதுகாத்துக் கொடுத்தனர்.”

வரிகளுக்கிடையில் வாசித்தால் கதையில் நிறைய அரசியல் செய்திகள் சொல்லப்பட்டுள்ளது. சயந்தனால் இத்தனை அனுபவங்களையும் இலாவகமாக வெளிப்படுத்த முடிகிறதே என்ற ஆச்சரியத்துடன், ஒரு கதைசொல்லியாக அவரை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளமுடிகிறது.