தன் வலிமையை இனங்காட்டும் தமிழர் தேசியம்.

878

 

 

இது அலசுவாரத்தின் நூறாவது தொடர். நான் சில அத்தியாய இலக்கங்களைக் குறிக்க மறந்ததால், சில அத்தியாயங்கள் மீண்டும் அதே இலக்கங்களிலேயே வெளிவந்திருக்கின்றன. அப்படிப் பார்த்தால் பிரசுரமான அத்தியாயங்கள் நூற்றிலும் அதிகம். அந்தத் தவறுகளுக்கு நானே முழுப்பொறுப்பு. ஏனெனில் கம்பியூட்டரில் இருந்து பைலை எடுத்து முன்பு எழுதியவைகளை அழித்துவிட்டு புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கும்போது முகப்பில் அத்தியாய இலக்கத்தை மாற்ற மறந்துபோனதால் இது நேர்ந்துவிட்டது. ஒரு பேப்பர் நிர்வாகத்தினரிடமும் வாசகர்களிடமும் அதற்காக மன்னிப்பைக் கேட்டுவிட்டு, இந்தத் தொடரை அவ்வப்போது பாரட்டியும் சில சமயங்களில் விமர்சித்தும் ஊக்கப்படுத்திய ஒரு பேப்பர் வாசகர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவிப்பதோடு, இந்தத் தொடரைத் தொடர்ச்சியாகப் பிரசுரித்துக் கொண்டிருக்கும் ஒரு பேப்பர் நிர்வாகத்தினருக்கும் எனது அன்பான வந்தனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அலசுவாரம் வெறும் மன ஆதங்கத்தின் வெளிப்பாடுதான். தீவிர ஆய்வுகளுக்கூடாக வெளிப்பபட்ட தகவல் பரிமாற்றமல்ல. இதற்குக் காரணம் அவ்வப்போது இடம்பெற்ற சமகால நிகழ்வுகளின் அடிப்படையில் பெரும்பாலான அத்தியாயங்கள் எழுதப்பட்டதேயாகும். வாசித்த பத்திரிகைச் செய்திகள், இணையச் செய்திகள், கொஞ்சமிருந்த அரசியல், வரலாற்று ஞாபகங்கள், அனுபவப் பதிவுகள் என்று பலவற்றையும் கலவையாக்கி வாசகர்களுக்கு கொடுக்கப்பட்டவோர் மசாலாத் தொடருக்கு அலசுவாரமென்று பெயர் கொடுக்கப்பட்டதே அதன் காரணமாகத்தான். மட்டக்களப்பில் அலசுவாரமென்பது கருத்தற்ற அலம்பலைக்குறிக்கப் பாவிக்கப்படும் சொல். ஆனாலும் இதை வாசிப்பதில் ஒரு பேப்பர் வாசகர்கள் சிலரிடம் ஆர்வமிருந்திருக்கிறது.

எதை எப்படி எழுதினாலும் எமது இதயநாதமான தமிழ்த் தேசியத்தைச் சுற்றிச்சுற்றியே கட்டுரைகள் வரையப்பட்டன. அதுதான் எதிர்காலத்திலும் தொடரும். “தமிழரின் தாகம் தழிழீழத் தாயகம்” என்னும் மந்திர உச்சாடணம் கடைசிவரை நிறுத்தப்படக் கூடாததாக எம் உள்ளத்தில் ஒலி செய்து கொண்டேயிருக்க வேண்டுமென்னும் வேணவாவுடனேயே அலசுவாரம் ஆரம்பிக்கப்பட்டது. எமது தாயகத்துக்கான ஜீவமரணப் போராட்டம் நடைபெற்ற காலங்களிலும் அது சற்றுத் தேக்க நிலையை அடைந்துவிட்ட தற்போதைய காலத்திலும் தமிழர் தேசியத்திற்கான எமது குரலை நாம் நிறுத்திவிடாது தொடர்வோம். என்றோ ஒருநாள் எமக்கென்றோர் தாயகம் இவ்வுலகில் நிச்சயம் மலரும்.

முன்பெல்லாம் சற்று இளக்காரமாகத் தெரிந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தற்போதெல்லாம் மிகவுயர்ந்தவோர் அன்னையாகப் புலப்படுகிறார். முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்காக சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்த வேண்டுமென்றும், இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படவேண்டும் என்றும் மத்திய அரசைக் கோரும் அதிரடித் தீர்மானத்தைச் சட்டசபையில் நிறைவேற்றிய கையோடு, முருகன், சாந்தன் பேரறிவாளன் ஆகியோரது மரணதண்டனைகள் நிறுத்தப்படவேண்டுமென்னும் தீர்மானத்தையும் ஏகமனதாக நிறைவேற்றிய மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சரிவரப் புரிந்துகொள்ளாமல் இருந்தது மிகப் பெரிய தவறாகப் படுகின்றது.

ஈழத்தமிழர் மீதான இந்தியாவின் ஏதேச்சதிகாரப் போக்கைத் தக்க சமயத்தில் மட்டம் தட்டி, தமிழர்
தேசியத்தின் வலிமையைக் காட்டியிருக்கிறார் முதல்வர் அம்மா. செத்தவன் எந்தக் கொம்பனாக இருந்தாலும் பரவாயில்லை, அதற்காக அப்பாவித் தமிழர்களைப் பலிக்கடாக்களாக்கி பிராயச் சித்தம் தேடச் சற்றேனும் அனுமதிக்கமாட்டேன் என்று, ஆதரவற்றுக் கிடந்த எம்மையெல்லாம் அள்ளி அணைத்தெடுத்த அன்புத்தாயாக அன்னை ஜெயலலிதா இன்று உயர்ந்து நிற்கிறார். நிச்சயமாக இந்த இரண்டு தீர்மானங்களாலும் மத்திய அரசு சற்று அதிர்ந்து போய்த்தான் இருக்கிறது.

ஏனோதானோ மனப்பான்மையில் எமது பிரச்சனைகள் தொடர்பாக மிகவும் மெத்தனமான போக்கைக் கடைப்பிடித்த மத்திய கொள்கை வகுப்பாளர்கள், சீனாவை அண்டவிடாது பாதுகாத்து, பிராந்திய நலனைத் தமது தலைமையில் பேணவேண்டுமென்னும் பயப்பிராந்தியைக் கிளப்பி அதையே சாட்டாக வைத்து இலங்கைத் தமிழரைத் தேடுவாரற்ற அனாதைகளாக்கிவிடச் செய்த முயற்சிகள் தற்போது தடங்கலுக்குள்ளாகியுள்ளன. அந்தவகையில் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் தொடர்பாகவும்; மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாகவும் சர்வதேசம் எடுக்க முயலும்; நடவடிக்கைகளுக்குத் தப்பி இந்தியாவில் மறைந்துகொள்ள இலங்கையெடுக்கும் நடவடிக்கைகளுக்கு இனிமேலும் இந்தியா ஆதரவு கொடுக்குமா என்பது சந்தேகமே. தமிழக அரசின் சமீபத்திய நகர்வுகள் மத்திய அரசைத் தடுமாறவைத்திருப்பதை யாரும் மறுப்பதற்கில்லை. நிலைமை அப்படி மாற்றப்பட்டுள்ளது. கருணாநிதி காலத்தில் இந்தத் துணிகரம் இருக்கவில்லை. எமக்காகவும் முழு உலகத் தமிழர்களுக்காகவும் தனது குரலை என்றும் எப்போதும் உயர்த்தி நிற்கும் தமிழ்நாட்டிற்கும் அதனை இன்று வழிநடத்திச் செல்லும் மாண்புமிகு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்போம்.

தமிழர் தேசியத்தின் ஊற்றுவாய் இங்கேதான் இருக்கிறது. நாம் முதலில் இந்தியர்கள் அதன்பிறகு தான் தமிழர்கள் என்ற கருத்தற்ற வாதத்திற்குச் சாவுமணியடித்து நாம் முதலில் தமிழர்கள் அதன் பிறகுதான் இந்தியர்கள் என்னும் யதார்த்தவாதம் இப்போது தமிழ்நாட்டில் சற்றுத் தலைதூக்கியிருக்கிறது.

திருவாளர்கள் வைகோ, சீமான், ராமதாஸ், விஜயகாந்த், ஐயா நெடுமாறன் போன்ற செல்வாக்குமிக்க தலைவர்களெல்லாம் முருகன் சாந்தன் பேரறிவாளன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுத்தார்கள். பலர் சட்டரீதியாக அந்தத் தண்டனையை ரத்துச் செய்ய தம்மால் முடிந்தவரை பாடுபட்டர்கள். தற்போது இந்திய ஜனாதிபதியாலேயே கருணைமனு நிராகரிக்கப்பட்ட மூவருக்கும் தண்டனையை நிறைவேற்ற வேண்டிய காலம் ஒருமாதம் ஒத்திப் போடப்பட்டுள்ளது. கழுத்தை இறுக்கிக் கொண்டிருக்கும் தூக்குக் கயிறு இன்னமும் அங்கேதான் இருக்கிறது அது முற்றாக கழற்றி வீசப்படவில்லை. ஆனாலும், முதல்வர் ஜெயலலிதா அந்தச் சுருக்குகளின்மீது அடித்திருக்கும் ஆணிதான் அவற்றை இறுக விடாமற் செய்யப் பேருதவி செய்யவேண்டும்.

தமிழக சட்டசபையின் ஏகமனதான ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ள அந்த மரணதண்டனைகளுக் கெதிரான தீர்மானமும் இந்திய ஜனாதிபதியிடம் கொடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளும் சாமான்ய மானவைகளல்ல. சுமார் ஏழுகோடித் தமிழர்களின் உணர்வு பூர்வமான வேண்டுகோள். 115 கோடிக்கும் அதிகமான மக்கட் தொகையைக் கொண்ட இந்தியா என்னும் பிரமாண்டத்தினுள் அதன் 28 மானிலங்களுள் ஒன்றான, கிட்டத்தட்ட 7.25 கோடி மக்கட் தொகையை மட்டுமே கொண்ட தமிழகத்தின் வேண்டுகோளை இந்திய நடுவண் அரசு புறக்கணிக்குமா அப்படிப் புறக்கணிக்க முடியுமா? என்பதுதான் இன்றுள்ள மில்லியன் பவுண்ட் கேள்வியாயிருக்கிறது. காலம்தான் இதற்குப் பதில் சொல்லவேண்டும்.

இங்குதான் தமிழ்த் தேசியத்தின் முக்கியத்துவம் தனது இடத்தைப் பிடிக்கிறது. ஒரு பெரிய உபகண்டத்தின் மிகக் குறைந்தவோர் சிறுபான்மையினராக அல்லாமல், தமக்கெனத் தனியான பண்பாடு, கலச்சாரம் உட்படப் பொருளாதார வலிமையுமுடைய புவியியல் எல்லைகளைக் கொண்ட மானிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. அதன் ஆளுமையும் செல்வாக்கும் வங்காள விரிகுடாவைக்கடந்து தமிழீழம் வரை, அதற்கும் மேலாய் முழு இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என்று விரவிச் செல்கிறது. ஆக மொத்தத்தில் இங்கே மக்கட் தொகையும் புவியியல் பரப்பளவும் முக்கியத்துவம் பெறாமல் தமிழ்த் தேசியத்துவமே தமிழ் நாடென்னும் மானில அரசொன்றின் தகுதியைத் தீர்மானிக்கிறது. அந்தத் தகுதி எப்போது புறக்கணிக்கப்படுகிறதோ அப்போது தமிழ்நாடு கொதித்தெழும். இதனை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இந்தியாவிலும் இலங்கையிலுமுள்ள சிலர் (அவர்களை முட்டள்களென்று கூறினாலும் தகும்) தமிழ் நாட்டினது தழிழர் தேசியத்துவத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்து எடைபோட முற்படுகின்றனர். குறிப்பாக சோ ராமசாமி, சுப்பிமணியம் சுவாமி போன்ற இந்தியர்களும், இலங்கையிலுள்ள சில சிங்கள அரசியல் வாதிகளும் இந்தப் பிழையான கணிப்பீட்டைக் கொண்டிருப்பது அவ்வப்போது அவர்கள் விடும் அறிக்கைகளின் மூலம் தெளிவாகத் தெரிகிறது.

பாக்கு நீரிணையின் இருகரைகளிலும் தனது செல்வாக்கை விரிவுபடுத்தி அதற்கும் அப்பால் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளுட்பட தென்னாபிரிக்காவரை காலூன்றி நிற்கும் தமிழர் தேசியவுணர்விற்கு அதன் அரசியல் அபிலாசைகளுக்கு வடிவமும் உயிரும்; கொடுத்தவர்கள் ஈழத்தமிழர்களாகிய நாங்களே. இறுதியில் மூர்ச்சையாகிப் போனோம். இப்போது தமிழனுக்குத் தன்தேசமென்று கூறிக்கொள்ளவோர் நாடில்லை. இலங்கையில் தமிழர் தேசியம் இனித் தேவைதானா என்று தமிழர்களே சிந்திக்கத் தலைப்பட்டிருக்கிறார்கள்.

மூன்று வருடங்களுக்கு முன்னர் எம்மினத்தவரின் தேசமென்று உலகத் தமிழர் அனைவரும் கூறிக்கொள்ளவோர் நாடு எமக்கிருந்தது. நிச்சயமாக இருந்தது. தனக்கெனச் சுயாதீனமான அனைத்துக் கட்டமைப்புகளுடனும் அது தன்னை வளர்த்தெடுத்தது. ஆனால் நயவஞ்சகத்தினால் அது இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டுப் போயிற்று. அதனைத் தப்பிப்பிழைக்க விடாமல் கழுத்தை நெரித்துக் கொன்றது இந்திய வல்லாண்மை வாதம். அதற்கான முக்கிய காரணம் அந்த நாட்டின் பெருந்தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்டமைதான்.

ஆனால் இன்று அந்தக் கொலைக்காகக் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்குக் கயிற்றினால் சுருக்குப் போடப்பட்டு நிற்கும் அப்பாவி உயிர்கள் மூன்றை எமது தமிழர் தேசியுவுணர்வு காப்பாற்ற முயல்கிறது. தமிழ்த் தேசியம் தன்னை யாரென்று இந்திய அரசுக்கும் முழு உலகுக்கும் உணர்த்தி நிற்கிறது. நாம் தோற்றுப் போகவில்லை வெல்வோம்.

தொடருவம்…