சின்னச்சின்ன ஞாபகங்களின் கதை 01

ஞாபகங்கள் மழையாகும்; ஞாபகங்கள் குடையாகும்.
ஞாபகங்கள் தீமூட்டும்; ஞாபகங்கள் நீரூற்றும்.

* * * * * * * * * * *

ஞாபகங்கள்; நம்மைக் கொல்வன அவைதாம். ஞாபகங்களை பொக்கற்றுக்குள் நிறையச் சேமித்து வைத்திருக்கிறேன். அவை தம்பலப்பூச்சிபோல உடலெங்கும் ஊர்கிறது. சிலசமயம் அட்டைபோல ஊர்ந்து அரியண்டமும் தருகிறது. ஆயினும் அதற்குள்ளால் நான் சொல்லச் சிறுகதையாவது இருக்கிறது. அச்சிறுகதைக்குள் வாழ்வு இருக்கிறது. அந்த வாழ்வுதான் இந்தப்பத்தி!

* * * * * * * * * * *

1979 அல்லது 1980 என நினைக்கிறேன். யாழ்.பல்கலைக்கழகம்! கல்விக்காக அங்கு நான் காலடி எடுத்து வைக்காத காலம். ஓர் எழுச்சி அப்போது, அங்கு நிகழ்கிறது. அமிர்தலிங்கம் என்று ஒருவர் இருந்தார், இப்போதுள்ள சுமந்திரன் – சம்பந்தனிலும் பார்க்கப் பரவாயில்லாமல் இருந்தார். ‘தமிழ்த்தேசியம்’ என்று கொஞ்சமாவது உரைத்தவர் அவர். எழுபத்தேழு தேர்தலில் தமிழீழ ஆணைக்கு வாக்குக் கேட்கிறார். வடகிழக்கிலுள்ள அத்தனை தொகுதிகளையும் அந்த ஆணைக்காக வாக்களித்து வழங்கியவர் தமிழ்மக்கள். ஆனால் அவர்-அமிர்- அத்தனை சால்ஜாப்பும் செய்து சிங்கள ஜேஆர் அரசுக்குத் துணை போனார். தமிழ்த்தேசிய உணர்விலிருந்து ‘அமிர்தலிங்கம் மாண்டுவிட்டார்’ என்று யாழ்.பல்கலைக்கழக மாணவ சமூகம் முடிவெடுக்கிறது. அவருக்குக் ‘காடாத்துச்’ செய்தது, மாணவ சமூகம். ஈழத்துத்தமிழ்ச் சமூகத்துக்கோ பெரும் அதிர்ச்சி. ஆயினும் உண்மை உணரப்படலாயிற்று. அவ்வாறு உணரப்பட வெகுகாலம் எடுத்தது.

* * * * * * * * * * *

1981 மே 31 நள்ளிரவு. காமினி, சிறில்மத்தியு முதலான சிங்களக் காடையர்களால் யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் கொளுத்தப்படுகிறது. சுமார் ஒரு இலட்சம் நூல்கள் எரியுண்டன. இனி எங்கும் எடுக்கமுடியாத பழந்தமிழ்ச் சுவடிகளும் கருகுண்டன. அது ஈழத்தமிழ் மக்களின் அடிவயிற்றில் வைக்கப்பட்ட நெருப்பு மாத்திரமல்ல.; நாகரிக சமூகத்தின் அடிவயிற்றில், கல்வியை தேடலை தன்னகத்தே கொண்ட ஒரு சமூகத்தின் அடிவயிற்றில் வைக்கப்பட்ட பெருநெருப்பு!

இவை குறித்து நிறையச் சொல்லலாம். ஆனால் நான் சொல்லவருவது வேறொன்று. இவையெல்லாம் நிகழ்ந்து மூன்று, நான்கு மாதங்கள்கூட ஆகவில்லை, யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் யாழ்.குடாநாடெங்கும் வீடுவீடாகப் படியேறுகிறார்கள். அவர்கள் கேட்டது ஒன்றேயொன்றுதான்: “புத்தகங்கள் தாருங்கள்.. எதுவாயினும் புத்தகம் தாருங்கள்.. எவ்வளவு ஆயினும் புத்தகம் தாருங்கள்…”

அவ்வாறு சேகரிக்கப்பட்ட புத்தகங்கள் வெள்ளம்போலப் பெருகலாயிற்று. அவ்வெள்ளம், எரியுண்ட நூலகத்தையும் தம்முள் அமுக்கி விடும்படி ஆயிற்று.
அம்மாணவர்கள் வீதிதோறும் செருப்புத் தேய, வீசும் வெக்கையில் உடம்பு உருக, பசித்தபோது சொம்பில் பச்சைத்தண்ணி குடித்தபடி நடந்த நடையை நான் கண்டேன்!

* * * * * * * * * * *

நான் யாழ்.பல்கலைக்கழகம் போபவனாக ஆகிவிட்டேன். அது 1982 யூன்மாதத்தின் பிற்கூறு. போன புதுசில் படிக்க முயன்றேன். போகும்போக்குச் சரியல்ல. படிப்பதற்காக மாத்திரம் வந்தவனல்ல. ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தின் ஆன்மாவாக யாழ்.பல்கலைக்கழகம் திகழ்கிறது. ஓயாத போராட்டம். உண்ணாவிரதம் இருக்கிறோம். இரத்தம் கொடுக்கிறோம்.(கவனியுங்கள், ‘கள்ளர்களுக்கு’ இரத்தக் கையெழுத்து அல்ல) ஊர்வலம் போகிறோம். நாள்தோறும் அரசியல்! அஃது அரசியல் கருத்தரங்காகக்கூட இருந்தது. சிங்கள அட்டாகாசத்தால் எங்கேயாயினும் ஏதாயினும் ஒரு மனுசர், ஓர் ஊர் பாதிக்கப்பட்டால் அங்கே யாழ்.பல்கலைக்கழக மாணவசமூகம், அத்தனை இக்கட்டையும் தன் தலையில் தாங்கியவண்ணம் நின்றது.

* * * * * * * * * * *

1983 இனப்படுகொலை. இலங்கைத்தீவின் ஏனைய பல்கலைக்கழகங்களிலிருந்து தமிழ்மாணவர்கள் வருகிறார்கள். அவர்களுக்குத் தஞ்சமாகவிருந்தது யாழ்.பல்கலைக்கழகம் ஒன்றுதான். ‘இடம்பெயர்ந்த மாணவர்கள்’ என அங்கிருந்துதான் மாணவர்கள் போராடத் தொடங்குகின்றனர். யாழ்.பல்கலைக்கழக வாகைமர முன்றலில் சாகும்வரை உண்ணாவிரதமிருக்கின்றனர், சில மாணவர்கள். அவர்களுள் நமது தேசியத்தலைவரின் அன்புமனைவி மதிவதனி ஒருவர்.

யாழ்.பல்கலைக்கழகம் ஒன்றுதான் கிளைபரப்பி, நிழல் பரப்பி அத்தனை மாணவர்களையும் ஆற்றுப்படுத்தியது. அத்தனை உணர்வுகளுக்கும் வடிகாலமைத்தது.

* * * * * * * * * * *

1985. எனக்கு, என்போன்ற சிலமாணவர்களுக்குப் படிப்பு முக்கியமல்ல என்றாயிற்று. வெளிப்படையான அரசியலுக்குள் போகவேண்டாம், கலாசார ரீதியாக இயங்குவோம் என்று வெளிக்கிட்டோம். ‘மண் சுமந்த மேனியர்’ என்ற நாடகம் உருவாயிற்று. யாழ்.குடாநாடெங்கும் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு. மக்கள் அதில் தங்களைக் கண்டனர். தங்களை உணர்ந்தனர். அதனுடன் ‘இந்த மண்ணும் எங்கள் நாட்களும்’ எனும் கவிதா நிகழ்வு!

1985இன் இறுதியில் ‘திம்புப் பேச்சுவார்த்தை’ என்ற ஒன்று கருக்கட்டுகிறது. அதனுள் இருக்கக்கூடிய ‘இந்திய நலன்; ஈழத்தமிழர் விரோதம்’ என்பதனை அம்பலப்படுத்தி ‘மாயமான்’ எனும் வீதி நாடகம். குடாநாடெங்கணும் அதுவும் வீச்சுடன் வெளிப்படுகிறது.

யாழ்.பல்கலைக்கழகம் இல்லாமல் இவையெவையும் சாத்தியமல்ல.

* * * * * * * * * * *

1998. தமிழர்நிலம் சூழ சிங்கள இராணுவம். தமிழர் எவரும் குசுகுசுக்கக்கூட முடியாது. ஆனால் குசுகுசுக்க ஓரிடம் கிடைத்தது. அது யாழ் பல்கலைக்கழகம். இருளின் மத்தியில், காற்று மாத்திரம் புகமுடிந்த ஓர் அறையினுள், வெளியில் யாருக்கும் கேட்காவண்ணம் குசுகுசுத்தார்கள். பிறந்தது, பொங்குதமிழ்! மிகுந்த எழுச்சி. ஈழத்தமிழுக்கு அது புதுசு மாத்திரமல்ல; அதனால் உலகச்சமூகம் முழுக்க உரப்புப் பெற்றது. 2001இல் அது முழு உலகும் காண யாழ்.பல்கலைக்கழக மாணவ சமூகம்தான் வழிகோலியது. பொங்குதமிழ்; யாழ்.பல்கலைக்கழக மாணவ சமூகத்தின் அற்புதமான குறியீடு.

* * * * * * * * * * *

2009இன் பின்னர் ஈழத்தமிழர் ஒரு மூச்சு விடக்கூடமுடியாத அவல நிலை. ஆனால் அப்போதும் யாழ். பல்கலைக்கழகச் சமூகம் தன் இயல்பிலிருந்து மாறுபடவில்லை. மாவீரர் நாள் என்றால் என்ன, முள்ளிவாய்க்கால் துயர் நாள் என்றால் என்ன, அத்தனை சிங்கள இராணுவ அடக்குமுறைக்கு மத்தியிலும் நெஞ்சில் உருவேற்றி, மனதில் கனலேற்றி நின்றது யாழ்.பல்கலைக்கழக மாணவ சமூகம் ஒன்றேதான். 1977இலிருந்து இற்றைவரை அதன் போராட்ட ஓர்மம் ஓய்ந்ததில்லை. மாணவர் மாறிக்கொண்டே இருக்கலாம். ஆயினும் அதன் ஆன்மா ஒன்றேதான். அது நேற்று அல்ல; இன்று அல்ல; எந்நாளும்!

* * * * * * * * * * *

இப்போது அங்கு நிகழ்ந்த ‘ராகிங்!’ ஒன்று சொல்வேன், எப்போதும் அதே வக்கிரத்துடன் அது நிகழ்கிறது. எப்போதும் அதே வளாக மண்டப வளவினுள் அதற்கு எதிரான உணர்வுகளும் கிளர்கிறது. வெளியிலிருந்து நாங்கள் ஒன்றும் பேசவேண்டாம். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். எங்களது தாழ்வுச் சிக்கலை, மனவக்கிரங்களைக் கொட்டிட வேண்டாம். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

ஏனென்றால் யாழ்.பல்கலைக்கழக மாணவ சமூகம் எப்போதும் சரியானதை, பொருத்தமானதை, ஈழத்தமிழ்ச் சமூகத்துக்கு தேவையானதை ஆத்மார்த்தமாகச் செய்திருக்கிறது. 1986இல் விஜிதரனின் அவனது நண்பர்களான ஏனைய மாணவர்களினது வக்கிரமான ‘ராகிங்’இற்கு எதிராக நாங்கள் பலர் போராடியிருக்கிறோம். அதேசமயம் விஜிதரன் ‘காணாமல் போன’போது அதற்கான கண்டனக்குரலை, போர்க்குரலை எழுப்பியுமிருக்கிறோம்.

ஏனென்றால் நாங்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள்! எம்நெஞ்சம் பெரும் நெருப்பு; அது நேர்மையின் மறுபிறப்பு! மதித்தால் மதிப்போம்; மிதித்தால் மிதிப்போம்!