தனித்துவத்துடன் வாழ்வதனையே தமிழ்மக்கள் விரும்புகின்றனர்

80

தனித்துவத்துடன் வாழ்வதனையே தமிழ்மக்கள் விரும்புகின்றனர்
முதலமைச்சர் விக்னேஸ்வரன்

“பெரும்பான்மையின மக்கள் மரமாகவும் சிறுபான்மையின மக்கள் கொடியாகவும் இணைந்து வாழ்வதே தேசிய ஒருமைப்பாடு என்ற எண்ணம் இந்நாட்டில் பலர் மத்தியிலும் இருந்து வந்திருக்கின்றது. வடகிழக்கு மாகாண மக்கள் அதை ஏற்க வில்லை. ஏற்கவும் முடியாது. இரு மரங்கள் ஒருமித்து பக்கம் பக்கமாக வாழ்தலையே எம்மக்கள் விரும்புகின்றனர். பிறிதொன்றுக்குக் கொடியாக வளைந்திருக்க விரும்பவில்லை.” இவ்வாறு இரணைமடுவில் நடைபெற்ற “பாதுகாப்பான உணவு மற்றும் நிலையான விவசாயம்” என்ற சிறிலங்கா அரசின் வேலைத்திட்டத்தின் ஆரம்ப விழாவில் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் ஆற்றிய வரவேற்புரையில் குறிப்பிட்டுள்ளார். சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன சிறப்பு அதிதியாகக் கலந்து கொணட விழாவில் விக்னேஸ்வரன் ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகளை இங்கு தருகிறோம்:

இன்று “பாதுகாப்பான உணவு மற்றும் நிலையான விவசாயம்” என்ற எண்ணக் கருவின் நடைமுறைப்படுத்தல் நிகழ்வாகவே இந்த உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டம் இரணைமடுவிலிருந்து தொடக்கப்படுகின்றது. அதனை நாம் வரவேற்கின்றோம். உள்நாட்டில் உற்பத்தியை ஊக்குவிக்கவும், சுயநிறைவை ஏற்படுத்தவும், சேதன உரத்தை வெகுவாக மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தவும், உற்பத்தித் திறனை மேம்படுத்தவும் இன்னோரன்ன காரணங்களுக்காகவும் இந்த நிகழ்ச்சியை வரவேற்கின்றோம்.

பல வருட காலமாக பலரால் மறக்கப்பட்டிருந்த அல்லது மறைக்கப்பட்டிருந்த எம் மக்கள் மத்தியில் இருந்து தேசிய ரீதியான ஒரு நிகழ்வை இன்று முடுக்கி விடுவது வருங்காலத்தில் பலமான தேசிய ஒருமைப்பாட்டையும் நிலையான நிலைமைப் பாட்டையும் உண்டு பண்ண உதவும் என்று எதிர்பார்க்கின்றோம்.

பெரும்பான்மையின மக்கள் மரமாகவும் சிறுபான்மையின மக்கள் கொடியாகவும் இணைந்து வாழ்வதே தேசிய ஒருமைப்பாடு என்ற எண்ணம் இந்நாட்டில் பலர் மத்தியிலும் இருந்து வந்திருக்கின்றது. வடகிழக்கு மாகாண மக்கள் அதை ஏற்க வில்லை. ஏற்கவும் முடியாது. காரணம் சரித்திர ரீதியாக பன்னெடுங்காலமாகத் தமிழ்ப் பேசும் வடகிழக்கு மாகாண மக்கள் இந்தப் பிரதேசங்களில் பெரும்பான்மையின மக்களாகவே வாழ்ந்து வந்திருக்கின்றார்கள், வருகின்றார்கள். சென்ற நூற்றாண்டின் முதற் பகுதியில் சிங்களத் தலைவர்களாகிய சேர் ஜேம்ஸ் பீரிஸ் அவர்களும் திரு.ஈ.ஜே.சமரவிக்ரம அவர்களும் இதை வலிந்து குறிப்பிட்டிருந்தார்கள். வடக்கு கிழக்கில் தமிழ்ப் பேசும் மக்கள் எப்பொழுதுமே பெரும்பான்மையினராக வாழ்ந்து வந்துள்ளார்கள் என்று கூறியிருந்தனர். எனவே மதிப்புடனும் மரியாதையுடனும் எம்மக்கள் வாழ வேண்டும் என்றால் எம்மை அவ்வாறான சிறப்பியல்புகளுடன் ஏற்க வேண்டும். இரு மரங்கள் ஒருமித்து பக்கம் பக்கமாக வாழ்தலையே எம்மக்கள் விரும்புகின்றனர். பிறிதொன்றுக்குக் கொடியாக வளைந்திருக்க விரும்பவில்லை.

மதிப்புடன் வாழ்தல் என்பது நிலையான வாழ்க்கைக்கு வித்திடும் சிறப்பியல்புகளில் ஒரு அலகே. தேவைகளில் இருந்து விடுபடல், பயத்தில் இருந்து விடுபடல் ஆகியனவும் நிலையான வாழ்க்கைக்கு வித்திடும் மிக முக்கிய அம்சங்கள் ஆவன. Freedom from want, freedom from fear, freedom to live in dignity as mentioned in the Historic UN Document – In Larger Freedom

ஜனநாயக வாழ்வு முறையில் தேவைகளில் இருந்து சுதந்திரம், பயத்தில் இருந்து சுதந்திரம், மதிப்புடன் வாழ்தல் என்பன எல்லா மக்களுக்குந் தேவையானவை. சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கருத்திது. இவற்றைக் கூறுபோட்டு கையளிப்பது நன்மை பயக்காது என்பதே எமது கருத்து. பொருளாதாரப் பாதுகாப்புடன் பயத்தில் இருந்து பாதுகாப்பும் எமது மக்களுக்குத் தேவை. மதிப்புடன் அவர்கள் வாழவும் வழிவகுக்க வேண்டும்.

ஆகவே உணவுப் பாதுகாப்பு கொடுக்கும் போது மக்கள் பாதுகாப்பும் அவர்களுக்குத் தேவை. இல்லையென்றால் வலிந்து வைத்து வாழ்வாதாரங்கள் வழங்குவது போல் ஆகிவிடும். பயத்தை ஏற்படுத்தி, வலிந்து தம்வசம் வைத்து, வாழ்வாதாரங்கள் கொடுத்து எம்மக்களை அடிமைகள் போல் நடத்தும் சந்தர்ப்பங்கள் அண்மைக் காலங்களில் எமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இது வரை காலமும் எம்மக்களிடையே அவர்களின் தேவைகள் பற்றிய ஒரு முழுமையான சகல துறைகள் சம்பந்தமான மதிப்பீடு, சகல மட்டத்திலும், முக்கியமான சர்வதேச உதவி நிறுவனங்களின் உதவியுடன் செய்யப்படவில்லை. 2003ம் ஆண்டில் இது நடைபெற்றது. உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவற்றின் உதவியுடன் ஐக்கிய நாடுகள் நிறுவனம் இதைச் செய்தது. ஆனால் அதன்பின் நடைபெறவில்லை. இது நடைபெற வேண்டும். நாம் அண்மையில் ஐக்கிய நாடுகளிடம் கேட்டதோ சகல துறை சகல மட்டத் தேவை பற்றிய ஆய்வறிக்கை. எமக்குக் கிடைத்ததோ மனித நல ஆய்வறிக்கை மட்டுமே. அதுவும் எம்மக்களின் சகஜ வாழ்வுக்கு முட்டுக் கட்டையாக இருக்கும் காரணிகள் பல திடமாக அதில் ஆராயப்படவில்லை.

எமது காணிகள் மற்றோரின் வசம்; உரியவர்கள் உட்செல்ல முடியாத நிலை வாழ்வாதாரங்கள் வழங்காத நிலை. போருக்குப் பின்னரான விரக்தி நிலை என்பன அதில் ஆராயப்படவில்லை. சமூகத்தில் போரின் தாக்கங்களை புரிந்து கொள்ள நாம் எத்தனிக்கவில்லை. வறுமை நிலை போக்க வழி வகைகள் ஆராயப்படவில்லை. மக்கள் பிரதிநிதிகளுடன் சேர்ந்து மக்கள் தேவைகளை ஆராய முற்படவில்லை. இது யுத்தம் முடிவடைந்த உடனேயே நடைபெற்றிருக்க வேண்டும்.

அதற்குப் பதிலாக மேலிருந்து தமக்கு உகந்ததைத் தரவே மத்திய அரசாங்கம் விரும்புகின்றது. கீழ் மட்டத்தில் மக்களிடம் இருந்து எங்கள் தேவைகளை அறிந்துணர்ந்து செயல்ப்பட விரும்பவில்லை. மக்கள் பிரதிநிதிகளைப் புறக்கணித்தே மக்கள் சேவையில் ஈடுபட மத்தியானது விரும்புகின்றது.

2003ம் ஆண்டில் நடைபெற்றது போல முழுமையான தேவைகள் சம்பந்தமான ஆய்வறிக்கைகளைப் பெற்று மாகாண அபிவிருத்திக்கான மேன்மைத் திட்டம் ஒன்றை உருவாக்கி மக்களின் கருத்துக்களைச் செவிமடுத்து அவற்றை நடைமுறைப்படுத்த விழைந்தால் நாம் அதற்கு ஒரு போதும் தடையாக இருக்க மாட்டோம். மாறாக எமது தற்போதைய நிலையை அறிய விரும்பாமல் எமது பாதிப்புக்களை பல மட்டங்களிலும் ஆய்வு செய்ய எத்தனிக்காமல், முழுமையான முன்னெடுப்புகளை முடுக்கிவிட மனம் இல்லாமல், மனித தேவைகளின் ஒரு அங்கத்தை மட்டும் வலியுறுத்தி இந்த நிகழ்வு நடைபெறுவது எமக்கு ஏமாற்றத்தை அளிக்கின்றது.

இரணைமடு போன்ற குளங்களின் வரம்புகளை உயர்த்தினால்த்தான் அதில் உள்ள நீர்மட்டம் உயரும். தொடர்ந்து போதிய நீர் விடப்பட்டால் வேளாண்மை செய்பவர்களின் நெற்கதிர்கள் உயர்ந்து வளர்வன. நெற் பயிர் வளர்ந்தால் மக்கள் மகிழ்வடைவார்கள். அதன் பின் மக்களின் உயர்வால், அவர்களின் மகிழ் வாழ்க்கையால், அரசனானவன் உயர்வான். மக்களை மகிழ்வுடன் வாழ வழி அமைத்தால்த்தான் மன்னன் கீர்த்தி பெறுவான் என்று ஒளவையார் சொல்லி வைத்தார்.

நிர்வாகத்தின் அடிப்படைத் தத்துவத்தை இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் எமது தமிழ்த்தாய்க் கவிஞர் கூறிச் சென்றுள்ளார். அதுமட்டுமல்ல. உலகத்தின் உத்தமக் கவிஞர்களில் ஒருவரான திருவள்ளுவர் 2000 வருடங்களுக்கு முன்னர் கூறிச் சென்றதையும் இத்தருணத்தில் நினைவூட்ட விரும்புகின்றேன்.

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்
மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்”
என்றார்.

அதாவது உழுது வாழ்ந்து உண்பவரே உரிமையுடன் வாழ்பவர். மற்றவர்கள் பிறரைப் பணிந்து சென்று வாழ்பவர்கள் என்று கூறி தன்னம்பிக்கையை வலியுறுத்தி, உழவனின் சிறப்பை உலகத்துக்கு உணர்த்தினார் வள்ளுவர்.