அன்று தமிழீழ மருத்துவர்களால் அழித்தொழிக்கப்பட்ட பக்டீரியா

172

சீனாவின் வுஹான் நகரில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த தொற்றுக் கிருமி மனிதர்களுக்கு அதீத காச்சலை உருவாக்கி சுவாசப் பிரச்சனைகளை உருவாக்கி நுரையீரல் செயற்படுவதை முடக்கி உயிராபத்தை ஏற்படுத்தும் வல்லமை மிக்கதாக கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட 80 இற்கும் மேற்பட்ட மக்கள் சாவடைந்தும் 1500 இற்கும் மேற்பட்டவர்கள்பாதிக்கப்பட்டுமுள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாது தாய்லாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகியநாடுகளிலும் பரவி இருப்பதாக கூறப்படுகிறது. ( இது செய்திகளின் சாரம்).

இப்போது இக் கிருமித் தாக்கத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது? இதைப் பற்றியே சர்வதேச நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள், தமக்குத் தாமே கேட்டுக்கொண்டிருக்கும் கேள்வி. இது ஒரு புறம் இருக்க சீனா அரசு இக்கிருமித் தாக்கத்தில் இருந்து தன் நாட்டை காப்பாற்ற அதீத தீவிரமாகச் செயற்பட்டு வருகிறது. இந்தக் கிருமித் தாக்கத்தால் பாதிப்படைந்தவர்களை முழுமையாக தனிமைப்படுத்திச் சிகிச்சை வழங்குவதற்காக, 6 நாட்களில் 1000 பேருக்கு மேல் சிகிச்சை பெறக்கூடிய பாரிய மருத்துவமனை ஒன்றை உருவாக்கத் தொடங்கி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது அசாத்தியத்தை சாத்தியமாக்கும் ஒரு திட்டம்தான். அவசர நிலை வேலையாக்கத்தில் இதை உருவாக்க அவர்கள் செயற்படுவது மிகச்சிறந்த செயலே.

இதைப் போலவே சாத்தியமற்ற பல செயற்பாடுகளை சாத்தியமாக்கிக் காட்டிய எம் தமிழீழ அரசு இவ்வாறான ஒருதொற்றுக் கிருமித் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டி வந்த போது அதை எவ்வாறு கையாண்டார்கள் என்பதே இப்பத்தியின் சாரம்.

எம் விடுதலைப் போராட்டம் சிறு பின்னடைவை அடைந்திருந்த 1995 ஆம் ஆண்டு ஐப்பசி 31 ஆம் நாள் “சூரியக்கதிர்” என்று பாரிய படை நடவடிக்கையை சந்திரிக்கா அரசு எம்மக்கள் மீது திணித்து, ஒரு இரவில் யாழ் மாவட்டத்தின் வலிகாமம், தீவகம் ஆகிய பிரதேசங்களில் இருந்து 5,00,000 க்கும் அதிகமான மக்களை நாவற்குழி எனும் ஒற்றைப் பாலத்தால் ஏதிலிகளாக்கிய போதும் நாங்கள் இவ்வாறான இயற்கையின் சீற்றங்களை அனுபவித்தோம். இடநெருக்கடியால் ஏற்பட்ட நெருங்கிய சனப்பரம்பல் பல தொற்று நோய்களையும் எம் மக்களிடையே தோற்றுவித்ததை எவ்வாறு மறக்க முடியும்?

சர்வதேச அளவின் ஒப்பீட்டளவில் நோக்கினால் ஒற்றை இரவில் இத்தனை லட்சம் மக்கள் குறுகிய ஒருபாலமும், அதனோடிணைந்த குறுகிய சதுப்பு நிலப்பரப்பனூடாக, சண்டைப் பிரதேசத்தை விட்டு வெளியேற்றப்பட்ட இடப்பெயர்வு சம்பவம் என்றால் இது மட்டுமே வரலாறாகிக் கிடக்கிறது என்று நினைக்கிறன். அந்த நேரத்தில் எம் மக்களிடையே தாம் பிறந்த மண்ணை விட்டு வந்த வேதனை, சொத்துக்களை தொலைத்த வருத்தம் என வலிகள் ஒருபுறம் இருக்க மறுபுறம் சிங்கள வல்லாதிக்கப் படைகளால் ஏற்படுத்தப்பட்ட காயங்கள், சாவுகள் என்றும் தொற்று நோய்கள் என்றும் பல்வேறு இடர்களை அவர்கள் சுமந்து நின்றதை மறக்க முடியாது

அந்தக் காலத்தில் தான் தமிழீழ மருத்துவக் கல்லூரியின் இரண்டாம் அணி மாணவர்கள் மருத்துவப் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தார்கள் தேசியத்தலைவர் எமது மக்களுக்கும், எம் போராளிகளுக்கும் உரிய மருத்துவ தேவைகள் மற்றும் சிகிச்சைகளை வழங்கவும் தமிழீழம் என்ற எம் தேசம் உருவாகும் போது தன்நிறைவுத் தமிழீழத் தேசமாக உருவாக வேண்டும் எனவும் தூர நோக்கம் கொண்டு 40 ற்கும் மேற்பட்ட போராளிகளை மருத்துவப் பட்டைய கற்கையைக் கற்கும் பணியில் ஈடுபடுத்தி இருந்தார்.

சந்திரிக்காவின் அரசின் அப்போதய பாதுகாப்பு அமைச்சராக இருந்த அனுரத்த ரத்வத்த எம் மக்கள் மீது கொடூரமான தாக்குதல்களை மேற்கொண்டு “சூரியக்கதிர்” என்ற பெயரில் தொடர் படை நடவடிக்கை மூலம் எம் தேசத்தை தன் ஆளுகைக்குள் கொண்டு வருவதற்காக படாத பாடுபட்டுக் கொண்டிருந்த போது, இப்போராளி மருத்துவர்கள் மக்களை காக்க வேண்டிய பெரிய பொறுப்புக்களைச் சுமக்கத் தொடங்கினார்கள்.

அப்போது தான் சூரியக்கதிர் யாழ்ப்பாண மாவட்டத்தையே சுட்டெரித்து பொசுக்கிப் போட்டது. தமிழீழ அரசின் நிர்வாக்க் கட்டமைப்புக்கள் அனைத்தும் வன்னிப் பெருநிலப்பரப்புக்குள் நகர்ந்தன. மக்களும் போராளிகளோடு சேர்ந்து கிளாலி பெரு நீரேரி கடந்து வன்னிப் பெரு நிலப்பரப்பின் அனைத்துப் பிரதேசங்களிலும் வாழ்க்கையைத் தொடர்ந்தார்கள்.

அப்போதெல்லாம் எம் மக்கள் பட்ட துயரத்தை வார்த்தைகளால் கூற இயலாது. இப்போது குறுகிய நிலப்பரப்பில் நெருங்கி வாழ வேண்டிய சூழல் இல்லை எனிலும், திடீர் என்று அதிகரித்த சனப் பரம்பலைத் தாங்க முடியாது வன்னி மண் திகைத்து நின்றது. அப்போது தான் தேசியத் தலைவர் உடனடி மக்கள் நேயப் பணிகளுக்காக போராளிகளை பணித்தார். அரசியல்துறை, காவல்துறை, படையணிகள் என வேறுபாடுஅற்று மக்கள் பணிகளில் போராளிகள் ஈடுபடுத்தப்பட்டார்கள். அந்த காலத்தில் தான் சனப்பரம்பல் நெருக்கமடைந்து காணப்பட்ட வன்னியின் பிரதேசங்கள் எங்கும் மக்கள் மீது நோய்களும் தாக்கம் செலுத்தத் தொடங்கின.

யாழ் மாவட்டத்தை விட்டு வன்னிக்கு வந்ததன் பின்பான காலம் புலிகள் பலமிழந்து விட்டார்கள் என்ற பாரிய அரசியல் பரப்புரை ஒன்றை சர்வதேசத்தில் முன்னெடுத்த சந்திரிக்காவுக்கு முல்லைத்தீவு முப்படைத்தளம் என்றும் பூநகரி கூட்டுப்படைத்தளம் என்றும் மன்னார், வவுனியா என்றும் படை முகாங்கள் மீது எம் படையணிகள் பெரும் வெற்றித் தாக்குதல்களை செய்து நிலத்தை மீட்ட போது அதிர்ந்து போன சிங்களம் எம்மீதான பொருளாதார, மருந்துத் தடைகளை அதிகப்படுத்தியது. இப்போது மக்களுக்கான மருந்துகளோ உணவுகளோ பயங்கர தட்டுப்பாடாக இருந்து. ஏற்கனவே மருந்து, உணவுப்பொருட்களின் பற்றாக்குறையை நிரப்ப முடியாமல் மக்கள் அவதிப்பட்டார்கள். இப்போது மறுபடியும் அதிகப்படுத்தப்பட்ட தடைகளால் மக்கள் செய்வதறியாது திகைத்தனர்.

அப்போது தென்னியங்குளம் காட்டுப் பகுதியில் அமைந்திருந்த திவாகர் நினைவு இராணுவ மருத்துவமனையில் கிட்டத்தட்ட 400 ற்கும் மேற்பட்ட போராளிகளுக்கான சிகிச்சையையும் போராளி மருத்துவர் தணிகை மற்றும் ஓரிரண்டு போராளி மருத்துவர்களே அங்கே பணியில் இருந்தார்கள். அவர்கள் பல சிரமங்களோடு அப்பணியை ஏற்றருந்தார்கள். ஆனாலும் பணியில் என்றும் தொய்ந்து போனதில்லை. மருத்துவப் பணி சிறப்பாகவே இருந்தது. எந்த தடையை அரசு போட்டாலும் அத்தடையை உடைத்து விழுப்புண் அடையும் போராளிகள் காப்பற்றப்பட்டே வந்தார்கள். அவ்வாறான ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மருத்துவர் தணிகையின் பொறுப்பிலிருந்த விழுப்புண்ணடைந்த போரளிகளுக்கான சிகிச்சையை இடையில் விட்டுச் செல்ல வேண்டி நிலை ஒன்று அவருக்கும் இன்னும் சில மருத்துவர்களுக்கும் வந்தது.

1998 ஆம் ஆண்டு புரட்டாதி 29 ஆம் நாள் நான் திவாகரில் நின்ற போது மருத்துவரும், தமிழீழ சுகாதாரப் பகுதிப் பொறுப்பாளராக இருந்தவருமான மருத்துவக்கலாநிதி சூரி அவர்களை உடனடியாக தன்னோடு வருமாறு அழைக்கிறார்.

அவர்களது வாகனம் மன்னார் மாவட்டத்தின் விடத்தல்தீவை நோக்கி செல்கிறது. வாகனத்தில் வைத்து கூடச் சென்றவர்களுக்கு மருத்துவர் சூரி விபரத்தை கூறுகிறார். அதுவரை ஏதோ சண்டைக்கான தயார்ப்படுத்தல் என்றே எண்ணி இருந்த போராளி மருத்துவர்கள் மருத்துவர் சூரி கூறியதை கேட்டு அதிர்ந்தார்கள். விடத்தல் தீவில் “கொலரா “. நோயாளி ஒருவர் இனங் காணப்பட்டுள்ளார். நாங்கள் தான் உடனடியாக இதை பொறுப்பெடுத்து தடுத்து நிறுத்த வேணும். அதனால் தான் உங்களை அழைத்தேன்.

கொலரா என்பது ஒரு கொள்ளை நோய். “வாந்திபேதி” என்றும் கூறப்படும் அதன் தாக்கம் உடனடியாகவே பரவி வன்னி முழுவதையும் மட்டுமல்ல எம் கட்டுப்பாட்டு நிலைகளையும் தாண்டி, இலங்கையையும் தாக்கி அழிக்க கூடியவாறு பரவும் அபாயம் கொண்டது. உடனடியாக இதை தடுக்க வேண்டிய பெரும் பொறுப்பும், அதே வேளை பாதிக்கப்பட்ட நோயாளிகளையும் காக்க வேண்டிய இரட்டை செயற்பாட்டை அவர்கள் செய்ய வேண்டிய சூழல். அதேநேரம் வேறு பிரதேசங்களில் இந்த நோய்த்தாக்கம் பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டி இருந்தது.

மருத்துவர் சூரியுடன் மருத்துவர் தணிகை, பெண் போராளி மருத்துவர் பிரியவதனா, போராளி மருத்துவர் சத்தியா, போராளி மருத்துவர் வாமன் மற்றும் போராளி மருத்துவ மாணவன் யாழ்வேள், அரசியல் போராளி தூயவன் என்று சிறிய ஆளணியே இருந்தது. ஆனால் இதை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தார்கள். அதற்கான நடவடிக்கையில் இறங்கினார்கள். இதற்காக அவர்கள் இரண்டு முக்கிய வேலைகளை செய்ய வேண்டி இருந்தது.

அந்த பிரதேசங்களை முழுமையாக எமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதல். அதாவது இராணுவம் ஒருபிரதேசத்தைச் சுற்றிவளைத்துத் தேடுதல் நடத்துவதை போல விடத்தல்தீவு, தேவன்பிட்டி, பள்ளமடு இலுப்பைக்கடவை, படகுதுறை, பாரதிபுரமுகாம், கள்ளியடி, தேத்தாவடி, மூன்றாம்பிட்டி, தேவன்பிட்டி, பலகைமுனை, பாப்பாமோட்டை , ஆண்டான்குளம், பிள்ளையார்பிட்டிபோன்றபிரதேசங்களை சுற்றிவளைத்து முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள்.

இந்த நடவடிக்கையின் போது இந்த பிரதேசங்களில் இருந்து யாரும் வெளியேறவோ அல்லது உள்ளே வரவோமுடியாது அவ்வகையாக பலமான பாதுகாப்பு வேலியை தமிழீழக் காவல்துறை மற்றும் அரசியல்துறை போராளிகள் அமைத்திருந்தர்கள். யாரோ ஒருவர் சாவடைந்தால் கூட அவரை நெருங்க விடுவதில்லை. இவ்வாறான ஒரு பாதுகாப்பு வேலியை அமைத்தார்கள். அதாவது Quarantine என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

அங்கே வாழ்ந்த அனைவருக்கும் நோய்த் தாக்கத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளை செய்தார்கள். முதலில் ஊரில் இருந்த பாடசாலை மாணவர்கள், பணியாளர்கள் என்று அழைத்து அவர்களை பல அணிகளாகப்பிரித்துத்தடுப்பு மருந்துகள் பற்றிய சிறு பயிற்சியை கொடுத்து, அவர்களோடு அனைத்து வீடுகளுக்கும் சென்றார்கள். ஒவ்வொருவராக தடுப்பு மருந்துகளை குடிக்க வைத்தார்கள். இதற்காக அவர்கள் பயன்படுத்திய கொலராத் தடுப்பு மாத்திரைகளான Tetracycline or Doxycycline, Furazolidone களை உடனடியாக அனைத்து மக்களையும் உட்கொள்ள வைத்தார்கள். அவர்கள் அவற்றை உட்கொள்கிறார்களா இல்லையா என்ற சந்தேகத்தில் தமக்கு முன்னால் அவற்றை உட்கொள்ளுமாறு பணித்துத் தண்ணீரை கையில் எடுத்து கொடுத்து மாத்திரைகளை விழுங்க வைத்தார்கள்.

இவ்வாறு தடுப்பு நடவடிக்கையில் எம் மருத்துவ அணி இருந்த போது, மறுபுறத்தில் கிட்டத்தட்ட 160 க்கும்மேலான பாதிக்கப்பட்ட நோயாளிகள் பள்ளமடு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இங்கே தான் பலத்த பிரச்சனைகளை எதிர் நோக்க வேண்டி வந்தது. ஒருபுறம் அவர்களுக்கு ஏற்ற வேண்டிய IV FLUIDS சேலைன் அல்லது மாத்திரைகள், மருந்துகள் எதுவும் கையிருப்பில் இல்லை. உதாரணத்துக்கு ஒருநோயாளிக்கு 10 ல் இருந்து 40 சேலைன்கள் தேவைப்படும். ஏனெனில் கொலராவால் பாதிக்கப்பட்ட ஒருவர் உடலில் இருந்து நீரிழப்பு என்பது அதிக வீதமாக காணப்படும். இந்த நிலையில் நாம் அதிகமாக நீரிழப்பு நிவர்த்தி மருந்துகளான Jevani/ORS(oral rehydration salt) to prevent dehydration or home made ORS போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். ஏனெனில் கொலரா என்பது நீரிழப்பை ஏற்படுத்துவதன் மூலமே மரணத்தை தருகிறது.

அந்த நீரிழப்பு நிவாரணிகளைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய தேவையை மக்களுக்கு உணர்த்த்தினார்கள் மருத்துவர்கள். இந்த நீரிழப்பு நிவாரணிகளை வீட்டில் தயாரிக்க கூடிய வழிகளும் மக்களுக்குபோதிக்கப்பட்டன. அது எவ்வாறு என்றால், உப்பு எலுமிச்சம் பழம் மற்றும் சீனி ஆகியவற்றைச் சேர்த்துக் கரைத்தாலே போதுமானது என்று உணர்த்தப்பட்டது.

கையிருப்போ வெறும் 40 ற்கு குறைவான சேலைன்களே. இந்த நிலையில் மருத்துவர்களுக்கு உடனடியாகத்தடுப்பு மாத்திரையான Prophylaxis மற்றும் Tetracycline அல்லது வேறு Antimicrobials போன்றவை தேவையாக இருந்தது. இதை அவர்கள் மருத்துவப்பிரிவின் விநியோகப்பகுதிக்கும் மன்னார் மாவட்ட MOH (Medical officer of Health Services) and RDHS Dr. கதிர்காமநாதன் (MOH) ஆகியோருக்கும் தெரியப்படுத்துகிறார்கள். Dr. கதிர்காமநாதன் பலத்த சிரமங்களுக்கு மத்தியிலும் இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் இராணுவத்தின் தலைமை அதிகாரிகளோடு பலமுறை வாதாடி அங்கிருந்து தேவையான மருத்துவ பொருட்களை போராளி மருத்துவ அணிக்கு அனுப்பி வைக்கிறார். அதோடு பள்ளமடு மருத்துவமனை பொறுப்பு மருத்துவராக இருந்த திருமதி. சாவித்திரி அவர்களும் முழு மூச்சாக இவர்களோடு இணைந்து செயற்படுகிறார்.

உடனடியாக இல்லை எனிலும் தாமதமாக என்றாலும் தேவையான நேரத்தில் எமது விநியோகப் பிரிவும் Dr. கதிர்காமநாதன், Dr. விக்னேஸ்வரன் மற்றும் Dr. தர்மேந்திராவும் தந்துதவினார்கள். எம் மக்களுக்கான உடனடி காப்பு மருத்துவத்தை மருத்துவ அணி தொடர்ந்த அதே நேரம் இன்னும் ஒரு பிரச்சனை பூதாகாரமாக எழுந்தது.

நோயாளர்களை தங்க வைக்க எந்த வசதிகளும் இருக்கவில்லை. உடனடியாக விடுதிகள் உருவாக்கவும் கொலரா நோயாளர்களுக்கு என்று பிரத்தியேகமான கட்டில்களைச் செய்யவும் மருத்துவ அணியே நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியது. ஏனெனில் சாதாரண கட்டிலில் அவர்களை படுக்க வைக்கமுடியாது. அதனால் மலவாசல் இருக்குமிடத்தில் வட்டவடிவ ஓட்டை ஒன்றை போட்டு அதனூடாக வாளி ஒன்றில் மலத்தை எடுக்கும் வகையில் அதை அவர்கள் வடிவமைத்தார்கள்.

இதற்கு “சேவாலங்கா ” மற்றும் தமிழர் புனர் வாழ்வுக்கழகம் (TRO) ஆகியன அவர்களுக்குத் துணையாகின. எம் மக்களும் அவர்களோடு கூடநின்றார்கள். அதனால் குறித்த சில நாட்களுக்குள் பெரு முயற்சியில் விடுதிகளை, கட்டில்களை வடிவமைத்துக் கொண்டார்கள். இவர்களோடு புலம்பெயர் சமூகமும் இணைந்ததை மறுக்க முடியாது. தமிழீழத்துக்கு மருந்துதடைகள் வந்த போதெல்லாம், விநியோகப்பிரிவின் மருந்து வளங்கலுக்கு புலம்பெயர் சமூகமே முழுப்பொறுப்பும் எடுத்திருந்தது. அதே போலத் தான் இந்த ஆட்கொல்லி நோயை அழிக்கவும் அவர்களின் பணவுதவி வலுவாக இருந்தது.

இது இவ்வாறு இருக்க, இந்த கொடிய நோயான கொலரா கிருமியான Vibrio Cholera எப்படி எங்கட பிரதேசத்துக்குள்ள எப்படி வந்தது? இதை காவி வந்த நோயாளி யார்? போன்ற தவிர்க்க முடியாத வினாக்கள் மருத்துவ அணிக்கு எழுந்தது. தொற்றுநோய் தடுப்பு, காப்பு என்று ஒருபுறம் பணியாற்றிக் கொண்டிருந்த போது விடைதெரியாத இந்த கேள்வி தான் சிங்கள மக்களையும் காப்பாற்றியது என்றால் அது தவறில்லை.

அவர்கள் முன்னே எழுந்த இக்கேள்விக்கான விடையை மருத்துவர்கள் தேடத் தொடங்கினார்கள். முதல் கொலரா நோயாளியை பின்தொடர்ந்து அவர் எங்கிருந்து வந்தார், எங்கெல்லாம் பயணித்தார், என்றதகவல்களை ஆராய்ந்தார்கள். அந்த ஆய்வின் முடிவில் முதல் நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகி எம்பிரதேசத்துக்குள் வந்துள்ள கிருமிக் காவியாக இருந்தவர் புத்தளம் பகுதியில் இருந்து கொலரா கிருமியை கொண்டு வந்த அதிர்ச்சியான உண்மையை மருத்துவ அணி கண்டு பிடிக்கிறது.

விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என்று சர்வதேசமே தடையுத்தரவுகளைப் பிறப்பித்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முடக்கத் திட்டமிட்டு இயங்கிக் கொண்டிருந்த போது, மருத்துவர்களுக்கான மருத்துவத்தர்மம் என்பதை விட போராளிகளுக்கான மென்மனதும், இது வல்லாதிக்க சக்திகளிடமிருந்து தமிழீழ விடுதலைக்கான போரே தவிர சிங்கள அப்பாவி மக்களுக்கு எதிரான போரில்லை என்ற உணர்வும் அவர்களை எச்சரித்தது.

புத்தளத்தில் இருந்து வந்திருந்த கொலராக் கிருமியால் புத்தளம் பகுதியிலும் மக்கள் பாதிக்கப்படலாம் என்ற உண்மையை உடனடியாக ICRC, மற்றும் MSF என்ற சர்வதேச அமைப்புக்கள் ஊடாக ஆதாரத்தோடு இலங்கை அரசுக்குத் தெரியப்படுத்தி உடனடியாக புத்தளம் பகுதியை கொலரா தடுப்புப்பகுதியாக இனங்காட்டுகிறார்கள் அம்மருத்துவ அணியினர்.

இந்த எச்சரிக்கையை தொடர்ந்தே அரச மருத்துவக்குழு அது தொடர்பாக ஆராய்கிறது. நிலைமையைக் கண்டுபிடித்து நடவடிக்கையை ஆரம்பிக்கிறது. உண்மையில் விடத்தல் தீவில்நடைபெற்றுக்கொண்டிருந்த கொலராத் தடுப்பு நடவடிக்கை அணியினர் இவ்வாறு எச்சரிக்கவில்லை எனில் அங்கு பல சாவுகள் நடந்திருக்கும்.

அவர்கள் நினைத்திருந்தால் இந்த எச்சரிக்கையை கொடுக்காமல் விட்டிருக்கலாம். அவ்வாறு நடந்திருந்தால், பலநூறு சிங்கள மக்களும் இறந்திருக்க கூடும். ஆனால் எம்மிடமிருந்து என்றும் மக்கள் மீது எங்கள் துப்பாக்கிகளோ அல்லது எந்த தாக்குதல் முறைமைகளோ நிமிர்ந்ததில்லை. அதனால் சிங்கள மக்களின் உயிரைக் காப்பாற்றினார்கள் அந்த மருத்துவ அணியினர்.

இந்த நடவடிக்கை முடிந்து கொலரா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்த போது 10 பேர் மட்டும் தான் இறந்திருந்தார்கள். மற்ற ஆக்கள் எல்லாரையும் இந்த அவசரகால நடவடிக்கை அணி காப்பாத்தியிருந்தது.

இதே நேரம் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் அனைத்திலும் மூத்த மருத்துவப் போராளிகளும் இளநிலை மருத்துவப் போராளிகள் மற்றும் மருத்துவப்பணியாளர்களும் சுகாதாரப் பகுதி பணியாளர்களும் மக்களுக்கான விழிப்புணர்வு மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு மக்களுக்கு இந்த தொற்று நோய்த் தாக்கம் பற்றிய அதி உச்ச கவனத்தை உறுதிப்படுத்தும் பரப்புரைகளை மேற்கொண்டார்கள்.

நான் நினைக்கிறேன் இந்த நடவடிக்கைக்கு பின்பான காலங்கள் வன்னியில் கொலரா தாக்கிய நோயாளிகள் இதுவரை இருக்கவில்லை. கொலரா மற்றும் மலேரியா போன்ற நோய்களின் தாக்கத்தை எம் தமிழீழச் சுகாதாரப்பிரிவும், மருத்துவப்பிரிவும் இணைந்து நிறுத்தி இருந்தார்கள். அரச மருத்துவ மற்றும் சுகாதாரப்பணியாளர்களும் இதில் முழு பங்கும் உள்ளவர்கள். இதை பெரும் சாதனையாக சிங்கள ஆய்வாளர் ஒருவர் பெரும் ஆச்சரியமான முறையில் வியந்து எழுதியதன் தமிழாக்கத்தை நான் படித்துள்ளேன். அதேவேளை இன்றும் மலேரியாவை தடுக்க முடியாது திணறும் சிங்கள அரச மருத்துவத்துறையையும் அவர் சாடி இருந்ததை வாசித்தேன்.

தமிழீழ அரசு இலங்கை அரசை விட மக்கள் நேயப் பணிகளில் எவ்வாறு மேலோங்கி நின்றது என்பதைச் சர்வதேசமே சுனாமி அனர்த்தத்தின் போது உணர்ந்து கொண்டது. ஆனால் அதன் முன்னே சுனாமி அலைகளைப் போல ஆயிரம் ஆயிரம் மக்களின் உயிர்களை காவு கொள்ளவிருந்த இவ்வாறான கொலரா மற்றும் மலேரியா போன்ற தொற்று நோய்த் தாக்கங்களை முற்றாக இல்லாமல் அழித்தொழித்திருந்த தமிழீழ மருத்துவப் பிரிவின் சாதனைகளையும் இவ்வுலகம் உணர்ந்து கொள்ளாமல் இல்லை.

பதங்கள் –

  • கொலரா- Cholera outbreak
  • சேலைன் – saline
  • நீரிழப்பு – dehydrate
  • கிருமி -Bacteria
  • இராணுவ மருத்துவமனையில் : போராளிகளுக்கான தனித்துவமான மருத்துவமனை

எழுதியது: இ.இ. கவிமகன்
நாள்: 28.01.2020