விடுதலைப்புலிகள் முன்னெடுத்த ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர், தமிழ் அரசியற்பரப்பில் அதிகம் பேசப்பட்ட சொல் “சனநாயகம்” என்பதாகத்தானிருக்கும். 2009 மே 18 க்கு பினனர், புலம்பெயர் நாடுகளில் புதிதாக அமைப்புகளைத் தொடங்குவதற்கு முற்பட்டவர்களும், சாதாரண பொதுமக்களும் இதனை ஒரு மந்திரச் சொல்லாக உச்சாடனம் செய்து கொண்டிருந்தார்கள். ஒரு வகையில் பார்த்தால், இது ஒரு படிநிலை மாற்றத்திற்கான அறிகுறியாகவே தென்பட்டது. ஆனால் நடைமுறையில் மிகவும் கொச்சைப்படுத்தப்பட்ட ஒரு சொல்லாகவே அது மாறிவிட்டது.
இவ்வாறு சனநாயகம் பற்றிப் பேசப்பட்டதற்கு இரண்டு காரணங்களைக் குறிப்பிட முடியும். ஒன்று ஆயுதப்போராட்டம் தோல்வியுற்ற நிலையில், தெரிந்த ஒரேயொரு மார்க்கமாக சனநாயக வழி முறை தென்பட்டது. இரண்டாவது, விடுதலைப்புலிகள் உட்கட்சி சனநாயகத்தைக் கடைப்பிடிக்கவில்லை என்ற நீண்டகாலமாக இருந்துவந்த விமர்சனம், அவர்களது பின்னடைவுக்கு காரணமாக பார்க்கப்பட்டமை. மேற்குநாடுகளில் தமிழருக்குள்ள தொடர்புகளும் இந்த கருத்துருவாக்கத்தை வலுப்படுத்துபவையாக அமைந்திருந்தன.
தமிழீழத் தனியரசு என்ற கொள்கையில் மிகவும் உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருந்த ஒரு விடுதலை இயக்கம் என்ற வகையில், ஐக்கிய இலங்கைக்குள் சிறிலங்காவின் தேர்தல் களில் பங்குபற்றி இறைமையை தாரைவார்க்க விடுதலைப்புலிகள் விரும்பவில்லை
கிரேக்கம், லத்தின் ஆகிய மொழிகளின் வழியாக பிரஞ்சு மொழிக்கு வந்த démocratie என்ற சொல்லே ஆங்கிலத்தில் democracy (சனநாயகம்) என அழைக்கப்படுகிறது. கிரேக்கத்தில் dēmos (People: மக்கள்) kratia (power: சக்தி) என்ற சொற்களின் சேர்க்கையாக இச்சொல் உருவானது. ஆகவே சனநாயகத்தின் மூலச்சொல், அதன் அர்த்தத்தை மிகத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. இங்கு சனநாயகம் பற்றி வகுப்பெடுப்பது எனது நோக்கமல்ல. மாறாக தமிழ் அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் சனநாயக வழியை பின்பற்கின்றனவா என்பதை சுருக்கமாக ஆராய்வதுடன் இப்பத்தியை நிறைவு செய்துகொள்கிறேன்.
இலங்கைத்தீவில் தமிழ் அரசியற்கட்சிகள் ஒரளவுக்கேனும் சனநாயகத்தை கடைப்பிடித்தபோதிலும், தமது கட்சிகளின் பெயர்களில் சனநாயகம் என்ற பெயரை ஆரம்பத்தில் இணைத்துக் கொள்ளவில்லை. 1987ல் இந்திய சிறிலங்கா உடன்படிக்கையின் பின்னர் உருவாகிய பரந்தன் ராஜனின் ஈழ தேசிய சனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.ஃஎப்), டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் சனநாயகக்கட்சி (ஈ.பி.டி.பி), சித்தார்த்தனின் சனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டி.பி.எல்.ஃஎப்), ஈரோஸ் இயக்கத்தின் ஈழவர் சனநாயக முன்னணி என்பன சனநாயகம் என்ற சொல்லைக் கொண்டிருந்தன. இச்சொல் உபயோகிக்கப்பட்டதற்கான காரணம், அதுவரை ஆயுதம் ஏந்திப் போராடிய இந்தக்குழுக்கள் தேர்தல் முறையிலான அரசியலுக்குள் நுழைந்தமையே. ஆனால் தமிழ் அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை சனநாயகம் என்ற சொல் தேர்தல்களில் பங்குகொள்ளுதல் என்பதுடன் நிறைவடைகிறது. அதற்கு அப்பால் சனநாயக வழிமுறை எதனையும் கடைப்பிடிக்க அவர்கள் தயாராக இல்லை என்பதே கசப்பான உண்மையாக உள்ளது.
ஒட்டுக்குழுக்களாக இருந்து கொண்டு அரசியல் செய்யும் ஈ.பி.டி.பி, புளொட், ரி.எம்.வி;.பி. போன்றவை சனநாயகத்தை கடைப்பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு யாரிடமும் இல்லை.
1989 இல் விடுதலைப்புலிகள் இயக்கம், விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணி என்ற பெயரில் ஒரு அரசியற் கட்சியை சிறிலங்காவின் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தது. இருந்தபோதிலும், சிறிலங்காவின் தேர்தல்களில் போட்டியிடும் நோக்கத்தினை அது கொண்டிருக்கவில்லை. தமிழீழத் தனியரசு என்ற கொள்கையில் மிகவும் உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருந்த ஒரு விடுதலை இயக்கம் என்ற வகையில், ஐக்கிய இலங்கைக்குள் சிறிலங்காவின் தேர்தல்களில் பங்குபற்றி இறைமையை தாரைவார்க்க விடுதலைப்புலிகள் விரும்பவில்லை. மறுபுறத்தில், ஒரு இராணுவ – அரசியல் இயக்கமாக வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ள முடியாத நிiயில் அவர்கள் இருந்தனர். இந்நிலமையானது உட்கட்சி சனநாயகத்தை பேணுவதற்கும் இடமளிக்கவில்லை. இவற்றைக் காரணங்காட்டி இயக்கத்திற்கு சனநாயக விரோத முத்திரை வழங்கப்பட்டது. அதனை இராசதந்திரிகளும், சர்வதே அமைப்புகளும் அமைப்புகளும் ஏற்றுக் கொண்டன. இது ஒரு உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை என்பதை இங்கு விளக்கத் தேவையில்லை. ஆனால் இதே அளவுகோலை, எந்தவொரு தமிழ்; அமைப்பின் மீது பிரயோகித்தாலும்; அவை தேறப்போவதில்லை என்பதனை நாம் உறுதிபடக் கூறமுடியும்.
தேர்தல் அரசியலில் ஈடுபட்டுவரும் எந்தவொரு தமிழ் அரசியல் கட்சியும் உட்கட்சி சனநாயகத்தைக் கொண்டிருக்கவில்லை. சிறிலங்கா இராணுவத்தின் ஒட்டுக்குழுக்களாக இருந்து கொண்டு அரசியல் செய்யும் ஈ.பி.டி.பி, புளொட், ரி.எம்.வி;.பி. போன்றவை சனநாயகத்தை கடைப்பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு யாரிடமும் இல்லை. ஆனால் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அதிகப்படியான தமிழ் உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, குறிப்பாக அதில் முதன்மை பாகத்தை வகிக்கும், அறுபத்தொரு வருடகால அரசியல் பாரம்பரியம் கொண்ட தமிழரசுக்கட்சி விடயத்தில் இவ்விதமான எதிர்பார்ப்பு மக்களிடமிருப்பது தவிர்க்க முடியாதது.
“தமிழரசுக்கடசியில் ஆரோக்கியமான கருத்துப் பரிமாறலும் உட்கட்சி ஜனநாயகமும் இல்லை. இயக்கப் பாணியில் கட்சியின் தலைவிதியை ஒரு சிலர் மட்டுமே தீர்மானிக்கும் பரிதாப நிலை. வழிப்போக்கர்கள் சிலர் கட்சியின் மூத்தோரை உதறித் தள்ளிவிட்டு கட்சியின் முக்கியஸ்தர்களாகி விட்டனர். இவர்களுக்கு தமிழ்த் தேசியமும் தெரியாது. தமிழ்த் தலைவர்களையும் அவர்கள் செய்த தியாகத்தையும் தெரியாது.” இவை அண்மையில் “தினக்குரல்” பத்திரிகையில் தமிழரசுக்கட்சியின் உபதலைவரும் நீண்டகாலமாக தமிழரசுக்கட்சியில் அங்கம் வகிப்பவருமான பேராசிரியர் க.சிற்றம்பலம் எழுதிய கட்டுரையில் குறிப்பட்டிருப்பவை. உண்மையில், தமிழரசுக்கட்சி என்பது இரா. சம்பந்தன், மரியநாயகம் சுமந்திரன், மாவை சேனாதிராசா ஆகிய மூவரடங்கிய குழுவாக குறுகியுள்ளது. அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட மற்றயவர்கள் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளைப்பார்த்தே தமது கட்சியின் நடவடிக்கைகளை அறிந்து கொள்கிறார்கள.
தாயக நிலமை இவ்வாறு உள்ளது என்றால், ஐந்து நட்சத்திர சனநாயக நாடுகளான புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழமைப்புகளின் நிலையும் இதுதான். பெருத்த எதிர்பார்ப்புகளுடன் தேர்தல் மூலம் உறுப்பினர்களை தெரிவு செய்த நாடுகடந்த அரசாங்கத்திடம் சனநாயக வழிமுறையிலான செயற்பாடுகள் என எதனையும் காணமுடியவில்லை. தேர்தலில் தெரிவுசெய்யப்படாத, வெளியில் இருக்கும் சிலரே இதனைக் கட்டுப்படுத்துகிறார்கள் என்பது பொதுவான நம்பிக்கையாக உள்ளது. கடந்த தேர்தலில், ரொறன்ரோ Birchmount பகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த செல்வநாயகி சிறீதாஸ் என்ற பெண்மணி நாடுகடந்த அரசாங்கத்தின் தலைமைத் தேர்தல் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளமை, அது சனநாயக விழுமியங்களுக்கு எவ்வித மதிப்பினை வழங்குகிறது என்பதனை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும், நாடுகடந்த அரசாங்கமும் தமிழ் அரசியலில் சனநாயகம் மறுக்கப்பட்டுள்ளமைக்கான நிகழ்கால உதாரணங்களாக அமைந்துள்ளன.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும், நாடுகடந்த அரசாங்கமும் தமிழ் அரசியலில் சனநாயகம் மறுக்கப்;பட்டுள்ளமைக்கான நிகழ்கால உதாரணங்களாக அமைந்துள்ளன. ஏனைய தமிழமைப்புகள் இவ்விடயத்தில் நேர்த்தியாகச் செயற்படுகின்றன என்று சொல்வதற்கில்லை. இதற்கு உதாரணமாக ஒரு சம்பத்தை இங்கு குறிப்பிடலாம். அண்மையில் ஒரு தமிழ் தொலைக்காட்சியில் பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைவர் சுகந்தகுமார் ஐ நேர்காணல் செய்தார்கள். அவரிடம் “சுகந்தனை அண்மைக் காலமாகக் காணவில்லை, எங்கே போயிருந்தீர்கள்” எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தான் 2009க்கு பின்னர் தனிப்பட்ட காரணங்களாலும், உடலநலக்குறைவாலும் செயற்படுவது குறைவாக இருந்தாக குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியை கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இயல்பாகவே தோன்றுகிற கேள்விகள் என்னவெனில், தனிப்பட்ட காரணங்களுக்காக ஒருவர் இரண்டுவருடங்கள் ஒதுங்கியிருக்கிறார் என்றால், ஆயிரக்கணக்கான அங்கத்தவர்களைக் கொண்ட பிரித்தானிய தமிழர் பேரவைக்கு, அவரையே தலைவராக வைத்திருக்க வேண்டியதன் அவசியம்தான் என்ன? அதே சமயம் பொதுப்பணிகளிலிருந்து ஈடுபடமுடியாதிருக்கிற ஒருவர் தனது தலைமைப்பதவியை தற்காலிகமாகவேனும் வேறு ஒருவருக்கு கொடுக்காமல் நாற்காலியில் ஒட்டியிருப்பது ஏன்?
சனநாயகம், சனநாயக வழிமுறை என்பவற்றை உதட்டளவில் வைத்திருக்;கும் சொற்களாக விட்டுவிடாமல், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ் அமைப்புகள் முன்வரவேண்டும். அதற்கான அழுத்தத்தை வழங்கவேண்டியது தமிழ் மக்களின் இன்றியமையாத கடமையாக அமைந்துள்ளது.