ஜெனீவாத் தீர்மானம்: ஆனந்தக் கூத்தாடுவோரும் ஒப்பாரி வைப்போரும்

1494

ஜெனீவாத் தீர்மானம்: ஆனந்தக் கூத்தாடுவோரும் ஒப்பாரி வைப்போரும்
(மெளலி – ஒரு பேப்பருக்காக)

ஜெனீவாத் தீர்மானம் தமிழர்களின் உரிமைப் போராட்டப் பாதையை சர்வதேச அந்தஸ்த்துக்கு உயர்த்தியுள்ளது என ஒருசாரரும், அதில் எதுவுமே இல்லை மேற்குலக சதிக்குள் வீழ்ந்துவிடக் கூடாது என இன்னொருசாராரும் எதிரும்புதிருமான கருத்துகள் கடந்த சில நாட்களாக செய்திகளில் முக்கியத்துவம் பெறுகின்றன.

சிறிலங்கா அரசால் முன்வைக்கப்பட்ட LLRC எனப்படும் நல்லிணக்க ஆணைக்குழு முன் வைத்த பரிந்துரைகளையும் அது கையாளத் தவறிய பொறுப்புக் கூறல் விடயங்களையும் அமுல்படுத்த சிறீலங்காவுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் நடை பெற உள்ள ஐ.நா மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் இந்த அமுலாக்கல் எவ்வளவு தூரம் நடைபெற்றுள்ளது என்பது தொடர்பான மீளாய்வு நடைபெற உள்ளது .

இந்த சந்திப்புப் புள்ளி நோக்கி நான் மேலே குறிப்பிட்ட “ஆனந்தக் கூத்தாடிகளும் ” “ஐயோ மேற்குலக சதி ஒப்பாரி” என்போரும் கவனம் செலுத்த வேண்டும் .

சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் சிறீலங்கா உறுப்பு உரிமை நாடல்ல என்வே நேரடியாக அங்கு சிறிலங்கா மீது அல்லது சிறீலங்கா பிரசை மீது வழக்கு தாக்கல் செய்ய முடியாது . என்வே ஐ.நா வின் ஏதாவது ஒரு அங்கம் ஊடாகவே அது நடைபெற முடியும்.

விடயங்களை சரியாக புரிந்து கொள்ள சர்வதேச விசாரணைக்கான நியமம் என்பது எமக்குத் தெரிந்தாகவேண்டும். எமக்கு எது விருப்பம் என்ற அடிப்படையில் நாம் எகிறிக் குதிக்கக் கூடாது. சர்வதேசத்தின் அனுசரணையை நாடிநிற்கும் நாம், சர்வதேச நியமங்களின் புரிதலின் அடிப்படையிலேயே எமது அரசியல் முன்னெடுப்புக்களை வழி நடாத்தமுடியும். அந்த வகையில்எமது அடுத்த நகர்வுக்கு சர்வதேச குற்ற வியல் நீதிமன்ற இணையத்தில் உள்ள பின்வரும் பகுதி முக்கியமானது .

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்(ICC) தேசிய நீதிமன்றங்களை பிரதியீடு செய்யுமா? என்ற கேள்விக்கான பதில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இல்லை, ICC தேசிய நீதிமன்றங்களை பிரதியீடு செய்யாது, அது தேசிய நீதிமன்றங்களுக்கு உறுதுணையாகவே செயற்படும். தொடர்புடைய தேசிய அரசு விசாரணைகளை நடாத்தவில்லை அல்லது தொடர்புடைய அரசு விசாரணைகளை நடத்த முடியாததாக உள்ளது அல்லது விசாரணைகளை நடாத்த மனப்பூர்வமாக விரும்பவில்லை என்பது நிரூபிக்கப்படும்பொழுது மட்டுமே ICC விசாரணைகளை ஆரம்பிக்கும். இதனை “Complementarity” கொள்கை என்பார்கள் . இதன் அடிப்படையில் தேசிய நீதிமன்றங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் . தேசிய அரசுக்கு தான் குற்றவாளிகளை விசாரிக்கும் முன்னுரிமை வழங்கப்படும் .

இந்த இடத்தில் தான் நாம் இப்பொழுது நிற்கின்றோம் . இதில் இருந்து நாம் சர்வதேச விசாரணை கட்டத்தை அடைந்து இனப்படுகொலை நடைபெறுகின்றது என்பதை நிரூபிப்பதை நோக்கி நகரவேண்டும். அது தான் தமிழீழம் என்ற தேசம் உருவாக வழி சமைக்கும். இந்த பணி ஜெனீவா தீர்மானம் தொடர்ப்பாக “ஆனந்தக் கூத்தாடிகளும் ” “ஐயோ மேற்குலக சதி ஒப்பாரி” என்ற இரு கோஷ்டிகளும் செயலாற்ற வேண்டிய இடமாகும். இருவருமே இந்த புள்ளியில் தான் சந்திக்கின்றார்கள்

அதற்காக என்ன செய்யவேண்டும்?

  • இனப்படுகொலை தொடர்கின்றது என்பதை ஆவணப்படுத்த வேண்டும் .
  • நியாயமான விசாரணை நடத்தப்படவில்லை என்பதை நிரூபிக்க மேலும் ஆதாரங்களைத் திரட்ட வேண்டும் .
  • எல்லாவற்றுக்கும் மேலாக சுயாதீன சர்வதேச விசாரணைக்கு ஆதரவாக வாக்களிக்க கூடியவாறு நாடுகளை தீர்மானம் இயற்ற வைக்கவேண்டும்

முதல் இரண்டும் அமைப்புக்களின் முக்கியமான பணி என்றால் சாதாரண மக்களின் பணி சுயாதீன விசாரணைக்கு ஆதரவாக அரசுகளைத் தீர்மானம் இயற்ற வைக்க ஜனநாயக வழிகளைக் நாடவேண்டும் . அமைப்புக்கள் மக்களுக்கு இந்த விழிப்புணர்வை ஊட்டவேண்டும். ஊடகங்கள் உறுதுணையாக இருக்கவேண்டும் .
பிரித்தானியாவில் சுயாதீன சர்வதேச விசாரணை கோரும் மனுவுக்கு வெறும் 7000 மக்கள் மட்டுமே ஒப்பமிட்டுள்ள நிலையில் எமது வாய் வீரங்கள் அதிகமாக உள்ளனவே அன்றி அமைப்புக்களோ மக்களோ மனப் பூர்வமாக செயற்படவில்லை என்றே தோன்றுகின்றது .

பிரித்தானியாவில் சமர்பிக்கப்பட்ட மனுவில் பொதுமக்கள் ஒப்பமிடுவது , வேற்றின மக்களையும் அதற்காக ஒப்பமிட வைப்பது பிரித்தானியாவில் உள்ள சர்வதேச விசாரணையை விரும்பும் எல்லா சக்திகளினதும் முக்கியமான பணியாகும் . இது பேச்சளவில் இருக்கின்றதே அன்றி செயலில் பூரணம் அடையவில்லை .மே18 நினைவு தினத்துக்கு கூட்டம் நடத்துவோரும், இலண்டன் நகர தேர்தலுக்கு கூட்டம் நடத்துவோரும் அதே ஆர்வத்துடன் சர்வதேச விசாரணை மனுவுக்கு செயற்படவில்லை . உண்மையில் அதிக கவனம் செலுத்த வேண்டிய விடயம் இதுதான் .

தமிழர்கள் எத்தனை மாவீரர் தினம் நடாத்தினார்கள், எத்தனை விளையாட்டுப் போட்டி நடாத்தினார்கள், எத்தனை நினைவு தினம் நடாத்தினார்கள் என்பதை உலகம் பார்க்கப் போவதில்லை. அதனை செய்யத்தான் வேண்டும் ஆனால் அது எமது பிரச்சனைகளுக்கு தீர்வு நோக்கி நகர மன உறுதியை தரவேண்டும் . அந்த உறுதியுடன் நாம் செயலாற்றவேண்டும் .

அதை விடுத்து,

” நடிப்பு சுதேசிகள் ” என்ற தலைப்பில் பாரதியார் பாடிய…
“நெஞ்சில் உரமும் இன்றி ….
கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி,……
அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறு மதியும்…..
மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும்…….”

இவ்வரிகள் எமக்கும் பொருந்துமோ என்றென்னும் நிலை தான் சுயாதீன சர்வதேச விசாரணை மனுவுக்கு பிரித்தானியா வாழ்மக்கள் வழங்கும் ஆதரவையும் , அமைப்புக்கள் எடுக்கும் முயற்சிகளையும் பார்க்கும் பொழுது ஏற்படுகின்றது.