( யூன் 19ம் திகதி சென்னை ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளும் செயற்பாட்டாளருமான திரு. நிர்மானுசன் பாலசுந்தரம் இணைய வழி காணொளி வழியாக ஆற்றிய உரையின் சுருக்கத்தினை இங்கு வெளியிடுகிறோம்)
வரலாற்று முக்கியத்துவமான ஒரு காலகட்டத்திலே நாங்கள் சந்திக்கின்றோம். வரலாற்று முக்கியத்துவமான காலகட்டம் என குறிப்பிடுவதற்கு பல்வேறு பரிமாணங்கள் உண்டு. அவற்றில் முக்கியமானவையாக, தமிழ் நாட்டிலே ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தொடரும் அலை.இத்தகைய அபிலாசைகளை கவனத்திற்கொண்டு அதற்கு ஆதரவாக செயற்படும் தமிழ்நாடு.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான அ.தி.மு.க அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் ஈட்டிய மகத்தான வெற்றி. வெற்றிக்குப் பின்னரும், முதலமைச்சர்அவர்கள் ஈழத்தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட இனஅழிப்பு தொடர்பாக சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும், தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளை அறிவதற்காக ஐ.நா மேற்பார்வையில் பொதுசன வாக்கெடுப்பு நடாத்த வேண்டும் என மத்திய அரசுக்கு விடுத்து வரும் கோரிக்கை போன்றவை இந்த பரிமாணங்களில் முக்கியமானவை.
இதேவேளை, இந்தியாவில் இந்திராகாந்தி தலைமையில் மத்தியில் பலமான ஆட்சி உருவான போது, சிறீலங்காவில் ஜே.ஆர். ஜெயவர்த்தனதலைமையில் ஒரு பலமான ஆட்சி நிலவியது. அத்தகைய சூழலில் அன்றைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவர்கள் தலைமையிலான மத்தியஅரசு ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிறீலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் அடக்குமுறைகளுக்கு எதிராக ஒப்பீட்டளில் இறுக்கமான நடவடிக்கைகளை எடுத்தது. சுமார் மூன்று தாசப்த காலங்களுக்குப் பின்னர் இந்தியாவிலும் சிறீலங்காவிலும் பலமான ஆட்சியும் ‘இறுக்கமான’ முடிவுகளையும் எடுக்கக்கூடிய தலைவர்களும் ஆட்சியில் இருக்கிறார்கள். ஆதலால், எதிர்வரும் ஐந்து வருடங்கள் என்பது மிக முக்கியமானது ஈழத்தமிழர்களுக்காக போராடும் தமிழகத்திற்கும், ஈழத்தமிழருக்கும் முக்கியமான காலகட்டம். இன்னொருவகையில் கூறுவதானால், இதனை make or break காலகட்டம் எனக் கூறலாம்.
தமிழகத்தின் வகிபாகம்
இத்தகைய தருணத்திலே, ஈழத்தமிழர்கள் நீதியையும், இறையாண்மையையும் உரிமைகளையும் அடைவதற்குரிய செயற்பாடுகளை இந்திய மத்திய அரசு முன்னெடுப்தற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை தமிழகம் மேற்கொள்ள வேண்டும். அதற்குரிய பலத்தை தமிழகம் கொண்டிருப்பதாக நாம் உணர்கிறோம். ஆதலால், அந்தபலத்தையும் வளத்தையும் தமிழகம் அறிவுபூர்வமாகவும் மதிநுட்பத்துடனும் பயன்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
தமிழகத்தின் ஆக்கபூர்வமான நகர்வுகளாலேயே இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையை ஈழத்தமிழர்களுக்கு ஆதரவானதாக மாற்ற முடியும். இந்த பொறுப்பை செய்வதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகளும் அமைப்புகளும் தமக்குள் உள்ள வேறுபாடுகளை கடந்து ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பணியாற்றுவதற்காக ஒரு பொதுத் தளத்திற்கு வரவேண்டும் என அன்புரிமையோடு வேண்டிக்கொள்கிறோம். அத்துடன், தமிழகத்தை கடந்து இந்தியாவிலுள்ள ஏனையமாநிலங்களுக்கும் ஈழத்தழிழர்கள் எதிர் நோக்குகின்ற இனஅழிப்பு மற்றும் அவர்களின் போராட்டத்தில் உள்ள நியாயப்பாடுகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயற்பாடுகளை தமிழகம் வினைத்திறனுடன் மேற்கொள்ள வேண்டும்என எதிர்பார்க்கிறோம்.
கடந்தகாலங்களில் நீங்கள் புரிந்த அர்த்தம் பொதிந்த செயற்பாடுகள் எமக்கு ஆறுதலையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது. அதற்காக இத்தருணத்தில் எங்களது நன்றிகளை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். இன்று எங்களுடையநம்பிக்கையாக நீங்கள் மாறியிருக்க்கிறீர்கள். எங்களுடைய பலமாக நீங்கள் மாறீயிருக்கிறீர்கள். இந்தவகையில், எமது இருப்பிற்கான போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் வரலாற்றுப் பொறுப்பும் தார்மீகக் கடமையும் உங்களிடம் உள்ளதாக நாங்கள் எண்ணுகிறோம்.
தமிழர்களின் பலம்
தமிழகத்தினதும், இலங்கைத் தீவீனதும் அமைவிடங்கள் பூகோள அரசியலிலே கேந்திய முக்கியத்துவம் மிக்கதாக மாறியிருக்கின்றன. பூகோள அரசியலிலே முக்கியத்துவம் மிக்கதாக திகழும்இந்துசமுத்திரத்தின் இதயப் பகுதியாக தமிழகத்தினதும், இலங்கைத் தீவினதும் அமைவிடங்கள் உள்ளது என்று சொன்னால் மிகையாகாது. பொருளாதராரமும் பூகோள அரசியலும் உலகின் தலைவிதியை தீர்மானிக்கின்றது. சர்வதேச பொருளாதத்தினதும், பூகோள அரசியலினதும் போக்கைதீர்மானிப்பதில் இந்து சமுத்திரம் முக்கியத்துவம்வகிக்கிறது. ஆதலால், எமது பலத்தையும், பூகோள அரசியலில் பலம் மிக்க நாடுகளினது நலன்களையும் சரிவர எடைபோட்டு எமது முன்னோக்கிய நகர்வுக்கான திட்டங்களை தீட்டி அவற்றை பொறுப்புடன் அமுல்படுத்த வேண்டும்.சவால் மிகுந்த தருணத்திலும், எமக்கான சந்தர்ப்பங்களும் உள்ளது அதனை சரிவர பயன்படுத்துவதாலேயே, எமது இலக்குகளை எம்மால் வென்றெடுக்க முடியும்.
சமநேரத்தில், மத்தியில் எமக்கிருக்கின்ற சாதகபாதகங்களை ஆராய்ந்து, எமது இலக்குக்கு அமைய காய்களை நகர்த்த வேண்டும். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான மாற்றங்களை உருவாக்க வேண்டும். அவ்வாறு மாற்றங்களை உருவாக்கு முடியுமாக இருந்தால், அது ஈழத்தமிழர்களின் இன்னல்களைகளையும் திறவுகோலாக மாறும்.
இதற்கான, மத்தியில் அல்லது மத்தியோடு பயன்மிக்க உறவுகளை பேணக்கூடிய ஈழத்தமிழருக்குசார்பான சக்திகளை கூட்டிணைத்து பணியாற்ற வேண்டும். மத்தியில் பலமான ஆட்சியில் இருந்தாலும், ராஜ்ய சபாவில் பா.ஜ.கவுக்கு தேவையாகவுள்ள அ.தி.மு.க இன் ஆதரவும், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் பிரதமர் மோடிக்கும் உள்ள நட்புறவும் ஒரு சாதகமான விடயம். அதனை ஈழத்தமிழருக்கு ஆதரவாக எவ்வாறு மாற்றுவது என சிந்தித்து செயற்பாடுகள் முன்னெடுக்க வேண்டும்என நாங்கள் எதிர்பார்க்கிறோம் வெற்றிகரமாக இந்த விடயங்கள் நகர்த்தப்படுமாக இருந்தால் அது எமக்கான பலமாக மாறும்.