சிறிலங்காவின் ‘இனநல்லிணக்க’ முயற்சிகள்அம்பலப்பட்டுநிற்கின்றன

661

‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என தமிழ் மக்களுக்கு எதிரான இனவழிப்பு யுத்தத்தை சர்வதேச மட்டத்தில் நியாயப்படுத்திய சிறிலங்கா அரசாங்கம், போர் முடிவுக்கு வந்ததும், போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் உட்கட்டுமானங்களை மேம்படுத்துகிறோம், இனங்களுக்கிடையிலான நல்லிணக்க முயற்சிகளில் இறங்கியுள்ளோம் என்ற பரப்புரைகளில் இறங்கியது. போர்க்குற்றங்கள் தொடர்பில், பக்கச்சார்பற்ற பன்னாட்டு விசாரணை நடாத்தப்பட்டால் அது தாம் மேற்கொண்டுவரும் நல்லிணக்க முயற்சிகளைப் பாதித்துவிடும்  என சிறிலங்கா வாதிட்டு வருகிறது. இந்தவாதத்தினை மேற்குலகம் புறந்தள்ளினாலும், அதனை கியூபா, பாக்கிஸ்தான் போன்ற சிறிலங்காவின் நட்பு நாடுகள் ஏற்றுக்கொண்டு ஐ.நா. மனிதவுரிமைச் சபையில் சிறிலங்காவிற்கு ஆதரவளித்தன. இந்திய அதிகார மையத்தில் ஒரு தொகுதியினரிடமும் சிறிலங்காவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவுள்ளது. சிறிலங்கா அரசாங்கமும் தன்பங்கிற்கு நல்லிணக்க முயற்சிகளில் தாம் அர்ப்பணிப்புடன் ஈடுபடுவதுபோன்ற தோற்றப்பாட்டினை ஏற்படுத்தி வந்தது. ஆனால் அண்மைய நாட்களில் நடைபெற்றவரும் சம்பவங்களைப் பார்க்கையில், சிறிலங்காவால் தொடர்ந்து நடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுபோல் தெரிகிறது. ஏனெனில் அதன் தற்போதைய நடவடிக்கைகள் ‘நல்லிணக்க’ முயற்சிகளுக்கு நேரெதிரானவையாக அமைந்துள்ளன.

பாராளுமன்றத்தில் ஐந்தில் மூன்று பெரும்பான்மையும், சிங்கள மக்கள் மத்தியில் பெரும் ஆதரவும், நிறைவேற்று அதிகாரங்களையும் கொண்ட ஜனாதிபதி மகிந்த இராஜபக்சவின் அரசாங்கமானது என்றுமில்லாதளவு பலம் பொருந்தியதாக அமைந்திருக்கிறது என்ற நம்பிக்கை இலங்கைத் தீவில் வாழும் மக்களிடையே உள்ளது. ஆனால், போரில் தமிழர்களை வென்ற நவீன கெமுனுக்கள் உண்மையில் பாதுகாப்பற்ற, உறுதியற்ற நிலையில் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இந்நிலையில், தொடர்ந்து மகிந்த இராஜபக்சவை நியாயப்படுத்தி வந்த பேராசிரியர் இரஜீவ விஜயசிங்க, கலாநிதி தயான் ஜயதிலக போன்றவர்கள், சிறிலங்கா அரசாங்கத்தின் பலவீனமான நிலையை தமது கட்டுரைகளில் குறிப்பிடத் தொடங்கியிருப்பது கவனத்திற்குரியதாக அமைந்துள்ளது.

இரஜீவ, தயான் போன்றவர்கள் கொழும்பு மேட்டுக் குடியைச் சேர்ந்தவர்கள், ஆட்சி மையங்கள் மீதான அவர்களது ஈடுபாடு முழுக்க முழுக்க அவர்களது தனிப்பட்ட நலன் சார்ந்தது. ஆனால் அவர்களது எழுத்துகளில் கொழும்பு புத்திசீவிகள் மகிந்த இராஜபக்சவின் நடவடிக்கையில் அதிருப்தி கொண்டுள்ளமை வெளிப்படுகிறது.  இத்தனைக்கும் மத்தியிலும், மகிந்த ஆதரவுநிலையிலிருக்கும் தயானும், எதிர்ப்பு நிலையிலிருக்கும் நிமல்கா பெர்ணான்டோவும் சிங்கள அரசின் (Sinhala state) தவறுகளை, முட்டாள்தனமாக நடந்துகொள்ளும் கோத்தபாய மீது போட்டு அரசினைக் காக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள்.

 சிறிலங்காவின் இனங்களுக்கான நல்லிணக்க முயற்சிகளை கேள்விக்கு உள்ளாக்கிய சம்பவங்களாக அளுத்கம, பேருவள பகுதிகளில் முஸ்லிம்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்களே அடையாளப்படுத்தப் படுகின்றன.   இது அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கையே. ஏனெனில் பொத்தாம் பொதுவில் மதரீதியாக சிறுபான்மைச் சமூகங்கள் பாதிக்கப்படுகின்றன என நிறுவுவதே மேற்குலகத்தின் நோக்கமாக இருக்கிறது. பிரிக்கப்படாத இலங்கைத் தீவினுள் குறைந்தபட்ச அதிகாரப் பகிர்வுடன் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும் என்ற நிலைப்பாட்டிலேயே மேற்குலக சக்திகள் இன்னமும் இருக்கின்றன. இவ்விடயத்தில் மேற்குலகுடன் முழுவதுமாக உடன்பட்டு, காலனித்துவ காலத்து விசுவாசத்துடன் நடந்துகொள்ளும் ஒரே தரப்பு, சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே. மேற்குலகத்தில் தங்கியிருக்க வேண்டிய நிலைக்கு முஸ்லீம் அரசியல் தலைமைகள் தொடர்ச்சியாகத் தள்ளப்பட்டு வந்தாலும், அவர்கள் அரசனை நம்பி புருசனைக் கைவிடுவது போன்று, தமது பதவிகளை பணயம் வைத்து அரசியல் செய்வதற்கு தயாரக இல்லை. ஆனால், மேற்குலகத்தின் நிலைப்பாட்டுடன் முற்றிலுமாக மோதவேண்டிய நிலையில் இருப்பது மகிந்த அரசாங்கத்தின் தலைமையே.

போர்க்குற்ற விசாரணைகள் மட்டுமல்ல சிறிலங்கா அரசாங்கத்தை சனநாயகப்படுத்த முனையும் ஓவ்வொரு நகர்வும் இராஜபக்ச குடும்பத்தின் அதிகாரத்தை குறைத்துவிடும் என்ற அச்சத்தில், மேற்குலகத்தின் நகர்வுகளுடன் மகிந்த குழாம் உடன் பட மறுக்கிறது. மாறாக சிங்கள வாக்காளர்களின் ஏகோபித்த ஆதரவுடன் மேற்குலக சக்திகளை எதிர்கொள்ள முடியும் என அது எதிர்பார்க்கிறது. இது இராஜபக்ச குடும்பத்தின் அதிகாரத்தை தக்க வைக்கும் தற்காப்பு நடவடிக்கையே தவிர வேறொன்றுமில்லை. ஆனால் இதனை, ஏகாதிபத்திய எதிர்ப்பு என சில இடசாரிகள் முட்டாள்த்தனமாக வியாக்கியானம் செயகிறார்கள்.

 பன்னாட்டரங்கில் சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அம்பலப்படுத்திய அண்மைய சம்பவங்களாக தென்னாபிரிக்க துணை அதிபர் சிறில் ரமபோசாவின் இலங்கை பயணத்தினை சிறிலங்கா அரசதரப்பு எதிர்கொண்ட முறை, வடமாகாணசபைக்கான ஆளுனராகவிருக்கும் சந்திரசிறிக்கு பணி நீடிப்புச் செய்யப்பட்டமை, தொண்டு நிறுவனங்கள் மீது கட்டுப்பாடுகள் கொண்டுவரப்போவதான அறிவிப்பினைக் குறிப்பிடமுடியும்.

 ரமபோசாவின் பயணம்

சிறிலங்காவின் நல்லிணக்க முயற்சிகளுக்கு உதவப்போவதாக களத்தில் குதித்த தென்னாபிரிக்க அரசாங்கம். கடந்த ஆண்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் அதன் நேச அமைப்பான உலகத் தமிழர் பேரவையுடனும் பல தடவைகள் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டது. இதன் தொடர்ச்சியாக சிறிலங்கா அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று தென்னாபிரிக்க துணை ஜனாதிபதி சிறில் ரமபோசா இம்மாத ஆரம்பத்தில் இலங்கைத் தீவிற்கு வந்தார். ஆனால் சிங்களத் தீவிரவாதிகளை திருப்திப்படுத்த, உத்தியோகபூர்வமான பேச்சுகளுக்கு வந்த அவரை உல்லாசப்பயணியாக நாட்டுக்கு வருகிறார் என குறிப்பிட வேண்டிய நிலையில் சிறிலங்கா அரசாங்கமிருந்தது. முழு ஆபிரிக்கக் கண்டத்திலும் உள்ள பணக்கார்ர்கள் வரிசையில் இருபத்தொன்பதாவது இடத்திலிருக்கும் மில்லியனர் ரமபோசவிற்கு இவ்விடயம் உவப்பானதாக இருக்கவில்லை என்பதனை அவர் நாட்டை விட்டு வெளியேறும்போது வெளியிட்ட கருத்துகளிலிருந்து அறிய முடிகிறது. அல்லது அவரது வியாபார முதலீட்டு நடவடிக்கைகளுக்கு மகிந்த தரப்பிலிருந்து இணக்கப்பாடு ஏற்படாதிருக்கலாம். ஆனால் நல்லிணக்கம், உண்மையைக் கண்டறிதல் ஆணைக்குழு போன்ற விடயங்களில் சிறிலங்காவிற்கு அக்கறையில்லை என்பதனை வெளியுலகுக்குப் பறைசாற்றுவதாக ரமபோசாவின் பயணம் அமைந்துவிட்டது.

 சந்திரசிறியின் பதவிநீடிப்பு

வடமாகாண சபையின் ஆளுனராக இருக்கும் சந்திரசிறியின் ஐந்தாண்டுப் பதவிக்காலத்தை மேலும் ஐந்தாண்டு காலத்திற்கு நீடித்தமைக்கு எதிராக கொழும்பு தாராண்மை வாதிகளும், கூட்டமைப்பினரும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். அவரது பதவி நீடிக்கப்படாது எனவும், அவரது இடத்திற்கு சிவிலியன் ஒருவரை ஆளுனராக நியமிப்பதாகவும் கடந்த ஜனவரியில் தனக்குக் கொடுத்த வாக்குறுதியை மகிந்த நிறைவேற்றவில்லை என விக்னேஸ்வரன் ஒரு பாட்டம் ஒப்பாரி வைத்திருக்கிறார்.
பதின் மூன்றாம் திருத்தத்தின் மூலம் அமைந்த மாகாணசபைகளின் அதிகாரம் ஆளுனர்களிடமே இருக்கிறது, ஆளுனர்களை ஜனாதிபதியே நியமிக்கிறார், ஆகவே ஒரு கையால் கொடுத்த அதிகாரம் மறுகையால் பெறப்படுகிறது என்று தேர்தலுக்கு முன்னரே வியாக்க்கியானமளித்த விக்கினேஸ்வரன் சிவிலியன் ஆளுனரிடமிருந்து எதனைப் புதிதாக எதிர்பார்க்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால் இவ்வாறான சிறு விடயங்களில்கூட தமிழ் அரசியல்த் தலைமையுடன் மகிந்த ஒத்துழைக்க மறுக்கிறார் என்பதுதான் இங்கு வெளிப்பட்டுள்ள செய்தி.
அரசு சாரா நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகள்

சிறிலங்காவில் செயற்படும் அரசுசாரா நிறுவனங்கள் தேசியப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் அமைந்துள்ள தேசிய செயலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டிய அவசியம் உள்ளது. அண்மையில் அவ்வமைச்சு வெளியிட்டிருக்கும் அறிவுறுத்தலின்படி அரசுசாரா நிறுவனங்கள், ஊடக அறிக்கைகளை வெளியிடுவது, ஊடக மாநாடுகள் நடாத்துவது போன்ற விடயங்களில் புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அரசுசாரா நிறுவனங்கள் பெரும்பாலும் மேற்குலக நிதியுதவியில் இயங்குவதனால், இந்நிறுவனங்கள் மூலமாக தகவல்கள் கசிந்துவிடும் என சிறிலங்கா அச்சப்படுகிறது.   ஐ.நா. மனிவுரிமை ஆணையாளரின் விசாரணைக்குழு அதன் நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு முன்னரே சிறிலங்கா அதனையிட்டு அச்சப்பட ஆரம்பித்துள்மையை இந்நகர்வு வெளிக்காட்டுகிறது.
மேற்படி விடயங்களை வைத்துப் பார்க்கையில், மேற்குலக நாடுகளால் தனிமைப்படுத்தும் நிலைக்கு சென்றுகொண்டிருக்கும் சிறிலங்கா அரசாங்கம் தன்னை தற்காலிகமாகவேனும் காத்துக்கொள்வதற்கு சிங்கள பௌத்த தேசியவாதத்தை மட்டுமே நம்பியிருப்பது தெரிகிறது.