சர்வதேச மயப்பட்டுள்ள ஈழத்தமிழர் பிரச்சனை விடயத்தில் மேற்குநாடுகள் எவ்விதம் நடந்துகொள்கின்றன என்பது தொடர்பில் கலாநிதி சுதாகரன் நடராஜா அவர்களின் கருத்துகளை கடந்த ஒரு பேப்பரில் பிரசுரித்திருந்தோம். அவரது விரிவான பதிலில் சர்வதேசநாடுகளின் ஆதரவினை தமிழர்கள் தம்பக்கம் திருப்பவேண்டியதன் அவசியத்தை விபரித்திருந்தார். அவருடனான எமது உரையாடலில், தமது ஆதரவினை பெற்றுக்கொள்வதற்கு தமிழர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என இந்நாடுகள் எதிர்பார்க்கின்றன என்பது பற்றியும் கேட்டிருந்தோம்.
நாம் சர்வதேச சமூகத்தின் ஆதரவினை பெற்றுக்கொள்வதற்கு தமிழீழக் கோரிக்கையையும், அதன் வெளிப்படையான அடையாளமாக விளங்கும் தேசியக்கொடியையையும் கைவிட வேண்டுமா? அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என அவரிடம் வினவினோம். அதற்கு அவர் வழங்கிய நீண்ட பதிலை இங்கு பிரசுரிக்கிறோம்.
முதலாவது கேள்விக்கு இல்லை என்பதே எனது பதிலாக அமையும். சர்வதேச சமூகத்தின் சிறிலங்கா தொடர்பான அணுகுமுறையையும், அவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் தற்போது ஏற்பட்டுவரும் தொடர்பாடல்களையும் தவறாக விளங்கிக் கொள்ளவதனால் இவ்வாறான கருத்துகள் வெளியிடப்படுகிறது. துரதிர்ஸ்ட வசமாக நாம் எமக்கிடையே இவ்விடயத்தை விவாதிப்பதற்கு நேரத்தையும், சக்தியையும் விரயம் செய்கிறோம். இவற்றை எமது மக்களின் விடுதலை நோக்கிய செயற்பாடுகளுக்கு பயன்படுத்தியிருக்க வேண்டும்.
போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில், தமிழ் மக்களுக்கு ‘தீர்க்கப்படாத பிரச்சனைகள்’ உள்ளன என்பதனை சர்வதேசம் ஏற்றுக் கொண்டிருந்தது. இப்பிரச்சனைகளை சிங்களத் தலைவர்களுக்கும் தமிழ்த்தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும் என சர்வதேச சமூகம் நம்பியிருந்தது. இன்னொருவகையில் கூறுவதானால், பிரிந்து செல்லவதனை நியாயப்படுத்துமளவிற்கு பாராதூரமான பிரச்சனைகள் தமிழர்களுக்கு இருக்கின்றன என்பதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போது சுயாட்சி அல்லது சமஸ்டி பற்றி பேசிப்பட்;டதே தவிர, சுதந்திரமான தனிநாடு அமைப்பதற்கு அவர்கள் ஆதரவளிக்கவில்லை.
பெரும்பாலான தமிழர்களும் இக்கருத்தினை ஏற்றுக்கொள்கிறார்கள் என்றே அவர்கள் நம்பினார்கள். தனிநாட்டுக்கு பதிலாக சமஸ்டித் தீர்வினை அல்லது அதற்கு மாற்றீடான ஒரு தீர்வினைத் தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்கள் எனப் பல தமிழ் அரசியல்வாதிகள் கூறிவந்ததையும் நாம் மறந்து விடமுடியாது. சில சர்வதேச இராசதந்திரிகள் தமது கருத்தினை நிரூபிப்பதற்கு ஒரு விடயத்தைக் குறிப்பிடுவதுண்டு. அதாவது 2002-2003 காலப்பகுதியில், விடுதலைப்புலிகள் சமஸ்டி தீர்வு பற்றி பரிசீலிப்பதற்கு உடன்பட்டபோது, அதற்கு தமிழ் மக்கள் மத்தியில் வெளிப்படையான எதிர்ப்பு எதுவும் இருக்கவில்லை என்பதனை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ‘பொங்;கு தமிழ்’ எழுச்சி நிகழ்வுகளைக்கூட விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட ஒன்று எனக் காட்டுகின்றனரே தவிர, அவை தமிழ் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும்; இயல்பான எழுச்சி என அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
தமிழர்கள் மத்தியில் எண்ணிக்கையில் சிறுபான்மையானவர்களான ‘கடும்கோட்பாட்டாளர்களின்’ கோரிக்கையே தமிழீழக் கோரிக்கை என சர்வதேசத்தரப்பினால் பார்க்கப்பட்டது. அந்த வகையில் தமிழீழம் கோருகிற தமிழர்களை தவிர்த்துவிட்டு, தமிழீழக் கோரிக்கையை மறுதலிக்கும் அல்லது எதிர்க்கும் ‘மிதவாதத் தலைமைகள்’ எனச் சொல்லப்படுபவர்களுடன் சர்வதேசதரப்பினர் உறவுகளைப் பேணிவந்தனர்.
போரின் இறுதிக்கட்டத்தில்தான், சர்வதேச சமூகம் தமிழர்களது உணர்வுகளின் கனதியை புரிந்து கொள்ள ஆரம்பித்தது. மேற்குலகின் முக்கிய நகரங்களில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு நின்று ஆர்ப்பாட்டங்கள் செய்து, தமிழீழத்திற்கான தமது உறுதியான ஆதரவினை வெளிப்படுத்தியபோதுதான், தமிழர்களின் கூட்டு மனவுணர்வினை சர்வதேசம் விளங்கிக்கொண்டது. இப்போராட்டங்களில் மக்கள் பரவலாக தமிழீழத் தேசியக்கொடிகளை காவிக்கொண்டிருந்தமை அவர்களது உணர்வுகளைத் துலக்கமாக வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது. சர்வதேச சமூகத்தின் இந்தப்புரிதலை 2009-10 களில் நடைபெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான மீள்வாக்கெடுப்புக்குக் கிடைத்த ஆதரவு வலுப்படுத்தியது.
2009 ஏப்பிரல் – மே மாதங்களில் மேற்கு நாடுகளின் தலைநகரங்களில் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் எவ்வித பயனையும் தரவில்லை என வாதிடுபவர்களும் எம்மத்தியில் உண்டு. அவ்வாறு கூறுபவர்கள் முக்கியமான ஒரு விடயத்தைத் தவறவிடுகிறார்கள். சர்வதேச நாடுகளின் முன்னைய அனுமானங்களை கேள்விக்குள்ளாக்கியதில் இப்போராட்டங்கள் பாரிய பங்கினை வகித்தன என்பதனை இவர்களால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. அதாவது சுதந்திரத்திற்கான கோரிக்கை என்பது வெறுமனே ஒரு சிறுகுழுவிடமிருந்து வரவில்லை, மாறாக அது தமிழ் மையநீரோட்டத்திலிருந்து எழுகிறது என்பதனை இப்போராட்டங்கள் வெளிப்படுத்தின.
இங்கு இன்னொரு முக்கியமான விடயமும் உண்டு. சிறிலங்கா அரசு போரின்போதும், முக்கியமாக போரின் பின்னரும் நடந்துகொண்ட முறை, தமிழ் மக்கள் வெறித்தனமான நம்பிக்கைகள், அல்லது இனக்குரோதம் காரணமாக தமீழீழம் கோரவில்லை, மாறாக அதற்கு தகுந்த காரணங்களும், தர்க்கரீதியான நியாயமும் உண்டு என்பதனை தெளிவுபடுத்துவதாக அமைந்தது. சிறிலங்கா அரசினால் கடைப்பிடிக்கப்படும் இனவாத நடவடிக்கைகள், தமிழ் ‘கடுங்கோட்பாளர்கள்’ எனப்படுவோர் காலம்காலமாகக் கூறிவந்தவை உண்மையானது என நிருபிப்பதாக அமைந்தன.
சிங்கள மக்களின் பேரபிமானத்துக்குரிய ஒரு தலைமை சிங்கள இனவாதத்தினை கடைப்பிடிக்;கும்போது, சிறிலங்காவின் அரசகட்டமைப்பு பற்றியும் சிங்களத் தேசியம் பற்றியும் சர்வதேசம் கொண்டிருந்த கருத்து மாற்றமடைகிறது. ஆகவே நீண்டகாலமாக சர்வதேச சமூகத்தால், விடுதலைப்புலிகளுக்கும், சிறிலங்கா அரசாங்கத்திற்கும், அல்லது சிங்களமக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான முரண்பாடாக கருதப்பட்டு, பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்க்கமுடியும் என நம்பப்பட்டு வந்த விடயம், வேறு கோணத்தில் பார்க்கப்படுகிறது. இப்போது தமிழ்மக்கள் தெரிவிக்கும் அரச அடக்குமுறை என்ற விடயம் முன்னரைவிட அதிக சிரத்தையுடன் நோக்கப்படுகிறது. இருப்பினும், இன்னமும் சில தரப்பினர் இதனை இராஜபக்சவினால் உருவாக்கப்பட்ட பிரச்சனையே தவிர, சிறிலங்கா அரசகட்டமைப்பினால் ஏற்படுத்தப்படும் பிரச்சனையல்ல என்ற கோணத்தில் பார்க்கிறார்கள்.
இந்நிலையில், தமிழ் மக்கள் தமிழீழக் கோரிக்கையை கைவிட வேண்டியதில்லை, மாறாக தமிழீழம் உருவாவது மட்டுமே நீடித்துநிலைக்கக் கூடிய தீர்வாக அமையும் என்பதனை சர்வதேச சமூகத்திற்கு தெளிவாக விளக்கவேண்டியவர்களாக உள்ளார்கள். இங்குள்ள பிரச்சனை என்னவெனில், தமிழர்களில் பலர் சர்வதேச சமூகத்தின் முன்னைய நிலைப்பாட்டினை வைத்தே தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள விழைகிறார்கள்.
‘மிதவாத’ அமைப்புகளே பரந்துபட்ட தமிழ் மக்களின் கருத்தினை பிரதிபலிப்பதாக சர்வதேச சமூகம் முன்னர் நம்பியது. ஆனால் 2009 இலும், அதன் பின்னரும் நடாத்தப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டங்கள், சர்வதேசத்தின் முன்னைய கருத்தில் மாற்றத்தை ஏற்படுத்தின. ‘கடுக்கோட்பாளர்கள்’ என்று அழைக்கபடும் தமிழ் அமைப்புகள்தான் பெரும்பான்மை தமிழ் மக்களின் கருத்தினை பிரதிபலிக்கின்றன என்பதனை அவர்கள் இப்போது உணரத் தலைப்பட்டுள்ளார்கள். இக்காரணத்தினால்தான் முன்னர் தீவிரவாத அமைப்புகள் எனக் கருதப்பட்ட இவ்வமைப்புகளுடன் அவர்கன் இப்போது அதிகளவில் தொடர்பாடல்களை மேற்கொண்டுவருகிறார்கள்.
- தமிழீழ தேசியக் கொடி
இப்பின்புலத்தில் தமிழீழ தேசியக் கொடி ஒரு பிரச்சனையாக பார்க்கப்படவில்லை. ஏனெனில், அலைந்துழல்வு தமிழ்ச்சமூகம் தமிழீழ கோரிக்கையை முன்வைக்கிறது என்பதனை அவர்கள் நன்கு அறிவர். இது 2009 -10 களில் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் தமிழீழத்தை வலியுறுத்திக் கோசமிடுவதை கேட்கும்போது அல்லது தேசியக்கொடியை பிடித்தவாறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதனை காணும்போது அது பெரும்பான்மையான தமிழ் மக்களின் விருப்பு என்பதனை அறிந்துகொள்கிறார்கள்.
இன்னொருபுறத்தில், இங்கு ஒரு பிரச்சனையிருக்கிறது. தேசியக்கொடியினை பிடிக்கவேண்டாம் என வலியுறுத்துபவர்கள் அவ்வாறு நடப்பது ஒரு தவறான செய்தியினை சொல்லுவதாக அமையும் என்பதனை உணர மறுக்கிறார்கள். தமிழர்கள் சிறிலங்காவின் மீது சீற்றம் கொண்டிருக்கவில்லை, சிங்களத் தலைவர்களுடனும் சிங்கள மக்களுடனும் இணைந்து ஜனநாயகத்தை மேமப்படுத்துவதன் மூலம் ஒன்றிணைந்த இலங்கைத் தீவினிற்குள் அரசியல் சுதந்திரத்தை பெற்றுக்கொள்ளவே அவர்கள் விரும்புகிறார்கள் என்ற தவறான செய்தியே இது வெளிப்படுத்தப்படுத்தும். சுருக்கமாகச் சொல்வதானால், நிலமை அத்தனை மோசமானது அல்ல மிதவாத சிங்களவர்களுக்கும் மிதவாத தமிழர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்ற கருத்தையே இது வலுப்படுத்துவதாக அமையும். சர்வதேச சமூகத்தைப் பொறுத்தவரை, தேசியக்கொடியை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் தமிழ் மக்களின் மனவுணர்வுகளின் பலத்தை வெளிப்படுத்துகிறார்கள் எனபதாகவே எடுத்துக்கொள்கிறார்கள்.
கொடி விடயத்தில், இறுதியாக ஓன்றைச் சொல்லவேண்டும். எந்த ஒரு தேசியக்கொடியும் ஒரு தேசிய இனத்தை பிரதிநிதித்துப்படுத்துவதாகவே உள்ளது. அந்தவகையில் தமிழீழ தேசியக்கொடி தமிழ் மக்கள் தங்களை, சிறிலங்காவில் வாழும் ஒரு சிறுபான்மை இனமாகக் கருதாமல், ஒரு தேசிய இனமாகக் கருதுகிறார்கள் என்பதனை வெளிப்படுத்துகிறது. இன்று நாங்கள் தமிழ்மக்களின் விடுதலையினை வேண்டிநிற்கிறோமே அல்லாமல் சிறிலங்காவின் ஜனநாயகத்தை வேண்டி நிற்கவில்லை என்பதனை கொடிகளின் பிரசன்னம் வெளிப்படுபடுத்துகிறது. தமிழ் அடையாளங்களை அழித்தொழிப்பதில் சிறிலங்கா முனைப்பு காட்டிவருகிறது. தமிழ்ப்பிரதேசங்களில் தெருக்களின் பெயர்கள், இடங்கள் பெயர் மாற்றப்படுகையில், நினைவுச் சின்னங்கள் அழிக்கப்படுகையில், எங்களது தனித்துமான அடையாளங்களை நாம் வெளிப்படுத்தக்கூடாது எனச் சில தமிழர்கள் கருதுவது எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. நிச்சயமாக, சிறிலங்காவும் இதனையே வேண்டி நிற்கிறது.
- தமிழீழக் கோரிக்கை
பொதுவில் சுதந்திரத்திறகான கோரிக்கைகளை சர்வதேச சமூகம் விமர்சனத்துடனேயே நோக்குகிறது என்பது உண்மையே. நாடுகள் பிரிந்து செல்வதானால் முரண்பாடுகள் அதிகரித்து, வன்முறைக்கு இட்டுச் செல்கின்றது என அவர்கள் பார்க்கிறார்கள். அதாவது நாடுகளின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படுகிறது. இருப்பினும், இங்கு நாடுகளுக்கு அல்ல, நாடுகளின் ஸ்திரத்தன்மைக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது என்பதனை நாம் கவனிக்கவேண்டும். ஒரு நாட்டிலுள்ள பெரும்பான்மையான மக்களின் இனத்துவேச நடவடிக்கைகளால் அந்நாட்டின் ஸ்திரத்தன்மை தொடர்ந்து பாதிக்கப்படுமானால், அவ்விடத்தில் சர்வதேச சமூகம் பிரிவினையினை ஒரு தெரிவாக ஏற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறது.
இவ்வாறு மற்றைய தேசிய இனங்கள் சுதந்திரத்தினைப் பெற்றுக் கொண்டமையை நாங்கள் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். உதாரணமாக கொசோவர்களையும் தெற்கு சூடானியர்களையும் எடுத்துக்கொள்ளலாம். இனத்துவேசமும் வன்முறையும் நிலவும் நாட்டின் ஒரு பகுதியாக தங்களால் இருக்க முடியாது என பல ஆண்டுகளாகவே அவர்கள் தெரிவித்து வந்தார்கள். ஆனால் சுதந்திரத்திற்கான அவரது கோரி;க்கைகளை கைவிட்டு ஒன்றிணைந்த நாட்டுக்குள் சுயாட்சியை பெற்று வாழுமாறு சர்வதேச சமூகத்தால் அவர்கள் மீது கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது. இறுதியில் சேர்பிய பெரும்பான்மையினரினதும், சூடானிய அரேபியர்களினதும் இனத்துவேச நடவடிக்கைகளால் இந்நாடுகளில் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்த முடியாது என்ற நிலை உணரப்பட்டது.
ஒவ்வொரு தேசிய இனங்களினதும் நிலமை நிச்சயமாக வேறாக இருக்கும். ஆனால் எங்களுக்கு சுதந்திரம் வேண்டாம் எனப் பாசாங்கு செய்வதன் மூலம் சுதந்திரம் பெற்றுக்கொண்டாதாக யாருமில்லை!