சர்வதேச விசாரணையைத் தடுக்க உதவும் தென்னாபிரிக்காவும் சில தமிழரமைப்புக்களும்

1387

இறுதி யுத்ததின் போது ஏற்படுத்தப்பட்ட மனிதப் பேரவலமானது அறுபதாண்டுகளாகத் தொடரும் இனவழிப்பு நடவடிக்கையின் உச்சக்கட்ட நடவடிக்கை என உலகத்தமிழ் மக்களில் பெரும்பான்மையானவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். இதனை சர்வதேச அரங்கில் எடுத்துச் சொல்லி தமக்கான நீதியைப் பெற்றுக் கொள்ள அவர்கள்முயற்சிகளை மேற்கொள்ளுகிறார்கள். சர்வதேசஅளவில் பக்கச்சார்பற்ற முறையில் ஒரு விசாரணை நடாத்தப்படுவதன் மூலமே தமது அரசியல் கோரிக்கைகளின் நியாயத்தன்மை வெளிப்படுத்தப்படும் என்று அவர்கள் எண்ணுகிறார்களே தவிர, எவரையும் பழிவாங்கும் எண்ணத்தில் இக்கோரிக்கை முன்வைக்கப்படவில்லை. குற்றங்களைப் புரிந்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்ற இயற்கையான நீதியில் இங்கு விதிவிலக்குத் தேவையில்லை என்பது வேறுவிடயம்.

யுத்தம் முடிவுற்று நான்கு ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், சர்வதேச விசாரணை ஒன்று நடைபெறுமா இல்லையா என்ற ஐயப்பாடு இன்னமும்தொடர்கிறது. சிறிலங்கா அரசாங்கம் செய்த குற்றங்களையிட்டு அவ்வரசாங்கமே நம்பகத்தன்மையுடைய விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை மேற்கத்தைய அரசுகளால் முன்வைக்கப்பட்டது. இது ஒரு வேடிக்கையான கோரிக்கையாக இருந்தாலும், அவ்வாறான விசாரணை நடைபெறாதவிடத்து, சர்வதேச விசாரணை அவசியமானது என்ற கருத்தை தமிழர்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்கின்றனர். ஐ.நா. மனிதவுரிமைச்சபையில் இலங்கைத்தீவு தொடர்பில் இரண்டு தீர்மானங்களைக் கொண்டுவந்து நிறைவேற்றிய ஐக்கிய அமெரிக்காவும் இவ்விடயத்தில் மெத்தனமாகவே நடந்து கொள்கிறது. இந்நிலையில், பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டுக்காக இலங்கைக்கு பயணம் செய்த பிரதமர் டேவிட் கம்ரன் அங்கு மேற்கொண்டநடவடிக்கைகளும், வெளியிட்ட கருத்துகளும் சர்வதேச விசாரணை பற்றிய புதிய நம்பிக்கையை தமிழ்மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது.

கம்ரனின் பயணத்திற்கான நிகழ்ச்சி நிரலை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும்,இலக்கம் பத்து, டவுணிங் வீதியின் அதிகாரிகளுமே திட்டமிட்டதாக அறியக் கிடைக்கிறது. ஊடகவியலாளர் திசாநாயகம் தனது அண்மைய கட்டுரைஒன்றில் குறிப்பிட்டதுபோல் இது ஒரு ‘படம் காட்டும்'(photo op) நடவடிக்கையே. நல்லவிதமாக இதனைவிளங்கிக்கொள்வதானால் தனது குறுகிய பயணத்தில் பிரதமர் கம்ரன் நடந்து கொண்ட முறைசில அரசியல் செய்திகளை அழுத்திச் சொல்வதாகஅமைந்திருந்தது.

இலங்கைத்தீவிலும், அங்கு பயணிப்பதற்கு முன்னர் புது தில்லியிலும், கம்ரன் வெளியிட்ட கருத்துகள் இந்திய உபகண்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமையை ஊடகங்கள் வாயிலாக அவதானிக்க முடிகிறது. இவ்விடயங்களை வைத்து, பிரதமர் கம்ரன் ஈழத்தமிழர்களுக்கு தீர்வுபெற்றுதரப் போகிறார் என்ற முடிவுக்கு நாம் வந்துவிட முடியாது. இருப்பினும் அவரது நடவடிக்கைகளை வைத்துப் பார்க்கையில் பிரித்தானியஅதிகார மையத்தில், சிறிலங்கா தொடர்பானகொள்கைகளில் வரவேற்கத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது என்ற அனுமானத்திற்கு நாம் வரமுடியும்.அதேசமயம் இம்மாற்றம் ஐக்கிய அமெரிக்காவின் நிலைப்பாட்டினை ஒத்தாக அமைந்துள்ளமையையும் சாதகமான அம்சங்களாகக் கருதமுடியும்.

கம்ரனின் நடவடிக்கைகள், குறிப்பாக அவரது யாழ். பயணம் தொடர்பாக சிறிலங்கா ஆட்சி மையத்திலிருந்தும், புத்திஜீவிகளான சில சிங்களத் தேசியவாதிகளிடமிருந்தும் வெளிவரும் எதிர்வினைகள்,அவரது நடவடிக்கை சிங்கள தேசத்தினை கலவரப்படுத்தியுள்ளமையை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளன. மகிந்த இராஜபக்சவுக்கு நெருக்கமான சிங்கள இடதுசாரிகளில் சிலர் சர்வதேசத் தலையிடு குறித்து வெளிப்படையாகவே தமதுஅச்சத்தினை வெளியிட்டுள்ளார்கள். இந்தியாவிலிருந்து வரும் கருத்துகளோ அப்பிராந்தியத்தில் தமது அரசியல் முக்கியத்துவத்தை பிரித்தானியப் பிரதமர் கேள்விக்குள்ளாக்கிவிட்ட எரிச்சலுடன் வருபவையாக உள்ளன. சர்வதேச விசாரணை பற்றிய சாதகமான கருத்துகள் இந்திய நடுவன் அரசிடமிருந்து இன்னமும் வரவில்லை எனினும், கம்ரனின் வருகை அக்கருத்தினை பற்றிய பொதுஅபிப்பிராயத்தை இந்தியாவில் மேலும் வலுப்படுத்தியுள்ளதாகவே தெரிகிறது.

சர்வதேச விசாரணை பற்றிய கருத்துகள் வலுப்பெற்றுவரும் நிலையில், அதனை திசைதிருப்பும் வகையில் இரண்டு முயற்சிகளில் சிறிலங்கா இறங்க உள்ளது. ஒன்று காணமல் போனவர்கள்கொல்லப்பட்வர்கள் தொடர்பான மதீப்பிட்டினை மேற்கொள்ளுவது, மற்றயது தென்னாபிரிக்காவில்ஏற்படுத்தப்பட்டது போன்ற பிஉண்மைகளை கண்டறிதலும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தலுக்குமான ஆணைக்குழுவினை` (Truth and Reconciliation Commission – TRC) அமைப்பது. இங்குள்ள இரண்டாவது விடயம் சிக்கலானது ஏனெனில் இம்முயற்சிக்கு தமது ஆலோசனைகளையும் ஆதரவினையும் வழங்குவதற்கு தென்னாபிரிக்க அரசாங்கம் விருப்பத்தைத் தெரிவித்துள்ளது. தென்னாபிரிக்க சிறுபான்மை வெள்ளையரின் நிறவெறிஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர்உருவாக்கப்பட்ட இவ்வாணைக்குழு சர்வதேச அளவில் வரவேற்கப்பட்ட ஒன்று. ஆகவே அவ்வாறான ஒரு ஆணைக்குழுவிற்கு தென்னாபிரிக்காஆதரவு வழங்க முன்வந்தமை இம்முயற்சிக்கான அங்கீகாரத்தை வழங்குகிறது.

இவ்விடயத்தில் தென்னாபிரிக்க அரசாங்கத்தின் நடவடிக்கைகளையிட்டும் அதனுடன் நெருங்கியதொடர்புகளைப் பேணிவரும் தமிழரமைப்புகளியிட்டும் தமிழ்மக்கள் அவதானமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. தென்னாபிரிக்காவில் நிறவெறி அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, பெரும்பான்மை கறுப்பின மக்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற வழிவகை செய்த பின்னர் `மறப்போம் மன்னிப்போம்’ என்ற வகையில் உருவாக்கப்பட்டதுதான் இந்த ஆணைக்குழு. ஆனால் ஈழத்தமிழ்மக்களைப் பொறுத்தவரையில் நேரெதிரான நிலமையே காணப்படுகிறது. விடுதலைப்போராட்டம் தோற்கடிக்கப்பட்டு வெற்றிபெற்ற தரப்பினால்அவர்களது உரிமை மறுக்கப்பட்ட நிலையில் அவர்களுக்குரிய நீதி நிலை நாட்டப்படாமல், நல்லிணக்கமுயற்சிகள் மேற்கொள்வது ஒடுக்கப்படுபவர்களை மேலும் பலவீனப்படுத்தி, குற்றமிழைத்த ஆதிக்க தரப்பினை பலப்படுத்துவதாகவே அமையும். இத்தகையை முயற்சிகளை தமிழ் அமைப்புகள் வெளிப்படையாகவே நிராகரிக்க வேண்டும்.

தென்னாபிரிக்க அரசாங்கத்தை, அது ஆபிரிக்க தேசிய கொங்கிரசை சேரந்தது எனினும் தென்னாபிரிக்க கறுப்பின விடுதலைக்காகப் போராடிய தேசிய விடுதலை இயக்கம் எனப் பார்க்க முடியாது.இன்று ஆட்சியிலிருக்கும் அதிபர் ஜேக்கப் சுமோஅந்த அமைப்பைச் சேர்ந்தவர் எனினும், ஒரு அரசாங்கம் என்ற வகையில். பொருளாதார, மற்றும் பிராந்திய நலன்களை மையப்படுத்தியே அதன் நகர்வுகள் அமைந்துள்ளமையை அவதானிக்க முடியும். தவிரவும் தற்போதைய அரசாங்கம், ஊழலும் அதிகாரத் துஷ்பிரயோகமும் நிறைந்தது என்பது நிரூபணமாகியுள்ளது. ஆகவே அதன் நடவடிக்கைகள் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனில் அக்கறைகொண்டதாக அமைய வேண்டும் என்ற அவசியமில்லை.

கடந்த மூன்று வருடங்களில் தென்னாபிரிக்க அரசாங்கத்தின் அனுசரணையில் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகளை தமிழரமைப்புகள் நடாத்தியிருக்கின்றன. அருட்தந்தை இமானுவலின் உலகத்தமிழர் பேரவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடுகடந்த அரசாங்கம், அனைத்துலக மக்களவை ஆகியவை இப்பேச்சுவார்ததைகளில் கலந்து கொண்டிருந்தன. இப்பேச்சுவார்த்தைகள் சிறிலங்கா அரசாங்கத்துடன் தென்னாபிரிக்க அரசாங்கத்தின் மத்தியஸ்த்ததுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதனையும், அதன் மூலம் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத் ஏற்படுத்துவதனை நோக்காக கொண்டிருந்தன.சர்வதேச சுயாதீன விசாரணை, பொறுப்புக் கூறல்போன்ற விடயங்கள் தென்னாபிரிக்க அரசாங்கத்திற்கு இன்றுவரை ஏற்புடையதாக இல்லை. இவ்விடயத்தில் ஆபிரிக்காவின் அரசியல் நிலவரங்களும் செல்வாக்குச் செலுத்துகின்றன.

ஆரம்பத்திலிருந்தே தென்னாபிரிக்காவின் நடவடிக்கைகளில் ஜயம்கொண்டிருந்த நாடு கடந்த அரசாங்கம் இம்முயற்சியில் அதிக அக்கறை காட்டவில்லை மற்றய அமைப்புகளில் உலகத்தமிழர்பேரவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிர்ந்த மற்றயவையும் விலகிக்கொண்டுவிட்டன. ஆனால்மேற்படி இரு அமைப்புகளும் தென்னாபிரிக்க அரசாங்கத்தின் முயற்சிகளில் இன்னமும் நம்பிக்கை கொண்டுள்ளன. தென்னாபிரிக்க அரசாங்கத்திற்கும் கூட்டமைப்புக்கும் இடையில்தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்தமையில் உலகத் தமிழர் பேரவையின் பங்கு முக்கியமானது எனபதும் இங்கு கவனத்துக்குரியது.

பொது நலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டுக்கு கொழும்புக்குச் சென்றிருந்த தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்தபோது அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிப்பது பற்றியும் TRC பற்றியும் பேசப்பட்டதாக ஊடகங்கள் மூலம்அறிய முடிகிறது. இப்பேச்சுவார்த்தையின் பின்னர்கருத்து வெளியிட்ட சுரேஸ் பிரேமச்சந்திரன் TRC அமைக்கப்படுவதை வரவேற்றிருக்கிறார்.

இவ்விடயம் பற்றி உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவல் அவர்களை ஒருபேப்பர் தொடர்புகொண்டு கேட்டபோது. தென்னாபிரிக்காவின் மத்தியஸத்த்தை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றக்கொள்ளவில்லை எனவும் அது உள்நாட்டில் உருவாக்கப்படும் தீர்வு முயற்சிகள்பற்றியே பேசியதாகவும், இப்போது நாட்களைக்கடத்துவதற்காக இந்த ஆணைக்குழு பற்றிப் பேசுவதாகவும் தெரிவித்தார். இத்தந்திரோபாய நகர்வினை உலகத்தமிழர் பேரவையும் கூட்டமைப்பும் உணர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இவ்விடத்தில்,நெல்சன் மண்டேலாவின் நினைவாக, ‘உண்மையான தலைவர்கள் தமது மக்களின்விடுதலைக்காக எல்லாவற்றையும் அர்ப்பணிக்கத்தயாராக இருக்க வேண்டும்’ என்ற அவரது கூற்றினை தமிழ் தலைமைகளுக்கு நினைவூட்டூவோம்.