ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை ஆணைக்குழுவின் 19வது கூட்டத்தொடர் இம்மாதம் 27ம் திகதி ஆரம்பமாகி மார்ச் மாதம் 23ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தொடரில் இலங்கைத்தீவில் நடைபெற்ற போரக்குற்றங்கள்பற்றி ஆராயப்பட்டு சர்வதேச விசாரணைக்கான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்புடன் உலகத் தமிழர்கள் காத்திருக்கிறார்கள். மறுபுறத்தில் இத்தகைய விடயங்கள் நடந்தேறாமல் தடுப்பதில் சிறிலங்கா அரசாங்கத்தின் பரப்புரை இயந்திரம் மும்மரமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஒரு வகையில் பார்த்தால், தாம் பணம் கட்டிய (அல்லது விரும்புகிற) குதிரை, பந்தயத்தில் வெற்றி பெறுமா என்று தெரியாத ஏக்கத்துடன் கையை பிசைந்து கொண்டிருப்பவர்களின் நிலையில்தான் தமிழர்கள் இருக்கிறார்கள். ஏனெனில் குதிரை பற்றிய சில தகவல்கள் எம்மிடமிருக்கிறது அது முன்னர் வென்றது பற்றியும் செய்திகளில் படித்திருக்கிறோம், ஆனால் இந்தத்தடவை அது வெல்லுமா என்பது மட்டுமல்ல பந்தயத்தில் ஓடுவதற்கு அனுமதியளிக்கப்படுமா என்பதுகூட தெரியாத நிச்சயமற்ற நிலையே காணப்படுகிறது. இந்நிலைக்கு தமிழர்கள் மீது குற்றம் சொல்ல ஒன்றுமில்லை, “சர்வதேச நீதி” (international justice) என்பது உள்நாட்டுச் சட்டங்கள் போல் வெறுமனே நீதி சார்ந்த விடயமல்ல. இது முழுக்க முழுக்க முடிவெடுக்கக்கூடிய நாடுகளின் நலன் சார்ந்தது. இங்கு தீர்மானிக்கும் சக்திகளாக, சர்வதேச சமூகம் எனக் குறிப்பிடப்படுகிற உலகின் வல்லாதிக்க நாடுகளே இருக்கின்றன. ஆகையால் இவை எப்படி சர்வதேச நீதியை கையாளும் என்பதனை எந்த சட்டவல்லுனராலும் எதிர்வு கூறமுடியாது. வேண்டுமானால் இவ்விடயத்தில் நிபுணத்துவம் பெற்ற அரசியல் ஆய்வாளர்கள் கருத்துக்கூற முடியும்.
மேலோட்டமாகப் பார்த்தால், ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்வைக்கு முரணான வகையில், உலகில் ஏதாவது ஒரு நாட்டிலாவது மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்கள் நடைபெறுகிறபோது, சர்வதேச நாடுகள் தலையிட்டு மனித அவலத்தை போக்கும் வகையில் சர்வதேச நீதி பயன்படுத்தப்படுவதாக தோன்றலாம். இதன் அடுத்த நிலையில் போர்க்குற்றங்களில், மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டோர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவர். இது பொதுவான எதிர்பார்ப்பே தவிர இவ்வாறு நடந்தேறும் என யாரும் உத்தரவாதம் கொடுக்க முடியாது.
சர்வதேச நீதி தொடர்பில் அண்மைய சம்பவம் ஒன்றைப்பார்ப்போம். 2007 ம் ஆண்டு கென்யா நாட்டில், அங்கு நடைபெற்ற அதிபர் தேர்தலைத் தொடர்ந்து அத்தேர்தலில் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கு இடையில் ஆரம்பித்த மோதல் இனக்கலவரமாக உருவெடுத்தது. இக்கலவரங்களில் ஆயிரத்துக்கும் சற்று அதிகமான எண்ணிக்கையில் மக்கள் கொல்லப்பட்டனர். உடமைகள் அழிக்கப்பட்டன. இப்போது நான்கு வருடங்கள் கழித்து, இந்த வன்முறைகளின் பின்னணியில் இருந்தவர்கள் எனக் கருதப்படும் கென்யாவின் நிதி அமைச்சரும் வரும் அதிபர் தேர்தலில் வேட்பாளராக நிற்கவுள்ளவருமான உகிரு கென்யாட்டா மற்றும் முன்னாள் அமைச்சரான வில்லியம் ரூற்றோ ஆகியோர் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் விசாரணைகள் நடாத்தப்படவிருக்கின்றன.
இவர்களில் உகிரு கென்யாட்டா கென்யாவின் தேசபிதா என அழைக்கப்படும் கென்யாட்டாவின் மகன், பெரும் அரசியல் செல்வாக்குடையவர். உள்நாட்டில் அவர்கள் கொண்டிருக்கும் அதிகாரம் சர்வதேசப் பரப்பில் எதுவித செல்வாக்கையும் செலுத்தவில்லை என்பதனையும், இவ்விடயத்தில் “சர்வதேசநீதி” சற்று காலம் கடந்தேனும் உபயோகிக்கப்பட்டிருக்கிறது என்பதனையை அவதானிக்கலாம்.
மேற்படி வழக்கில் கென்யாட்டாவிற்கு சட்ட ஆலோசகராக உள்ளவரும், முன்னர் சேர்பிய அதிபர் சுலொபடான் மிலோசவிச் அவர்கள் மீது சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் விசாரணை நடைபெற்ற போது அவரது சட்டத்தரணியாக இருந்தவருமான சட்டவாளர் Stevan Kay அண்மையில் லண்டன் பல்கல்கழகமொன்றில் நடைபெற்ற விவாதம் ஒன்றில் குறிப்பிட்டதை இங்கு நாம் கவனத்தில் எடுக்கவேண்டும். சர்வதேச குற்றவியல் நீதி மன்றம் ஒரு நிரந்தரமான அமைப்பாக இல்லாதபோதிலும், மானிடத்திற்கு எதிரான எனக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் எவரும் அங்கு விசாரிக்கப்படலாம் எனக் குறிப்பிட்டார். சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் விசாரிக்கப்படுவதே தண்டனையாக இருக்கும் என்பதால் மேலதிகமாக தண்டனை எதுவும் வழஙகத் தேவையில்லை.
சட்டவியலில் பொதுவாக முன்னர் நடந்த வழக்குகளும் அதற்கான தீர்ப்புகளும் முன்னுதாரணங்களாக எடுத்துக ;கொள்ளப்படுவதுபோல் சர்வதேச நீதி விடயத்தையும் நாம் எடுப்போமானால், சிறிலங்காவின் ஆட்சிபீடத்தில் உள்ளவர்கள் என்றாவது ஒரு நாள் நெதர்லாந்து ஹேக் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்திற்கு வரவேண்டியிருக்கும். ஆனால் முன்னர் குறிப்பிட்டுள்ளது போல் சர்வதேச நீதி அவ்விதம் இயங்குவதில்லை என்பதனால் சிறிலங்கா விடயம் தொடர்பாக எதனையும் அறுதியிட்டுச் சொல்லமுடியாதுள்ளது.
“சர்வதேச நீதி” என்பது மேற்குநாடுகள் தமது நலன்சாரந்து மற்றய நாடுகளின உள்விவகாரங்களில் தலையிடுவதற்கான பொறிமுறையாக இது பாவிக்கப்படுகிறது என்பது இவ்விடயம் தொடர்பில் எழும் குற்றச்சாட்டுகளில் முதன்மையானது, இவ்வாறு வாதிடுபவர்கள் நேட்டோ படைகள் மற்றய நாடுகளில் புரிந்து வருவதாக குறிப்பிடப்படும் மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்கள் பற்றியோ அக்குற்றச்செயல்களில் ஈடுபடுவர்கள் பற்றியோ எதுவித கவனமும் செலுத்தப்படுவதில்லை எனக் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த அடிப்படையிலேயே ஐ.நா. மனிதவுரிமைச் சபையில் கொண்டுவரப்படும் தீர்மானங்கள் அணுகப்படுகின்றன. மேற்கு நாடுகளால் முன்வைக்கப்படும் மனிதவுரிமை தொடர்பான தீர்மானங்களை கியூபா, வெனிசூலா, ஈரான் போன்ற நாடுகள் கண்ணை மூடிக்கொண்டு எதிர்த்து வருகின்றன. ஐநா பாதுகாப்புச் சபையில் வீற்றோ அதிகாரம் கொண்ட ரஷ்யா, சீனா ஆகிய இருநாடுகளும் மனிதவுரிமைகள் பற்றி எதுவித அக்கறையும் இல்லாமல். தமது நலன் நோக்கில் ஓன்றில் ஆதரிக்கின்றன அல்லது எதிர்க்கின்றன.
மேற்குலகம் தமது மூலோபாய நலன்களுக்காக, மனிதவுரிமை விடயங்களை கையிலெடுக்கிறது அல்லது அவர்களது படைகள் வெளிநாடுகளில் மீறல் சம்பவங்களில் ஈடுபடும்போது கண்டு கொள்ளாமல் இருக்கிறது போன்ற குற்றச்சாட்டுகளில் நியாயமிருக்கிறது. இருப்பினும் ஐ.நா. மனிதவுரிமை சாசனத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களை உறுதி செய்யும் வகையில் சர்வதேசளவில் நீதி பேணப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமிருப்பதாகத் தெரியவில்லை. நாடுகளின் இறைமை, அவற்றின் அதிகாரபீடத்தில் உள்ளவர்களுக்குரிய சிறப்புரிமைகள் ஆகியவற்றைக் கடந்து “சர்வதேச நீதி” செயற்பட வேண்டும் என்பதே ஒடுக்கப்படும் மக்களின், குறிப்பாக சிறுபான்மைத் தேசிய இனங்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.
இந்த எதிர்பார்ப்பின் அடிப்படையிலேயே தமிழ்மக்கள் சர்வதேச நீதி தம்பக்கமும் திரும்ப வேண்டும் என எதிர்பார்;க்கிறார்கள். கொடிய யுத்தம் நடைபெற்றவேளையில் சர்வதேச சமூகம் தலையிட்டு நிறுத்தவில்லை என்ற ஆதங்கம் உலகத்தமிழர்களுக்கு உண்டு நடைபெற்ற யுத்தத்தில் மேற்கொள்ளப்பட்ட மீறல்கள், நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட மக்களின் உயிரிழப்புக்கும் அழிவுகள் சர்வதேச விசாரணை ஏற்படுத்தபடவேண்டும் என்பது நியாயமான எதிர்பார்ப்பாகவே இருக்கும். இது விடயத்தில் பரந்துபட்ட ஆதரவினைப் பெறுவது புலம்பெயர் தமிழர்களினது கடமையாகும். குறிப்பாக அறிவுச்சமூகத்தின் மத்தியில் சிறிலங்கா தொடர்பான சரியான கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதில் புலம்பெயர் தமிழ் மக்கள் அதிக கவனத்தை செலுத்த வேண்டியுள்ளது. இம்மட்டத்தில் சிறிலங்கா அரசு மேற்கொண்ட (கொண்டுவரும்) மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்கள் பேசுபொருளாகவோ கவனத்திற்குரிய விடயமாகவே இல்லை என்பது கவலையளிக்கும் விடயமாகவுள்ளது.
இன்னும் சில நாட்களில் ஆரம்பமாகவிருக்கும் ஐ.நா. மனிதவுரிமைச் சபையின் கூட்டத் தொடரில் இலங்கைத் தீவு விவகாரம் விவாதிக்கப்படுமா என்பதில் நம்பிக்கைதரும் அறிகுறிகள் தென்படவில்லை. ஐ.நா. பாதுகாப்புச்சபையில் தோல்வியடைந்த சிரியா விவகாரம் இக்;கூட்டத்தொடரில் முக்கிய இடத்தைப்பிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதானால் பங்குபற்றும் நாற்பத்தேழு நாடுகளின் கவனமும் அந்தத்திசையில் இருக்கலாம். அவர்களது ஆதரவைத் தேடும் நடவடிக்கைகளே அதிகமாகவிருக்கும். மனிதவுரிமைச் சபையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவதற்கு, சபையில் அங்கம் வகிக்கும் ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளின் ஆதரவு தேவைப்படும். இந்நாடுகளின் ஆதரவினை மேற்கு நாடுகளின் பின்புலமில்லாமல், நாடற்ற தமிழ்த் தேசியம் பெற்றுக்கொள்ள முடியாது. இவ்விடயத்தை குவிமையமாகக் கொண்டே புலம்பெயர் தமிழ் அரசியல்செயற்பாடுகள் அமையவேண்டும்.