செல்லும் வழி இருட்டு

சென்ற முறை எழுதிய பத்தியின் தொடர்ச்சியாகவும் இதனைக் கொள்ளலாம். ஆயினும் இது தமிழகச் சினிமா, அதன் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்கு னர்கள் சம்பந்தப்பட்டது. இன்னும் சொல்வதானால் அவர்களது தமிழ் இன உணர்வு சம்பந்தப்பட்டது.

நேரடியாகவே விசயத்திற்கு வருகின்றேன். புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் சிலரிடம் ஒரு கருத்து இருக் கின்றது. “எங்களிடம் நிறையப் பணம் இருக்கின்றது, அதே சமயம் தமிழ் உணர்வும் இருக்கின்றது. எங்களுடைய தமிழ் உணர்வைப் பயன்படுத்தி, தமிழ்ச் சினிமா வியா பாரிகள் எங்களது பணத்தைப் பறித்துக் கொண்டு ஓடுகி றார்கள்” என்பது தான் அக்கருத்து.

சினிமா என்பது பணம் அதிகம் தேவைப்படுகின்ற ஒரு கலை, எனவே, பணத்தை சம்பாதித்தல் என்பது அதனது ஓர் இலக்கு. அதற்காக அவர்களிடம் தமிழ் உணர்வே இல்லை என்றும், தமிழ் உணர்வைப் பயன்படுத்தி எங்களை சுரண்டுகிறார்கள் என்று சொல்வது ஒரு மோசமான ஒரு வாதமாகும்.

நமது விடுதலைப் போராளிகள் கூட ஆரம்பத்தில் புலம் பெயர்ந்த ஈழத்தமிழரை கொச்சையாகத் தான் பார்த் தார்கள். நமது கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் மீது `வசைப்பா’ கூட பாடினார். ஆனால், போராட்டத்திற்கு பொருளாதார தரம் தேவைப் பட்ட போது புலம்பெயர்ந்தோர் அவர்களுக்கு `பலம்’ பெயர்ந்தோர் ஆனார்.

ஒன்றைக் கவனியுங்கள் நண்பர்களே, தமிழ் உணர்வில் ஈழத்தமிழர்களையும் விட எந்த விதத்திலும் குறைந்த வர்களல்லர் தமிழகத் தமிழர்கள். அவர்களில் தமிழகச் சினிமாக் கலைஞர்களும் அடங்குவர். அதுவும் என்றுமில் லாதவாறு தமிழகச் சினிமா இப்பொழுது தமிழர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. அதேசமயம் ஈழத்தமிழர் களின் போராட்ட உணர்வு அவர்களுக்கு `நாம் தமிழர்’ என்ற உணர்வையும் அளிக்கத் தவறவில்லை.

தமிழ் நாடு அதன் மக்களும் எங்களுக்கு  மிகப்பெரிய பலம். தமிழ் நாட்டிலிருந்து புழங்கிப் பார்த்தால் அதனைப் புரிவீர்கள். அப்துல் ரவூவ்பும், முத்துக்குமாரும், செங்கொடியும் இன்னும் தீக்கு தம்மை தீனியாக கொடுத்த தோழர்களும் அதனை எமக்கு உணர்த்தினர். எமது போராளிகளில் பலர் தம்மை கொடையாகக் கொடுக்கின்ற போது அவர்கள் முன் எரியும் பிரச்சினை இருந்தது. வீரமும் ஓர்மமும் மிக்க தலைவர் அவர் முன் இருந்தார். தமிழ் நாட்டுத் தோழர்களுக்கு யார் இருந்தார்? எது இருந்தது? ஈழத்தமிழர்களுக் காக தம்மை கொடையாகக் கொடுத்தார் என்பது மகா தியாகம் அல்லவா?

தமிழ் உணர்வு என்பது ஈழத்தமிழர்களின் `குத்தகை’ அல்லவே. தமிழராகப் பிறக்கின்ற ஒவ்வொருவருக்கும் இயல்பாக வருவது அல்லவா? சினிமாக் கலைஞர்களுக்கு ஏன் அது வரமுடியாது என்று நினைக்கின்றோம்? எனக்கு அது புரியவில்லை. பிராமணிய உணர்வு கொண்ட சினிமா இயக்குனர்களான கே.பாலசந்தர் (புன்னகை மன்னன்), மணிரட்ணம் (கன்னத்தில் முத்தமிட்டால்), ஷங்கர் (ஜென்டில்மென்), ராஜீவ்மேனன் (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்) போன்றவர்கள் ஈழத்தமிழர் போராட்டத்திற்கு எதிராக தத்தம் திரைப்படங்களில் சில காட்சிகளாவது வைக்க முடியுமென்றால், சீமான், கௌதமன், ஏ.ஆர்.முருகதாஸ், பாலா, வெற்றிமாறன், சீனுராமசாமி, ராம் போன்றோர் ஈழத்தமிழர் போராட் டங்களுக்கு ஆதரவாக தத்தம் திரைப்படங்களில் சில காட்சிகளையாவது வைத்திருப்பதனை வியாபார உத்தி என கொச்சைப்படுத்துவது அறமாகுமா?

2009 மே மாத முள்ளிவாய்க்கால் ஊழிக்குப் பிறகு `சோகம் காத்த’ தமிழ்ச்சினிமா கலைஞர்களில் ஏ.ஆர்.முருகதாசும் ஒருவர். அதன்பிறகு அவர் இயக்கிய `ஏழாம் அறிவு’ திரைப்படத்தில் அந்த சோகம் காத்த பல சந்தர்ப்பங்களை தெரிவிக்கிறார். “இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளா” என்ற பாடலே அதற்கு மிகச் சிறந்த உதாரணம். `ஏழாம் அறிவு’ திரைக்கதை கூட அதற்காகத் தான் அமைக்கப்பட்டது. `இது அழிக்கப் பட்ட தமிழர்களுக்கும், அழிக்கப்பட முடியாத தமிழுக்கும் சமர்ப்பணம்’ என்றே அத்திரைப்படம் சமர்ப்பிக்கப்பட்டது. இவற்றையெல்லாம் வியாபார உத்தி என்று கொச்சைப் படுத்துதல் முறை தானா?

முள்ளிவாய்க்கால் ஊழி நடந்த சமயம் தான் இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் `ஒஸ்கார்’ விருதினை பெற்றிருந் தார். விருது பெற்ற அரங்கில் “எல்லாப் புகழும் இறை வனுக்கே” என்று அவர் தமிழில் ஒலித்த போது மகிழ்ச்சி அடையாத தமிழர் எவரேனும் உள்ளார்களா? ஆனால் அந்த இசை மேதை ஏ.ஆர்.ரகுமான் செய்த ஒரு காரியம் தமிழர்கள் சிலபேருக்குத் தான் தெரிய முடியும். அவர் ஒஸ்கார் விருது வென்ற சமயம் தமிழக அரசு அவருக்கு பாராட்டு விழா நடாத்த எண்ணியது. ரகுமானிடம் கேட்டபோது அவர் மறுத்து விட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா ? “இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்ற போது தமிழராகிய நான் எப்படி பாராட்டு விழாவில் கலந்து கொள்ள முடியும்? ” ரகுமான் இப்படிக் கூறியதை வியாபார உத்தி என்று கூறுவீர்களோ எம் சில தமிழர் காள்?

போகிற போக்கைப் பார்த்தால் நடிகர் விஜய் ஈழத்தமிழ்ப் பெண்ணை திருமணம் செய்து கொண்டதே ஈழத்தமிழர் களின் பணத்தைச் சுரண்டத்தான் என்று சொல்வீர்கள் போல, என்னே மனிதர் நீர்?

ஒன்றை விளங்குவீர்களாக, தமிழ் நாடு அதன் மக்களும் எங்களுக்கு மிகப்பெரிய பலம். தமிழ் நாட்டிலி ருந்து புழங்கிப் பார்த்தால் அதனைப் புரிவீர்கள். அப்துல் ரவூவ்பும், முத்துக்குமாரும், செங்கொடியும் இன்னும் தீக்கு தம்மை தீனியாக கொடுத்த தோழர்களும் அதனை எமக்கு உணர்த்தினர். எமது போராளிகளில் பலர் தம்மை கொடையாகக் கொடுக்கின்ற போது அவர்கள் முன் எரியும் பிரச்சினை இருந்தது. வீரமும் ஓர்மமும் மிக்க தலைவர் அவர் முன் இருந்தார். தமிழ் நாட்டுத் தோழர் களுக்கு யார் இருந்தார்? எது இருந்தது? ஈழத்தமிழர்களுக் காக தம்மை கொடையாகக் கொடுத்தார் என்பது மகா தியாகம் அல்லவா? சிந்தியுங்கள் நண்பர்களே. இவர்கள் தியாகத்தில் ஒரு துளியாவது இந்தச் சினிமாக் கலைஞர் களிடம் பட்டுத் தெறித்திருக்க முடியாதா?

ஒருவர் `பொங்குதமிழ்’ இணையத்தளத்தில் மிகமிக முட்டாள்த்தனமாக எழுதுகிறார். “தமிழ் நாட்டுச் சினிமா ஏ.ஈ.மனோகரன், வ.ஐ.ச.ஜெயபாலன் போன்ற ஈழத் தமிழர்களை வில்லன்களாகத் தானே சித்தரிக்கின்றது என்று”. இதற்கு அழுவதா, சிரிப்பதா என்று தெரிய வில்லை. இவற்றையெல்லாம் அந்த இணையத் தளம் பிரசுரிக்கின்றதே அதற்கு என்ன செய்வது?

வி.சி.குகநாதனைத் தான் விடுவோம், அந்த விஷ மத்தை எழுதியவரால் பாலுமகேந்திராவை எப்படி மறக்க முடிந்தது? தமிழ்ச் சினிமா அவரை  தமது தந்தை எனக் கொண்டாடியதே. பாலுமகேந்திரா காலம் ஆகியும் ஓர் ஆண்டு கூட ஆகவில்லை. அதற்கிடையில் எப்படி பாலுமகேந்திராவை துÖக்கி எறிந்தார். சில வேளை பாலு மகேந்திராவை ஈழத்தமிழர் என்று அந்த விஷமம் எழுதியவர் உணரவில்லையா?

நான் நம்புகின்றேன், இவ்வாறான கருத்துக்கள் தாழ்வுச் சிக்கல்களிலிருந்து வருகின்றது. அதனால் தான் ஈழத்தமிழர் களுக்கு என்று தனித்த அடையாளத்துடன் சினிமா எடுக்க வேண்டும் என்று சொல்வது. அப்படி எடுக்கப் புகுபவர் கள் என்ன செய்வார்கள்? தமிழ் நாட்டுக் குப்பைகளைப் பொறுக்குகிறார்கள். பொறுக்குவதைக் கூட ஒழுங்காக பொறுக்க முடியாமல் திணறுகிறார்கள்.

என் கருத்து இது தான் ஒரு முழுநீளத் திரைப்படத்தை தயாரிப்பது என்பது இலேசான காரியமல்ல. அதற்கான செலவை ஈடுகட்ட சந்தைப்படுத்தல் மிக முக்கியம். அது, இப்போது சாத்தியமற்றது. குறுந்திரைப்படங்களே இப்போது எமது இலக்காக இருக்க வேண்டும். பிரான்சிலிருந்து சதாபிரணவன், லண்டனிலிருந்து சுஜித் ஜி மற்றும் இவர்கள் போன்ற சில ஈழத்தவர்கள் அதில் சாதனை புரி கின்றார்கள். அவர்களை வாழ்த்துவோம், வரவேற்போம்.