இஸ்லாமிய அரசு என்னும் அமைப்பு தனக்கு எதிரிகள் எனக் கருதுவோர் பலரைத் தலைகளைத் துண்டித்துக் கொலை செய்கின்றது. சவுதி அரேபியா தனது அரசுக்கு எதிரானவர்கள் எனக் கருதுவோரைத் தனது நாட்டுச் சட்டப்படி நீதி விசாரணை செய்து பலரை தலைகளைத் துண்டித்துக் கொலை செய்கின்றது. ஐக்கிய அமெரிக்கா தனது மேற்காசியக் நலன்களுக்கு ஆபத்தானவர்கள் எனக் கருதுவோரை விசாரணை இன்றி ஆளில்லாப் போர் விமானங்கள் மூலம் கொல்கின்றது. இப்படிப் பட்ட தொடர் கொலைகளின் ஓர் அம்சமாக 2016 ஜனவரி இரண்டாம் திகதி சவுதி அரேபியாவில் 47 பேர்கொல்லப் பட்டுள்ளனர். இதில் சியா இஸ்லாமிய மத போதகரான ஷேக் நிமர் அல் நிமர் அவர்களைக் கொன்றது உலகெங்கும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஷேக் நிமர் அல் நிமர்சவுதி அரேபியாவின் வஹாப் கொள்கைகளுக்கு எதிராக போதனைகளைச் செய்பவர். சவுதி மன்னர் குடும்பத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் செய்யத் தூண்டுபவர். 2011-ம் ஆண்டு சவுதி அரேபியாவிலும் பாஹ்ரேனிலும் மன்னர்களுக்கு எதிரான கிளர்ச்சிகளுக்கு இவரது போதனை காரணமாக இருந்ததாகக் கருதப் படுகின்றது.
சவுதி-ஈரான் பொது நட்பும் பொது எதிரியும்
மத்திய கிழக்கின் புவிசார் அரசியல் பிரச்சனைகளில் முக்கிய பங்கு வகிப்பது ஈரானுக்கும்சவுதி அரேபியாவிற்கும் இடையிலான போட்டியாகும். ஈரான் மேற்காசியப் பிராந்தியத்தில் அதிக அளவு மக்கள் தொகையைக் கொண்டதும் ஒரு நீண்ட கலாச்சார வரலாறும் கொண்டஒரு நாடு. சவுதி அரேபியா பெருமளவு எரிபொருள் இருக்கும் நாடு. அத்துடன் இஸ்லாமியர்களின் புனித நகர்களைக் கொண்ட நாடு. 1979-இல் ஈரானில் மதப் புரட்சி ஏற்பட முன்னர்இரு நாடுகளுக்கும் இடையில் பெரிய முரண்பாடுகள் ஏற்பட்டதில்லை. அப்போது இரு நாடுகளும் ஐக்கிய அமெரிக்காவின் நட்பு நாடுகளாக இருந்தன. அப்துக் கமால் நாசர் தலைமையில் அரபு நாடுகளில் பாத் கட்சியின் வளர்ச்சிஇரு நாடுகளிலும் ஆட்சியில் இருந்த மன்னர்களுக்கு பொது அச்சுறுத்தலாக இருந்தது. அமெரிக்கா என்ற பொது நட்பும் பாத் கட்சி என்ற பொது எதிரியும் சவுதி அரேபியாவையும் ஈரானையும் ஒன்றிணைத்து வைத்திருந்தன. ரிச்சர்ட் நிக்சன் தனது மேற்காசியக் கொள்கையில் ஈரானையும் சவுதி அரேபியாவையும் இரட்டைத் தூண்கள் என்றார். இரு நாடுகளிற்கும் இடையிலான அன்றைய நட்பும் இன்றைய மோதலுக்கும் காரணம் மேற்காசியாவில் மேற்குலக நாடுகள் எனச் சொல்லப்படும் வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் நலன்கள பேணுவதற்காக உருவாக்கப்பட்டவையே.
சவுதி ஈரான் சவால் சண்டை
18 மில்லியன் மக்களைக் கொண்ட சவுதியில் இரு மில்லியன் மக்கள் சியா மதப் பிரிவைச் சேர்ந்தவர்கள் இவர்கள் மூலம் ஈரானால் சவுதியில் பெரும் கிளர்ச்சியை உருவாக்க முடியும். சவுதி அரச குடும்பத்தினரின் செல்வாக்கு குடிமக்களிடையே குறைந்து கொண்டு போகின்றது. இந்த நிலையில் ஈரானின் ஆதரவு பெற்ற சியா மத போதகர்கள் சவுதியில் இருந்து பரப்புரை செய்வது சவுதி அரச குடும்பத்தினருக்கு ஒரு நேரடி வெடிகுண்டாகும். இதை எந்த வகையிலும் ஒழித்துக் கட்ட வேண்டும் என சவுதி அரச குடும்பத்தினர் உறுதி கொண்டுள்ளனர் போல்தெரிகின்றது. ஈரான் பொருளாதார ரீதியில் வலுவற்று இருக்கும் இவ்வேளையில் அதனுடன் ஒரு போருக்குக் கூட சவுதி அரேபியா தயாராக இருக்கின்றது. ஆனால் சவுதியில் மன்னர் குடும்பத்திற்கு எதிரான `புனிதப் போராளிகளை’ ஈரானால் உருவாக்க முடியும். அதன் கைவசம் ஹிஸ்புல்லா இருக்கின்றது.
முன்னை இட்ட தீ மசகு எண்ணெயிலே
ஈரானிற்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான முரண்பாடு 1976-இல் எரிபொருள் விலை தொடர்பாக முதலில் ஏற்பட்டது. எரிபொருள் விலைகள் உலகச் சந்தையில் மிகவும்குறைவாக இருக்கின்றது அது அதிகரிக்கப் படவேண்டும் என ஈரானிய மன்னர் ஷா அப்போது கருதினார். அதற்கு சவுதி ஒத்துழைக்கும் எனவும் அவர் எதிர்பார்த்தார். குறைந்த செலவில் எரிபொருள் உற்பத்தி செய்யும் சவுதி அரேபியா ஏரிபொருள் விலை அதிகரிப்பை ஏற்க மறுத்து. ஏற்றுமதியை அதிகரித்தது. பாதீட்டுப் பற்றாக் குறையும் அதிகரித்த அரசஆடம்பரச் செலவுகளும் ஈரானிய மன்னர்ஷாவிற்கு எதிராக மக்களை திசை திருப்பியது.1979இல் ஈரானில் உருவான மதசார்புப் புரட்சிமன்னர் ஷாவை அமெரிக்காவிற்குத் தப்பிஓடவைத்தது. அவரை தம்மிடம் ஒப்படைக்கக் கோரி பல அமெரிக்கர்கள் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். அமெரிக்காவின் மோசமான எதிரி நாடாக ஈரான் உருவெடுத்தது. ஈரானிய மதவாத அரசு ஈரானில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கும் குடியரசுத் தலைவர், பாராளமன்ற உறுப்பினர்களையும் இவர்களுக்கு உள்ள அதிகாரங்களிலும் பார்க்க அதிக அதிகாரம் கொண்ட மதஉச்சத் தலைவரையும் கொண்ட ஓர் ஆட்சி முறைமையை உருவாக்கியது. ஈரானிய மதவாதிகள் சவுதி அரேபிய மன்னர்களின் ஆட்சி முறைமையைக் கடுமையாக எதிர்த்தனர்.அது ஒழித்துக் கட்டப்பட வேண்டும் எனப் பகிரங்கமாகத் தெரிவித்தும் வருகின்றனர்.
ஈரானின் வல்லரசுக் கனவு
சவுதியில் சியா இஸ்லாமியர்கள் வாழும் பகுதி, லிபியா, அல்ஜீரியா, எகிப்த்து ஆகிய நாடுகளை தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்து தான் ஒரு வல்லரசாக வேண்டும் என்ற கனவு ஈரானிய மதவாதிகளிடம் இருக்கின்றது. இது சவுதி அரேபியாவை கடும் சினத்திற்கு உள்ளாக்கியது. இதன் விளைவாக 1980-ம் ஆண்டு முதற்தடவையாக ஈராக்கிய அதிபர் சதாம் ஹுசேய்ன்சவுதி அரேபியாவிற்குப் பயணம் செய்தார். சியாஇஸ்லாமியர்களைப் பெரும் பான்மையாகக் கொண்ட ஈராக்கில் சுனி இஸ்லாமியரானசதாம் ஹுசேய்ன் பாத் கொள்கை அடிப்படையில் படைத்துறை ஆட்சி செய்து வந்தார். அவரும் ஈரானியப் புரட்சி தனது இருப்பிற்கு ஆபத்தானது எனக் கருதினார். இதன் விளைவாக அவர் ஈரான் மீது போர் தொடுத்தார். இந்தப்போருக்கு சவுதி அரேபியா பல பில்லியன் டொலர்களை நிதி உதவியாக வழங்கியது. அமெரிக்கா படைக்கல விற்பனை செய்தது. போரின் போது சவுதி அரேபியாவின் இரு எண்ணெய் தாங்கிக் கப்பல்களை ஈரான் அழித்தது. பதிலடியாக சவுதி அரேபியா ஈரானின் இரு போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியது.
அணுக்குண்டு அச்சம்
ஈரானின் முழு யுரேனியமும் அகற்றப்பட்டுஅது யுரேனியப் பதப்படுத்துவதை முற்றாகத்தடைசெய்ய வேண்டும் என சவுதி அரேபியாவும் இஸ்ரேலும் வலியுறுத்தியது எடுபடவில்லை. சிரியாவில் அமெரிக்கா லிபியாவின் செய்தது போன்ற படை நடவடிக்கையைச் செய்து அதிபர் பஷார் அல் அசாத்தைப் பதவியில்இருந்து அகற்ற வேண்டும் என்ற சவுதியின்விருப்பத்தை அமெரிக்கா நிறைவேற்றவில்லை.சவுதியில் பெண்களுக்கு உரிமை இல்லாமல்இருப்பது போன்ற பல மனித உரிமை மீறல்கள்அமெரிக்கா மனித உரிமை தொடர்பாக போடும்வேடத்திற்கு அசௌகரியமாக அமைந்தன.அமெரிக்காவின் மேற்காசியக் கொள்கை முதலிடம் வகிப்பன எரிபொருள் விநியோகமும் இஸ்ரேலின் இருப்பும் ஆகும். அமெரிக்கா எரிபொருள் உற்பத்தியில் தன்னிறைவுகண்டு ஓர் எரிபொருள் ஏற்றுமதி செய்யக் கூடிய நாடாகமாறிவிட்டது. இஸ்ரேல் அழிக்கப்பட முடியாதநாடாகி விட்டது. இது மேற்காசியா தொடர்பானதனது கொள்கையை மீளமைக்க வைத்தது.மேற்காசியப் பிராந்திய நாடுகள் தமது நலன்களைத் தாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்என்ற நிலைப்பாட்டை அமெரிக்கா எடுத்தது.இதனால் யேமனில் சவுதி அரேபியா தனதுபிராந்திய நலனைப் பாதுகாக்க படை நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உருவானது.
உள்நாட்டுப் பிரச்சனைக்கு வெளிநாட்டுத் தீர்வு
எரிபொருள் வருமானம் குறைந்த பாதீட்டுப் பற்றாக் குறை ஒரு புறம் யேமனில் போர் ஒரு புறம் ஐ எஸ் அமைப்பின் அச்சுறுத்தல் இன்னொரு புறம். சிரியாவின் உள்நாட்டுக் குழப்பமும் அங்கு இரசிய படைகள் நிலை கொண்டுள்ளமை இன்னொரு புறமாக பெரும் புவிசார் அரசியல் பிரச்சனைக்குள் சவுதி அரேபியா சிக்குண்டிருக்கும் வேளையில் மத போதகர் ஷேக் நிமர் அல் நிமர் உடபட 47 பேருக்கு சவுதி அரேபியா இறப்புத் தண்டனை வழங்கியுள்ளது. சவுதியில் உள்நாட்டுப் பிரச்சனை தோன்றும் போதெல்லாம் சுனி-சியா பிரச்சனையை சவுதிஅரேபிய ஆட்சியாளர்கள் கையில் எடுப்பதுவழக்கம் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.
பாஹ்ரேனில் எதிரொலிக்குமா?
சியா மத போதகர் ஷேக் நிமர் அல் நிமருக்குசவுதி அரேபியா வழங்கிய இறப்புத் தண்டனைபாஹ்ரேயில் ஏற்படுத்தவிருக்கும் பாதிப்பு மத்திய கிழக்கின் புவிசார் அரசியலில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றது. சியாஇஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும்பாஹ்ரேனில் சுனி இஸ்லாமிய மன்னர் ஆட்சிசெய்கின்றார். அங்குள்ள மக்கள் சுனி மன்னரின்ஆட்சியைப் பெரிதாக விரும்பவில்லை. சுனிமன்னர் ஹமத் பின் இசா அல் கலிபா ஐக்கியஅமெரிக்காவினதும் சவுதி அரேபியாவினதும் நெருங்கிய நண்பராவார். பாஹ்ரேனில் இருக்கும் அமெரிக்கக் கடற்படைத் தளம் வளைகுடாவிலும் மத்திய தரைக்கடலிலும் அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். அங்குநிலைகொண்டிருக்கும் அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படைப் பிரிவு பாரசீக வளைகுடா, அரபுக் கடல், செங்கடல், இந்து மாக்கடலின் மேற்குப் பிராந்தியம் போன்றவற்றில் அமெரிக்க நலன்களைப் பாதுகாக்கின்றன. இதை ஈரான் தனக்குப் பெரும் அச்சுறுத்தலாகக் கருதுகின்றது.
சவுதி அரேபியா தெய்விகப் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்படும் என ஈரானிய உச்சத் தலைவர் சூளுரைத்துள்ளார். இது மத்திய கிழக்கின் அமைதியைப் பாதிக்கும் என ஐக்கிய அமெரிக்கா கருத்து வெளியிட்டுள்ளது. குழம்பிப் போயுள்ள மேற்காசியா மேலும் குழம்பப் போகின்றது.