‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் நினைவு தினம்

284

‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார்
நினைவு தினம் |24.5.1981|

”உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு” என்று முழங்கி உலகத்துத் தமிழர்களை மொழியால் இணைத்து ஒரு குடையின் கீழ் கொண்டுவர வேண்டுமென அல்லும் பகலும் பாடுபட்டவர்.

இவர் 1905-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் காயாமொழியில் பிறந்தார். சி.பா.ஆதித்தனாரின் தந்தை அவருடைய தந்தையும் புகழ்பெற்ற வழக்கறிஞர்.

சி.பா ஆதித்தனார் என்றால் இன்றும் தமிழ்நாட்டு வழக்கறிஞர்களிடையே, ஒரு தனி மரியாதை உண்டு. சி.பா. ஆதித்தனாரின் தாயார் கனகம் அம்மையார், கணவருக்கும் மகனுக்கும் வேண்டிய உதவிகளைச் செய்து, அவர்களின் சமூகத் தொண்டுகளுக்கும் ஊக்கமூட்டும் குடும்பத் தலைவியாக இருந்து வந்தார்.

வசதிமிக்க குடும்பம் என்பதால் தங்கள் சொத்துகளை மேலும் பெருக்கிக்கொண்டே சி.பா. ஆதித்தனார் சென்றிருக்க முடியும். ஆனால், தமிழர்களுக்கு நற்பெயர் ஏற்பட வேண்டும் என்பதுதான் அவரின் குறிக்கோளாக இருந்தது. மற்ற பணக்காரப் பிள்ளைகளைப் போல இல்லாமல் படிப்பு நேரம் போக, இதர நேரங்களில் பகுதி நேர வேலைகளைச் செய்து, அதில் கிடைத்த வருமானத்தில் பல ஏழைகள் நல முறை வாழவும் அவர்தம் பிள்ளைகள் படிப்பைத் தொடரவும் சி.பா. ஆதித்தனார் உதவிக்கரம் நீட்டினார்.

பிரிட்டனில் இருந்தபோது பெருஞ்சேவை ஆற்றி வந்த சி.பா. ஆதித்தனாரைச் சிங்கப்பூர் தொழில் மன்னர் உ. ராமசாமி நாடாருக்குப் பெரிதும் பிடித்திருந்தது. அதனால், அவரின் மகள் கோவிந்தம்மாளை திருமணம் செய்துகொடுத்து, தம் மருமகனாக்கி கொண்டார். 1933-ம் ஆண்டு சிங்கப்பூரில் சி.பா. ஆதித்தனார், கோவிந்தம்மாள் திருமணம் மிகச் சிறப்பாக நடந்தேறியது.

சிங்கப்பூரில் வழக்குரைஞராக பணியாற்றியபோதே, தமிழ்மக்களின் பொது நலத்திலும் அதிக அக்கறை கொண்டிருந்தார் சி.பா. ஆதித்தனார். வெள்ளைக்காரர்கள் செய்த சூழ்ச்சி, சி.பா. ஆதித்தனாரைப் பெரிதும் வாட்டிற்று. தமிழ் வளர்ச்சி குறித்தும், மொழி வளர்ச்சியில் தமிழர் காட்ட வேண்டிய ஈடுபாடு பற்றியும் தம்முடைய வாழ்நாளெல்லாம் திட்டம் வகுத்துக் கொண்டிருந்த தமிழன்பர் சி.பா. ஆதித்தனார். உயர்தமிழ் படித்தவர்கள் சாதாரண மக்கள், மொழியில் முடியாத அளவுக்குத், தமிழ்மொழியின் நடையைக் கடினப்படுத்தியதை அவர் விரும்பவில்லை.

இந்த நிலையில், சிங்கப்பூர் ஜப்பானியரிடம் வீழ்ச்சி கண்டது. இது சி.பா. ஆதித்தனாரைப் பெரிதும் வேதனைக்குள்ளாக்கியது. சிங்கப்பூரில் வழக்குரைஞராகப் பணியாற்றியதாலும் தமிழர் முன்னேற்றத்துக்குப் பாடுபட்ட சி.பா. ஆதித்தனார், ஜப்பானியக் காலக்கொடுமைகளைத் தாளாமல் ஆதித்தனார், குடும்பத்துடன் தமிழகம் வந்தடைந்தார்.

மொழி வளர்ச்சிக்குப் பாடுபடுவதும், தமிழர் மேம்பாட்டுக்குப் பாடுபடுவதும் தம்முடைய வாழ்க்கையில் தாம் ஆற்ற வேண்டிய தொடர்பணிகளாக இருக்க வேண்டுமெனத் தமிழகம் வந்ததும் முடிவெடுத்த சி.பா. ஆதித்தனார், மதுரை முரசு, தமிழன், தந்தி- பின்னர்- தினத்தந்தி ஆகிய ஏடுகளை எளிய தமிழில் வெளியிட்டார். மாணவர்களுக்கென ‘வெற்றி நிச்சயம்’ என்னும் இயக்கத்தைத் தொடங்கி, அவர்களிடையே கல்வி நாட்டத்தை ஏற்படுத்தினார்.

சாதியால் பிரிந்து கிடந்த ‘தமிழர் சமுதாயம்’ மொழியால் ஒன்றுபட வேண்டுமெனப் பெரிதும் விரும்பினார். அந்தக் குறிக்கோளில் ”நாம் தமிழர்” இயக்கத்தைச் சி.பா. தொடங்கி வைத்தார். 1967ஆம் ஆண்டு, தமிழகச் சட்ட மன்ற நாயகனாக அவரை முன்மொழிந்தார். அப்போதைய கல்வி அமைச்சர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் பொதுப்பணி அமைச்சராக அப்போதிருந்த மு. கருணாநிதி, வழிமொழிந்தார்.

சபாநாயகராகப் பொறுப்பேற்ற சி.பா. ஆதித்தனார், பதவிக்கு வந்த உடனடியாக சட்டமன்ற உறுப்பினர்கள் இருமொழியில் பேசலாம் என்னும் விதியில் சில மாற்றங்களைச் செய்தார். இரு மொழியில் மன்றத்தில் பேசலாம் என்னும் விதி இருந்தால், பெரும்பாலானோர் ஆங்கிலத்திலேயே பேசியது அவருக்குப் பிடிக்கவில்லை. தமிழ் அறவே தெரியாதவர் மட்டுமே ஆங்கிலத்தில் பேசலாம் என அவர் விதி வகுத்தார்.

‘தமிழ் இதழியல்’ துறை வளர்ச்சிக்கு ‘இதழாளர் கையேடு’ அவர் உருவாக்கிய மிகச்சிறந்த வழிகாட்டி என்று செய்தியாளர்கள் இன்றும் கூறுவர். ‘எளிய தமிழ்’ என்பது கொச்சை நீக்கப்பட்ட மொழி நடையே என அவர் உறுதியாக நம்பினார். மிகப் பெரிய வாக்கியங்களை எழுதாமல், சிறு சிறு தொடர்களால் அவற்றை அமைக்க வேண்டுமென அவர் கூறுவார்.

மாதம் ஒரு நாவல் திட்டத்தை ‘ராணிமுத்து’ என்னும் பெயரில் வெளியிட்டபோதுகூட எளிய மொழிக்கே அவர் முக்கியத்துவம் தந்தார். வாராந்திர ராணியும் அவர் தொடங்கிய ஏடுதான். தம்முடைய எழுபத்தாறாவது வயதில், தமிழர் தந்தை ஆதித்தனார் மறைந்தாலும் ‘நல்ல தமிழர்‘ என்பது எளிய மொழியில் எல்லாருக்கும் ஏற்ற வகையில் இருக்க வேண்டுமென கூறிச் சென்றிருப்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும்.

#புகழ்_வணக்கம்!