தமிழர் தேசியக் கோரிக்கையின் அவசர அவசியம்

832

 

 

அலசுவாரம் – 98

யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஒன்பதாகவிருந்த பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் ஐந்தாகக் குறைக்கப்படப் போகிறது.  இனச்சுத்திகரிப்பின் மிகப்பிரதான நடைமுறையான இந்தப் பிரதிநிதித்துவக் குறைப்பு மிக இலகுவாக நடந்தேறியிருக்கிறது.   முப்பது வருடகால உள்நாட்டு யுத்தத்தின் விளைவாகத் தமிழ்மக்கள பெரு வாரியாகத் தமது வாழிடங்களைவிட்டு வெளியேறி விட்டதன் மூலம்; தங்களது எண்ணிக்கையைத் தாம் பாரம்பரியமாக வாழ்ந்த பிரதேசத்தில்  தாங்களாகவே குறைத்துக் கொண்டார்கள்.  மறைந்த ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனாவால் கொண்டுவரப்பட்ட அதி சாணக்கியமான விகிதாசாரப் பிரதிநிதித்துவ அரசியல் அமைப்பு இதனை மிக இலகுவாக நிறைவேற்றியிருக்கிறது. தமிழ் மக்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை யள்ளிப் போட்டுக்கொள்ள வழியமைத்த இந்த அரசியலமைப்பின் மீதும், அதைக் கொணர்ந்த பழைய ஜே ஆர் அரசின்மீதும் பெரும்பான்மையினரான சிங்களவர்கள் தமது ஆதரவையும் நன்றியையும் காட்டக் கடன் பட்டிருக்கிறார்கள்.  அடுத்து வரப்போகும் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கான ஆதரவு சிங்கள மக்களிடையே பெருக இதுவே ஒரு வாய்ப்பாக அமைந்துவிடவும் கூடும்.  அதனையாவது மனதில் கொண்டு தற்போதைய அரசு இந்தக் குறைப்பு நடவடிக்கையைக் கைவிட வேண்டுமென்று வேண்டுவோம்.

1944 இல் இலங்கைக்கு சுதந்திரத்தை வழங்கும் நோக்கில் சோல்பரிக் கமிசன்  வந்தபோது எமது பழைய தலைவர் ஜீ ஜீ பொன்னம்பலம் அவர்கள், கிட்டத்தட்ட 20 வீதத்திற்கும் குறைவாகவிருந்த சிறுபான்மையினரது பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்தில் ஐம்பதுக்கு ஐம்பதாக இருக்க வேண்டுமென்று வாதாடினார்.  சிறிதும் யதார்த்தத்திற்கு ஒவ்வாத அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டது.   அதன் பிறகு 80 வீத சிங்களவர்களைப் பாராளுமன்ற ஜனநாயகத்தால் அசைக்க முடிய வில்லை.  சோல்பரி அரசமைப்பின் அடிப்படையில் பிரதேச வாரியாக அமைந்திருந்த அந்தப் பிரதிநிதித் துவமும் ஜே ஆர் அரசினால் மாற்றப்பட்டு தற்போதைய விகிதாசாரப் பிரதிநிதித்துவம் கொண்டு வரப்பட்ட தால் இலங்கையில் தமிழரின் கதி அதோ கதியானது.  போதாததற்கு போராட்டம் வேறு தொடங்கி இடப் பெயர்வுகளை முடுக்கிவிட்டதனால் தற்போதைய யாழ்ப்பாணத்தின் அரசியல் பிரதிநிதித்துவம் கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலைக்கு வந்திருக்கிறது.

இந்த இத்தினூண்டு பிரதிநிதிகளை வைத்துக் கொண்டு பாராளுமன்ற ஜனநாயத்தில் தமிழர்களாகிய நாம் எதிர்காலத்தில் எதைச் சாதிக்கப் போகிறோமென்று தெரியவில்லை.   எதிர்காலத்தில் வரப்போகும் தேர்தல்களில் சிங்களவர்கள் சமமாகப் பிரிந்து வாக்களித்து ஒரு தொங்கு பாராளுமன்றத்தை ஏதாயினுமொரு கட்சி அமைக்கக்கூடிய சாத்தியங்கள் ஏற்பட்டாலுங்கூட, மிகக் குறைந்த பிரதிநிதிகளைக் கொண்ட தமிழர்களால் அரசியலில் சிறிதளவேனும் பங்களிக்க முடியாத நிலையே காணப்படுகின்றது.   

துரதிஸ்ட வசமாக நாம் தொடக்கிய எமது தேசிய விடுதலைப் போராட்டம் இடைநடுவில் எம்மை நட்டாற்றில் கைவிட்டுத் தோற்றுப் போனது.  பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்த கதையாகத் தற்போது, நாம் கணிசமான பிரதிநித்துவத்தைக் கொண்ட சிறுபான்மையினரென்ற நமது தகுதியையும் அந்த விடுதலைப்போர் அடித்துச் சென்றுவிட்டது.  இந்த நிலையில் நம்மை நாமே சிறுபான்மையினர்கள் என்று கூறிக்கொண்டு தரந்தாழ்த்திக் கொள்ளாமல் எமது தேசிய இனக் கோரிக்கையை நழுவவிடாமல் பாதுகாப்பது ஒன்றே இறுதி வழியாயிருக்கிறது.  

இலங்கையில் தமிழர் பிரச்சனை அரசியல் ரீதியில் தீர்க்கப்படவேண்டுமென்று உலக நாடுகள் அனைத்துமே வலியுறுத்துகின்றன.  இதன் உள்ளர்த்தம்தான் என்ன?

அது, நம்மை உலக நாடுகள் ஒரு தேசிய இனமாக ஏற்காவிடினும் சிறுபான்மையினராகக் கருதவில்லையென்பதேயாகும்.  தமக்கெனத் தனியான வாழிடப் பிரதேசத்தைக்கொண்டவோர் இனக்குழுமமாக நாம் மறை முகமாக ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறோம்.  

வெறும் சிறுபான்மையினர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு வேண்டியதில்லை.  தற்போது சிறீலங்காவின் அரசியலமைப்பில் உள்ள சகலருக்கும் சமவுரிமை என்ற அடிப்படைக் கோட்பாடு தகுந்த முறையில் அமுல்படுத்தப்பட்டால், அதுவே போதுமானது.  

ஆனால் அதற்கும் மேலாக இந்தியா உட்பட உலக நாடுகள் எமது பிரச்சனைகள் அரசியல் ரீதியில் பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்த்து வைக்கப்பட வேண்டியவையென்பதை ஏற்பதற்கான அடிப்படைக் காரணம், நாம் தேசிய இன அந்தஸ்தினைப் பெற்றுக்கொள்ளப் போதிய தகுதிகளுடைய, அதற்காகப் போராடிய இனம் என்பதன் அடிப்படையிலேயே உள்ளது.

இதை மனதிற் கொள்ளாது எம்மிற் சிலர் நாம் தோற்று விட்டோம் இனி எமக்கு இந்தத் தமிழ்த் தேசியம் செல்லாக்காசு என்ற ரீதியில் சிந்திக்கத் தலைப்படுவதுதான் மிகுந்த கவலையளிக்கிறது.  

எமக்கு உலகம் வழங்கியிருக்கும் மறைமுகமான இந்த அந்தஸ்தை வளர்த்தெடுத்துக் கொள்ளத்தான் தமிழர் தேசியக் கோட்பாடு மிகவும் தேவையாயிருக்கிறது.  தமிழர் தேசியத்தை நாம் என்றைக்குக் கைவிடுகிறோமோ அன்றிலிருந்து நாம் சிறுபான்மை இனக்குழுமம் என்கின்ற தகுதியையும் இழக்கத் தொடங்கி விடுவோம்.   இன்று யாழ்ப்பாணத்தில் உருவாகியுள்ள மக்கட் தொகையின் வீழ்ச்சியும் அதனால் எமக்கு ஏற்படவிருக்கின்ற பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தின் குறைப்பும் எதிர்காலத்தில் மேலும் தீவிரமடைந்து விடாமல் நாம் இழந்து விட்டவைகளை மீண்டும் பெற்றுவிட வேண்டுமானால், மழுங்கடிக்கப்படாத எமது தேசியவுணர்வோடு கூடிய மக்களெழுச்சி உருவாகியே ஆகவேண்டும்.  

இதுவரை காலமும் கடைப்பிடித்த எமது வன்முறைப்பாதை உருவாக்கிய குடியகல்வுக் கலாச்சாரத்திலிருந்து யாழ்மாவட்டம் விடுபட்டு மீண்டும் தமிழரின் குடியேற்றம் அங்கு ஊக்குவிக்கப்படக் கூடிய விதத்தில்  ஆரோக்கியமான அபிவிருத்தியுடன்  அமைதியும் நிலைநாட்டப்படவேண்டும்.   இலங்கையில் தமிழர் தரப்பு  இதற்கான நடைமுறைச் சாத்தியமான விடயங்களில் முயலும்போது புலம்பெயர்ந்த தமிழர்கள் அதற்கான ஒத்துழைப்பைக் கொடுப்பதன் மூலம் விரைவில் மக்கட் தொகைக் கட்டமைப்பை யாழ்மாவட்டத்தில் மீளக் கட்டியெழுப்பிவிட முடியும்.

வெளிநாடுகளுக்குக் குடிபெயர்ந்த மக்கட் தொகையினரையும்விட கொழும்பு உட்பட தெற்கு மற்றும் மத்திய பிரதேச்களுக்குக் குடிபெயர்ந்துவிட்ட தமிழர்களே கணிசமான அளவு உள்ளனர்.  அவர்களில் பெரும்பாலானோர் தற்காலிகமாக இடம்பெயர்ந்தவர்களே.  இன்றைய அமைதிச் சூழல் இன்னும் சில ஆண்டுகள் நீடிக்குமாயின் பழைய மக்கட்தொகையை யாழ்மாவட்டம் பெற்றுக் கொள்வது ஒன்றும் கடினமான விடயமில்லை.

தற்போது பேச்சுவார்த்தையைத் தொடர நிபந்தனை போட்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அடுத்து என்ன செய்வது என்ற சரியான திட்டமிடலோடுதான் தங்கள் பகிஷ்கரிப்பை ஆரம்பித்திருப்பார்கள் என எண்ணலாம்.  அப்படி அவர்களிடம் எத்தகைய திட்டங்களும் இல்லையாயின் தமிழ் மக்களை அது நட்டாற்றில் தள்ளிவிடும் செயலாகவே அமையும்.  

சரியான வேலைத் திட்டங்களுடன் எதிர்வரும் காலங்களில் நாங்கள் என்ன பேசப் போகிறோம், இதுவரை எவற்றைப் பேசினோம், அவற்றிற்கு அரச தரப்பினர் தந்த பதில்களென்ன என்ற விபரங்களையெல்லாம் மூடுமந்திரமாக வைத்திராமல் வெளிப்படையாக எழுத்துமூல அறிக்கைகளாக மக்கள் முன் கூட்டமைப்பினர் வைத்துத் தமது அரசியல் சதுரங்கக் காய்களை நகர்த்திச் செல்வார்களாயின் அதனை தமிழ்மக்களும், உலகமும் புரிந்து கொள்வதோடு, எமது கோரிக்கைகளிலுள்ள நியாயத்தன்மைகளையும் புரிந்து கொள்ளக் கூடியதாயிருக்கும். எமது நியாயமான கோரிக்கைகளைச் செவிமடுக்காமல் அலட்சியம் செய்யும் அரசினது கபட நாடகங்களும் உலகத்தின் முன் வெளிச்சமாகும்.  சிறீலங்கா அரசைப் பற்றிய தற்போதைய உலக அபிப்பிராயம் சரிவு நிலையில் போய்க் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் தமிழ் மக்கள் தங்களது நிறுவன ரீதியான வெளிப்படையான செயல்பாடுகள் மூலம் உலகத்தின் அனுதாபத்தை வென்றெடுப்பதற்கு முயல்வது மிக அத்தியாவசியமாகும்.

இந்தியா திரும்பத் திரும்ப பேசித்தீருங்கள் என்று எம்மைப் பேய்க்காட்டித் தான் தப்பிக் கொள்வதையே தொழிலாகக் கொண்டிருக்கிறது. நீங்கள் வலியுறுத்தியபடி நாங்கள் இன்னின்ன விடயங்களைப் பேசினோம் அவர்கள் இவ்வாறாகப் பதிலளித்துள்ளார்கள் என்ற விபரம் எமக்கும், தமிழக மக்களுக்கும் உலகத்திற்கும் வெளிப்படுத்தப்படும்போது இந்தியாவால் தொடர்ந்து எங்களைச் சிங்கள பேரினவாதத்திற்குப் பலிக்கடாக்களாக்க முடியாத நிலை தோன்றும்.  மேலும் மேலும் போய்ப் பேசுங்கள் என்று வற்புறுத்துவதை விடுத்து ஆக்க பூர்வமான அரசியல் நடவடிக்கைகளை இந்தியாவும் உலகமும் எடுக்க வைப்பதற்கு இனிமேல் எல்லாப் பேச்சுவார்த்தைகளையும் வெளிப்படையாகச் செய்வதே ஒரே வழியாகும்.

குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவெடுக்க முடியாத பெரிய பிரச்சனைகளுக்குள் எளிதாகத் தீர்த்து வைக்கக் கூடிய எமது சிறிய பிரச்சனைகளையும் உட்கலந்து வைத்துக்கொண்டு இலங்கையரசு ஆடும் கபடநாடகத்தை  வெளிச்சம் போட்டுக் காட்டி பேரின வாதத்தின் சுயரூபத்தை உலகின் முன் வெளிக்கொணரும் நடவடிக்கைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இறங்குவார்களாயின் அரசுக்கும் அதையிட்டு ஜாக்கிரதையாகச் செயற்பட வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும்.  எல்லாம் நமது செயற்பாடுகளிலேயே தங்கியுள்ளது.  கேட்கிறவன் கேனையனாக இருந்தால் சொல்கிறவன் அறிவாளியாகிவிடுவான்.  அந்தக் கேனைத்தனம் நம்மை அண்டவிடாது பாதுகாக்க முயல்வோம்.

தொடருவம்….