சேர்ந்தோடிய தமிழ் அமைப்புகள் எதிர்நீச்சலுக்குத் தயாரா ?

135

கடந்த இதழில், இப்பத்தியில் கொழும்பின் அரசியல் முன்னெடுப்புகள் அரசியற் தீர்வைக் காட்டிபொறுப்புக்கூறல் பொறிமுறைகளை இழுத்தடிக்கவும், நல்லிணக்கத்தைக் காட்டி அரசியற் தீர்வை தட்டிக்கழிக்கும் நடவடிக்கைகளாக அமைகின்றன எனக்குறிப்பிட்டிருந்தேன். சிறிலங்கா அரசாங்கம் இவ்வாறு நடந்துகொள்ளும்போது மேற்குலகத் தரப்புகளின் நிலைப்பாடு எவ்வாறிருக்கிறது ?மார்ச் 23ம் திகதி பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற பிரித்தானிய அனைத்துக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான ஒன்றுகூடல் வைபவத்தில் பொதுநலவாய நாடுகளுக்கான அமைச்சர் திரு. ஹியூகோ ஸ்வையர் ஆற்றிய உரை இவ்வினாவிற்கு விடையளிப்பது போல் அமைந்திருந்தது. இவ்வாறு கூறும்போது, பிரித்தானிய அரசின் நிலைப்பாட்டை வேறு வழிகளில் அறிந்துகொள்ள முடியவில்லை என அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. ஆனால் பிரித்தானியாவில் வாழ்கிற தமிழ் மக்களுக்கு ஆளும் கொன்சவர்ட்டிவ் கட்சி அரசாங்கம் என்ன செய்தியினை வெளிப்படையாகச் சொல்ல விரும்புகிறது என்பதனை அறிந்து கொள்ளவதற்கு இந்த நிகழ்ச்சிஉதவியது எனலாம்.

தமிழ் மக்களுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்றக் குழுவில் எண்பத்தைந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர் எனக்கூறப்படுகின்ற போதிலும் அன்றைய ஒன்று கூடலில் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களே கலந்துகொண்டனர். அவர்களில் ஹியூகோ ஸ்வையர் மாத்திரமே அமைச்சர் தரத்தில் இருப்பவர். கடந்தஜனவரியில் சிறிலங்காவிற்கு சென்றிருந்த ஸ்வையர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் விழாவில் இரணில் விக்கிரமசிங்க, சந்திரிகா ஆகியோருடன் கலந்து கொண்டார். ஸ்வையர் தனதுரையில், சிறிலங்காவில் விரும்பத்தகுந்த மாற்றம் ஏற்பட்டு வருவதாகவும், மைத்திரிபால, இரணில் ஆகியோர் மீது தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் கூறி, நிலமையை நேரில் சென்று பார்ப்பதற்கு புலம்பெயர் மக்களை விமானமேறி சிறிலங்காவிற்கு செல்லுமாறு வேண்டுகோள்விடுத்தார். சிறிலங்காவின் பொருளாதார நிலமைகவலையளிப்பதாகக் கூறிய அவர் அங்கு தமிழ்மக்கள் முதலீடுகளைச் செய்யவேண்டும் எனவும்ஆலோசனை வழங்கினார் அத்துடன் நின்றுவிடாது `ஒரு சிறிலங்கா’ (One Sri Lanka) ஆக அந்தநாட்டை கட்டியெழுப்புவதில் புலம்பெயர் தமிழர்கள்முக்கிய பங்காற்ற முடியும் எனவும் தெரிவித்தார்.

புதிய ஆட்சியிலும் மனிதவுரிமைகள் மீறப்படுகின்றன என வெளிவரும் செய்திகள் அமைச்சருக்கு அசௌகரியத்தைக் கொடுக்கின்றன போல் தெரிகிறது. ஏனெனில் அவரது உரையில், சில பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகளை நம்ப வேண்டாம் எனவும், வெள்ளை வான் கடத்தல்கள் இப்போதும் நடைபெறுகின்றன என்பதனை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது எனவும் கூறியிருந்தார். சித்திரவதைகள் நடைபெறுவது போன்றகுற்றச்சாட்டுகள் பற்றிக் குறிப்பிட்ட அவர், அச்சாட்சியங்களை மிகக் கவனமாக பரிசீலக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இவ்வைபவம் தொடர்பாக பிரித்தானியத் தமிழர்பேரவை வெளியிட்ட அறிக்கையில் திரு. ஸ்வையரின் உரையில் தெரிவித்த மேற்குறித்த விடயங்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. தமிழ் கார்டியன் இணையத்தில் பிரசுரிக்கப்பட்ட செய்தியில், ஐ.நா. மனிதவுரிமைச்சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் அமுல்படுத்துவதில் போதியளவு முன்னேற்றம் காட்டாவிடில் அதனை பிரித்தானிய அரசாங்கம் அனைத்துலக கவனத்திற்கு கொண்டுவரும் என்ற விடயமே முக்கியத்துவபடுத்தப்பட்டிருந்தது.

Sonia Scates
Sonia Scates

சித்திரவதைகள், வெள்ளை வான் கடத்தல்கள் பற்றிய ஸ்வையரின் கருத்து அந்த வைபவத்தில் கலந்துகொண்டிருந்த சித்திரவதைகளிலிருந்து விடுதலை (Freedom from Torture) என்ற தன்னார்வதொண்டு நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான சொனியா ஸ்கேற்ஸ் (Sonya Sceats) க்குஏற்புடையதாக இருக்கவில்லை. அங்கிருந்தபடியே ரூவிற்றரில் அவர் இட்ட பதிவுகளிலிருந்துதான் இவ்வைபவத்தில் ஸ்வையர் கூறிய மேற்குறித்த முக்கிய விடயங்களை வைபவத்தில் கலந்துகொள்ளாதவர்கள் அறிந்து கொண்டனர்.

மேற்படி வைபவத்திற்கு திரு. ஸ்வையர் அவர்களை அழைத்து உரையாற்ற வைத்தமைக்காக பிரித்தானியத் தமிழர் பேரவைக்கு ஈழத்தமிழ் மக்கள் நன்றியினைத் தெரிவிக்க வேண்டும். ஏனெனில் இலங்கைத் தீவு விடயத்தில் மேற்குலகின்தற்போதைய வெளிப்படையான நிலைப்பாட்டினை தமிழ் மக்கள் அறிவதற்கு இந்த வைபவம்ஒரு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.அவரது உரையில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்பிரித்தானியத் தமிழர் பேரவையினருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஏனெனில் தாம் பிரித்தானிய அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றத்தினைக் கொண்டு வந்திருக்கிறோம் என ஊடகங்களில் வந்து தமது சாதனைப்பட்டியலை வாசிக்கிறபோது, வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஒன்றுபட்ட சிறிலங்காவிற்கு பரப்புரை செய்வதனை எவ்வாறு அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியும் ?

அன்றை வைபவத்தில் திரு. ஸ்வையர் வெளியிட்ட கருத்துகளையிட்டு பிரித்தானியத் தமிழர் பேரவையின் அதிர்ச்சியடைந்திருக்க வேண்டியதில்லை. ஏனெனில் அண்மைக்காலமாக, மேற்குலக அரசபிரதிநிதிகளுக்கும் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்றஎல்லாச் சந்திப்புகளிலும் இவ்விடயம் வலிறுத்தப்பட்டு வருகிறது. கடந்த செப்ரெம்பரில் நடைபெற்ற ஜ.நா. மனிதவுரிமைச் சபையின் கூட்டத் தொடருக்கு வந்திருந்த தமிழ்ப்பிரதிநிதிகளுக்கும் இவ்விடயம் தெரவிக்கப்பட்டது. அதாவது வடக்கு – கிழக்கில் உட்கட்டுமானம் மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு சிறிலங்கா அரசாங்கத்திடம் நிதியில்லை ஆகவே புலம்பெயர் தமிழர்கள் அங்கு சென்று முதலீடுகளைச் செய்யவேண்டும். கடந்த செப்ரெம்பரில் சிறிலங்காவின் இணக்கப்பாட்டுடன் அமெரிக்க கொண்டு வந்த தீர்மானத்தை வரலாற்றுத் திருப்பமாகக்கூறிய தமிழ்அமைப்புகள், இச்சந்தர்ப்பத்தை வாய்பாகப் பயன்படுத்தி தாயகத்தில் கிளைகள் அமைத்து பணியாற்றப் போவதாக அப்போதுவிருப்புத் தெரிவித்திருந்தன. பின்னர் இவ்வமைப்புகள் மீதான தடை நீக்கப்பட்டுள்ள போதிலும் அங்கு செல்வதற்கான முயற்சிகளில் அவர்கள் இறங்கவில்லை. அண்மையில்சிறிலங்கா அரசாங்கத்தின் அழைப்பில் பேரில் கனடியத் தமிழர் வர்த்தக சம்மேளனம் சிறிலங்காவில்முதலீடு செய்வது பற்றிய கருத்தரங்கு ஒன்றினைகொழும்பில் நடாத்தியிருக்கிறது.

திரு. ஸ்வையர் குறிப்பிட்டதுபோன்று சிறிலங்காவின் பொருளாதாரம் பாரிய நெருக்கடிக்குள் இருக்கிறது. இது ஒன்றும் இரகசியமான விடயமில்லை. அண்மையில் Moody, Fitch நிறுவனங்கள் சிறிலங்காவின் கடன் நிலையை (credit rating) தரமிறக்கியிருந்தன. கடன்சுமையிலிருக்கும் சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தை என்ன செய்வது என்ற தெரியாது அரசாங்கம் திணறுகிறது. உலக நாணய நிதியத்திடம் கடனுதவி கோரப்பட்டுள்ளது. மேற்குலக நாடுகளிலிருந்து குறிப்பிட்டுக் கூறக்கூடிய வகையில் புதிதாக எந்த முதலீடுகளும் செய்யப்படவில்லை. இவற்றை வைத்துப் பார்க்கையில்தமிழர் தாயகப்பகுதிகளின் பொருண்மிய மேம்பாட்டுக்கு புலம்பெயர் தமிழ் மக்களின் முதலீடு அவசியமானது என்ற முடிவுக்கு நாம் வரமுடியும். ஆனால் இவ்வியடத்தில் சிறிலங்கா அரசு அரசியல் ரீதியாகச் செயற்பட மறுக்கிறது என்பதனை நாம்கவனத்தில் எடுக்கவேண்டும். ஒன்பது மாதங்களுக்கு முன்னர் மைத்திரிபால தன்னைச் சந்தித்த முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு உறுதி வழங்கியிருந்தும், வடமாகாணசபையின் நிதியத்தை ஏற்படுத்துவதற்கு இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை. இத்தகைய புறச்சூழலில், சிறிலங்கா அரசாங்கம் புலம் பெயர் மக்களை முதலீடு செய்ய அழைப்பது அரசியல் உள் நோக்கம் நடவடிக்கையாகவே பார்க்க வேண்டியுள்ளது. தமிழ் வர்த்தகர்களை கொழும்பில் முதலீடு செய்ய வைப்பதன் மூலம்,தமிழ் அலைந்துழல்வுச் சமூகத்தினால் மேற்கொள்ளப்படும் எதிர்பரசியலை தணிக்கலாம் என்ற எதிர்பார்ப்பிலேயே இவ்வாறான அழைப்புகள் விடுக்கப்படுகின்றன.

ஸ்வயரின் உரைதொடர்பாக தமிழ் ஊடகமொன்றில் பிரசுரிக்கப்பட்டிருந்த கட்டுரையில் “பிரித்தானிய அரசுக்கு புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் கொடுக்கும் அழுத்தம் போதவில்லையா? அல்லது அரசாங்கத்துக்கு புலம்பெயர்ந்து வாழும் மக்கள் வழங்கும் தகவல்கள் போதவில்லையா? ” என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. தகவல் தொழில்நுட்பம் எங்கள் வீட்டு வாசற்படியை உலகிற்கு காட்டிநிற்கிறது. அது எங்கள் படுக்கையறைகளுக்குள்ளும் கழிப்பறைகளுக்கும் புகுந்து விடுமா என அச்சப்படுகிற ஒரு காலத்தில் பிரித்தானியஅரசாங்கத்திற்கு தகவல்களை தமிழ் மக்கள் வழங்க வேண்டும் என்று நினைப்பது முட்டாள்த்தனமாகத் தோன்றவில்லையா? பிரித்தானிய அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுப்பது ஒரு புறமிருக்க, மேற்கத்தைய அரசுகளின் நிலைப்பாடுதொடர்பான உண்மையான விவாதத்திற்கு தமிழ் அமைப்புகளும், செயற்பாட்டாளரகளும் தயாராக இருக்கிறார்களா?

மகிந்த இராஜபக்சவின் அரசாங்கத்தை அகற்றிமேற்கு சார்பு அரசாங்கத்தினைப் பதவியில் அமர்த்தும் `ஆட்சி மாற்றம்’ என்ற செயற்திட்டத்திற்கு புலம்பெயர் தமிழர்கள் மேற்குலக சக்திகளுக்குத் தேவைப்பட்டார்கள் என்பது ஒன்று இரகசியமானதல்ல. ஆகவே மே 2009 இலிருந்து ஜனவரி 2015 வரையான காலத்தில், மேற்குலக சக்திகளுக்கும், தமிழ் மக்களும் சேர்ந்தே பயணித்தார்கள் என்று வைத்துக்கொளவோம். இவ்விரு தரப்புகளுக்கும் இலக்கு வேறானது என்பதனை தமிழ்மக்களில் எத்னை பேர் உணர்நது கொண்டார்களோ தெரியவில்லை. ஆனால் தமது இலக்கினை நோக்கிச் செல்வதா, மேற்குலக சக்திகளின் மனங் கோணாது செயற்படுவதா என்ற குழப்பத்தில், சிலர் இரண்டாவதைத் தேரந்தெடுப்பதே இன்றைய அரசியல் பின்னடைவிற்கு காரணமாக அமைகிறது.