தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல்: திராவிடக்கட்சிகளின் முடிவா ?

91

1966-ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஓர் அரசியல்புரட்சி ஏற்பட்டது. இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் தமிழ்நாட்டை ஆண்டு வந்த காங்கிரசுக் கட்சியை திராவிட முன்னேற்றக் கழகத்தின் அறிஞர் அண்ணா தலைமையிலான கூட்டணி தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றியது. இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியை தமிழ் நாட்டில் அசைக்க முடியாது என்றார் அறிஞர் அண்ணா. அதன் படி திமுகாவும் அதில் இருந்துஎம் ஜி ராமச்சந்திரன் உருவாக்கிய அண்ணா திமுகாவும் தமிழ்நாட்டை 1966இல் இருந்து ஆண்டுவந்து கொண்டிருக்கின்றன. அந்த ஐம்பது ஆண்டுகள் 2016உடன் முடிவுக்கு வருகின்றது.

திராவிடர் வேறு தமிழர் வேறு

திராவிடம் என்ற பெயரில் தெலுங்கர்களும் கன்னடத்தியும் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டுவருகின்றனர் என்ற அதிருப்தி தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. அறிஞர் அண்ணா வீட்டில் தெலுங்கில் பேசிய தெலுங்கர் என்றாலும் அவரை ஒரு தமிழராகவே பலரும் பார்த்தனர். 2009-ம் ஆண்டு இலங்கையில் நடந்த இனக்கொலையின் போது திராவிடக் கட்சிகள் நடந்து கொண்ட விதமும் முக்கியமாகக் கருணாநிதி போட்ட கபட நாடகங்களும் தமிழர்கள் என்பது வேறு திராவிடர்கள் என்பது வேறு என்ற சிந்தனைக்கு வலுவூட்டிக் கொண்டிருக்கின்றன.

2014-ம் நடந்த பாராளமன்றத் தேர்தல்

கட்சிகளின் செல்வாக்குகளைப் பார்ப்பதற்கு 2014-ம் ஆண்டு நடந்த இந்திய பாராளமன்றத்தின் மக்களவைக்கான தேர்தலில் கட்சிகள்பெற்ற வாக்குகளைப் பார்த்தல் அவசியம். இத் தேர்தலில் தமிழ்நாட்டின் 39 தொகுதிகளில் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திமுக, மோடியின் பாரதிய ஜனதாக் கட்சி, மருத்துவர் ராம்தாஸின் பாட்டாளி மக்கள் கட்சி, வைகோவின் மறுமலர்ச்சி திமுக, இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்கு நாடு மக்கள் பேரவை, புதிய நீதிக் கட்சி ஆகிய ஏழு கட்சிகள் ஒரு கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு இரு தொகுதிகளில் வெற்றி பெற்றன, இந்தக் கூட்டணிக்கு 18.5 விழுக்காடு வாக்குகள் கிடைத்தன. திமுக, காங்கிரசுக் கட்சி, திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, இந்திய ஒன்றிய முஸ்லிம் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் மக்களாட்சி முற்போக்குக் கூட்டணி என்னும் பெயரில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு எல்லா இடங்களிலும்தோல்வி கண்டன. காங்கிரசுக் கட்சி போட்டியிட்ட எல்லா இடங்களிலும் கட்டுப்பணத்தை இழந்தது. இத் தேர்தலில் திமுக தனது வாக்குவங்கி 27.8விழுக்காட்டில் இருந்து 26.7 விழுக்காடாகக் குறைந்தது. தா.பாண்டியனின் இந்தியப் பொதுவுடமைக் கட்சியும் ஜி ராமகிருஷ்னணின் மாக்சிய இந்தியப் பொதுவுடைமை கட்சியும் இணைந்து 17 தொகுதியில் போட்டியிட்டு எல்லா இடங்களிலும் தோல்வியைத் தழுவின.

2011 சட்டசபைத் தேர்தல்

2011 சட்டசபைத் தேர்தலில் அண்ணா திமுக,தேசிய முற்போக்கு திமுக, இரண்டு பொதுவுடமைக் கட்சிகள், மனித நேயக் கட்சி, போர்வார்ட்புளொக், புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து மொத்த 234 தொகுதிகளில் 203ஐக் கைப்பற்றின. இக்கூட்டணி 51.93விழுக்காடு வாக்குகளையும் பெற்றது. திமுக, காங்கிரசுக் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கொங்கு முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து39.53விழுக்காடு வாக்குகளைப் பெற்ற போதிலும் 31 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றன.

வேறு வேறு திசைகளில் போன ஆடுகள்

2011-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தல்முடிவுகளையோ அல்லது 2014-ம் ஆண்டு நடந்த பாராளமன்றத் தேர்தல் முடிவுகளையோ வைத்து 2016-ம் ஆண்டு மே மாதம் 16-ம் திகதி நடக்கவிருக்கும் சட்டசபைத் தேர்தலின் முடிவுகளை எதிர்வு கூறுவதைச் சிரமம் ஆக்கும் வகையில் கட்சிகளின் கூட்டணிகள் தலை கீழாக மாறிவிட்டன. கூட்டணி அமைப்பதற்கான பேச்சு வார்த்தைகள் பேரம் பேசுதல்கள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. 2016 ஏப்ரல் 19-ம்திகதிக்கு முன்னர் வேட்பாளர்கள் தமது மனுவை தேர்தல் ஆணையகத்திடம் கொடுக்க வேண்டும்.

கலைஞரின் பாலும் பழமும்

தமிழ்நாட்டில் காங்கிரசுடன் கூட்டு வைத்தால் தோல்வி நிச்சயம் என்னும் நிலைமை இருக்கையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் முதலில் இடம் பிடித்து விட்டது. கலைஞர் கருணாநிதி விஜயகாந்தின் தேமுதிமுகாவுடன் கூட்டணிவைக்கப் படாத பாடு பட்டார். இரு கட்சிகளும் இணைவது நிச்சயம் என்னும் நிலையில் பழம்நழுவிப் பாலில் விழப்போகின்றது என கலைஞர் கருணாநிதி கருத்தும் வெளியிட்டார். ஆனால் தனித்தே தனது கட்சி போட்டியிடும் என விஜயகாந்த் அதிரடியாக ஒரு அறிக்கைவிட்டார். தள்ளாத வயதிலும் நாள் தோறும் கட்சிப் பணிகளையும் மேற்கொண்டு பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டும் ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்துக் கொண்டும் வேட்பாளர்களாக விண்ணப்பித்தவர்களைப் பேட்டி கண்டு கொண்டும் அயராது உழைக்கும் கலைஞர் இதனால் அதிர்ந்து போகவில்லை. தொகுதிகளின் நாடிகளைப் பிடித்துப் பார்ப்பதில் அவருக்கு இருக்கும் அனுபவம் இந்தியாவில் வேறு யாருக்கும் இல்லை. திமுகாவுடன் கூட்டணி அமைப்பதில் மற்றக் கட்சிகள் அக்கறைகாட்டாத நிலையில் கழகத்தின் முதுகெலும்பான மாவட்டச்செயலாளர்கள் பலர் அதிருப்தி அடைந்துள்ளனர். சிலர் வெளியேறவும் செய்தனர்.

தேர்தல் முன்னோட்டம்

தேர்தலை எதிர் கொள்ளும் போது முதலில்கூட்டணி அமைக்க வேண்டும். அதைத் தொடர்ந்து சாதி அமைப்புக்கள், ஊர் அமைப்புக்கள் போன்ற பொது அமைப்புக்களை `வாங்கவேண்டும்’. ஜெயலலிதா இந்திய குடியரசு கட்சி,தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இந்திய தவ்ஹித் ஜமாத், கொங்கு இளைஞர் பேரவை, அகில இந்திய பார்வார்டு பிளாக், தமிழ் மாநில முஸ்லிம் லீக், சமத்துவ மக்கள் கழகம் ஆகியவற்றுடன் தனித்தனியே பேச்சு வார்த்தை நடாத்தினார். திமுக-காங்கிரசுக் கூட்டணியில் இணையவேறு முக்கிய கட்சிகள் அக்கறை காட்டாத நிலையில் கலைஞர் பொது அமைப்புக்களில் கவனம் செலுத்தினார். சுமார் ஐம்பது அமைப்புக்களுடன் 2016 மார்ச் 15-ம் திகதி வரை திமுக பேச்சு வார்த்தை நடத்தியது. அவர்களை தம் வசப்படுத்தக் கூடிய பண வலு திமுகாவிடமும் காங்கிரசிடமும் இருக்கின்றது.

சோதிடர்களை விஜயகாந்த் நம்பினாரா

ரஜனிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் ஆனால் விஜயகாந்த் தமிழ்நாட்டின் முதலமைச்சராவார் எனச் சோதிடர்கள் கூறியிருந்தனர். 2016-ம் ஆண்டு நடந்த பாராளமன்றத்தின் மக்களவைக்கான தேர்தலில் 5.1 விழுக்காடு வாக்குகளை மட்டும் பெற்ற கட்சியின் தலைவரான விஜயகாந்த் தன்னை முதல்வராக ஏற்றுக் கொள்ளும்கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி வைப்பேன் என அடம் பிடிக்கின்றார். திமுக-காங்கிரசுக் கூட்டணியில் இணைந்தால் ஊழலுக்கு எதிரான பரப்புரை எடுபடாது என்பதை விஜயகாந்தின் கட்சியினர் அறிவர். கடும் போட்டிகள் நிலவும் தொகுதிகளில் விஜயகாந்தின் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தால் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்ற கலைஞரின் கணிப்பீடுதான் தேமதிமுகாவுடன் கூட்டணி அமைக்கும் விருப்பத்தை உருவாக்கியது. ஆனால் விஜயகாந்திற்கு இப்போது கூட்டணி அமைக்க மோடியின் பாரதிய ஜனதாக் கட்சி மட்டுமே எஞ்சியுள்ளது. பாஜகவினர் தன்னை மதிப்பதில்லை என்ற அதிருப்தி விஜயகாந்திடம் உள்ளது. அவரது மனைவி பாஜகவுடன் கூட்டணி அமைப்பதிலும் மைத்துனர்திமுகாவுடன் கூட்டணி அமைப்பதிலும் அக்கறையுடன் இருந்தனர். தேமுதிமுகாவில் போட்டியிட முன் வந்த பல வேட்பாளர்கள் அது யாருடனும் கூட்டணி அமைக்காததால் போட்டியிடுவதில் இருந்து பின் வாங்குகின்றனர்.

மக்கள் நலக் கூட்டணி

வைக்கோ ஈழத் தமிழர்களின் விரோதக் கட்சியான ஜி ராமகிருஷ்னணின் மாக்சிய இந்தியப் பொதுவுடைமை கட்சியுடன் இணைந்துள்ளார். இவர்களுடன் ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் தா பாண்டியனின் இந்தியப் பொதுவுடமைக் கட்சியும் இணைந்துள்ளது. இந்தக் கூட்டணிக்கு மக்கள் நலக் கூட்டணி எனப்பெயரும் இட்டுள்ளனர். இதில் இணையும் படி இவர்களும் விஜயகாந்திற்குப் பாய் விரித்து வைத்துக் கொண்டு காத்திருக்கின்றார்கள். இவர்களுடன் போய்ச் சேர்வது நரியிடம் விருந்துஉண்ணப் போன கொக்கின் கதையாக முடியும்என்பதை விஜயகாந்த் அறிவார்.

சீமானைப் புறக்கணிக்கும் ஊடகங்கள்

mqdefaultவிஜயகாந்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தோழர் சீமானை ஓரம் கட்டுவதில் பல தமிழ்நாட்டு முன்னணி ஊடகங்கள் முன்னிற்கின்றன. சீமான் 234 இடங்களிலும் தனித்துப் போட்டியிடுவேன் என்கின்றார். சீமான். பணவலிமை மிக்க திராவிடக் கட்சிகளுடன் சீமானின்நாம் தமிழர் கட்சி எவ்வளவு தூரம் நின்று பிடிக்கமுடியும். நாற்பது விழுக்காடு தமிழரல்லாதவர்களைக் கொண்ட தமிழ்நாட்டில், தெலுங்கர்களை அதிகம் கொண்ட தமிழ்நாட்டில் சீமான் பேசும் தமிழ்த் தேசியவாதம் எந்த அளவு தூரம் எடுபடும்?

தமிழின உணர்வாளர்களும் ஈழத் தமிழர்களும்

தமிழின உணர்வாளர்களும் ஈழத் தமிழர்களும் பொதுவாக சீமானையும் மருத்துவர் ராமதாசையும் புதிய தமிழகக் கட்சியையும் வைக்கோவையுமையே அதிகம் நம்பியிருப்பார்கள். ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை தமக்குத் துரோகமிழைத்த திமுக-காங்கிரசுக் கூட்டணி படுதோல்வியைச் சந்திக்க வேண்டும் என்பதே.