சர்வதேச மயப்பட்டுள்ள ஈழத்தமிழர் பிரச்சனையை, நாடுகள் குறிப்பாக மேற்கு நாடுகள் எவ்வாறு அணுகுகின்றன என்பதனை அறிந்து கொள்வது இலகுவானதல்ல. வெறுமனே ஊடகங்களில் வரும் செய்திகளைக் கொண்டு, அல்லது இராசதந்திரிகள் மற்றும் அரச பிரதிநிதிகள் பொதுப்பரப்பில் வெளியிடும் கருத்துகளிலிருந்து, நாடுகளின் நிலைப்பாட்டினை கணிப்பிட முடியாது. இவ்விடயத்தினை விளங்கிக் கொள்வதற்கு பன்னாட்டு உறவுகள் விடயத்தில் நிபுணத்துவத்துடன் இராசதந்திர மட்டத்தில் தொடர்பாடல்களைக் கொண்டிருப்பவர்களின் ஆலோசனைகள் கருத்துகள் உதவும் என ஒரு பேப்பர் எதிர்பார்க்கிறது.
தமிழ் மக்கள் மத்தியில் விரல்விட்டு எண்ணக் கூடிய வகையில் ஓரிருவரே இத்துறைசார் நிபுணத்துவம் கொண்டவர்களாக உள்ளனர். அத்தகையவர்களில் ஒருவரான கலாநிதி சுதாகரன் நடராஜா இவ்விடயத்தில் எமக்கு உதவ முன்வந்துள்ளார். அரசியல் செயற்பாட்டாளராகவும், ‘தமிழ் கார்டியன்’ பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றிய சுதாகரன் நடராஜா தமிழர்தரப்புக்கும் மேற்கத்தைய இராசதந்திரிகளுக்கும் இடையிலான பல பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டவர். தற்போது லண்டன் பல்கலைக்கழகத்தின் School of Oriental and African Studies இல் சர்வதேச உறவுகள் தொடர்பான கற்கை நெறியை கற்பிக்கும் விரிவுரையாளராக பணிபுரியும் அவர் ஈழத்தமிழ் அரசியல்விடயங்களில் சர்வதேசத்தின் நகர்வுகள் தொடர்பான எமது வினாக்களுக்கு விரிவாகப் பதிலளிக்கவுள்ளார். அவரது கருத்துகள் தொடர்பான உங்களது எதிர்வினைகளையும், வினாக்களையும் ஒரு பேப்பருக்கு அனுப்பி வையுங்கள்.
அண்மையில் ஐ.நா. மனிதவுரிமைச்சபையில் இலங்கைத் தீவு தொடர்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தொடர்பாக உங்களது கருத்து என்ன? அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் வலுவற்றதாக அமைந்திருந்தது. இதுதொடர்பில், சில தமிழ் தரப்புகள் அவநம்பிக்கையான கருத்துகளை வெளியிட்டிருந்தன, அவற்றுடன் நீங்கள் உடன்படுகிறீர்களா? என்ற எமது இரு கேள்விகளுக்கும் கலாநிதி சுதாகரன் நடராஜா வழங்கிய விரிவான பதிலை இங்கு தருகிறோம்.
ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு, நிபந்தனையுடனான ஆதரவு வழங்குவதிலிருந்து. அதனை முற்று முழுதாக நிராகரிப்பது வரை தமிழ் மக்களிடையே வேறுபட்ட கருத்துகள் காணப்பட்டன. ஒருபுறத்தில், இத்தீர்மானமானது மிகவும் பலவீனமானதாகக் காணப்படுகிறது. கடந்த 2012 மார்ச்சில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், போரின்போது சிறிலங்கா அரசதரப்பு புரிந்த கொடுமைகள் பற்றிய பல புதிய ஆதாரங்கள் வெளியாகியிருந்தன, இவற்றைக் கருத்திற்கொண்டு, இவ்வருடம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வலுவானதாக அமைய வேண்டும் என நாம் எதிர்பார்த்திருந்தோம். ஆகவே, தமிழ் அமைப்புகள், குறிப்பாக ஜெனிவாவில் நாடுகளின் பிரதிநிதிகளை lobby செய்தவர்கள் திருப்தியின்மையை வெளிப்படுத்தியதில் நியாயம் இருக்கிறது. மறுபுறத்தில், சர்வதேசத்தின் மனிதவுரிமைகள் தொடர்பான நிகழ்ச்சி நிரலில் சிறிலங்கா இன்னமும் இருக்கிறது என்பதனை இத்தீர்மானம் வெளிப்படுத்தியது. இன்னொருவகையில், இத்தீர்மானமானது போரின் போதும் போருக்குபின்னரான காலத்திலும் சிறிலங்காவின் நடவடிக்கைகள் மீதான சர்வதேசத்தின் கண்டனத்தை வெளிப்படுத்துதாக அமைந்துள்ளது. அதனால்தான் சிறிலங்கா அரசு இத்தீரமானத்தை ஏற்றுக்கொள்ள மறுத்ததுடன், அதனை நிராகரித்தது.
இத்தீர்மானம் ஏன் கடுமையானதாக அமையவில்லை என்பதனை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். இத்தீர்மானத்தை ஐநா மனிதவுரிமைச்சபையில் நிறைவேற்றுவதற்கு பெரும்பான்மையான அங்கத்துநாடுகள் தீரமானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். பல நாடுகள் இத்தீர்மானத்தை எதிர்த்தன என்பதனை நாம் அறிவோம். அவற்றுள் சில நாடுகள் சிறிலங்காவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததால் தீர்மானத்தை எதிர்த்தன, மற்றயவை ஐக்கிய அமெரிக்காவையும், மேற்குநாடுகளையும் எதிர்ப்பவை என்பதனால் தீரமானத்தை எதிர்த்தன. இந்நாடுகளுக்கு தமிழர்கள் எதனை வேண்டி நிற்கிறார்கள் என்பது பற்றி எதுவித கரிசனையும் கிடையாது, தங்களது நலன்சார்ந்து செயற்பட்டார்கள். வேறு சில அங்கத்துவ நாடுகளோ, சிறிலங்கா மீது கடுமையான தீர்மானம் கொண்டு வருவதனை விரும்பவில்லை. எதிர்காலத்தில் தமது நாட்டின் மீதோ, அல்லது தமது நட்பு நாடுகளின் மீதோ இவ்வாறான தீர்மானம் கொண்டுவரப்படக்கூடும் என அவை அஞ்சுகின்றன. இன்னும் சில நாடுகள் மற்றய நாடுகள் எவ்வாறு வாக்களிக்கின்றன என அறிந்து அதற்கேற்ப நடந்து கொண்டன. (சில சமயம் ஆதரவாக வாக்களிப்பதற்கு அல்லது எதிர்ப்பதற்கு சில சலுகைகளை சம்பந்தப்பட்ட நாடுகளிடமிருந்து பெற்றுக் கொண்டன). ஆகவே தீரமானத்தின் நகல் கையளிக்கப்பட்டதிலிருந்து, தீர்மானத்தை முழுமையாக ஆதரிக்கும் நாடுகளுக்கும், வலுக்குறைந்த தீரமானத்தை வேண்டி நிற்கும் நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடாத்துவதற்கும், lobby நடவடிக்கைகளுக்கும் நாட்கள் தேவைப்பட்டன.
இவ்வருடம் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு, அமெரிக்கா இந்தியாவின் ஆதரவினை எதிர்பார்த்து நின்றமை தெரிந்தது. இந்தியா ஒரு முக்கியமான நாடு என்பதும், இந்தியாவின் முடிவிற்கு ஆதரவாக வேறு சில அங்கதுவ நாடுகளும் நடந்து கொள்ளும் என்பதனாலும் அதன் ஆதரவு தேவைப்பட்டது. எது எப்படியிருப்பினும் கியுபா போன்ற சில நாடுகள் இத்தீர்மானத்தை ஆதரிக்க மாட்டா, ஆனால் இந்தியா போன்ற நாடுகளோ தீர்மானத்தை வலுக்குறைப்புச் செய்தாலே ஆதரிக்கும். பெரும்பான்மை நாடுகளின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளவதற்காகவே தீர்மானத்தின் முதல் வரைபு வலுவிழக்கச் செய்யப்பட்டது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கூட இறுதித் தீர்மானத்தினையிட்டு திருப்தியடையவில்லை என்பதனையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்.
ஐக்கிய அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் சிறிலங்கா மீது சர்வதேசரீதியிலான நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன என்பதுதான் இங்கு முக்கியமானது. இதே மேற்கு நாடுகள், போரின்போது சிறிலங்காவை ஆதரித்து நின்றன என்பதனையும் நாம் மறந்துவிட முடியாது. ஆனால் இவற்றில் பெரும்பாலானவை இன்று சிறிலங்காவினை திருத்துவதற்கு முனைகின்றன. அந்த வகையில் இவ்வருடம் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நீண்ட ஒரு நடவடிக்கையின் ஒரு அங்கம் என்றே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இது இத்துடன் முடிந்துவிடப் போவதில்லை. ஐ.நா. மனிதவுரிமைச் சபைதான் இதற்கான ஒரே ஒரு இடம் என்றும் கூறிவிடமுடியாது, வேறும் பல வழிகள் இருக்கின்றன. ஆனால் தமது முயற்சியில் பலநாடுகளையும் இணைத்துக் கொள்ளவதற்கு இப்பாதை பயன்படுத்தப்படுகிறது.
சிறிலங்கா புரிந்த குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச விசாரணை அமைக்கப்பட வேண்டும் என்று தமிழர்கள் கேட்கிறார்கள். இது சாத்தியப்படுவதற்கு சர்வதேச சமூகத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளின் ஆதரவு தேவைப்படுகிறது. ஆகவே நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பலவீனமாக இருக்கின்றபோதிலும், நீண்ட கால நோக்கில் நாடுகளின் ஆதரவினைப் பெற்றுக் கொள்வதற்கு இது உதவும் என நம்பலாம். ஆகவேதான ஜெனிவாவில் lobby முயற்சிகளில் ஈடுபட்ட தமிழரமைப்புகள், தீர்மானத்தின் உள்ளடக்கத்தை விமர்சித்திருந்தபோதிலும், சர்வதேச நாடுகளின் முயற்சியை வரவேற்றிருந்தன.
சில தமிழர்கள் இத்தீர்மானத்தையும், இதனை முன்வைத்த ஐக்கிய அமெரிக்காவையும் மற்றய நாடுகளையும் கண்டித்தன. இத்தீர்மானம் சிறிலங்காவிற்கு ஆதரவாகவும் தமிழர்களுக்கு எதிராகவும் கபடத்தனமாக கொண்டு வரப்பட்டது என அவர்கள் குற்றம் சாட்டினார்கள். இது தவறான கருத்து. ஐக்கிய அமெரிக்கா சிறிலங்காவிற்கு ஆதரவளிக்க முன்வந்திருந்தால், அது அமைதியாக இருந்திருக்க முடியும். மனிதவுரிமைச்சபையில் தீர்மானம் எதனையும் அவர்கள் கொண்டு வந்திருக்க வேண்டிய அவசியம் எதுவுமில்லை.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்டம், பிரத்தியேகமாக, சுதந்திர தமிழீழத்திற்கான போராட்டம் வெற்றி பெறுவதற்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவும், அவை எங்களுக்காக நடவடிக்கை எடுக்கத் தயாராகவும் இருக்க வேண்டும் என்பதனை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். சர்வதேச நாடுகளின் நடவடிக்கைகள் சிறிலங்காவிற்கு ஆதரவாக அமையும்போது அதையிட்டு நாம் விமர்சிக்கலாம். அதேசமயம் நாம் சர்வதேச ஆதரவினை பெற்றுக்கொள்ள வேண்டும். இவை இரண்டையும் ஏக காலத்தில் செய்யமுடியும். அதைவிடுத்து வெறுமனே பன்னாட்டுச் சமூகத்தை குறைகூறுவதனால் எதுவும் ஆகிவிடப்போவதில்லை. தாயகத்திலும், புலம் பெயர்நாடுகளிலும் உள்ள தமிழ் அமைப்புகள் சர்வதேச நாடுகளின் அரசாங்கப் பிரதிநிதிகளைச் சந்திப்பதனையும், அவர்களை lobby செய்வதனையும் தொடர வேண்டியது மிகவும் அவசியமாகிறது.
தாயகத்தில் வாழும் தமிழ் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனனர். இன்று இவ்விடயங்கள் பன்னாட்டு அரங்குகளில் எதிரொலிப்பதனை அவதானிக்க முடிகிறது. இதற்கு பிரத்தியேகமான காரணமிருக்கிறது. இரண்டு தசாப்த காலமாக விடுதலைப்புலிகளைத் தோற்கடிப்பதற்காக சிறிலங்காவிற்கு மேற்கு நாடுகளும் இந்தியா, சீனா போன்ற நாடுகளும் பல்வேறு வழிகளில் உதவி வந்தமையை அனைவரும் அறிவார்கள். மேற்கு நாடுகள் ஏன் இவ்வாறு நடந்து கொண்டன என்பதனை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும். போர்முடிவுக்கு கொண்டுவரப்பட்டால், விரைவிலேயே சிறிலங்கா ஒரு அமைதி நிலவுகிற நாடாக மாறிவிடும் என அவர்கள் எதிர்பார்த்தார்கள். அத்துடன் தமிழர்கில் பெரும்பான்மையானோர் தமிழீழத்திற்கு ஆதரவு வழங்குகிறார்கள் என்பதனை அவர்கள் நம்பவில்லை. ஏதாவது ஒரு வகையான அதிகாரப் பரவலாக்கம் ஏற்படுத்தப்பட்டால் தமிழர்கள் திருப்தியடைவார்கள் என்ற எதிர்பார்ப்பே அவர்களிடமிருந்தது. இவ்வாறான கருத்துகளை பல தமிழர்களும், தமிழர்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றப் பிரதிநிதிகளும் சர்வதேச சமூகத்திற்கு தெரிவித்திருந்தார்கள் என்பதனை நாம் நினைவில் கொள்ளவேண்டும். தனித்து விடுதலைப்புலிகளும், குறைந்த எண்ணிக்கையிலான தமிழர்களுமே தமிழீழக் கோரிக்கையை ஆதரிக்கிறார்கள் என்பதே அவர்களது எண்ணமாக இருந்தது.
போர் முடிவுற்ற பின்னர் சிறிலங்கா நடந்துகொள்ளும்விதத்தில் இந்நாடுகள் வெறுப்படைந்துள்ளன. சிங்கள இனவாதம் பற்றி அவை இப்போது கவனம் செலுத்துகின்றன. சிங்கள இனவாதமே தமிழீழக்கொள்கையை நியாயப்படுத்துவதாகவும், பெரும்பான்மையான தமிழர்கள் தமீழீழக் கொள்கையை ஆதரிக்கிறார்கள் என்பதனையும் அவை உணர்ந்து கொள்கின்றன. அதனால்தான் புலம்பெயர் தமிழ்ச்சமூகத்தில் உள்ள பல குழுக்களுடனும் அவர்கள் பேச்சு நடத்துகிறார்கள். இப்புதிய திருப்பம் சிறிலங்கா அரசாங்கத்தை கலவரப்படுத்துகிறது. ஆகவே மேற்கு நாடுகளின் அணுகுமுறை தொடர்பில் நாம் அவநம்பிக்கை கொள்வது அநாவசியமானது. மேற்கு நாட்டு அரசாங்கங்களின் ஆதரவு வேண்டி டழடிடில செய்யவது அவசியமற்றது, அப்பணிகள் நிறுத்தப்பட வேண்டும் எனச் சிலர் ஆலோசனை வழங்குவது அபத்தமானது. உண்மையில் இத்தருணத்தில் மேற்கு நாட்டு அரசாங்கங்கள், அரசுசார நிறுவனங்கள், பன்னாட்டு ஊடகங்கள் ஆகியவற்றை முன்னரைவிட அதிகமாக lobby செய்ய வேண்டியுள்ளது. இவர்களை எங்கள் பக்கம் திருப்புவது இலகுவானதல்ல. இன்னமும் சில நாடுகள் சிறிலங்கா அரசாங்கத்தை தமது வழிக்கு கொண்டு வரமுடியும் என்றும் தமிழ் சிங்கள மக்களை நல்லிணகத்துடன் வாழ வைக்க முடியும் என நம்புகிறார்கள். இவ்வாறு கூறும் போது, சிறிலங்காவிற்கு ஆதரவான நடவடிக்கைகளை பன்னாட்டுச் சமூகம் செய்யும்போது அதனை விமர்சிக்கக்கூடாது என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூடாது. மாறாக எங்களது கோரிக்கைகளை தெளிவாக விளக்கி, ஆதரவு தேடவேண்டும். இதனை மீண்டும் மீண்டும் நாம் வலியுறுத்த வேண்டும்.