சீனக் கடலில் உருவாகும் ஈழ மக்களுக்கான ஆபத்து

1455

தற்போது உலகத்திலேயே பெரும் போர் உருவாகும் ஆபத்து உள்ள இடங்களாக தென் சீனக் கடலும் கிழக்குச் சீனக் கடலும் இருக்கின்றன. பெரும் ஆதிக்கப் போட்டிக்கான எல்லா வியூகங்களும் அங்கு வகுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உலகிலேயே பெரும் படைபலப் போட்டியும் படைவலுக் குவிப்பும் இப்போது ஆசியாவிலேயே நடக்கின்றது.

ஈழ மக்களைப் பொறுத்த வரை தம்மைப்பாதிக்கக் கூடிய உலக அரசியல் என்றவுடன்திருக்கோணமலையைத்தான் பெரும்பாலானவர்கள் கருத்தில் கொள்கின்றார்கள். ஆனால்தொழில்நுட்ப வளர்ச்சியும் மிக நீண்ட காலம்தரையில் தரிக்காமல் கடலில் பயணிக்கக்கூடிய அணுவலுவில் இயங்கும் கடற்கலன்களின் உற்பத்தியும் திருகோணமலையின் முக்கியத்துவத்தைக் குறைத்துக் கொண்டிருக்கின்றது. உலக வர்த்தகத்தின் மூன்றி இரண்டு பகுதி இந்து மாக்கடலினூடாக நடக்கின்றது. அதைக் கட்டுப்படுத்தக் கூடிய சிறந்த இடமாக இலங்கையை அண்டியுள்ள கடற்பரப்பிலும் பார்க்க மத்திய கிழக்கில் உள்ள ஹோமஸ் நீரிணையும் மலேசியாவை அண்டியுள்ள மலாக்காநீரிணையும் இருக்கின்றன. இலங்கையை அண்டியுள்ள கடற்பரப்பு மிகப் பரந்தது. அங்குவைத்து ஒரு கடற்போக்குவரத்தைத் தடுப்பது கடினம். ஆனால் மிகக் குறுகிய நீர் வழியான ஹோமஸ் நீரிணையிலும் மலாக்கா நீரிணையிலும் வைத்து தடுப்பது இலகு. இதனால் அமெரிக்கா பாஹ்ரேய்னில் தளம் அமைத்துதனது 5வது கடற்படைப் பிரிவை வைத்துள்ளது.

இப்போது தென் சீனக்கடலில் 90விழுக்காடு கடற்பரப்பை சீனா தன்னுடையவை என்று அடம்பிடிக்கிறது. தென் சீனக் கடலில் உள்ள தீவுகளிற்கு சீனா, ஜப்பான், பிலிப்பைன்ஸ். புரூணே,மலேசியா, வியட்னாம், கம்போடியா ஆகிய நாடுகள் உரிமை கொண்டாடுகின்றன. அத்தீவுகளில் உள்ள மீன்வளம், கனிம வளம்மட்டும் இந்த உரிமைப்பிரச்சனையைக் கொண்டு வரவில்லை. எண்ணெய் வளம் இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு உரிமை கொண்டாடுபவர்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. தென் சீனக்கடலில் 213 பில்லியன் பீப்பாய் எண்ணெய் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எரிவாயு 900 ரில்லியன் கன அடி இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 1974இலும் 1988இலுன் சீனாவும் வியட்னாமும் ஸ்பிரட்லி தீவுகளுக்காக மோதிக் கொண்டன.பிலிப்பைன்ஸ் வியட்னாமுடனும் மலேசியாவுடனும் மோதக் கூடிய நிலைமைகளும் ஏற்பட்டிருந்தன.

தென் சீனக் கடலானது பசிபிக் பெருங்கடலுக்கும் இந்துப் பெருங்கடலுக்கும் இடையில் இருக்கும் 3.6 மில்லியன் சதுர கிலோமீட்டர் கடற்பரப்பாகும். இது வடக்குத் தெற்காக 1800 கிலோ மீட்டர் நீளத்தையும் கிழக்கு மேற்காக 900 கிலோ மீற்றர் நீளத்தையும் கொண்டது. தென் சீனக் கடலில் பல குட்டித் தீவுகள் உள்ளன. இவற்றில் பல தீவுகள் கடல் பெருக்கெடுக்கும் போது முற்றாக நீரில் மூழ்கிவிடும்.

கிழக்குச் சீனக் கடலில் உள்ள தீவுகள் யாருக்கு சொந்தம் என்பதில் சீனாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான முறுகல் நாளுக்குநாள் மோசமடைந்து கொண்டே போகின்றது. சீனாவிற்கு எதிராக அமெரிக்காவும் களமிறங்கிவிட்டது என்பதை நவம்பர் 24-ம் திகதியில் இருந்து நடப்பவை உறுதி செய்கின்றன. கிழக்குச் சீனக் கடல் வான் பரப்பில் பெரும் பகுதியை சீனா தனது வான் பாதுகாப்பிற்கு உட்பட்ட வலயம் என 24-ம் திகதி ஞாயிற்றுக் கிழமைஅறிவித்தது. இந்த வான் பரப்பு சீனாவும்ஜப்பானும் தமது எனச் சொந்தம் கொண்டாடும் சென்காகு அல்லது டயோயு தீவுக் கூட்டங்களையும் உள்ளடக்கியது என்பதால் உலக அரங்கில் ஒரு பெரும் அதிர்வலை உருவானது. இதற்குப் பதிலடி கொடுக்கும் முகமாகநவம்பர் 26-ம் திகதி முற்பகல் 11-0 0இல் இருந்து பிற்பகல் 1.22 வரை அமெரிக்கா தனது இரு பி-52 போர் விமானங்களை சீனா அறிவித்த வான் பாதுகாப்பு வலயத்திற்குள் பறக்க விட்டது.இது சீனா தனது வான் பாது காப்பு வலயம் என அறிவிக்க முன்னர் ஏற்பாடு செய்யப்பட்ட பறப்பு என்கின்றது அமெரிக்கா. அமெரிக்க விமானங்கள்மேற்குப் பசுபிக் கடலில் உள்ள குவாம் கடற்படைத் தளத்தில் இருந்து கிழக்குச் சீனக் கடலில் தமது பறப்புக்களை மேற் கொண்டன. இப்பறப்புக்கள் பற்றி அமெரிக்கா சீனாவிற்கு எந்த முன்னறிவிப்பையும் செய்யவில்லை. சீனா அறிவித்த வலயம் சீனத் தரையில் இருந்து 500 மைல்கள் வரை நீள்கின்றது.

சீனா ஒக்டோபர் மாதம் தனது நீர்மூழ்கிக்கப்பல்களின் பலத்தை உலகிற்குக் காட்டியது. அதைத் தொடர்ந்து தனது சந்திரனில் தளம் அமைக்கும் திட்டத்தையும் உலகிற்குப் பறை சாற்றியது. இந்த இரு நிகழ்வுகளிற்கும் இடையில் சீனா தனது வான் பாதுகாப்பு வலயப் பிரகடனத்தைத் திட்டமிட்டுச் செய்தது.

ஜப்பானிற்கு உதவ வேண்டிய கடப்பாட்டில் அமெரிக்கா

இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தோற்கடிக்கப்பட்ட பின்னர் ஜப்பான் ஒரு தாக்குதல் படையை தன்னிடம் வைத்திருக்க முடியாது என்றும் அது ஒரு பாதுகாப்புப்படையை மட்டும் வைத்திருக்கலாம் எனவும் ஜ்ப்பானின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா உத்தரவாதம் என்றும் ஜப்பானில் அமெரிக்கப் படைகள் தளம் அமைத்துத் தங்கியிருப்பதற்கும் ஜப்பானும் அமெரிக்காவும் ஒத்துக் கொண்டன. இந்த ஒப்பந்தம் 1952இல் கைச்சாத்திடப்பட்டு பின்னர் 1960இல் திருத்தம் செய்யப்பட்டது. அதன் படி இரு நாடுகளும் ஒன்றிற்கு ஒன்று படைத்துறை ஆபத்து வரும்போது இரு நாடுகளும் ஒத்துழைக்கும் ஜப்பானிய நிர்வாகத்திற்கு உள்பட்ட பிராந்தியங்கள் ஆபத்திற்கு உள்ளாகும் போது அமெரிக்கா ஜப்பானைப் பாது காக்கும். இதனால் சென்காகு தீவைப் பாதுகாகக வேண்டிய பொறுப்பு அமெரிக்காவிர்கு உண்டு. பிரித்தானியாவும் ஜப்பானும் 2013-ம் ஆன்டு பாதுகாப்பு உபகரண ஒப்பந்த்ம் செய்துள்ளன. இன்று (02/12/2013) ஜப்பானியப் பாதுகாப்புத் துறைஅமைச்சர் பிரித்தானியக் கடற்படைத் தளபதியை சந்தித்து ஜப்பனின் மீது ஒருதலைப்பட்சமான தாக்குதல் நடக்கும் போதுபிரிதானியா ஜப்பானைப் பாதுகாக்க களத்தில்இறங்கும் என உறுதியளிட்துள்ள அதே வேளைபிரித்தானியப் பிரதமர் சீனாவில் வர்த்தக ஒத்துழைப்பு தொடர்பாக உடன்பாட்டை எட்டியுள்ளார்.

சீனாவும் தனது ஒரு தலைப்பட்சமாக நிர்ணயித்த வான் பாதுகாப்பு வலயத்திற்கு தனது SU-30 மற்றும் J-11 போர் விமானங்களையும் KJ-2000 வான் சார் கதுவி விமானங்களையும் அனுப்பியுள்ளது. சீனா 24-11-2013 கிழக்குச் சீனக் கடலில் பத்து இலட்சம் சதுர மைல் வான்பரப்பை தனது பிரதேசம் எனப் பிரகடனப் படுத்தி அதற்குள் பறக்கும் விமானங்கள் தனது அனுமதியைப் பெறவேண்டும் என்றும் அல்லதுஅவற்றின் மீது அவசர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தது.

நீர்மூழ்கிகளை வேட்டையாடும் விமானங்களை அனுப்பிய் அமெரிக்கா

நவம்பர் 24-ம் திகதி கிழக்குச் சீனக் கடலில் உருவான பதட்டத்தைத் தொடர்ந்து செய்யப்படும் முதல் படை நகர்வாக அமெரிக்கா தனது நீர்மூழ்கிகளை வேட்டையாடும் விமானங்களை ஜப்பானிற்கு அனுப்பியுள்ளது.-8 எனப்படும் இந்த விமானங்கள் வழசிநனழநள எனப்படும் ஏவுகணைகளையும் புது ரக கதுவிகளையும் (ராடார்) கொண்டுள்ளன.

போர் மூளுமா?

ஒரு போர் மூளும் ஆபத்து இருந்தால் உலகச் சந்தையில் தங்கத்தின் விலை சடுதியாகஅதிகரிக்கும். பங்குகளின் விலைகள் சரியும்.அப்படி எதுவும் இதுவரை நடக்கவில்லை. எந்த ஒரு நாடும் படைகளை நகர்த்தியதாக தகவல்கள் இல்லை. சீனா தொடங்கிய இந்த முறுகல் நிலையில் அது தோற்றுவிட்டதாக சீன மக்கள் உணர்வதை சீன ஆட்சியாளர்கள் விரும்ப மாட்டார்கள். சீனா தனது வான் பாது காப்பு அறிவிப்பைதிரும்பப் பெற மாட்டாது. மாறாக இந்ந்த அறிவிப்பை தொடர்ந்து வலியுறுத்தாமல் நாளடைவில் அது நீர்த்துப் போகும். ஆனால் சர்ச்சைக்குரிய தீவுக் கூட்டங்கள் தொடர்பான முறுகல்கள்நாளுக்கு நாள் ஒரு போரை நோக்கி வலுத்துக் கொண்டே போகும் போர் ஒன்று உரு வாகுவதைத் தடுக்கும் வகையிலும் ஜப்பானிற்கு தனது ஆதரவைத் தெரிவிக்கும் வகையிலும் அமெரிக்கா தனது துணை அதிபர் ஜோபிடனை ஜப்பானிற்கும் சீனாவிற்கும் அனுப்பியுள்ளது.

ஜப்பானிற்கும் சீனாவிற்கும் இடையில் நடக்கும்முறுகலில் அமெரிக்காவும் தலையிடுவது முழு ஆசியப் பிராந்தியத்திலும் ஒரு பதட்ட நிலையைஉருவாக்கியுள்ளது. சீனாவின் விரிவாக்கக் கொள்கைகளால் ஏற்படும் ஆபத்தை பல ஆசிய நாடுகள் கரிசனையில் கொண்டுள்ளன. சீனாவின் விரிவாக்கற் கொள்கை தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக் கடலிலும் மட்டுமல்ல இந்தியாவின் அருணாசலப் பிரதேசத்தையும் இலக்குவைத்துள்ளது. 1949-ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் விரிவாக்கற் கொள்கைக்கு எதிராக நேட்டோ எனப்படும் வட அந்திலாண்டிக் நாடுகளின் ஒப்பந்தம் செய்யப்பட்டது போல்ஆசிய நாடுகள் ஒன்று கூடி ஒரு படைத்துறை ஒப்பந்தத்தை செய்யும் சாந்தியம் உண்டு. இப்படியான ஒரு அணியில் ஜப்பான், இந்தியா, அமெரிக்கா, ஒஸ்ரேலியா, பிலிப்பைன்ஸ். புரூணே, மலேசியா, வியட்னாம், கம்போடியா, சிங்கப்பூர் ஆகியவை இணைந்து நேட்டோவைப் போல் ஒரு படைத்துறை மற்றும் அரசியல் கூட்டணியை அமைக்கும் வாய்ப்புக்கள் அதிகமாகிவிட்டது. சீனாவும் வார்சோ ஒப்பந்த நாடுகள் போல் தன்னுடன் வட கொரியா மற்றும் மொங்கோலியா போன்ற சில மத்திய ஆசிய நாடுகளைத் தன்னுடன் இணைத்து ஒரு படைத்துறைக் கூட்டமைப்பை அமைக்க முயலலாம். முதலாவது அணியில் இரு முக்கிய நாடுகளில் ஒன்றான ஜப்பான் எப்போதும் சிங்களவர்களுக்கு ஆதரவாகவே நடந்து கொள்ளும். மற்ற நாடான இந்தியா எப்போதும் தமிழர்களுக்கு எதிராகவே நடந்து கொள்ளும். இந்தியா தனது நாட்டில் உள்ள அதிகாரப்பரவலாக்கத்திலும் அதிகமான அதிகாரப் பரவலாக்கத்தை ஈழத் தமிழர் பெற்று விடக்க் கூடாது என்பதில் எப்போதும் உறுதியாக நிற்கும். இரண்டாவது அணியில் சீனா சிங்களவர்களின் ஆதரவாகச் செயற்படும். இரண்டு அணியும் இலங்கையைத் தம் பக்கம் இழுக்கும் போட்டியில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டைப் போட்டி போட்டுக் கொண்டு செய்யலாம். அப்போது ஈழத் தமிழர்களின் நிலை ஒரு அநாதையின் நிலையை அடையுமா?