தமிழ்த் தேசியம் வீறுகொண்டெழுந்த நான்கு பத்தாண்டுகள்

133

இம்மாதம் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் முக்கிய பதிவுகளாக அமைந்துவிட்ட இரண்டு சம்பவங்களின் நாற்பதாண்டு நிறைவு நினைவுகூரப்படுகிறது. ஒன்று தமிழ்ப் புதிய புலிகள்என்ற பெயரில் தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் தலைமறைவு இயக்கமாகஆரம்பிக்கப்பட்ட ஆயுதப்போராட்ட அமைப்பு 1976ம்ஆண்டு மேமாதம் 5ம் திகதி `தமிழீழ விடுதலைப் புலிகள்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு சோசலிச தமிழீழத்திற்கான வேலைத்திட்டத்துடன் செயற்பட ஆரம்பித்ததமை. மற்றையது அதே ஆண்டு மே மாதம் 14ம் திகதி பண்ணாகத்தில் நடைபெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானம். ஈழத்தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்டம் அவர்களது சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலேயே அமைந்திருக்க வேண்டும் என்ற விடயம் இவ்விரண்டு நிகழ்வுகளிலிருந்தும் வலுப்பெற்றது. இதனடிப்படையிலேயே ஈழத்தமிழரின் கடந்த நாற்பதாண்டுகால அரசியல் தொடர்ந்து வருகிறது. இனிவருங்காலத்திலும் தமிழ்த் தேசிய அரசியல் இப்பாதையிலேயே பயணிக்கும் என எதிர்பார்க்கலாம்.

தேசம், நாடு தேசங்களுக்குரிய சுயநிர்ணய உரிமை போன்ற விடயங்கள் மேற்குலக சிந்தனையின் வழிப்பட்டவை. வெஸ்ற்பாலியன் முறைமை(Westphalian system) என்ற சித்தாந்த அடிப்படையில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில்பல தேசங்கள் தம்மை தனிநாடுகளாக ஆக்கிக்கொண்டன. ஆனால் இவ்விடயத்தில் மற்றைய கண்டங்களில் வாழும் தேசிய இனங்கள் அதிகம் அக்கறை காட்டவில்லை. அத்தேசிய இனங்கள் நிலப்பிரபுத்துவ அமைப்புக்குள்ளும் (Feudal system) பின்னர் காலனித்துவத்திற்குள்ளும் அடிமைப்பட்டுமிருந்தமையால் தங்களை ஒரு தேசமாகச் சிந்திக்க முடியாமலிருந்தது. இத்தேசங்களிடையே காணப்பட்ட சாதி, மத, பிரதேச அடிப்படையிலான பிரிவினைகளும், அவை காலனித்துவ காலத்தில்பிரித்தாளும் தந்திரத்திற்கு உட்படுத்தப்பட்டமையும் இவற்றிற்கான காரணங்களாக அமைந்திருக்கலாம். பலதேசங்களைக் கொண்ட ஒரு பாரிய நிலப்பரப்பான இந்தியா இன்றைக்கும் ஒரு நாடாகவிருப்பதன் அதிசயமும் இதனாலேயே நிகழ்ந்தது.

ஈழத்தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமை பற்றிய சிந்தனை முதலில் பொன்னம்பலம் அருணாசலம் அவர்களிடமிருந்தே வெளிப்பட்டதாக சில பதிவுகளிலிருந்து அறிய முடிகிறது. பின்னாட்களில், தமிழ்மக்களின் தலைமை ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்களிடம் சென்றபோது அவர் தமிழ் மக்களிற்கு சமத்துவமான பிரதிநிதித்துவத்துடன் இணக்க அரசியல்பற்றியே அக்கறைசெலுத்தினாரே தவிர பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தவில்லை. ஆனால் தமிழ்கொங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்ட தந்தை செல்வநாயகம் திரு. அருணாசலம் அவர்களது கருத்தினை வலியுறுத்தி வந்த்ததாக குறிப்புகள் உண்டு. இருப்பினும் செல்வநாயகம் அவர்கள் கொங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து சென்று1949ம் ஆண்டில் தமிழரசுகட்சியினை உருவாக்கியபோதுதான் தமிழ் மக்களின் சுயநிரண்ய உரிமையடிப்படையில் அரசியற்தீர்வினைப் பெற்றுக்கொள்வது கொள்கை வடிவம் பெற்றது. அதனைத் தொடர்ந்து காலத்தில் நடைபெற்ற தமிழரசுகட்சியின் எல்லா மாநாடுகளிலும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை வலியுறுத்தப்பட்டு வந்தது. இவ்வாறு சுயநிர்ணய உரிமை ஒரு கொள்கையாக வலியுறுத்தப்பட்டு வந்துள்ளபோதிலும், அதுதொடர்பிலான நடவடிக்கைகள் எதனையும் தமிழரசுக்கட்சி மேற்கொள்ளவில்லை. மாறாக சிங்களஅரசாங்கங்களுடன் பேசி அதிகாரப்பரவலாக்கத்தினை பெற்றுக்கொள்வதிலேயே தமிழரசுக்கட்சியின் தலைமை நம்பிக்கை கொண்டிருந்தது. தமிழரசுக்கட்சி நடாத்திய பேச்சுவார்த்தைகளிலோ, உடன் படிக்கைகளிலோ சுயநிரண்ய உரிமை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

சமகாலத்தில், சுயநிர்ணய அடிப்படையில் தமிழ்மக்கள் பிரிந்துசென்று தனிநாடு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை. சி. சுந்தரலிங்கம் எனஅழைக்கப்பட்ட அடங்காத் தமிழர் முன்னணியின்தலைவர் செல்லப்பா சுந்தரலிங்கம் அவர்களே முன்வைத்தார். தமிழர் தாயகப்பகுதிகளை சிங்களக் குடியேற்றத்திலிருந்து பாதுகாக்கவேண்டும் என்பதுபோன்ற நடைமுறைச் செயற்பாடுகளிலும் அவர் ஈடுபட்டிருந்தார். இருப்பினும் மக்கள் எழுச்சியையோ, அமைப்பு ரீதியாக தமது கட்சியை வளர்த்தெடுப்பதிலோ அவர் வெற்றியடையவில்லை. சாதிப்பாகுபாடுகள் போன்ற விடயங்களில் அவரது பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளும் அவரது கொள்கைகள் வெற்றுக்கோசங்களாக பார்க்கப்பட்டமைக்கு காரணமாக அமைந்திருக்கலாம்.

தமிழரசுக்கட்சியின் மூளை என ஒருகாலத்தில் வர்ணிக்கப்பட்ட ஊர்காவற்துறைத் தொகுதியின்பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த வ.நவரத்தினம் அவர்களே சுயநிரண்ய உரிமை மற்றும் சுயாட்சிக் கருத்துகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்றவர் எனலாம். கொள்கை வேறுபாடு காரணமாக அவர் தமிழரசுகட்சியிலிருந்து பிரிந்து தமிழர்சுயாட்சிக்கழகத்தை அமைத்துச் செயற்பட்டபோது இக்கருத்துகளை இளைஞர்கள் மத்தியில் கொண்டுசென்றார். இருப்பினும் பாராளுமன்ற வழிமுறைகளுக்கு வெளியில் ஒரு இயக்கமாக கட்டியெழுப்ப முடியாமையினால் ஒரு வெகுமக்கள் இயக்கமாக மாற்ற முடியவில்லை. இக்குறைபாட்டினை நிவர்த்திசெய்யும் வகையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்றம் பெற்றது. விடுதலைப்புலிகள் இயக்கம் மாத்திரமே வட்டுக் கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்கு செயல் வடிவம் கொடுத்து இறுதிவரை உறுதியுடன் செயற்பட்டு வந்தது.

“சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான, இறைமைபொருந்திய, சமயச்சார்பற்ற, சமதர்மத் தமிழீழ அரசை மீட்டளித்தலும் மீள உருவாக்குதலும் இந்நாட்டில் தமிழ்த் தேசிய இனம் உளதாயிருத்தலைப் பாதுகாக்கும் பொருட்டுத் தவிர்க்க முடியாததாகியுள்ளதென இம்மாநாடு தீர்மானிக்கின்றது” இவ்வாறு வட்டுகோட்டைத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அடிப்படைகளை ஒட்டியதாகவே தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் அமைந்திருந்தமையை அவர்களால் வெளியிடப்பட்ட சோசலிச தமிழீழம் என்ற தலைப்பிலான கொள்கை விளக்க நூலிலிருந்து அறிய முடிகிறது.

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களால் எழுதப்பட்ட மேற்படி நூல்தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதிகாரபூர்வ கொள்கைவிளக்க ஏடு. தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் குறிக்கோள்கள், தமிழீழத்தின் அரசியல் ஆட்சி முறைமை, தமிழீழத்தில் முஸ்லிம்களின் நிலை, மலையக மக்களின் உரிமை, மதம், சாதி, சீதனம் போன்ற விடயங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு போன்ற விடயங்களை அது தன்னகத்தே கொண்டுள்ளது.

செயற்பாட்டுப் பாதைகள் வேறுவேறாக இருப்பினும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றியவர்களின் நோக்கமும், விடுதலைப்புலிகள் இயக்கத்தை உருவாக்கியவர்களின் நோக்கமும் ஒன்றாகவிருந்தது என்பது வியப்பிற்குரியதல்ல. ஆனால் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைநிறைவேற்றியவர்கள் தேர்தல்களின் வாக்குக் கேட்பதற்கு அப்பால், அத்தீர்மானத்தை கைவிட்டவர்களாகவே நடந்துகொண்டார்கள். இத்தீர்மானத்தை நிறைவேற்றிய பின்னரும் அதிகாரப் பரவலாகத்தைப் பெற்றுக்கொள்வதிலேயே கருத்தாக இருந்தார்களே அன்றி தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையொட்டி பணியாற்றவில்லை.

1985 இல் திம்பு பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டு அனைத்து தமிழ் அமைப்புகளாலும் முன்வைக்கப்பட்ட கோட்பாடுகள் தமிழ்மக்களின் சுயநிரண்ய உரிமையை வலியுறுத்துவதாக அமைந்திருந்தது. திம்புக் கோட்பாடுகளில் வலியுறுத்தப்பட்ட பின்வரும் மூன்றுவிடயங்களும் இன்றைக்கும் உயிர்ப்புடன் இருக்கும் கோரிக்கைகளாக அமைந்துள்ளன.

  • இலங்கைத் தமிழர்கள் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்படுதல்.
  • இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு இனம்காணப்பட்ட தாயகம் உள்ளதென்பதை அங்கீகரித்தல்.
  • தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல்.

இக்கோட்பாடுகளே வட்டுக்கோட்டைத் தீர்மானத்தினதும் விடுதலைப்புலிகளினதும் அரசியற்கொள்கைகளின் அடிப்படையாக அமைந்திருந்தன. தமிழீழ அரசை மீட்டளித்தலும் மீள உருவாக்குதலும் என்ற விடயமே திம்புக் கோட்பாடுகளில் தவிர்க்கப்பட்டிருந்தது. வெளி அழுத்தங்களால் தவிர்க்கப்பட்ட இவ்விடயத்தை கொள்கையாக வரித்துக் கொள்வது சிறிலங்காவின் அரசியல் அமைப்பின் ஆறாம் திருத்தச் சட்ட மூலத்தின் படி தண்டனைக்குரிய குற்றமாக ஆக்கப்பட்டுள்ளது. ஆகையால் தாயகத்திலிருந்து வரும் தீர்வுயோசனைகளில் இதனை எதிர்பார்க்க முடியாது. அண்மையில் தமிழ் மக்கள் பேரவையினாலும், வட மாகாண சபையினாலும் வெளியிடப்பட்ட தீர்வுத் திட்ட யோசனைகளிலும் இவ்விடயம் தவிர்க்கப்பட்டிருந்து. இருப்பினும் புலம் பெயர் நாடுகளில்செயற்படும் தமிழ் அமைப்புகள் தொடர்ந்தும் வட்டுக் கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையிலே செயற்படுவதனைத் தவிர வேறு மாற்றுவழிகள் இருக்காது.