சிறிலங்கா அரசின் இரட்டை முகம்

1872

’66ஆவது சுதந்திரதின விழாவைக் கொண்டாடும் இன்றைய நாளில், எமது மக்களின் சுதந்திரத்தையும் உரிமைகளையும் பாதுகாப்பதற்கான எமது அர்ப்பணிப்பை மீள உறுதிப்படுத்தி, மீண்டும் மேலெழுந்துவரும் காலனித்துவ சக்திகளின் அதிகார ஆணைகளில் இருந்து விடுபட்டு, எமது எதிர்காலத்தை நாம் தீர்மானிப்போம்.’ இவைசிறிலங்காவின் சுதந்திரதின நிகழ்ச்சியில் மகிந்தஇராஜபக்ச ஆற்றிய உரையில் தெரிவிக்கப்பட்டவை. இவ்வுரையின் இன்னொரிடத்தில் புவெளிநாட்டிலிருந்து வருகின்றவர்கள் மனித உரிமை,ஜனநாயகம் ஆகியவற்றை முன்னிறுத்திக்கொண்டே நாட்டுக்குள் உள் நுழைகின்றனர்.பீபீ எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக, இலங்த் தீவிற்கு பயணம்செய்திருந்த அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான உதவிச் செயலாளர் நிஷா பிஸ்வால், சிறிலங்காவின் பாதுகாப்புச்செயலர் கோத்தாபாயவை சந்தித்திருந்தார். அச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட கோத்தாபாய, புபிஸ்வால் அவரது அறியாமையினால் சிறிலங்காவின் மனிதவுரிமைகள் பற்றி குற்றம்சாட்டுகிறார். அவருக்கு கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இங்குள்ள நிலமையை விளக்கியிருக்க வேண்டும்பீபீ எனத் தெரிவித்திருந்தார். முன்னர் ரொபர்ட் ஒ பிளேக் வகித்த இப்பதவிக்கு கடந்தவருடம் நியமிக்கப்பட்ட நிஷா பிஸ்வால்க்கும் கோத்தபாயவிற்கும் இடையிலான சந்திப்பு சுமூகமானதாக அமையவில்லை என கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேற்கு நாடுகள் மீது கண்டனம் தெரிவிப்பதும், அவர்கள் தமது நாட்டின் ஆட்புல இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள் எனக்குற்றம் சாட்டுவதும், “நீங்கள் உதவாவிட்டால் நாங்கள் சீனாவிடம் போவோம்” என சிறிலங்கா அரசியல் தலைவர்கள் சவால் விடுவதும், புதிதான ஒரு விடயமில்லை. பின் முள்ளிவாய்க்கால் காலத்தில் இவ்வாறு நிறையவே பேசப்படுவதனைகொழும்பு ஊடகங்கள், குறிப்பாக அரச ஆதரவு ஊடகங்கள் வெளிப்படுத்தி வருகின்றன.

உள்ளுரில் தமிழர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப்போராட்டத்தை (அவர்களின் மொழியில் ‘பயங்கரவாதம்’) முறியடித்த தமது அரசாங்கத்திற்கு மேற்கத்தைய நாடுகளிலிருந்து அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளமுடியும் என சிறிலங்கா அரசாங்கம் நம்புகிறது. இவ்விடத்தில், ‘பூதம் வரப்போகிறது’ எனக் குழந்தைகளைப் பயமூட்டுவதுபோல், வெளிநாடுகள் வந்து ஆக்கிரமிக்கப் போகிறார்கள் என சிங்கள மக்களைப்பயமுறுத்த முடியுமா எனச் சிலர் ஆச்சரியப்படலாம். ஆனால் சிங்களத் தேசியவாதிகளின் பொதுப்புத்தியில் வெளிச்சக்திகள் தொடர்பானஅச்சம் உறைந்திருப்பது, சிங்கள ஆட்சியாளர்களுக்கு நன்கு வசதியாக அமைந்துள்ளது என்பதனை நடைமுறை உதாரணங்கள் மூலம் விளங்கிக் கொள்ளமுடிகிறது.

சில மாதங்களுக்கு முன்னர் சிங்களக் கல்வியாளர் ஒருவரது நினைவுதினக் கூட்டத்தில் உரையாற்றிய சிங்கள தேசியவாதியும், பிரான்சுக்கான சிறிலங்காத் தூதுவராகக் கடமையாற்றியவருமான தயான் ஜயதிலக சிறிலங்காவிற்கு வட திசையிலிருந்து அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக்கூறி அவ்வாறான நான்கு தரப்பினரைப் பட்டியலிட்டார்.

ஒன்று இலங்கைத் தீவின் வடக்கில் உள்ளதமிழ்த் தேசிய சக்திகள், இரண்டாவது இலங்கைக்கு வடக்கில் இருக்கும் தமிழ்நாட்டில் உள்ள ஈழ ஆதரவுச் சக்திகள், குறிப்பாக மாணவர்கள், மூன்றாவது இந்தியாவின் வடக்கில் உள்ள புதுடில்லி ஆராய்ச்சி மையம், நான்காவது பூகோளத்தின் வடக்கு (Global North) என அழைக்கப்படும் வடஅமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய நாடுகள் என தனது கருத்தினை வலியுறுத்தி, எவ்விதமான அச்சுறுத்தல்கள் இத்தரப்புகளிலிருந்து எதிர்பார்க்க முடியும் எனவும் விபரித்திருந்தார்.

சிறிலங்கா அரசாங்கம் மனிதவுரிமைகளை மதிப்பதில்லை, ஜனநாயகத்தைப் பேணுவதில்லை, அங்கு நல்லாட்சி நடைபெறவில்லை என்பவற்றைக் காரணங்காட்டி தமது நாட்டினை இந்நாடுகள் ஆக்கிரமிக்க முனைகின்றன. நாட்டை பிரிக்க முனைகின்றன என எதுவித ஆதாரமுமற்ற குற்றச்சாட்டுகளை சிறிலங்கா அரச தலைவர்களும், அவர்களது ஆதரவாளர்களும் முன்வைக்கும் போது அவற்றை கேள்வியின்றி ஏற்றுக் கொள்ளும் நிலையில் சிங்கள அடித்தட்டு, மற்றும் மத்தியதர வர்க்க மக்கள் இருக்கிறார்கள். கொழும்பு மேட்டுக்குடி மக்களிடம் இவ்விடயத்தில் தெளிவிருப்பினும், ஏனையவர்களுடன் முரண்பட்டு தம்மை தேசாபிமானம் குறைந்தவர்களாகக் காட்டுவதற்கு அவர்கள் தயாராக இல்லை.

பெரிதாகச் சிந்திக்காவிடினும், இராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்களே இன்னமும் அமெரிக்க குடியுரிமையை தக்க வைத்துக்கொண்டு எவ்வாறு அமெரிக்க எதிர்ப்புச் செய்கிறார்கள் என சிங்கள வாக்காளர்கள் சிந்திப்பதாகத் தெரியவில்லை. மகிந்த அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் ‘இடதுசாரிக்’ கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு, மகிந்த அரசாங்கம் கடைப்பிடிக்கும் திறந்த பொருளாதார முதலாளித்துவ அணுகுமுறைகள் பற்றி எதுவித கரிசனையுமில்லை. மாறாக, மிகைப்படுத்திய வெளித்தரப்பு அழுத்தங்கள் பற்றிய பரப்புரைகளுக்கு இவர்கள் துணை போகிறார்கள்.

உள்நாட்டில் மேற்கு நாடுகளுக்கு எதிர்ப்பைக்காட்டி, தேசப்பற்றாளர்களாக தங்களைக் காண்பித்து வரும் சிறிலங்கா அரசாங்கம் மறுபுறத்தில், வெளிநாட்டு வர்த்தக முதலீட்டாளர்களுக்கு செங்கம்பளம் விரித்து அழைப்பு விடுத்து வருகிறது. சிறிலங்காவின் மனிதவுரிமை மீறல்கள், போர்குற்றங்கள் போன்றவை இன்று முழு உலகுக்கும்அம்பலமான நிலையில் அங்கு நல்லாட்சி நடைபெறுவதாக யாரும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அதனால் வர்த்தக முதலீடுகளுக்கான வாய்ப்புகளைக் காட்டி தனது தோற்த்தை உயர்த்திக்காட்டலாம் என சிறிலங்கா அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கம் தனது தமது பரப்புரைகளுக்கு உதவ, இரண்டு அமெரிக்க தொடர்பாடல்நிறுவனங்களின் சேவையினை பெற்றுக்கொண்டுள்ளது. இவற்றுள் ஒன்றான Thompson Advisory Group நிறுவனத்திற்கு மாதாந்தம் 66.600 அமெரிக்க டொலர்கள் (8,337,600 ரூபாக்கள்) இலங்கை மத்திய வங்கி செலுத்தி வருவதாகத் தெரிய வருகிறது. மற்றய நிறுவனமான Majority Group அமெரிக்க அரசியல் தலைவர்களை lobby செய்யும்நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது.

Thompson Advisory Group நிறுவனத்தின் ஏற்பாட்டில் தமது பரப்புரை முயற்சிகளுக்காக சிறிலங்கா ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, சிறிலங்கா மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவார்ட் கப்பரால் ஆகியோர் கடந்த மாதம் அமெரிக்காவுக்கு சென்றிருந்தனர். Washington DC இல் அமெரிக்க மத்திய அரசின் நிர்வாகச் செயலகங்கள் அமைந்திருக்கும் Capital Hill பகுதியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் மேற்படி இருவரும் கலந்து கொண்டு சிறிலங்காவில் காணப்படும் வர்த்தக முதலீட்டு வாய்ப்புகள் பற்றி உரையாற்றியிருந்தனர். மேற்படி கூட்டத்திற்கான அழைப்பிதழில் சர்வதேச கடற்போக்குவரத்தில் சிறிலங்காவின் கேந்திர நிலையை விளக்கும் வரைபடம் ஒன்றும் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

சிறிலங்கா ‘பயங்கரவாதப்’ பிரச்சனைகளிலிருந்து மீண்டு அபிவிருத்தி பாதையில் முன்னேறிச் செல்வதாகவும். அங்கு சுற்றுலாத்துறை, மருத்துவம், கல்வி உட்பட பலதுறைகளிலும தனியார் முதலிட்டு இலாபம் ஈட்டிக்ககொள்ளலாம் என்றுசிறிலங்கா அரசாங்கத்திற்கு வெள்ளையடிக்கும் பரப்புரைக்காக 28 நிமிட காணொளியினை Thompson Advisory Group உருவாக்கியிருக்கிறது. பெப்பிரவரி 2ம் திகதி அமெரிக்க NBC தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இந்த விளம்பரவிவரணத்திற்கு CNN தொலைக்காட்சியில் பணியாற்றிய Gene Randall குரல் வழங்கியிருக்கிறார்.முன்னணி தொலைக்காட்சியில் விளம்பரமாக ஒளிபரப்பப்பட்டிருக்கிறது. என்பதிலிருந்து இத்தகைய பரப்புரைகளுக்கு பெருந்தொகை பணம் செலவழிக்கப்படுவது தெரிகிறது.

மனிதவுரிமை, ஜனநாயகம், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் என்பவற்றை வலியுறுத்திவரும் மேற்குலகத்துடன், அவர்களது மூலோபாயநலனுக்கு இடமளித்து அவற்றுடன் ஒத்துழைத்து பொறுப்புக் கூறலிலிருந்து தப்பிக் கொள்ளும் முயற்சியிலேயே சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டுவருகிறது. ஆனால் ஆட்சிமாற்றம் ஏற்படுத்தும்விடயத்தில் இன்னமும் குறியாக இருக்கும் மேற்குலகம் மனிதவுரிமை விடயத்தை கைவிடப்போவதில்லை. இதுவே மேற்குலகத்திற்கு சிறிலங்காவிற்கும் இடையிலான இழுபறியாக அமைந்துள்ளது. இந்த முரண்பாடு தீர்க்கப்படுமாயின் தமிழர் பிரச்சனை உடப்பில் போடப்பட்டுவிடும் அபாயம் உள்ளதனை தமிழ் மக்கள் விளங்கிக் கொள்வார்கள் என எதிர்பார்ப்போமாக.