ஜே.ஜே.. சில அரசியல் குறிப்புக்களும் அதிகார மோதலும்

458

தேர்தலில் வெல்வதற்கு, வழக்கில் ஜெயிப்பதற்கு என்று நடாத்தப்பட்ட யோகம் தரும்யாகங்கள் ஏராளம். ஆனால் இப்போது இந்தியாவிலுள்ள `சட்டமா முனிவர்கள்’ ஒன்று கூடி யாகம் நடத்தவில்லை. ‘அம்மா’ வை எவ்வாறு வெளியில் கொண்டுவரலாமென்று ஒன்றுகூடிப்பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

குன்ஹா எழுதிய தீர்ப்பின் மை காய்ந்துபோகமுன்னர், போயஸ் கார்டனிற்கு `அம்மா’ திரும்பிவர வேண்டுமென்கிற தன்மான அரசியல் பிரச்சினை ஓடிக்கொண்டிருக்கிறது. பலருடைய வாழ்க்கைப் பிரச்சினையும் அதில் உள்ளடங்கியுள்ளது.

`அம்மா’ வீழ்த்தப்பட்டாரென்று `ஐயா’வும், அம்மாவின் சிறைவாழ்வு நீடித்தால் அவரின்தொண்டர்கள் தம்மையே ஆதரிப்பார்களென்று `சரத்’தும், மகிழ்சிக் கடலில் ஆழ்ந்துள்ளனர். ஆக மொத்தம் அம்மாவின் தொண்டர் கூட்டத்தைப் பங்கு போடுவதில் பல சிறு குழுக்கள் ஆர்வம் காட்டுவதை புரிந்து கொள்ள முடிகிறது.

இவற்றைவிட அறம்- நீதி- பண்பு என்கிற, அதிகாரவாசிகளுக்குப் பொருத்தமற்ற கற்பனை சுரங்களோடு, முதலாளித்துவ நீதிபரிபாலனம் நிலைநாட்டப்பட்டுவிட்டதாக ஒரு சாரார் எழுத ஆரம்பித்துள்ளனர்.

ஒற்றைக் கதாநாயக-நாயகி பிம்பங்களே, மக்களின் மேல்மட்ட உணர்வுத் தளங்களை ஆக்கிரமித்து நிற்பதாக கவலை கொள்ளும் அறிவார்ந்த பெருமக்கள், இந்திய தேசத்தின் சிந்தனை முறைமையானது, இன்னமும் நிலப்பிரபுத்துவ, காலனித்துவ (இதனை அரை அல்லது கால் நிலப்பிரபுத்துவம் என்று கம்யுனிஸ்டுகள் கூறுவார்கள்) எச்ச சொச்சங்களில் இருந்து மீளவில்லை என்பதனை உணர்ந்து கொள்ளவில்லை.

கடந்த 18 ஆண்டுகாலமாக, அ.தி.மு.க.உடன் அரசியல் ரீதியான உறவினைப் பேணியகட்சிகள், உயர் நீதிமன்றத் தீர்ப்பினை வரவேற்கின்றார்கள். இதே கட்சிகள் இனிமேல்,ஜெயலலிதா தலைமையிலான அல்லது அவர் வழி நடாத்தும் அ.தி.மு.க வோடு, எக்காலத்திலும் அரசியல் கூட்டு வைத்துக்கொள்ள மாட்டோமென மக்களிடம் கூறுவார்களா?.

அப்போது வழக்கு நடந்தது. ஆதலால் கூட்டு வைத்தோம். இப்போது தீர்ப்பு வேறு வந்துவிட்டதென வியாக்கியானம் செய்யும் இந்திய மார்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியினர் இந்த சவாலை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

புது டெல்லி `டூமா’ வில் புரட்சிக்கான அடித்தளங்களை கட்டி எழுப்புவதாக தம்மையும் ஏமாற்றி, கார்ல் மார்க்சையும் தலைகுனிய வைத்து, ஈழத்தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை நிராகரிக்கும் இவர்கள், தீர்ப்புக்கள் திருத்தப்பட்டால் எதிர்காலத்தில் அ.இ.அ.தி.மு.க.வோடு சுரணையற்று கூட்டுச் சேருவார்கள்.

ஜாதிக ஹெல உறுமயவின் மாகாணசபை உறுப்பினர் உதய கமன்பில, அண்மையில் சிங்கள வர்த்தகர்கள் மத்தியில் பேசும்போதுதெரிவித்த தேர்தல் குறித்தான வியூகம் ஒன்று, இனிவருங்காலத்தில் இந்தியாவிலும் எதிரொலிக்கலாம் என்று எண்ணத்தோன்றுகிறது.

அதாவது தமிழ் தேசியக்கூட்டமைப்பு, முஸ்லிம்காங்கிரஸ், மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் போன்ற வாக்கு வங்கிப் பலமுடைய கட்சிகளின் பேரம்பேசும் சக்தியினை முறியடிக்க, 10 இலட்சம் சிங்கள பௌத்த வாக்குகளைதயார்படுத்த வேண்டுமென்கிறார்.

இதில் இனவாத அரசியல் போக்கு இருந்தாலும், மாகாணக்கட்சிகளின் வாக்குப்பலமானது மத்திய அதிகார மையத்தில் யாரைத் தெரிவு செய்வது என்பதனைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்க விடமாட்டோம் என்பதுதான், பெரும்பாலான பௌத்த சிங்களப் பேரினவாதிகளின் நிகழ்கால-எதிர்காலப் பார்வையாக இருக்கிறது. இணக்க அரசியல் மூலம், தமது சமூகத்திற்கு சலுகைகளைப் பெறலாம் என்கிற கதையாடல்களுக்கு `இனி வாழ்வில்லை’ என்பது போலிருக்கிறது உறுமயாக்களின் உறுமல்கள்.

மத்தியில் ஓரிரு பெரிய- சிறிய மந்திரிபதவிகளையும், மாகாணசபையில் சில உறுப்பினர்களையும், அதுவும் இல்லையென்றால் ஆளும்கட்சியின் உபயத்தில் போனஸ் நாற்காலியையும் பெற்று தமது அரசியல் வாழ்வுதனைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்றிருந்த நிலை, இந்த உறுமல்களால் மாறிவிடும்போல் தெரிகிறது.

ஆகவே இலங்கை அரசியலில் சமீபகாலமாக மேலெழும் (அநகாரிக தர்மபாலாவின்) பௌத்த சிங்களவாதத்தின் மீள் எழுச்சியையையும், அதனூடாக நிலைநிறுத்தப்படும் ஒற்றைப்பரிமாண அரசியலின் பரிபூரண வடிவத்தையும் உற்று நோக்கினால், பாரத தேசத்திலும்இவ்வாறானதொரு மாற்றம் வேறு வழியில் நிகழ ஆரம்பித்துள்ளதா என்கிற சந்தேகம் எழுகிறது.

முதலில் மோடி தலைமையில் இயங்கும் இந்திய மத்திய அரசின் பாரிய பிரச்சினையாக,அரசிறை நிதிப்பற்றாக்குறை இருப்பதைப் பல பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுவதை அவதானிக்க வேண்டும்.

இதனை எதிர்கொள்ள, யப்பானிற்கும் அமெரிக்காவிற்கும் பயணங்களை மேற்கொண்ட நரேந்திரமோடி அவர்கள், வெளிநாட்டு நேரடி முதலீட்டினை இந்தியாவிற்குள் கொண்டுவரும் பாரியமுயற்சியில் ஈடுபடுவதைக் காண்கிறோம். அத்தோடு இந்தியாவிற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட சீன அதிபர் சி ஜின்பிங்கும் இந்தியாவில் தொழிற்சாலைகளை அமைக்க விரும்பம் தெரிவித்துள்ளார்.

இங்கு குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால்,சீனாவின் பட்டுப்பாதையின் ஓரத்தில் தரித்திருக்கும் தென்னிந்தியாவில் முதலீடு செய்வதையே பல பல்தேசியக் கம்பனிகள் விரும்புகின்றன. இதற்கு வேறுபல பாதுகாப்புக் காரணிகளும் உண்டு.

இந்நிலையில், மத்திய அரசைப் பொறுத்தவரை தமிழக அரசோடு ஒரு இணக்கமான – அரசியல் முரண் நிலையற்ற உறவுநிலை இருக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றது.

பொதுவாக பேரம்பேசலில் இடையூறுகள் விளைந்தால், மென் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும். இணக்கப்பாட்டு அரசியலில் சறுக்கல்ஏற்பட்டால், வன் அழுத்தங்கள் நீதித் துறையூடாகவும் செலுத்தப்படும். அரபு எழுச்சியின் பின்னர்இவ்வாறான பல `நீதிக்கணைகள்’ அதிகாரவாசிகள் பலரை நிலைகுலையச் செய்த நிகழ்வுகளை நாம் பார்த்துள்ளோம்.

தமிழக அரசியல் வாழ்வுச் சூழலைப் பொறுத்தவரை, தனிமனித செல்வாக்கின் உச்சத்தைத் தொட்ட எம்.ஜி.இராமச்சந்திரன் காலத்திலும், நடுவண் அரசிற்கான தேர்தலில் தேசிய கட்சிகளோடு கூட்டுச் சேர்ந்துதான் மாநிலக் கட்சிகள்போட்டியிட்டன. ஆனால் இந்த மரபுரீதியான தேசிய-மாநில கூட்டரசியலை புறம்தள்ளி, தனித்துநின்று வெற்றிவாகை சூடிய ஒரே நபர் ஜெயலலிதா ஜெயராம் என்பதில் சந்தேகமில்லை. இதனை, முதன்முதலாக அறுதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்த பாரதீய ஜனதாக் கட்சி எவ்வாறு எதிர்கொள்ளும் என்பதுதான் இப்போது நிகழும் மாற்றங்களும் சிறைவாசங்களும் எமக்குச் சொல்லும் செய்தி.

மத்திய அரசிற்கு, அ.தி.மு.க வின் ஆதரவு நாடாளுமன்றில் தேவையில்லை என்றாலும், மோடியின் ஜப்பான் கனவிற்கு தமிழ் நாட்டின் நிபந்தனையற்ற ஒத்துழைப்பு அவசியம் என்பதனை நிராகரிக்க முடியாது. அது மட்டுமல்லாது, உலகமயமாதல், தாராளவாத பொருண்மிய கொள்கை, திறந்த சந்தை என்பதன் அடிப்படையில் இயங்கும், வல்லரசுகளின் பாதையில்காலடி எடுத்து வைத்திருக்கும் நரேந்திர மோடியின் அரசு, வெளி நாட்டு நேரடி முதலீட்டிற்கு மிகவும் சாதகமாகவிருக்கும் ஒரு மாநிலத்தில்,மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளோடு ஒத்தோடும் சக்திகளையே விரும்பும்.

ஜெயலலிதாவின் மத்திய அரசுகளுடனான முன்னைய உறவுநிலை, எப்போதும் சிக்கல் நிறைந்ததாகவே இருந்திருக்கிறது. குறிப்பாகஇலங்கையின் தேசிய இனப் பிரச்சினை விவகாரத்தில், சிங்களத்திற்கு ஒத்து வராத பல தீர்மானங்களை தமிழக சட்டசபையில் செல்வி. ஜெயலலிதா அவர்கள் நிறைவேற்றியுள்ளார்.

மத்திய அரசின் வெளிநாட்டுக் கொள்கையில் மாநில அரசுகளின் தலையீடு அறவே இருக்கக்கூடாது என்கிற இந்திய இறைமைக் கோசங்கள் அண்மைக்காலமாக டெல்லி வட்டாரங்களில் எதிரொலித்ததை கேட்டுள்ளோம். ஈழத்தமிழர் பிரச்சினையை வைத்தே இந்த அறிவுரைகள் சொல்லப்பட்டன.

மகிந்த அரசு உடனான நெருக்கத்தை சீர்குலைக்கும் தீர்மானங்களை தமிழ்நாடு அரசு நிறைவேற்றுகின்றதே என்கிற வருத்தமும் இந்திய கொள்கை வகுக்கும் தென் வளாகத்தில் இருக்கிறது.

இத்தகைய பின்புலத்தில், நீண்டகாலமாக இழுபறிநிலைக்கு ஆட்பட்டிருந்த சொத்துக்குவிப்பு வழக்கு, முரண்டுபடும் அதிகாரக்குதிரைக்கு கடிவாளமிடும் அழுத்தக் கருவியாக மாறியுள்ளதோவென்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.

ஏனெனில் ஏதோவொரு `குன்ஹா’, எப்போதோ இவ்வழக்கினை ஒரு முடிவிற்கு கொண்டு வந்திருக்க முடியும். வாய்தாக்களை மீறியே இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. விடுதலைப்புலிகளால் ஆபத்து என்று நொண்டிச்சாட்டினை முன்வைத்தும் குன்ஹா அசையவில்லை.

எப்போதோ நடந்திருக்க வேண்டிய நிகழ்வு ஏன் இப்போது நடக்கிறது? இது அறம், நீதி சார்ந்த கேள்வியல்ல. அதிகார அரசியல் சார்ந்தகேள்வி. சிறையினுள்ளே தள்ளும்போதும்,கடிவாளம் தளர்த்தப்பட்டு, ஏதோ ஒரு சிறுவாசல் கதவு திறந்துதானிருக்கும். இணக்க அரசியலுக்கு இறங்கிவந்தால்(?) அவ்வாசல் வழிசெல்லும் பாதை போயஸ் காடனிற்கு செல்லும்.

அரசியலில் இதுவெல்லாம் சாதாரணமுங்க.

– இதயச்சந்திரன்