வங்கத்திலிருந்து சகாக்களுடன் விரட்டப்பட்ட விஜயன் என்னும் இளவரசனும் அவன் சகாக்களும் பேசிய மொழிதான் இன்றைய சிங்கள மொழியாக வளர்ச்சி பெற்றது என்கிறார்கள். இது ஒரு சர்ச்சைக்கு உரிய விடயம்.
சிங்களம் ஒரு இந்திய ஆரிய மொழி. காலத்தை வைத்து அவற்றை பழைய, மத்திய, புதிய என்று மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளார்கள். இதில் புதிய பிரிவு என்ற கடைசி மாற்றம் ஏற்படு முன்னரே சிங்களம் அம்மொழிகளிலிருந்து விலகிவிட்டது என்பதைக்கூட நுணுக்கமாக ஆராய்ந்துள்ளார்கள். ஆனாலும் இந்த ஆரிய மொழிகள் இந்தியாவின் வடக்கு, மேற்கு, கிழக்கு என்று பாரிய பிரதேச வேறுபாடுகளுடன் பேசப்படுவதால், பிரதேச வேறுபாடுகளுக்கு ஒப்ப மொழிகளிலும் வேறுபாடுகள் காணப்பட்டது. இதை மையமாக வைத்து மொழி வல்லுனர்கள் அவற்றை கிழக்கு பரிவு, வடமேற்கு பிரிவு, தென் மேற்கு பிரிவு என மூன்று பிரிவுகளாப் பிரித்துள்ளார்கள். இதில் விஜயன் புறப்பட்ட பிரதேசத்தில் அப்போது பேசப்பட்ட ஒரிச வங்காளிய மொழிகள் கிழக்குப் பிரிவில் அடங்குகின்றன. விஜயனும் அவன் சகாக்களும் பேசிய மொழிதான் இன்றைய சிங்கள மொழியாக வளர்ச்சி பெற்றது என்றால் சிங்களமும் நிச்சயம் கிழக்குப் பிரிவினுள்தான் அடக்கப் பட்டிருக்க வேண்டும்.
சிங்களத்தை மேற்கு இந்தியாவின் குஜராத்தி கொங்கணி போன்ற மொழிகள் அடங்கிய தென்மேற்கு பிரிவினுள் அடக்கி உள்ளார்கள். சிங்களம் பேசும் மக்கள் இந்தியாவின் எந்தப் பகுயில் இருந்து வந்துள்ளார்கள் என்னும்போது, வங்காளத்தில் இருந்தும் வந்திருக்கிறார்கள் என்று சொல்லலாமே அன்றி அங்கிருந்து வந்த விஜயனும் அவனின் கூட்டாளிகளும் மட்டும்தான் வந்தார்கள். அவர்கள் பேசிய மொழிதான் சிங்களமானது என்று சொல்ல முடியாது. அத்துடன் குஜராத்தி கொங்கணி போன்ற மொழிகளுடன் தொடர்புடையவர்கள் விஜயனுக்கு முன் இலங்கைக்கு வந்திருக்கவேண்டும். தங்கள் மொழியின் கதையையே முறையாக ஆய்வு செய்யாது, சிங்கத்தின் வம்சா வழியினர் தாம் என்னும் கதையை நம்பி வாளா இருக்கின்றனர்.
சிங்களத்தை திராவிட மொழி என்றுகூடத் தப்புக்கணக்கு போட்டிருக்கிறார்கள். அதற்கான காரணம் கி பி 11ம் நூற்றாண்டின் பின் இதன் வசன அமைப்பு தமிழின் செல்வாக்கால் சிறிது மாற்றம் கண்டது. இதை அவதானித்த சிலரின் தப்புக்கணக்குத்தான் அது. மொழி ஆராய்ச்சியாளர்கள் ஒரு மொழியின் இலக்கணத்தை வைத்தே அம்மொழி எந்தக் குடும்பத்தைச் சார்ந்ததென்று இனம் கண்டு கொள்ளுகிறார்கள். இந்த ரீதியல்? இதை ஆரிய மொழியாக வரிசைப்படுத்துவதில் அவர்களுக்கு சிரமமிருக்கவில்லை.
அவர்கள் மொழி மரபு ரீதியாக எம்மிலிருந்து எவ்வளவு வேறுபட்டுள்ளது என்பதற்கு உதாரணங்கள் சிலவற்றைப் பார்ப்போம். எனக்கு தெரியும் என்று நாம் சொன்னால் அவர்கள் நான் தெரியும் என்பார்கள் (மம தன்னவா) அவனைக் கூப்பிடு என்றால் அவர்கள் அவனுக்கு கூப்பிடு என்பார்கள் (ஏயாட்ட கத்தாகறன்ன). வேடிக்கை, நாம் மரத்தில் ஏறினான் என்றால் அவர்கள் மரத்திற்கு ஏறினான் என்பார்கள். (கஸ்சட்ட நங்கா)
விஜயனும் அவன் சகாக்கள் (700பேர்) அனைவரும் பாண்டிய நாட்டின் தமிழ்ப் பெண்களை மணந்தார்களாம். ஒட்டு மொத்தம் தமிழிச்சிகளின் வம்சாவழி வந்தவர்கள் பேசும் மொழி அதுவும் திருக்குறளை தன்கெத்தே வைத்திருக்கும் அளவிற்கு வளர்ச்சி அடைந்த காலத்தில் வாழ்ந்த தமிழிச்சிகளின் வம்சாவழி வந்தவர்கள் பேசும் மொழி சிங்களம் என்றால்இரு மொழிகளுக்கும் எவ்வளவு ஒற்றுமை இருக்கவேண்டும். அப்படி இருக்கின்றதா?. அதனால் இந்த அர்த்தமற்ற கதைக்கு இத்தோடு முற்றுப் புள்ளி வைப்போம்.
பூகோள ரீதியாக உள்ள நெருக்கத்தையும் பழமை கொண்ட தமிழ் இலக்கியங்களின் செல்வாக்கையும் ஒப்பிடும்போது சிங்கள மொழி தமிழில் இருந்து எடுத்த சொற்கள் இன்னும் கூடுதலாக இருந்திருக்க வேண்டும். அப்படி இல்லாது போனதற்கு காலம்காலமாக இரு இனங்களுக்குமிடையில் இருந்த போட்டி காரணமாகவோ தெரியவில்லை. இதைவிட தமிழில் இருந்து அவர்கள் எடுத்த சொற்கள் எவையென்று கண்டுகொள்வது கடினம். காரணம் அவர்கள் இரவல் வாங்கும்போது இருந்த அர்த்தம் இப்பாழுது மாறி இருக்கலாம். எடுத்துக் காட்டிற்கு சம்பளம் என்பதை பக்கத்தில் நின்றவர் அத(இன்று)படி என்றார். எனக்கு புரியவில்லை. வேறொருவர் சொல்லித்தான் எனக்கு சம்பளத்தை படி என்னும் தமிழ்ச் சொல்லால் அவர் சொன்னார் என்பது புரிந்தது.
[author title=”எழுதியது” image=”http://orupaper.com/wp-content/uploads/2016/01/uncle.png”] மாசிலாமணி
ஒருபேப்பருக்காக[/author]