தமிழ் குடிசார் சமூகத்தினரினரால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருக்கு கொடுக்கப்பட்ட பகிரங்க விண்ணப்பம் தொடர்பாக புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் கருத்தறிவதற்காக உலகத்தமிழர் பேரவை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், பிரித்தானிய தமிழர் பேரவை, தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானியக் கிளை ஆகியவற்றுடன் மின்னஞ்சல் மூலமாக ஒரு பேப்பர் தொடர்பு கொண்டது. நாடுகடந்த அரசாங்கத்திடமிருந்து பதில் எதுவும் கிடைக்கவில்லை. எமக்கு கிடைத்த கருத்துகளின் தொகுப்பை இங்கு பிரசுரிக்கிறோம்.
உலகத்தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவல் அடிகளார் ஒரு பேப்பர் க்கு வழங்கிய கருத்துகளை இங்கு தருகிறோம்.
மேற்படி விண்ணப்பம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்டதாக இருப்பினும், தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்துடன் இணைந்து செயற்படும் அலைந்துழல்வு (னயைளிழசய) சமூகத்திற்கும் பயனுடையதாக அமைகிறது.
எம்மில் சிலர் இது த.தே.கூ இற்கு எதிரான விமர்சனங்களாக அர்த்தப்படுத்திக் கொண்டாலும், இவ்விண்ணப்பம் அவ்வாறானதாக அமையவில்லை. பொறுப்புமிக்க மதத்தலைவர்கள், கல்வியாளர்கள், துறைசார் வல்லுனர்கள், தொழிலாளர்கள் என சமூகத்தின் பலதரப்படவர்களையும் உள்ளடக்கிய இவர்கள் ஒன்றிணைந்து ஒரு மக்கள் மன்றமாக, சமூகத்தை வலுப்படுத்தும் நோக்கில் தமிழ்த் தேசியக்கூட்டமைபினை நோக்கியும் அது எதிர்கொண்டுள்ள மற்றைய தரப்புகளை நோக்கியும் தமது கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
தமிழ் மக்கள் அண்மையில் பெரும் எண்ணிக்கையில் த.தே.கூ உறுப்பினர்களை தமது பிரதிநிதிகளாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்துள்ளார்கள் என்பதனை நாம் மறந்துவிடலாகாது. துரதிர்ஸ்டவசமாக, சிறிலங்கா அரசாங்கம், அவர்களைத் தெரிவுசெய்தவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் விடயத்தை செவிமடுப்பதை தவிர்த்து, தமக்கு விருப்பமான தீர்வினை வலிந்து திணிப்பதற்கான அழுத்தங்களைக் கொடுத்து வருகிறது.
உரிமைகளுக்காக குரல்கொடுப்பதும் அவற்றை வலியுறுத்துவதும் பாராளுமன்றத் தேர்தல்களுடன் முடிந்துவிடுவதில்லை என்பதனை இவ்விண்ணப்பம் வெளிப்படுத்துகிறது. பல்வேறு ஒடுக்குமுறைகளினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில், தமது மனிவுரிமைகளை பேணும் விடயத்தில் புலம்பெயர் மக்களை விட முனைப்பாக அவர்கள் இருக்கிறார்கள். ஆகவே தங்களால் தெரிவுசெய்யப்பட்ட தமது பிரதிநிதிகள் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதிலும் அவர்களை அரசாங்கம் எவ்வாறு நடாத்துகிறது என்பதிலும் அவர்கள் அக்கறை கொண்டுள்ளார்கள் என எதிர்பார்க்கலாம்;.
தமிழ் குடிசார் சமூகத்தைச் சேர்ந்தவர்களான இவர்கள், தமிழ் மக்களின் இருப்பு, அவர்களது நலன் ஆகியவற்றில் கரிசனைகொண்டு; இருவிடயங்களில் தங்களுக்குள்ள அச்சத்தினையும், குழப்பங்களையும் சரியான முறையில் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார்கள்
- சிறிலங்கா அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில், தமிழ்மக்கள் கரிசனை கொண்டுள்ள விடயங்களில் துரோகமிழைக்காமை.
- மற்றயது வரவிருக்கும் மாகாணசபைத் தேர்தல் பற்றியது
பேச்சுவார்த்தை விடயத்தில், நாம் எங்களை ஒரு தேசிய இனம், சுயநிர்ணய அடிப்படையில் சுயாட்சிக்கு உரித்துடையவர்கள் என்பதனையும், மற்றய தரப்புகளின் மூலோபாயங்களிற்கேற்ப எமது அரசியல் அடிப்படைகளை கைவிட முடியாது என்பதனையும் மீளவலியுறுத்தியுள்ளார்கள்.
ஆகவே புலம்பெயர் அமைப்புகளும் குழுக்களும் யாருக்காக நாம் போராடுகின்றோமோ அவர்களது தேசியம், தன்னாட்சியுரிமை, சுயநிர்ணயம் ஆகிய மூன்று முக்கிய விடயங்களினை ஏற்றுக் கொள்ள வேண்டும். இவ்விடயத்தில் நாம் மேற்கொள்ளும் முயற்சிகளில் தொடர்ந்தும் உறுதியாக இருக்க வேண்டும்.
இவ்விடயங்களில் பல்வேறு அமைப்புகள் பல்வேறு வழிகளில், பல்வேறு தளங்களில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இங்கு தமிழ்மக்கள வேண்டி நிற்கும் ஒற்றுமை என்பது எல்லா அமைப்புகளையும் ஒன்றிணைத்த ஒரு பெரிய அமைப்பினை உருவாக்குவது அல்ல, மாறாக மேற்படி மூன்று அடிப்படைகளிலும் விட்டுக் கொடுப்பின்றி அவற்றுக்கு விசுவாசமாக உழைப்பது.
துரதிர்ஸ்டவசமாக, எம்மில் சிலர் இவை வெறுமனே கோசங்களாகவும் அவற்றை எல்லோரும் ஒரேமாதிரியாக உச்சரிக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கிறார்கள். விடுதலைப் போராட்டத்தை பதாகைகளைப் பிடிப்பதும், கோசஙடகளை எழுப்புவதாகவும் குறுக்கிவிடமுடியாது, ஆனால் புலம்பெயர் சமூக சூழலில் உள்ள வசதியினங்கள், முட்டுக்கட்டைகளுக்கு மத்தியில் இலட்சியத்தையடைவதற்காக தம்மை அர்ப்பணிப்பது.
கூட்டமைப்பு தமிழ் மக்களின் அரசியற் தலைமையாக, தனகான செயற்படு பரப்பினைக் கொண்டுள்ளது, அது“சிறிலங்காவின் ஜனநாயகத்திற்குள்” நின்று கொண்டு செயற்படவேண்டியுள்ளது. அதுபோல் சிறிலங்காவிற்கு வெளியில் புலம்பெயர் அமைப்புகளின் செயற்படுபரப்பிலும், சர்வதேசமூகத்தின எதிர்கொண்டு செயற்படவேண்டியுள்ளது. ஆகவே இந்த விண்ணபத்தின் உள்ளடக்கம் மேற்படி மூன்றுவிடயங்களிலும் ஒற்றுமையாகவும், உண்மையாகவும் நின்று செயற்படுவதனை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.
2012 ம் ஆண்டு நடைபெறவுள்ள வடமாகாணசபைத் தேர்தல்கள் பங்குபற்றுவது தொடர்பாக அவர்கள் தமது கருத்துகளை முன்வைத்துள்ளார்கள. அவையாவன
- தேர்தலில் பங்கெடுப்பது,இனப்பிரச்சனைக்கான தீர்வாக 13ம் திருத்தச்சட்டத்தினை ஏற்றுக் கொள்வதாக அமையும்
- அதனை அதிகாரப்பகிர்வின் ஆரம்பப்புள்ளியாக எடுத்து, காலக்கிரமத்தில் தொடர்ந்து அதிகரித்துச் செல்வது என்ற அணுகுமுறை செயற்படுத்த இயலாதது
- த,தே.கூ வடமாகாணசபையை ஏற்றுக் கொள்வது “அரசியல் முள்ளிவாயக்கால்” ஆக அமைந்துவிடும்.
த.தே.கூ. நேரடியாக தேர்தல்களில் பங்கு கொள்ளாமல்,அதே சமயம் தமிழ் மக்களுக்கு எதிரானவர்களும், சிறிலங்கா அரசாங்கத்திற்கு சார்பானவர்களும் தெரிவு செய்யப்படாமல் இருப்பதற்குமான மாற்றுவழிமுறைகள் பற்றி சிந்திக்க வேண்டும்.
புலம்பெயர் மக்கள் வெளியிலிருந்து கொண்டு, கூட்டமைப்பு எது செய்யவேண்டும் என்பதை போதிப்பதையோ கட்டளையிடுவதையோ தவிர்க்க வேண்டும். ஏனெனில் நாங்கள் தேர்தலையோ அல்லது தேர்தலைப் புறக்கணிப்பதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையோ எதிர்கொள்ளப் போவதில்லை. இவ்விடயத்தில் த.தே.கூ.வை மேற்கொண்டு ஆலோசனைகளை மேற்கொள்ளுமாறு விண்ணபிக்ப்பட்டுள்ளதால், அது இதனை எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்;.
பிரித்தானிய தமிழர் பேரவையின் வேண்டுகோள்.
வடக்கு கிழக்கு இணைந்த சுதந்திர தாயகம் என்ற அடிப்படைக் கோட்பாட்டினை அடித்தளமாகக் கொண்டு,ஈழத் தமிழ் மக்களின் விடுதலை நோக்கிய போராட்டத்தினை நீண்ட காலமாக பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழினம் முன்னெடுத்து வருகின்றது. தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்ட காலத்தில் இருந்து இழந்து போன உரிமைகளைப் பெறுவதற்காக ஈழத் தமிழினம் ஈந்த தியாகங்களும், இழந்த உயிர்கள், உடைமைகள் அளப்பெரியது.
இன்றைய அரசியல் நிலைமைகளுக்கு ஏற்ப, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் மக்களின் விடுதலைக்காக குரல் கொடுக்கின்ற பொது அமைப்புக்களும் இணைந்து, தமிழ் மக்களின் விடுதலைக்கு வித்திடக் கூடிய தீர்வினை பெறுவதற்கான ஒரு தீர்க்கமான முடிவினை எடுக்குமாறு பிரித்தானிய தமிழர் பேரவை பிரித்தானிய தமிழ் மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கின்றது.
தமிழ் சிவில் சமூகம் த.தே. கூட்டமைப்புக்கு சமாப்பித்த விண்ணப்பம் தொடர்பான எமது மறிவினை
ஐ.தி.சம்பந்தன்- இலண்டன்
த.தே.கூட்டமைப்பைப் பிளவுபடுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சியே இந்த பகிரங்க விண்ணப்பம் என்பது வெள்ளிடைமலை ஆகும்.
த.தே.கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்ற ஒரு பலமான அரசியில் கட்சி என்பதை ஏற்றுக்கொள்ளும் அறிவுப்பிழைப்பாளர்கள் புத்திசாலித்தனம் அற்றமுறையில் இந்த விண்ணப்பத்தைத் தயாரித்துள்ளார்கள்.
நீண்டகால அரசியல் தூய்மை, வாய்மை, அனுபவம் போன்றவற்றோடு செயற்பட்டுவரும் அரசியல் தலைமைக்கு ஆரோக்கியமான முறையில் ஆலோசணைகள் கூறுவதற்கு தமிழ் சிவில் சமூகத்திற்கு உரிமையுண்டு.
இன்றைய நிலையில் சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெற்ற த.தே.கூட்டமைப்புத்தான்; தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக கூடிய ஒரு தீர்வை வாதாடிக் கொண்டுவரமுடியும் என்பதை இந்த அறிவுப்பிழைப்பாளர்கள் நன்கு அறிவர்.
தமிழ்த் தேசியம், சுயநிர்ணய உரிமை பற்றி த.தே.கூட்டமைப்பின் தலைமைக்கு நன்றாகத் தெரியும். பள்ளி மாணவர்களுக்கு அரசியில் படிப்பிப்பது போல முதிர்ந்த அரசியல் தலைவர்களுக்கு இந்த அறிவுப்பிழைப்பாளர்கள் நடைமுறைச் சாத்தியம் அற்ற ஆலொசனைகளை கூறுவது அவர்களது புத்திசாலித்தனம் அற்ற தன்மையையே காட்டுகிறது.
தேர்தல் புறக்கணிப்;பால் ஒரு பலமான தமிழ் இராணவ பலத்தையும நாற்பதினாயிரம் மக்களையும் படுகொலை செய்த அரசை ஆட்சிபீடம் ஏறவைத்ததை கருத்தில்கொள்ளாது மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவேண்டாம் என்று கூறுபவர்கள் 1931 இல் யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் சட்டசபைத் தேர்தலைப் புறக்கணித்ததால் தமிழர்களுக்கு ஏற்பட்ட அரசியல் பின்னடைவுகளை இந்த அறிவுப்பிழைப்பாளர்கள்; அறிந்திருக்கவில்லையா? 1994 இல் விடுதலைப் புலிகள் பொதுத் தேர்தலைப் புறக்கணித்ததால் டக்லஸ் தேவானந்தாவின் ஈபிடிபி கட்சி குறைந்த வாக்குகளுடன் 9 நாடாளுமன்ற ஆசனங்களைப்; பெற்றதால் தமிழ்மக்களது அரசியலில் ஏற்பட்ட மாற்றம் பற்றி இவர்களுக்குத் தெரியாதா?
“மாகாண சபைத் தேர்தலில் த.தே.கூட்டமைப்பு பங்கெடுக்கக் கூடாது” என்ற எச்சரிக்கையையும் இந்த அறிவுப்பிழைப்பாளர்கள் விட்டிருக்கிறார்கள்.
இதன் பிண்ணணி என்ன? த.தே.கூட்டமைப்பை தோற்கடிக்க மெத்தப் பாடுபட்டு தோல்வி கண்ட ஒரு குழுவை மாகாண சபைத் தேர்தலில் சுயேட்சை முகமூடி போட்டு களமிறக்குவதற்கான சூழ்ச்சி என்பது எல்லோருக்கும் தெரியும்.
த.தே. கூட்மைப்பைத் தோற்கடிப்பதே அரசாங்கத்தின் நோக்கமும் ஆகும். இதன் அடிப்படையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணக் பல்கலைக் கழகம் விடப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் அமைச்சரின் ஆதரவு இல்லாமல் பல்கலைக் கழக விரிவுரையாளர்கள் இவ்விண்ணப்பதில் கையொப்பம் இட்டிருக்க முடியாது. அதற்கான வாய்ப்பு கிஞ்சித்தும் இல்லை. த.தே. கூட்டமைப்பின் முன்னாள் நா.உ. திரு. செல்வராசா கஜேந்திரனின் சகோதரர் பல்கலைக்கழக விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். அவரது செல்வாக்கால் மற்றும் சில விரிவுரையாளர்கள் விண்ணப்பத்தில் கையொப்பம் இட்டுள்ளனர்.
த..தே. கூட்டமைப்பை உடைப்பதற்கு இதுவரை அரசாங்கம் ஏடுத்த முயற்சியும் கஜேந்திரன் குழுவினரும் எடுத்த முயற்சி வெற்றியளிக்கவில்லை.
இப்பொழுது புத்திஜீவிகளின் ஊடாக மேற்கொள்ளப்டும் சதிமுயற்சியே இப்பகிரங்க விணண்ப்பம் எனபது அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாகும்.
இவர்கள நல்லநோக்கம் கொண்டவர்களாக விருந்தூல் மன்னார் கந்தோலிக்க பேராயர் அதிவணக்கத்திற்குரிய கலாநிதி இராயப்பு யோசப் அவர்கள் தலைமையில் கத்தோலிக்க குருமாh ஜனாதிபதியைச் சந்தித்து தமிழர்பிரச்சனையைக் கூறியதுபோல் கலாநிதி இராயப்பு ஜோசப் தலைமையில் புத்திஜீவிகள் குழு ஒன்று த.தே.கூட்மைப்புத் தலைவரைச்சந்தித்து ஆரோக்கியமான முறையில் அறிவுரை புகட்டியிருக்கலாம்..
ஊடகங்கள் மூலம் இப்படியான அறிக்கைளை வெளியிட்டு மக்களைக்குளப்பி த.தே.கூட்டமைப்பக்கு தொல்லை கொடுப்பதை நோக்காகக் கொண்டே இந்த நாடகம் ஆரங்கேற்றப்பட்டுள்ளது.
தமிழர்களின் ஓற்றுமையக் குலைப்பதற்கு தமிழ் ஊடகங்கள் இணையதளங்கள் சிலவும் அரச ஊடகங்களும் இதுபோன்ற அறிக்கைகளை எதிர்பார்த்திருந்தனர். அதனால் இந்த அறிக்கை வெளிவந்ததும் இந்த ஊடகங்களும். வானொலிகளும் த.தே.கூட்டமைப்புக் எதிராகச் சரமாரியான பிரசாரங்களை கட்டவிழ்து விட்டிருக்கிறார்கள்.
இந்த விணணப்பத்தில் புத்திஜீவிகள் கையொப்பம் இடாதது ஏன்? ஆவ்வாறு ஒப்பம் இட்டிருந்தால் ஒப்பத்துடன் இந்த அறிக்கை வெளிவந்திருக்கவேண்டும்.
அப்பொழுது தான் அதில் நம்பிக்கை ஏற்படும்.
நுல்லிணக்க ஆணைக்குழவின் அறிக்கைக்கு த.தே.கூட்டமைப்பு வெளியிட்ட கண்டன அறிக்கையில் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கைபொப்பம் இட்டு வெளிவந்ததால் எல்லா நாடாளு மன்ற உறுப்பினரும் பொறுப்பேற்றுள்ளனா என்ற நம்பிக்கை வெளிப்படுத்தபட்டுள்ளது.
இது தவிர இந்த முக்கியத்துவம்வாய்ந்த விண்ணப்பம் ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் ஏன்வெளிவரவில்லை?. தமிழ் மக்களிடையே புத்தி ஜீவிகள் விழிப்புடன் இருக்கிறார்கள் என்பதை சிங்கள மக்களும் அறிய வேண்டும்.
அப்படி அறிய வந்தால் விரிவுரையாளர்களுக்கு ஆபத்து வந்தவிடும் என்ற பயமா?
அப்படியானால பேச்சவார்த்தை தோல்வி அடைந்தால் த.தே.கூட்டமைப்பு நிடத்தவுள்ள போராட்டத்தில் எப்படி பங்கு கொள்வார்கள்?
தமிழ் மக்களே நன்கு சிந்தியுங்கள்.புத்திஜீவிகள் எந்தப்போர்வையில் தமிழ் மக்களைக்களை ஏமாற்று கிறார்கள். ஆத்ம ஞானிகளும் இதற்குத் துணை போகின்றார்களே. இதன் மர்மம் என்ன? உண்மை புரிகிறதா!
என்ன பிரசாரத்ததை யார்மேற் கொண்டாலும் த.தே.கூடட்மைப்பு தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு அரசியல் தீhவைக்கொடுவர முயற்சிப்பர் அல்லது மாற்று வழி என்னஎன்பதை அறிவிப்பர். சற்றுப் பொறுத்திருந்து பாருங்கள்.