அண்மையில் நடந்த இரு சம்பவங்கள் பிரபாகரனை நான் எவ்வாறு விளங்கிக் கொண்டேன் என்பதனைக்கூறுமாறு என்னை நிர்ப்பந்தித்தன. பிரபாகரன் என்று சொல்லாமல் தேசியத் தலைவர் என்று அவரை அழைக்கவே விரும்புகிறேன். என் புரிதலில் பிரபாகரன் அவ்வாறானவர் தான். மேலும், தேசியத்தலைவரை மெச்சுவதனாலும்இ தேசிய விடுதலைப் போராட்டம் மீதான ஆர்வத்தினாலும் என் வாழ் நாளை அடுத்தகட்டத்துக்கு நகர்த்த முடியாது இடர்ப் படுகின்றேன். அது வெறும் அல்லது ‘சும்மாவான’ இடர்ப்பாடு அல்ல. ஆனால், “அண்ணை கவனம்! அண்ணையை கவனமாகப் பாருங்கோ!” என்று எழுதிவைத்துவிட்டு அனுராதபுரம் விமானப் படைத்தள தாக்குதலில் களப்பலியான லெப்.கேணல்.இளங்கோவனுக்கு முன்னாலேயோ அல்லது ‘அண்ணை’ பெயர் சொல்லி தம்மை கொடையாகக் கொடுக்கின்ற கரும்புலிகள் முன்னாலேயோ என் இடர்ப்பாடு தூசு.
இவர்கள் இப்படி களப்பலி ஆனார்களேஇ கரும்புலி ஆகப் போனார்களே, இவற்றில் இருந்து தான் அல்லது இவர்களில் இருந்து தான் தேசியத் தலைவரை நான் விளங்கிக் கொள்ள முயல்கிறேன். ஹஅடி முடி அறியமுடியாதஇஉணரமுடியாத, விளங்கமுடியாத, அண்டப் பெரும் சக்தி’ என்று அவரை நான் விளங்கிக் கொள்கிறேன்.
இரண்டு சம்பவங்களை முதலில் நான் கூறிவிடுகிறேன். கணேசன் அய்யர் எழுதிய ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் என்ற நூலை வாசித்தது என்பது ஒன்று. மற்றயது, சனல் 4 காணொளியில் தலைவரின் மரணம்பற்றிய மர்மம் துலங்கிவிடும் என்று மக்கள் பதை பதைத்தபடி காத்திருந்தது, அப்படிக் காட்டி விடுவார்களோ என்று அஞ்சி ஒரு தொலைக்காட்சி அதனை ஒளிபரப்பவில்லை. மற்றும் சிலர் அக் காணொளியைக் காண மறுத்தும் விட்டனர்.
அந்த மகா வீரனின் மரணத்தை மர்மமாக வைத்திருப்பது, அம் மாமனிதனுக்கு நாம் செய்யும் மரியாதைக் கேடு.அந்த நூலில் அய்யர் என்ன சொல்ல வருகிறார்? அந்நூல் முழுவதிலும் தேசியத்தலைவர் மீதான குற்றச்சாட்டுக்கள் மூன்று வகைப் படுத்தப் பட்டிருக்கின்றன.
- தனிநபர் பயங்கரவாதம்
- அராஜகம்
- அரசியலின்மை
இப்படி வகைப்படுத்துவது ஒரு சுலபத்துக்கே அன்றி கொச்சைப்படுத்தும் நோக்கமல்ல. இக்குற்றச் சாட்டுக்களை முன் வைக்கின்ற அய்யர் பலசந்தர்ப்பங்களில் இக் குற்றச்சாட்டுகளுடன் ஒத்தோடியாகவே காணப்படுகின்றார் என்பது ஒரு புறம் இருக்கட்டும். இப்பொழுது 55 வயதுக்கு மேற்பட்டவரும் அரசியல் முதிர்ச்சியின்பாற்பட்டவருமான அய்யர், களத்தில் நின்றுகொண்டு 20-25 வயதிற்கு இடைப்பட்ட இளம் போராளியான தேசியத்தலைவரை விமர்சித்தல் எங்கனம் தகும்? மேலும், ஆயுதப் போராட்டத்தை திட்டமிடலுடனும் தன்னம்பிக்கை உடனும் கையில் எடுத்துக்கொண்ட ஒருவரை, எவ்வித முன்னெடுப்புகளும் இன்றி, சிறு துரும்புகூட அசைக்காத ஒருவர் குற்றம் சாட்டுதல் என்னவகை நியாயம்?
தேசியத் தலைவரினது தளத்தையும், வயதையும், ஆரம்ப காலத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.’அந்தப் பருவத்தில் அது அப்படித்தான் ஆகும்’ என்ற வாக்கியத்துடன் அதனை கடந்து நாம் போகலாம். தவறுகளில் இருந்து நாம் கற்கவேண்டும். அனுபவத்தை உள்வாங்கி அடுத்த கட்டத்துக்கு நகர்த்தவேண்டும். அய்யர்அத் தவறுகளில் இருந்து கற்றது என்ன? அந்த அனுபவங்களில் இருந்து எவ்வாறு அவர் அடுத்த கட்டத்துக்கு நகர்கிறார்? அப்படியொன்றும் இல்லையெனில் இந்நூல் எழுதுவதன் அவசியம் என்ன?இ அரசியல் என்ன? பிரபா கரனைக் காட்டி இவரும் பிழைப்பு நடாத்துகிறாரா? இந்த அரசியல் சூழலை தனது ‘யாவாரத்துக்குப்’பயன் படுத்துகிறாரா? ‘செத்தும் கொடுத்தான் சீதக்காதி’ கதை தான் நினை வுக்கு வருகிறது.
இரண்டு விசயங்கள் இதில் குறிப்பிட வேண்டி இருக்கின்றன. தேசியத் தலைவர் என்ற பெருமரம் தான் காய்த்தபடி இருக்கிறது. அய்யர் போன்ற சின்னஞ் சிறார்கள்அதற்குக் கல் எறிகின்றார்கள். உண்மையில் ‘செயற்கரிய செய்தவர்’ தேசியத் தலைவர். ‘பெரியன’ செய்ய தேசியத் தலைவர் களம் வருகின்ற போது, களத்தில் யாவற்றையும் கைவிட்டு வெறும் கையோடும் தோல்வி மனப்பான்மையோடும் தமிழகத்துக்கு வள்ளம் ஏற மன்னார் கரையை வந்தடைகிறார் அய்யர். காரியம் செய்தால் தானே குறையும் வரும், பிழையும் தெரியும். ஒரு காரியமும் ஆற்றாவிட்டால் யார் காணப்போகிறார்கள்? நிறைகுடம் தளும்பாது. குடத்தில் ஒன்றும் இல்லாவிட்டாலும் தளும்பாது.
இரண்டு, தலைவர் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி விட்டு அந்த அடுக்குகளில் மேல் அமைப்பைக் கட்டியவர்கள் மீதும் அதே குற்றச்சாட்டுக்கள் அடுக்கப் படுகின்றனவே! தலைவர் மீது குற்றம் சாட்டி உமாமகேஸ்வரன் பிரிந்து போகிறார். ஆனால் உமா மகேஸ்வரன் என்ன செய்தார்? என்பதனை கோவிந்தனின் புதியதோர் உலகம் நாவல் சொல்லும். முன்னூறுக்கும் மேற்பட்டோரை படுகொலை செய்தவர் உமாமகேஸ்வரன் என்று அந்நாவல் சொல்கிறது. உமாமகேஸ்வரனிடம் இருந்து பிரிந்த தீப்பொறி குழுவினர் உமாமகேஸ்வரனை கொலை செய்ய திட்டம் தீட்டினர். அந்த உமாமகேஸ்வரன் கொழும்பில் நட்ட நடு வீதியில் படுகொலை செய்யப்பட்டு கிடக்கிறார்.
ஆனால் நமது தலைவரின் சாதனை என்ன? மாபெரும் இயக்கத்தைக் கட்டி எழுப்பி, பல்லாயிரம் போராளிகளை உருவாக்கி, மகத்தான சாதனைகள் பல புரிந்து, உலகத்தமிழர் அனைவரும் தம் தலைவர் இவர் தான் என உணர வைத்தவர். இது எப்படி சாத்தியப்பட்டது? எப்படித் தேசியத் தலைவரால் இதனை நிகழ்த்த முடிந்தது?
நான் தேசியத் தலைவரை இவ்வாறு தான் புரிந்து கொள்கிறேன். அவரது உண்மை, நேர்மை, உறுதி, வீரம், ஓர்மம், வீறு இவை தாம் அவரை தலைவர் என்ற இடத்தில் நிறுத்தி வைத்திருக்கிறது. இவற்றுடன் கடும் உழைப்பு, முன் முயற்சி, திட்டமிடல், தளம்பாத இலக்கு, தடுமாறாத இலட்சியம், தலைமைத்துவப் பண்பு இவைகளையும் இணைத்துக் கொள்ளவேண்டும். இவற்றுடன், தலைவர்’இறக்குமதி’ அரசியல் செய்யவில்லை. மார்க்சிய புராணம் பாடவில்லை. எவரையும் ஏத்தி ஏத்தி தொழுதவர் இல்லை. நான் சொல்ல ஒன்றே ஒன்று தான் உண்டு. மண்ணுக்கும் மக்களுக்கும் ஏற்ற அரசியல் நடாத்தினார். தனக்கு எது இயலுமோ அதையே சொன்னார், செய்தார். தனது கொள்கையில் பிறழாது நின்றமையால் வீரனாக அவர் மண்ணில் வீழ்ந்தார். தனது குடும்பத்தையே ஒட்டு மொத்தமாகக் காவு கொடுத்தார். தாயையும் தந்தையையும் மக்களோடு மக்களாக அனுப்பி வைத்தார். உலகில் எந்த ஒரு மனிதன் இவ்வாறு செய்திருப்பான்? மகாத்மா எனப்பட்ட காந்தி செய்திருப்பாரா?
இறைவா, என் தலைவா உன்னை இந்த விதமாகத்தான் நான் புரிந்து கொள்ள விரும்புகிறேன். அது போதும் எனக்கு.