சிறிலங்காவின் நிகழ்ச்சித்திட்டத்தை தீர்மானிக்கும் மகிந்த

79

மார்ச் 17ம் திகதி கொழும்பு ஹைட் பார்க் திடலில் நடைபெற்ற சிறிலங்காவின் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தின் காணொலிப் பதிவினை பார்க்கக் கிடைத்தது. மகிந்த இராஜபக்ச உட்பட நாற்பத்தாறு சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தினைக் காணபல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்டிருந்தனர்.இக்கூட்டத்தில் இடம்பெற்ற அறிவிப்புகளில்அடிக்கடி `பயங்கரவாதத்தைத்’ தோற்கடித்ததலைவர் என மகிந்த விளிக்கப்பட்டதனை அவதானிக்க முடிந்தது. அங்கு உரையாற்றிய விமல்வீரவன்ச, கடந்தவருடம் ஜனவரி 8ம் திகதி தாம்இழந்த ஆட்சியை, விவசாயிகள், உழைக்கும் மக்கள் என அனைவரையும் இணைத்து வீதிக்கு இறங்கிப் போராடி மீளப் பெற்றுக்கொள்ளுவோம் எனச் சூழுரைத்தார். மகிந்த தனதுரையில், “உங்களால் ஆட்சி நடத்த முடியாவிட்டால் என்னிடம்தந்து விடுங்கள்” என்றார். இக்கூட்டத்தில் தமதுகட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டால் அவர்கள்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என`தேசிய ஒற்றுமை’ அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைஎச்சரிக்கை விடுத்திருந்தது. இதனைப் பொருட்படுத்தாது மகிந்தவிற்கு ஆதரவான கட்சியின் மூத்தஉறுப்பினர்கள் சிலர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். இக்கூட்டமும் அது தொடர்பில் வெளிவரும் செய்திகளும், மகிந்த இராஜபக்சவின்செல்வாக்கு அதிகரித்து வருவதான தோற்றப்பாட்டினை ஏற்படுத்தினாலும், இவ்விடயங்கள் ரணில்- மைத்திரி அரசாங்கத்திற்கு ஒரு வாய்ப்பான அரசியற் சூழலைத் தோற்றுவித்திருக்கிறது.

1995ம் ஆண்டின் இறுதியில் சிறிலங்கா படைகள் யாழ்ப்பாணத்தை முழுமையாக கைப்பற்றிக்கொள்ள, வன்னிக்கு நகர்ந்த விடுதலைப்புலிகள், முதலில் முல்லைத் தீவு முகாமைத் தாக்கியழித்து முல்லைத்தீவு பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர், சிலமாதங்களின் பின்னர் கிளிநொச்சி முகாமைத் தாக்கியளித்து அப்பிரதேசத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். அக்காலத்தில் லண்டனிலிருந்து வெளிவந்த ‘Hot Spring’’ சஞ்சிகையில் அதன் ஆசிரியர் திரு. சிவநாயகம் ‘He Sets the Agenda’ என்ற தலைப்பில் ஆசிரியர் தலையங்கம் ஒன்றை வரைந்திருந்தார். தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களே இலங்கைத் தீவின் அரசியல் நிகழ்ச்சித்திட்டத்தைத் தீர்மானிப்பவராக இருக்கிறார் என்ற சாரப்படி அப்போதைய நடைமுறை யதார்த்தத்தை விளக்குவதாக அக்கட்டுரை அமைந்திருந்தது. ஆனால் 2009 மே மாதத்திற்கு பின்னரான காலத்தில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.இலங்கைத் தீவின் அரசியலை நிர்ணயிப்பது ஒருபுறமிருக்க, அரசியலில் செல்வாக்குச் செலுத்துமளவிற்கு ஒருதரப்பாக தமிழ் மக்கள் இன்று இல்லை. இதனை மறுதலித்து, ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவதில் தமிழ் மக்களின் வாக்குகளும் இருந்தனவே எனச்சிலர் வாதிடலாம். அவர்களிடம் நாம் கேட்கிற கேள்வி இதுதான், சிறிசேனவிற்கு வாக்காளிக்காது விட்டால்,இன்னொருவருக்கு வாக்களித்து வெற்றியை தீர்மானிக்கக் கூடிய வகையில் வேறு ஒரு தெரிவு அவர்களிடமிருந்ததா?

இலங்கை அரசியலில் தீர்மானிக்கும் சக்தியாக இல்லாவிட்டாலும், அங்கு நடைபெறும் அரசியல் காய்நகர்த்தல்கள் பற்றிய விவாதமாவது தமிழ் அரசியற்பரப்பில் இடம்பெற்று வருகிறதா என்றால் அதுவும் இல்லை என்றே கூறவேண்டும். இரண்டு முதன்மையான விடயங்களைப்பார்ப்போம். ஒன்று போர்க்குற்ற விசாரணை மற்றும்பொறுப்புகூறல், மற்றையது அரசியற்தீர்வு. பொறுப்புக்கூறல் விடயத்தில் தமிழ்த்தரப்பில் ஒரு பகுதியினர் இன்னமும் சர்வதேச விசாரணை நடைபெறும் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள், மற்றைய தரப்பினர்கலப்புப் பொறிமுறையிலான விசாரணை நடைபெறுவதனை மேற்குலகம் உறுதிப்படுத்தும் என எதிர்பார்க்கிறார்கள். ஐ.நா. விடம் நீதிகேட்டுப் பேரணிகளும், ஈருளிப் பயணங்களும் தொடருகின்றன. அதுபோன்று அரசியற் தீர்வு விடயத்தில், வடக்குக் கிழக்கு இணைந்த சமஸ்டித்தீர்வு இவ்வருட இறுதிக்குள் கிட்டும் என்ற எதிர்பார்ப்பு பலரிடமிருக்கிறது. ஒரு வேளை வடக்கு கிழக்கு இணைந்த அலகு முழுமையான சமஸ்டி முறையிலானதாக அமையவிட்டாலும், அதிகபட்சமான சுயாட்சி முறையாவது கிட்டும் என்பதே இவர்களது நம்பிக்கை.

கொழும்பின் அரசியல் நிலைமையும், அரசியற்தீர்வு, பொறுப்புக்கூறல் தொடர்பில் அங்கு நடைபெறும் அரசியல் விவாதங்களும் தமிழ்மக்களில் பெரும்பான்மையினரின் எதிர்பார்ப்புக்கு மாறானதாகவே அமைந்திருக்கிறன. அரசியற் தீர்வைக்காட்டி பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை இழுத்தடிக்கவும், நல்லிணக்கத்தை காட்டி அரசியற் தீர்வை தட்டிக்கழிக்கும் நடவடிக்கைகளுமே அங்குநடைபெறுகின்றன. இந்த முயற்சிகள் மேற்குலகத்தரப்புகளின் நெறிப்படுத்தலில் நடைபெற்றுவருகின்றன எனக் கூறுபவர்களும் நம்மிடையே உண்டு. அக்கருத்தினை நாம் புறந்தள்ளிவிட முடியாது. இதில் உள்ள முரண்நகை என்னவெனில் கொழும்பு அரசாங்கத்தின் இந்த முயற்சிகளுக்கு முண்டுகொடுத்து வரும் ஒரு முக்கிய தரப்பாக மகிந்த இராஜபக்சவும், அவரது ஆதரவாளர்களும் மாறியிருக்கிறார்கள்.

இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் என்ற செயற்திட்டத்தை முன்னிலைப்படுத்தி, போர்க்குற்ற விசாரணைகளை பின்தள்ளவேண்டும் என்ற கருத்து கொழும்பு அரசாங்கத் தரப்புகளில் வலுப்பெற்று வருகிறது. இதுதொடர்பாக ‘opendemocracy.org’ இணைய தளத்தில் ‘The politics of punishing war crimes in Sri Lanka’ என்ற தலைப்பில் சந்திரிகா தலைமையிலான `தேசிய ஐக்கியத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான’ பணியகத்தினைச் சேர்ந்த இராமனுஜம் (இராம்) மாணிக்கலிங்கம் என்பவர் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். பொறுப்புக் கூறல் விடயத்தைகையிலெடுத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டால், நாட்டைக்காத்த தேசியவீரர்கள் தண்டிக்கப்பட போகிறார்கள் என அச்சமுறும் சிங்கள மக்கள் பெருளவில் மகிந்த இராஜபக்சவின் பக்கம் சாய்ந்துவிடும் அபாயம் இருப்பதால், அதனை விடுத்து அரசியற்தீர்வு, நல்லிணக்கம் ஆகியவிடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என மாணிக்கலிங்கம் இக்கட்டுரையில் வாதிடுகிறார்.

சிறிலங்கா அரசின் வெளியுறவுத்துறை அதிகாரியாகக் கடமையாற்றிய மாணிக்கலிங்கம் என்பவரது மகனான இராமானுஜம் (இராம்) அமெரிக்காவின் Massachusetts பல்கலைக்கழகத்தில் பௌதிகத்துறை மாணவராக இருந்த காலத்தில் `விகல்ப கண்டாயம’ (மாற்று இயக்கம்) என்ற சிங்கள் அமைப்பில் இணைந்திருந்தார். ஜே.வி.பியிலிருந்து பிரிந்து சென்ற இக்குழுவில் தயான் ஜயதிலக, திசாராணி குணசேகர, புல்சரா நயனாலியனகே போன்றோரும் இருந்தனர். ஜே.வி.பிதலைவர்களுடன் ஒப்பிடுகையில் மேற்குறித்தநபர்கள் மேட்டுக்குடி (elitist) பின்னணி கொண்டவர்கள் என்பது கவனிக்கத்தக்கது. எண்பதுகளின்நடுப்பகுதியில் பத்மநாபாவின் ஈபிஆர்எல்எப்அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தார்கள் எனக்குற்றஞ்சாட்டப்பட்டு இராம் உட்பட இவர்களில் சிலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். பின்னர் சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் அவரது ஆலோசகராகப் பணியாற்றிய இராம், தற்போது மைத்திரிபாலவின் ஆட்சியில் மீள சந்திரிகாவுடன் இணைந்து செயற்படுகிறார். இதனைத்தவிர, அம்ஸ்ரடாம் பல்கலைக்கழகத்தில் அரசியற்துறை விரிவுரையாளராகவும்,Dialogue Advisory Group என்ற அமைப்பிலும் பணியாற்றுக்கிறார். இந்த அமைப்பின் சார்பில் தமிழ் அலைந்துழல்வு சமூகப் பிரதிநிதிகளையும் இவர் சந்தித்து வருவதாகவும் இவரது முயற்சிக்கு நோர்வே அரசாங்கம் நிதியுதவி செய்து வருவதாகவும் தெரியவருகிறது. ராம் மாணிக்கலிங்கத்திற்கும், தமிழ்ப் பிரதிநிதிகள் சிலருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று கடந்த திங்கள் (மார்ச்15)ஒஸ்லோவில் நடைபெற்றதாக அறியக் கிடைக்கிறது.

mediadorresss--478x270
இராமானுஜம்

இராம் எழுதிய மேற்படி கட்டுரைக்கு எதிர்வினையாக ‘Accountability and a poltical solution’ என்றதலைப்பிட்டு தமிழரசுக்கட்சியின் ஆலோசகர்களில் ஒருவரான நிரன் அங்கிற்றல் என்பவர் எழுதிய கட்டுரையினை ‘groundviews.org’ இணையதளம் பிரசுரித்துள்ளது. `ஆட்சிமாற்றம் இடம்பெற்று பதினான்கு மாதங்கள் கடந்துவிட்டுள்ள நிலைமையிலே, நிலைமாற்றுக்கால நீதிக்கான சாரளங்கள்மூடப்பட ஆரம்பித்துவிட்டதுடன், நீதிப்பொறிமுறைகளை நிலைநாட்டுவதிலே உள்ள அரசியற் கஷ்டங்களும் தொடர்ச்சியாக அதிகரித்தவண்ணமே உள்ளன. இன்றிலிருந்து ஒருவருட காலத்துக்குள் பொறுப்புக்கூறல் விடயத்திலோ அல்லது சட்டச்சீர்திருத்தத்திலோ இலங்கை எவ்வித முன்னேற்றத்தையும் அடைந்திராவிட்டால் தமிழ் அரசியலின் தொனியும் தோரணையும் அதிகரித்த விரக்தியாகவும், கூர்மையான பேச்சுக்களாயும் நகர்ந்திடத்தொடங்கும். தமிழ் மிதவாதிகள்தள்ளப்பட்டுப்போவார்களேயானால், தமிழ்த்தீவிரத் தேசியத்தினர் தமது சிங்கள சகபாடிகளுக்கு இனப்பூசலை விளாசி எரியப்பண்ண வேண்டிய அளவு எண்ணையை வழங்குவதுடன், சிங்களமிதவாதிகளின் பிடியை முடிவுக்குக் கொண்டுவரவும் வழிவகுக்கும்.’ இவ்வாறு சிறிலங்கா அரசாங்கம் மீண்டும் ஏமாற்றினால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு ஏற்படப்பாகும் பாதிப்புகள் பற்றியே அதன் ஆலோசகர் கவலைப்படுகிறார்.

இத்தகைய பின்னணியில், பாராளுமன்றத்தை அரசியலமைப்பு அவையாக உருவாக்கும் பிரேரணை மார்ச் 12ம் திகதி நிறைவேற்றப்பட்டுள்ளது. `தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வைக்கண்டடைதல் அரசியலமைப்பு அவையின் நோக்கங்களில் ஒன்று என பிரேரணையின் முன்னையவரை பின் முகவுரைப் பந்தியில் குறிப்பிட்ட வாசகம்நீக்கப்பட வேண்டும்’ என்ற மகிந்த இராஜபக்சவைஆதரிக்கும் பொது எதிரணியின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு அதனை நீக்கியபின்னரே இதுநடந்தேறியிருக்கிறது

படஉதவி -Ceylon Today