
இலங்கை அரசியல் வரலாற்றிலேயே பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்திய முக்கிய நிகழ்வுகள் 1970-77 க்கும் இடைப்பட்ட காலத்தில் அரங்கேறின எனலாம். ‘சனநாயக சோசலிசம்’ என்ற சுலோகத்துடன் இடதுசாரி அரசியல்வாதிகளைக் கொண்ட கூட்டணி அரசு இந்த வரலாற்றுக் காலகட்டத்தில் ஆட்சிபீடம் ஏறி, நாடு முழுவதற்கும் பேரிடரையும் சீர்குலைவையும் கொண்டு வந்தது. இந்தக் காலகட்டத்திலேயே தெற்கில் புரட்சிவாத இளைஞரின் ஆயுதக் கிளர்ச்சியும் வடக்கில் தீவிரமடைந்த அரசியல் வன்முறையும் தலைதூக்கின. அடக்குமுறை அரசுக்கு எதிரான இளைஞர் சமூகத்தின் விரக்தியினதும் ஆவேசத்தினதும் வெளிப்பாடாகவே இவ் வன்முறைச் செயற்பாடுகள் நிகழ்ந்தன. இக் காலகட்டத்திலேயே தமிழ் சிங்கள இனங்கள் மத்தியிலான தேசிய முரண்பாடு கூர்மையடைந்தது. சிங்கள-பௌத்த மேலாண்மைக்கு சட்ட அதிகாரம் வழங்கிய புதிய குடியரசுக்கான அரசியல் யாப்பு நடைமுறைக்கு வந்ததையடுத்தே தமிழ்-சிங்கள தேசிய முரண்பாடு முற்றியது. இந்த வரலாற்றுக் கால கட்டத்திலேயே விடுதலைப் புலிகள் இயக்கம் பிறப்பெடுத்து, தமிழரின் ஆயுதம் தரித்த எதிர்ப்புப் போராட்டம் வலுப்பெற்றது. இக்கால கட்டத்திலேயே தமிழரின் தேசிய இயக்கமானது சுயநிர்ணய உரிமையைப் பிரகடனம் செய்து அரசியல் சுதந்திரத்திற்கான புரட்சிப் பாதையில் செல்வதற்கு முடிவெடுத்தது.சிறீலங்கா சுதரந்திரக் கட்சி, லங்கா சம சமாஜக் கட்சி, இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து உருவான அரசியல் கூட்டு 1971இல் “மக்கள் முன்னணி அரசு” என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தது. புதிய அரசு ஆட்சிக்கு வந்த மறுகணமே சிங்கள இளைஞரின் ஆயுதக் கிளர்ச்சிக்கு அது முகம்கொடுக்க நேர்ந்தது. நன்கு திட்டமிடப்படாது, அசட்டுத் துணிச்சலுடன் நடத்தப்பட்ட இந்த முயற்சி அரசிடமிருந்து ஆட்சியைப் பலவந்தமாக பறித்து எடுப்பதையே நேக்கமாகக் கொண்டிருந்தது. புதிதாக உருவாக்கப்பட்ட ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) என்ற மாக்சிய தீவிரவாத அமைப்பே, தெற்கில் கிளர்ச்சியைத் தொடக்கியது. இந்தக் கிளர்ச்சியை ஜே.வி.பி செவ்வையாகத் திட்டமிடவில்லை. அதனிடம் ஒரு ஆணைப்பீடத் தலைமையோ, நெறிப்படுத்தும் நிர்வாகமோ, தெளிவான கொள்கையோ, தந்திரோபாயமோ இருக்கவில்லை. புரட்சியின் தலைமை வெகுவாகச் சீர்குலைந்திருந்தது. ஆயுதப் புரட்சிப் போராட்டத்தை ஜே.வி.பி புரிந்து கொள்ளவில்லை. அது தொடர்பான நடைமுறைப் பட்டறிவுகூட அதனிடம் இருக்கவில்லை. ஆயுதப் போராட்டத்தைப் பொறுத்த வரையில், ஜே.வி.பி தலைவர் றோகண விஜயவீரா புரட்சிப் போரில் தேர்ச்சி பெற்றவரல்ல. ஆனாலும் ரஷ்ய ஒக்ரோபர் புரட்சி, மாவோ சே துங்கின் இராணுவச் சிந்தனைகள், சே குவேராவின் கெரில்லாப் போர் முறைக் குறிப்புகள் ஆகிய ‘புத்தகப் படிப்பால்’ பெற்ற அரைகுறை அறிவோடு பெரிதொரு புரட்சிக்கு அடிகோலும் பேரவா அவரிடம் இருந்தது. ஒரு புரட்சிச் சூழலுக்கான இலக்கையோ நடைமுறைச் சாத்தியக் கூறுகளையோ கருத்துக்கு எடுக்காது, வேலை வாய்ப்பு இழந்து விரக்தியடைந்த இளைஞர் சமுதாயத்தையும் காணி நிலம் இல்லாத விவசாயிகளின் ஒரு பிரிவினரையும் இந்த இயக்கம் ஒன்று திரட்டி கிளர்ச்சி செய்யத் தூண்டியது. இந்த ஆயுதக் கிளர்ச்சி 1971 ஏப்ரல் 5இல் திடீரென ஆரம்பமாகி உள்ளூர்க் காவல் நிலையங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. சில நாட்களுக்குள் தொண்ணூற்று மூன்று காவல்நிலையங்களை ஜே.வி.பியினர் தாக்கி அழித்தனர். தெற்கிலுள்ள பல நிர்வாக மாவட்டங்களும் இவர்கள் வசமாகின. இந்தத் திடீர் ஆயுத எழுச்சி அரசைத் திகைக்க வைத்தாலும் அரசு தன்னைச் சுதாரித்துக் கொண்டு துரிதமான கிளர்ச்சி முறியடிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அவசர காலநிலையும் ஊரடங்குகளும் பிறப்பிக்கப்பட்டன. வெளிநாட்டு இராணுவ உதவிகோரி, அரசு வேண்டுகோள் விடுத்தது. இந்தியா, பாகிஸ்தான், சீனா, பிரித்தானியா ஆகிய நாடுகள் இராணுவ தளவாடங்களுடன் உதவிக்கு விரைந்தன. தலைநகர் கொழும்புக்கு பாதுகாப்பு வழங்க அவசர நிலை அதிரடிப் படையணி ஒன்றை இந்தியா வழங்கியது. வெளிநாட்டு இராணுவ உதவியால் கிடைத்த நிறைவான ஆயுதங்களும் மிகக் கொடிய அவசரகாலச் சட்டமும் துணைவர, சிறீலங்கா அரச படையினர், வயதில் இளைய, அனுபவமற்ற புரட்சியாளர்கள் மீது குரூரமான பதில் தாக்குதலை மேற்கொண்டனர். இலங்கை வரலாற்றில் மிகக் கொடூரமான இராணுவ அடக்குமுறையாக இது அமைந்தது. நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பத்தாயிரத்துக்கும் அதிகமான சிங்கள இளைஞர்கள் இரக்கமின்றி கொல்லப்பட்டார்கள். மேலும் பதினையாயிரம் பேர் சிறையில் அடைக்கப்பட்டார்கள். புரட்சிகர சிங்கள இளைஞர் பரம்பரை ஒன்றை இந்த எதிர்த்தாக்குதல் பூண்டோடு அழித்தொழித்தது. வேலை இல்லாத் திண்டாட்டத்தால் துயருறும் விரக்தியடைந்த இவ் இளைஞர்கள், புரட்சிகர கிளர்ச்சி மூலம் தமக்கு மீட்சி கிடைக்கும் என்று மனப்பூர்வமாக நம்பினர். இந்த அப்பாவி இளைஞர்களின் உடல்களில் இருந்து வழிந்து ஓடிய இரத்த ஆறு, காருண்யம் மிக்க பௌத்தத்தின் புனித பூமியாகப் பூசிக்கப்படும் சிங்கள தேசத்தின் மண்ணை கறைப்படுத்தியது. இந்த மாபெரும் இளைஞர் படுகொலையை திட்டமிட்டு நடத்தி தமது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள தமது சொந்தப் பிள்ளைகளை பல்லாயிரக்கணக்கில் துவம்சம் செய்தவர்கள் மீது வரலாற்றின் பழி படிந்தது. ஒடுக்கப்பட்ட தரப்பினரிடமிருந்து மேலும் கிளர்ச்சிகள் தோன்றினால் அவற்றை மிருகத்தனமாக நசுக்கிவிடும் நோக்குடன் சிங்கள ஆளும் வர்க்கமானது அவசரகாலச் சட்டங்களையும் வேறு அடக்குமுறைச் சட்டங்களையும் உருவாக்கி அரச அதிகாரம் மீதான தனது இரும்புப் பிடியை மேலும் இறுக்கியது.சிங்கள தீவிரவாத இளைஞர்களை அரச பயங்கரவாதம் வாயிலாக நசுக்கிய பின்னர், புதிய அரசு தனது அடக்குமுறை நடவடிக்கைகளை தமிழ் மக்கள் மீது திருப்பியது. முதலில், அரச ஒடுக்குமுறைக்கு சட்டரீதியான ஒப்புதலும் நியாயப்பாடும் கொடுப்பதற்கான முயற்சிகளை எடுத்தது. இதன் முக்கிய நடவடிக்கையாக புதிய குடியரசு யாப்பு நிறைவேற்றப்பட்டது. இப் புதிய அரசியல் யாப்பு சிங்களத்திற்கு அரச மொழி என்ற ஏகத்தகைமையையும் பௌத்த மதத்திற்கு முதன்மையான சிறப்புரிமையையும் வழங்கியது. முன்னர் வழக்கில் இருந்த சோல்பரி அரசியல் யாப்பின் இருபத்தொன்பதாவது விதியின் அடிப்படையில் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டிருந்த அடிப்படை உரிமைகள், சலுகைகள் ஆகியவற்றைப் புதிய அரசியல் யாப்பு இல்லாதொழித்தது. அத்தோடு மொழி, மதம் ஆகியவை தொடர்பாக பண்டாரநாயக்கா வகுத்த இனவாதச் சட்டங்களை நாட்டின் அதியுயர் சட்டங்களாகப் பிரகடனம் செய்தது. தமிழ் பேசும் மக்கள் சார்பாக முன்வைக்கப்பட்ட அனைத்துத் திருத்தங்களையும் தீர்மானங்களையும் யாப்பமைப்பு மன்றம் திட்டவட்டமாக நிராகரித்தது. பொருத்தமான கூட்டாட்சித் திட்டத்தை சமஷ்டிக் கட்சி முன்வைத்தது. விவாதத்துக்கு எடுக்கப்படாமலேயே அது நிராகரிக்கப்பட்டது. புதிய அரசியல் யாப்பில், தமிழ் மொழி உபயோகத்துக்காக மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வி கண்டன. மன்றத்தின் நடவடிக்கைகளில் சிங்கள தேசிய மேலாண்மைவாதம் மமதையோடு அரசோச்சியது. இதனால் பெரும்பாலான தமிழ் உறுப்பினர்கள் நம்பிக்கை இழந்து விரக்தியோடு வெளிநடப்புச் செய்தார்கள். இகழ்ச்சிக்குரிய இந்த அரசியல் யாப்பு 1972 மே 22இல் நிறைவேற்றப்பட்டது. இதன் விளைவாக, அரச அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புக்கள் அனைத்துமே தமிழருக்கு மறுக்கப்பட்டது. தேசிய இனப் பண்புகளைக் கொண்ட ஒரு மக்கள் சமுதாயம் அரசியல் வாழ்விலிருந்து முற்றாக அந்நியப்படுத்தப்பட்டது.சிங்கள தேசத்தை பிரதிநிதித்துவம் செய்த பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் உரிமைகளை வேண்டுமென்றே தொடர்ச்சியாக மறுத்து வந்தன. இடதுசாரிகளான சமசமாசக் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் ஐம்பதுகளிலே தமிழரின் உரிமைகளுக்காக ஆதரவுக் குரல் கொடுத்து வந்தன. ஆனால் அறுபதுகளின் தொடக்கத்திலேயே அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கு வளைந்து கொடுத்து சிங்கள-பௌத்த பேரினவாத அரசியலை அரவணைத்துக் கொண்டன. தமிழ் மக்களின் உரிமைகளை மறுப்பதில் அனைத்து முக்கிய சிங்கள அரசியல் கட்சிகளும் முரட்டுப் பிடிவாதத்தோடும் உறுதியோடும் தொடர்ந்து நிற்பதைக் கண்டு இன நல்லிணக்கத்துக்காகப் பாடுபடுவதில் அர்த்தமில்லை என்ற உண்மையை தமிழ் மக்கள் கசப்போடு உணர்ந்து கொண்டார்கள். சிங்கள தேசிய அரசியல் சக்திகள், தமிழருடன் ஒத்து வாழ்வதைக் காட்டிலும், எதிர்த்து நிற்பதற்காகவே தமக்குள் உடன்பாடு கண்டன. இதைக் கண்ணுற்ற தமிழ் மக்கள் தங்கள் சொந்த அரசியல் தலைவிதியை தாமே தீர்மானிக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். ஒரு பொது இலட்சியத்திற்காகப் போராடும் ஒன்றுபட்ட தேசிய இயக்கமாகத் தமிழ் அரசியல் சக்திகள் ஒன்றுதிரள, இந்த யதார்த்த புறநிலை காரணமாக அமைந்தது. இந்த இலக்கை நோக்கிய முக்கிய நிகழ்வாக அனைத்துக் கட்சி மாநாடு ஒன்று திருகோணமலையில் 1972 மே 14இல் கூட்டப்பட்டது. இங்கு, சமஷ்டிக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவை ஒன்றிணைந்து தமிழர் ஐக்கிய முன்னணியாக வடிவெடுத்தன. இதற்கு முன் இடம்பெற்றிராத ஓர் இணைப்பு இது. தமிழ் மக்கள் தங்கள் தேசிய அடையாளத்தையும் அரசியல் சுதந்திரத்தையும் காப்பாற்றத் தாம் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்ற அவர்களது இலட்சிய உறுதியையும் இது எடுத்துக் காட்டியது.