ஜெனிவாவிற்குப் போன நம்மாளுகள்
ஷெரின் நதானியல்
வருடாவருடம் இரண்டு அல்லது மூன்றுதடவை சுவிற்சலாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச்சபையின் பணியகத்திற்கு சென்றுவருவது இப்போது சிலருக்கு வாடிக்கையாகிவிட்டது. ஒரு திருவிழாக்காலத்து உற்சாகத்துடன் அங்கு சென்று வருபவர்கள் எதனைச் சாதிக்கிறார்கள் என்பதையிட்டு அங்கு போகாத தமிழர்களும் அறிந்து கொள்வதற்காக இது எழுதப்படுகிறதே தவிர யாரினதும் பிழைப்பில் மண்ணைப் போடுவது எனது நோக்கமல்ல என்பதனை முதலிலேயே கூறிவிடுகிறேன்.
தமிழினத்தின் விடிவு ஜெனீவாவில்தான் உதயமாகும் என நம்பும் அளவிற்கு நிலைமை திரிவு படுத்தப்பட்டுவிட்டாலும், நாம் ஜ.நா. பற்றி சிறிதேனும் அறிந்து வைத்திருத்தல் அவசியமாகும். உலகத்திலேயே திறனற்றதும் ஊழல் நிறைந்ததும் ஐக்கிய நாடுகள் சபையும் அதன் துணை அமைப்புக்களும் தான் என்றளவிலேயே நிலமைகள் இருக்கின்றன. சீனாவில் மனித உரிமைக்காகப் போராடிய கௌ ஷுன்லியை (Cao Shunli) சீன அரசு சிறையில் அடைத்து மருத்துவ வசதிகள் கொடுக்க மறுத்ததால் அவர் சிறையில் காச நோய், ஈரல் நோய், சிறுநீரக நோய் போன்ற பல வருத்தங்களுக்கு உள்ளாகி (அல்லது உள்ளாக்கப்பட்டு) இறந்தார். அவருக்கு ஒரு நிமிட அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஒன்றை மனித உரிமைக் கழகத்தில் ஏற்பாடு செய்த போது அதை நடக்க விடாமல் சீனா தடுத்து விட்டது. மனித உரிமைகளையும் அதற்காகப் போராடுபவர்களையும் மனித உரிமைக் கழகம் எவ்வளவு மதிக்கின்றது என்பதைக் காட்ட இது போன்ற பல உதாரணங்கள் உண்டு.
தடியில்லாத் தண்டல்காரன்
மனித உரிமைக்கழகத்தின் முக்கிய செயற்பாடுகளில் உண்மையைக் கண்டறிதல், தகவற் பரிமாற்றம், ஒத்துழைப்பு, ஆக்கபூர்வ கலந்துரையாடல், தொழிநுட்ப உதவி, கொள்ளளவு நிர்மாணித்தல், சமநிலை ஆதரவு, மீளாய்வு ஆகியன முக்கியமானவை. ஆனால் மனித உரிமைக் கழகம் எந்த ஒரு மனித உரிமை மீறிய நாட்டையோ அல்லது தனிப்பட்டவர்களையோ தண்டித்ததாக வரலாறு இல்லை. அல்லது மனித உரிமை மீறலால் பாதிக்கப்பட்ட எந்த ஒரு இனத்திற்கோ விமோசனம் வழங்கியதாகவும் வரலாறு இல்லை. நிபுணர்களின் கருத்துப்படி மனித உரிமைக்கழகத்திற்கு மனித உரிமைகளைப் பாதுக்காக்கும் பற்கள் (அதிகாரம்) இல்லை. மனித உரிமையை மீறும் ஒரு நாட்டினில் தலையிடும் அரசுறவுசார் நெம்புவலு மனித உரிமைக்கழகத்திடம் இல்லை.
மனித உரிமைக் கழகத்தில் இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை ஒரு தீர்மானத்தின் மூலம் எடுத்துக் கொள்ளப்பட்டது முதலில் 2009-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆகும். இலங்கையில் நடந்த போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக இலங்கையைக் கண்டிக்கும் தீர்மானம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளால் முன் மொழியப் பட்டத்து. ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் அந்த முன்மொழிவு நிறைவேற்ற ஐரோப்பிய நாடுகள் கடுமையான் முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவில்லை. அதனால் இந்தியா தனது பிரிக்ஸ் கூட்டாளிகளான சீனாவையும் தென் ஆபிரிக்காவையும் தன்னுடன் ஒத்துழைக்கச் செய்து அத் தீர்மான முன்மொழிவை முழுமையாக மாற்றி இலங்கையை பயங்கரவாதத்தை ஒழித்தமைக்காகப் பாராட்டும் தீர்மானமாக மாற்றி நிறைவேற்றியது. பின்னர் மூன்று பன்னாட்டு குழுக்கள் இலங்கையில் போர்க்குற்றமும் மாநிடத்திற்கு எதிரான குற்றமும் இழைக்கப்பட்டமைக்கு காத்திரமான ஆதாரங்கள் இருக்கின்றன என்று அறிக்கைகள் விட்டன.
அமெரிக்காவின் தீர்மானங்கள்
அமெரிக்கா தீர்மான முன் மொழிவுகளை ஜெனீவாவில் கொண்டு வரத் தொடங்கியதில் இருந்து சில தமிழ் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் நாடுகளை லொபி செய்கிறோம் பேர்வழி என்று அங்கு படை எடுப்பதை வழமையாகக் கொண்டுள்ளனர். ஜெனீவாவில் ஒரு தீர்மானத்தின் மீது எப்படி வாக்களிப்பது என்பதை மனித உரிமைக்கழகத்திற்கான பிரதிநிதிகள் தீர்மானிப்பதில்லை. அந்தந்த நாடுகளின் வெளியுறவுத் துறையினரே தீர்மானிப்பார்கள். ‘எமது நாட்டில் மனித உரிமை மீறப்பட்டுள்ளது மூன்று இலட்சம் பேரைக் கொன்று விட்டார்கள். எம்மீது தடைசெய்யப் பட்ட குண்டுகளை வீசினார்கள்’ என கியூபாவின் ஜ.நா. பிரதிநிதியிடம் சொல்லி அவரை அமெரிக்கத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்ய முடியாது. எப்படி வாககளிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல் அவருக்கு ஹவானாவில் இருந்துதான் வரும்.
தமிழர் பேரவைகள்
அடிமுட்டாள் தனக்குத்தானே அறிவழகன் எனப்பெயர் சூட்டியது போன்ற ஜந்தாறுபேர் கொண்டு உருவாக்கப்பட்ட அமைப்புகள் தமக்குத்தானே பேரவைகள் என்று பெயர் சூட்டியுள்ளன. இந்த வகையில் பிரித்தானியத் தமிழர் பேரவையும், இமானுவல் அடிகளாரின் உலகத் தமிழர் பேரவையும் தாம் புலம் பெயர் தமிழர்களின் பிரதிநிதிகள் எனச் சொல்கின்றனர். சில கொழும்பு ஊடகங்கள் உலகத் தமிழர் பேரவையை ஒரு வலுமிக்க புலம் பெயர் தமிழர் அமைப்பு என்று வேறு சித்தரிக்கின்றன. தங்களுக்குள் மோதிக் கொண்டிருக்கும் இவ்விரு அமைப்புகளும் ஒன்றுமே இல்லாத தீர்மானத்தை ‘திருப்பு முனையான தீர்மானம்’ இதை நிராகரித்தால் அமெரிக்கா எம்மைக் கைவிட்டு விடும் எனச் சொல்லி மக்களை ஏமாற்றிவருகிறார்கள்.
பிரித்தானியத் தமிழர் பேரவையின் (நிரந்தரத்) தலைவர் இரவி குமார் அமெரிக்கத் தீர்மானத்தை சரித்திர நிகழ்வு என்கிறார். இருக்காதா பின்னே, ‘ஆறுவருடங்களாக லொபி செய்து என்னத்தைக் கண்டீர்?’ என்று யாரும் கேட்டுவிடக்கூடாதல்லவா! இவர்கள் லொபி செய்வதற்குச் செலவழித்த பணத்தில் சின்னதாக ஒரு விமானம் வாங்கியிருக்கலாம் என இந்தப் பேரவையிலிருந்து அதிருப்தி காரணமாக வெளியேறிய மிச்சம் பகுதியில் வாழும் பெண்மணி ஒருவர் கூறினார். தற்போது இல்போட் வடக்குத் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. லீ ஸ்கொட் அவர்களை லொபி வேலைக்கென பிரித்தானித் தமிழர் பேரவை அமர்த்தியுள்ளதாகவும் அவருக்கு மாதமொன்றுக்கு 5,000 பவுண்ஸ் சம்பளம் வழங்கப்படுவதாகவும், அதன் முதற்கட்டமாக ஆறுமாதகாலத்திற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் பிரித்தானியத் தமிழர் பேரவையின் அசெம்பிளி உறுப்பினர்களிடமிருந்து அறிய முடிகிறது.
இவ்வளவு பெரும் தொகைப் பணம் கொடுத்து ஜெனிவாவில் உள்ள மனித உரிமைக் கழகத்தில் பரப்புரை செய்ய என அமர்த்தப்பட்டிருக்கும் திரு. ஸ்கொற் யூத இனத்தைச் சேர்ந்தவர். மனிதவுரிமைச்சபையில் பல இஸ்லாமிய நாடுகள் அங்கம் வகிக்கின்ற நிலையில் யூத இனத்தவரை வைத்துப் நாடுகளைப் பரப்புரை செய்யும் அளவிற்கு பிரித்தானியத் தமிழர் பேரவையின் பன்னாட்டு உறவு பற்றிய அறிவு இருக்கின்றது. இவர் தவிரவும் நாளொன்றுக்கு 1,500 பவுண்ஸ் என்ற வேதன அடிப்படையில் வேறும் சில பிரித்தானிய எம்பிக்கள் ஜெனிவாவிற்கு அழைத்துவரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் இத்தகவலை உறுதி செய்ய முடியவில்லை. பிரித்தானிய பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடையும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் வேலை தேடுவதானால் முதலில் பிரித்தானியத் தமிழர் பேரவையை அல்லது உலகத்தமிழர் பேரவையை அணுகமுடியும் எனச் சிலர் நகைச்சுவையாகக் கூறுவதில் நியாயம் உள்ளது. ஏனெனில் 2010ம் ஆண்டுத் தேர்தலில் தோல்வியுற்ற ஜோன் றையன் எம்பியை உலகத்தமிழர் பேரவை பணிக்கமர்த்தியிருந்த்து.
ஜெனிவாவில் தமிழ் அரசியல்வாதிகள்
இம்முறை தாயகத்திலிருந்து பல அரசியல்வாதிகள் ஜெனிவாவிற்கு வந்திருந்தனர் அவர்களில் கூட்டமைப்பு அரசியல்வாதிகளை கண்காணிப்பதற்கு சுமந்திரனின் உதவியாளர் நிரான் அங்கிற்றல் நியமிக்கப்பட்டிருந்தார்.
ஜெனிவா மனித உரிமைக்கழகத்தில் ஏழாயிரத்திற்கு மேற்பட்ட அரசுசாரா அமைப்புக்கள் பதிவு செய்துள்ளன. எல்லாம் செயற்பட்டுக் கொண்டிருக்கும் அமைப்புக்கள் அல்ல. அவர்கள் தமக்கு இருக்கும் கூட்டத்தில் கருத்துச் சொல்லும் உரிமையை வேறு அமைப்பினருக்கு அல்லது செயற்பாட்டாளர்களுக்கு வழங்குவது உண்டு. அந்தவகையில் அரசுசாரா நிறுவனங்களுக்கு உரையாற்ற வழங்கப்படும் இரண்டு நிமிட நேரத்தை தாயகத்திலிருந்து வந்த அரசியல்வாதிகளில் சிலர் பயன்படுத்திக்கொண்டனர். திரு. சிவாஜிலிங்கம் The League of Persons with Disabilities” என்ற அமைப்பின் சார்பிலும், திரு. சுரேஸ் பிரேமச்சந்திரன் The Association des jeurnes pour P’Agriculture au Mali என்ற அமைப்பின் சார்பிலும், திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் The Alliance Creative Community Project என்ற அமைப்பின் சார்பிலும், திருமதி அனந்தி The Association Mauritanienne pour La Promotion du droit” என்ற அமைப்பின் சார்பில்லும் உரையாற்றினர்.
ஜெனீவாவிற்கு வந்த தமிழரசுக்கட்சி உறுப்பினரான திரு. சிறீதரன், ரெலோ எம்பிக்களான திரு. செல்வம் அடைக்கலநாதன், திரு. கோடிஸ்வரன், மாகாணசபை உறுப்பினர்கள் திரு. கோவிந்தன் கருணாகரன், திரு. சயந்தன், திரு. ஆர்னோல்ட் ஆகியோர் உணவகத்தில் இருந்து தங்களுக்குள் பேசிக் கொள்வதிலும் ஒளிப்படங்கள் காணொளிப் பதிவுகள் எடுப்பதிலும் மட்டுமே கவனத்தைச் செலுத்தியதை அவதானிக்க முடிந்தது.