சர்வதேச நகர்வுகளுயும் : அதையொட்டிய மிகைப்படுத்தல்களும்

1542

வரும் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள ஐ.நா. மனிதவுரிமைச் சபையின் இருபத்தைந்தாவது கூட்டத்தொடரில் இம்முறையும் இலங்கைத்தீவு தொடர்பில் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், இத்தீர்மானம் பற்றிய பரபரப்புச் செய்திகளை தமிழ் ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. அடுத்து வரும் வாரங்களில் இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். இந்நிலையில் உண்மை நிலையினைத் தெளிவுபடுத்துவதே இப்பத்தியின் நோக்கமாக அமைகிறது.

அமெரிக்கா கொண்டுவரவிருக்கும் தீர்மானம்பற்றிய தகவல்கள் இதுவரை வெளிவரவில்லையாயினும், இது தொடர்பாக அமெரிக்க இராஜதந்திரிகள் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்திருக்கிறார்கள். தமது நாடு முன்வைக்கவிருக்கும் தீர்மானத்தில் சர்வதேச விசாரணை உட்பட காத்திரமான விடயங்கள் அடங்கியிருக்கும் என அவர்கள் கூறுவதாகத் தெரியவில்லை. மாறாக கடந்த முறை கொண்டுவரப்பட்ட தீரமானத்தை விட இம்முறை கொண்டுவரப்படுவது சற்று கடுமையானதாக அமையும் என்பதையே அவர்கள் கூறிவருகிறார்கள். ஆனால் தமிழ்த்தரப்புகளும், சிறிலங்கா அரசதரப்பும் இத்தீர்மானம் சமர்பிக்கப்படு முன்னரே இதனை முன்வைத்து தமது நலன்நோக்கிய பரப்புரைகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளன. இவை தத்தமது வாக்கு வாங்கிகளை பலப்படுத்தும் நோக்கிலானவை. புலம்பெயர் தமிழ்அமைப்புகளும், தம்பங்கிற்கு, தமது லொபி (lobby)முயற்சியினால் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டாதாகக் கூறி தமது இருப்பை நியாயப்படுத்த முயலலாம். சர்வதேச தரப்பினருடன் உறவுகளைப் பேணுவதையோ, லொபி நடவடிக்கைகளில் ஈடுபடுவதனையோ தவறென இப்பத்தி குறிப்பிடவில்லை. மாறாக மக்களுக்கு உண்மை நிலை வெளிப்படுத்தவேண்டும் என்பதனையே இங்கு வலியுறுத்தப்படுகிறது.

இவ்வாரம் இலங்கைத்தீவிற்கு பயணம் செய்துள்ள அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தின் சர்வதேச குற்றவியல் தொடர்பான உயர்ஸ்தானிகர் (US Ambassador for Global Criminal Justice) ஸ்ரிபன் ரப் அவர்கள், கொழும்பில் சிறிலங்காவின் இராணுவத்தளபதிகளையும், `மாற்றுக் கொள்கைகளுக்கான நடுவத்தின்’ தலைவர் பாக்கியசோதி சரவணமுத்துபோன்ற மேற்கின் தாராளவாத ஜனநாயகத்தை வலியுறுத்தும் குடிசார் சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும் சந்தித்துப் பேசியுள்ளார். அதுபோல் யாழ்பாணத்திற்கு பயணம் செய்து கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களான அனந்தி சசிதரன், விக்னேஸ்வரன், சுமந்திரன், மாவை சேனாதிராசா,மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் மற்றும் யாழ் குடிசார் சமூகத்தினரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருக்கிறார். யாழ்ப்பாணத்தில், தமிழ்த்தரப்புகளுடான சந்திப்புகளில், ஸ்ரிபன் ரப் அவர்கள் `சர்வதேச விசாரணை’ பற்றி எந்தவிடத்திலும் குறிப்பிடவில்லை என அங்கிருந்து வரும்செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவனின் யாழ் `உதயன்’ பத்திரிகை, சுமந்திரனுடான சந்திப்பில், தாம் சர்வ தேசவிசாரணையைக் கோரவுள்ளதாக ஸ்ரீபன் ரப் தெரிவித்தாக ஒரு செய்தியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் மறுதினமே `சர்வதேச விசாரணை கோருவதில் சவால்கள்’ இருப்பதாக தம்மை சந்தித்த குடிசார் சமூகப்பிரதிநிதி களுக்கு ஸ்ரீபன் ரப் கூறியதாக இன்னொரு செய்தியை `உதயன்’ வெளியிட்டது.

 

அனந்தி சசிதரனுடன் ஸ்ரிபன் ரப்
அனந்தி சசிதரனுடன் ஸ்ரிபன் ரப்

குடிசார் சமூகப்பிரதிநிதிகளுடனான சந்திப்பில், இலங்கை மீது சர்வதேச விசாரணையை முன்வைப்பதற்கும் அதனை நோக்கி நகர்வதற்கும் இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று`கோழியைக் கேட்டுத்தான் ஆணம் காய்ச்சவேண்டும்’ என்ற சாரப்படி ஸ்ரீபன் ராப் கூறியுள்ளார். இதன்போது குடிசார் சமூகப் பிரதிநிதிகள்,“சூடானிய அரசு கேட்டா அங்கு நீங்கள் போர்க்குற்ற விசாரணை செய்தீர்கள்? ஏனைய நாட்டு அரசுகள் கேட்டா நீங்கள் அங்கு போர்க்குற்ற விசாரணை செய்தீர்கள்?’’ என்று அவரிடம் கேள்விஎழுப்பியுள்ளனர். அதற்குப் பதிலளித்த ஸ்ரீபன்ரப், சர்வதேச விசாரணை கொண்டு வருவதில்சில சவால்கள் இருக்கின்றன, ஐநா பாதுகாப்புச்சபையில் நிரந்தர அங்கத்துவ நாடுகளான ரஷ்யா,சீனா என்பவை தமது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தும். அதுபோல் ஐநா மனிதவுரிமைச்சபையில் மேலும் கடுமையான பிரேரணையை முன்வைத்தால் சில நாடுகள் பிரேரணைக்கு ஆதரவளிக்க மாட்டா, பிரேரணை தோல்வியடைந்து விடும் எனக் கூறியதாகத் தெரிய வருகிறது. சீனா சிறிலங்காவில் மேற்கொண்டுள்ள முதலீடுகளைக் காட்டிலும் அதிகளவு மூலதனத்தை சூடானில் வைத்திருக்கிறது என்ற தகவலை இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இத்தகவல்கள், வரும் மார்ச் மாதத்தில் அமெரிக்கா கொண்டு வரவிருக்கும் தீர்மானம் எத்தகையதாக இருக்கும் என்பதனைக் கோடிட்டு காட்டுவதாக அமைந்துள்ளன. ஆனால் தமிழ் ஊடகங்களில் சில இதையிட்டு மிகைப்படுத்திய செய்திகளை வெளியிட்டு மக்களை மீளவும் இருட்டில் வைத்திருக்கவே விரும்புகின்றன அல்லது தாம் சார்ந்திருக்கும் அரசியல் தலைமைகளுக்கு ஆதரவு தேட முற்படுகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு சார்பான ஊடகங்கள், சர்வதேச இராஜதந்திரிகளுடான சந்திப்புகளில் பேசப்பட்ட விடயங்களை ஊதிப்பெருக்க வைத்து `சர்வதேச விசாரணை’, `ஜ.நா. மேற்பார்வையில் சர்வதேசப் பொறிமுறை’ போன்ற தமிழ்மக்கள் எதிர்பார்க்கும் விடயங்கள் உள்ளடக்கியதான தீர்மானம் கொண்டு வரப்படவிருப்பதாக செய்திவெளியிட ஆரம்பித்துள்ளன. மேற்படி விடயங்களில் உள்ள உண்மைத்தன்மையை தமிழ்மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். இருப்பினும்முன்பு இவ்விடயங்களைப் பேசத்தயங்கிய கூட்டமைப்பினர் இப்போது இவை பற்றி பேசத்தலைப்பட்டுள்ளதையிட்டு மகிழ்ச்சியடையலாம்.

ஸ்ரீபன் ரப் அவர்களைத் தொடர்ந்து, இம்மாதஇறுதியில், தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச்செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் தலைமையிலான இராஜதந்திரிகள் குழுவொன்றும் இலங்கைத் தீவிற்கு பயணம் செய்யவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. போர்க்குற்றம் தொடர்பானஆவணங்களையோ, தகவல்களையோ சேகரிக்கும் நோக்கில் இராஜதந்திரிகளின் இவ்வாறான பயணங்கள் மேற்கொள்ளப்படுவதில்லை. அதுபோல் உடனடியான அரசியல் மாற்றங்கள் எதனையும் இப்பயணங்கள் ஏற்படுத்தப்போவதில்லை. இவை பிரதமர் டேவிட் கம்ரனின் அவர்களது பயணம் போன்றதொரு அடையாள நடவடிக்கையாக அமைந்துள்ளன. தவிரவும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள், பாக்கியசோதி சரவணமுத்து உட்பட இலங்கைத்தீவின் அரசியலுடன் தொடர்புடைய பல்வேறுதரப்பினரையும் கிரமமான முறையில் சந்தித்து வருவது வழமையான நடவடிக்கையே. ஆனால் இவை சிறிலங்கா அரசாங்கத்தின் மீது மென் அழுத்தத்தினையும், எதிர்த்தரப்பு அரசியல் செயற்பாட்டிற்கான வெளியினையும் அதிகரித்துள்ளன என்பதனை மறுப்பதற்கில்லை.

மேற்படி பயணங்களையும், சந்திப்புகளையும், சந்திப்புகளில் பேசப்படும் விடயங்களையும் பயன்படுத்தி, தமிழ் அரசியல்வாதிகள் தமது வாக்கு வங்கியை பலப்படுத்த விழைவதுபோல், சிங்களத் தரப்பினரும், இவற்றை சிறிலங்காவின் இறையாண்மைக்கு வெளியிலிருந்து விடுக்கப்படும் அச்சுறுத்தலாகக் காட்டி தமது வாக்கு வங்கியை பலப்படுத்திக் கொள்கிறார்கள். சிறிலங்காவின் இறையாண்மையை விட்டுக் கொடுப்பதைக் காட்டிலும் மகிந்த இராஜபக்ச குடும்பத்தின் சர்வாதிகார ஆட்சியை ஏற்றுக்கொள்ளலாம் என்பதாக சிங்களத் தேசியவாதிகள் வெளிப்படையாகவே பரப்புரை செய்கின்றனர். இவை மகிந்த இராஜபக்ச அரசாங்கத்தை தொடர்ந்தும் ஆட்சியில் வைத்திருக்கவே உதவுகின்றன.

கடந்த டிசம்பர் மாத இறுதியில் யாழ்ப்பாணத்திற்கு தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த கனேடிய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் இராதிகா சிற்சபையீசன் விடயத்தில் சிறிலங்கா அதிகாரிகளும், ஊடகங்களும் நடந்து கொண்டவிதம் சிங்கள மக்கள் மத்தியில் இராதிகாவை ஆபத்தான ஒருவராகக் காட்டிக்கொள்ளும் ஒரு பரப்புரை முயற்சியே தவிர வேறொன்றுமில்லை.ராதிகா சுற்றுலா நுழைவு அனுமதியில் இலங்கைக்கு சென்றிருந்த போதிலும், அவர் ஒட்டாவாவிலுள்ள சிறிலங்கா தூதரகத்தின் அழைப்பின்பேரிலேயே அங்கு பயணம் செய்ததாக பிறிதொரு தகவல் தெரிவிக்கின்றது. தான் அரசியல் ரீதியான அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக ராதிகாதெரிவித்திருந்தார். இருப்பினும் இலங்கையை விட்டு வெளியேறிய பின்னரும், அங்கு என்ன நடந்தது என்ற தகவல்களை அவர் இதுவரை வெளியிடவில்லை. இவற்றை வைத்துப் பார்க்கையில் அவரும் தனது பயணம் ஏற்படுத்திய பரபரப்பினை தமிழ் வாக்காளர்களின் வாக்குகளை பெறுவதற்குபயன்படுத்துகிறாரோ என எண்ணத் தோன்றுகிறது.

ஐநா மனிதவுரிமைச் சபையில் கொண்டுவரப்படவிருக்கும் தீர்மானம் ஒருபுறமிருக்க, சர்வதேசஇராஜதந்திரிகள் யாழ்ப்பாணத்திற்கு சென்று தமிழ்தரப்பினரை சந்திப்பது, தமிழ் மக்களுக்கும் சர்வதேச சக்திகளுக்கும் இடையிலான உறவாடலை அதிகரித்திருக்கின்றது. இது தமிழ்த் தேசியசக்திகளுக்கு ஒரு மறைமுகமான அங்கீகாரத்தையும் வழங்கி, அவற்றை பலப்படுத்தியிருக்கிறது எனப்பலரும் முன்வைக்கும் கருத்தினை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இவ்வாய்ப்புகளைப் பயன்படுத்தி தமிழ் அரசியற்தரப்புகள் தமிழ் மக்களதுஅரசியல் அபிலாசைகள் நோக்கி பயணிப்பார்களா அல்லது காலனித்துவ விசுவாசத்துடன் அடிவருடிகள் போன்று செயற்படுவார்களா என்பதுதான் எல்லோர் முன்னிலையும் உள்ள கேள்வியாக உள்ளது.