தமது குடிமக்கள் விடயத்தில் பிரித்தானிய அரசின் பாராமுகம்

829

பிரித்தானிய குடியுரிமை பெற்ற ஐந்து தமிழர்கள் சிறிலங்காவின் சிறைகளில் நீதி விசாரணைகள் எதுவுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சுக்கு நெருக்கமானவர்களினால் வெளியிடப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களுள் ஒருவர் இவ்வருடம் ஒகஸ்ட் மாத முற்பகுதியில் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட திருமதி. வாசுகி கருணாநிதி என்ற இரண்டு பிள்ளைகளின் தாயார். மேற்கு லண்டன் பகுதியை வதிவிடமாகக் கொண்ட திருமதி. கருணாநிதி இதுவரை நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படவில்லை.

சிறிலங்காவின் அதிமோசமான பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் அடிப்படையில், வழமையான நீதிக்குப் புறம்பான வகையில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற போதிலும், தண்டனைக்குரிய எந்தவொரு குற்றச்சாட்டும் இவர்கள் மீது சுமத்தப்பட்டாதகத் தெரியவில்லை. திருமதி. கருணாநிதியின் கைது விடயமாக பிரித்தானிய வெளியுறவுத்துறை பணியகத்துடன் ஒரு பேப்பர் தொடர்புகொண்டபோது, அவர்களிடமிருந்து விபரங்கள் எதனையும் அறிய முடியவில்லை. ஆனால் அவரை விடுவிப்பது தொடர்பில் கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகம் சில நடவடிக்கைகளை  எடுத்துள்ளதாக தெரியவருகிறது.

தடுத்து வைக்கப்படடுள்ளவர்கள் விடயத்தில், சட்டபூர்வமான நடவடிக்கை எடுப்பதற்கு அவர்களது உறவினர்கள் அச்சப்படுகிறார்கள். அவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள், உயிரச்சுறுத்தலுக்கு உள்ளாவர்கள்,  மற்றும் அவர்களது விடுதலை மேலும் தாமதிக்கப்படும் போன்ற காரணங்களுக்காக இவ்விடயத்தை இரகசியமான முறையில் வைத்திருக்கவே அவர்கள் விரும்புகிறார்கள். சிறிலங்கா அரசாங்கத்தின் கடந்த கால நடவடிக்கைகளை நோக்குமிடத்து இவ்வாறான அச்சம் நியாயமானதாகவே உள்ளது.

இந்நிலையில் தடுத்துவைத்திருப்பவர்கள விடுவிக்க அவர்களுக்கு நெருக்கமானவர்கள் சட்டத்திற்கு புறம்பான வழிகளில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனை வாய்ப்பாக பயன்படுத்தி, சிறிலங்காவின் அதிகாரிகளும், அவர்களுடன் இணைந்து செயற்படும் “தலையாட்டிகளும்”, வெளிநாட்டில் உள்ள சில தமிழ் முகவர்களும் பணமீட்டி வருகிறார்கள்.

இவ்விடயத்தில் தமது இராசதந்திர வழிமுறைகளினூடாக அழுத்தங்களை பிரயோகிக்கக் கூடிய நிலையில் உள்ள பிரித்தானிய வெளியிறவுத்துறை மெத்தனப்போக்கை கடைப்பிடிப்பது இங்கு வாழும் தமிழர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.