தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக யார் வரவேண்டும் ?

கலைஞரை, ஜெயலலிதாவை, வைகோவை இன்னும்மற்றும் பிறத்தாரை அவர் இன்னார் என்று தெரிகின்றபக்குவம் வந்துவிட்டது. அவர்கள் என்ன செய்வார்கள் என்று தெரிகிறது. என்ன செய்ய மாட்டார்கள் என்றும்தெரிகிறது. இவர்கள் எவரும் தமிழ் நாட்டு மக்களுக்கு உருப்படியாக எதுவும் செய்யவில்லை. செய்யப் போவதுமில்லை. தமிழ் நாட்டு மக்கள் மீது படர்ந்திருக்கின்ற இருள் இப்பொழுது விலகுவதாக இல்லை. அந்த விளக்கத்துடனும், தெரிதலுடனும், புரிதலுடனும், அறிதலுடனும் ஒரு கருத்தை முன் வைக்கின்றேன். தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் ஏறி அமரப் போவது யார்? இருவர் மீது மாத்திரமேஅனைத்து சுட்டு விரல்களும் நீள்கின்றன. கருணாநிதி, ஜெயலலிதா. மற்றவர்களுக்கான சந்தர்ப்பம் இல்லை என்பது வெளிப்படையாக தெரிந்த ஒன்று.

சரி, கருணாநிதி, ஜெயலலிதா இவர்களில் யார் முதல்வராக வரவேண்டும். என்று என்னைக் கேட்டால் ஜெயலலிதா முதல்வராக வரக்கூடாது என்றே என்பதில் வெளிவரும். கருணாநிதியே முதல்வராக வரவேண்டும் என்பதேஎன்பதிலின் உட்கிடக்கை என உங்களைப் போல நானும்புரிகின்றேன். ஆனால், தவிர்க்க முடியாதது, அது. கருப்பு,வெள்ளை என்ற வண்ணங்களே தமிழ்நாட்டில் உள்ளன. இடையில் சாம்பல் நிறம் தமிழ் நாட்டு அரசியலில் இல்லை.

ஒரு விபத்தின் மூலம் அரசியல்வாதியாகி, இன்னொருவிபத்தின் மூலம் முதலமைச்சரானவர் தான் ஜெயலலிதா.ராஜீவ்காந்தியின் கோர மரணத்தின் அநுதாப வாக்குகளேகொங்கிரஸ் கட்சி அறுவடை செய்யாமல் அப்படியே ஜெயலலிதாவிடம் தாரைவார்த்தது. அது மாத்திரம் நடந்திராவிடின், ஜெயலலிதா இப்போதும் முதலமைச்சராகவும் இல்லை அரசியலிலும் இல்லை. ஆனால், அதுவும் ஒருவிதத்தில் நல்லது தான். ஒரு கீரைக்கடை, புல், புழு, பூச்சிநிறைந்து அழுகல் கீரைகளை விற்றுக் கொண்டிருக்கும். அதேசமயம் ஜெயலலிதா அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தால் கருணாநிதிக்கு ஒரு மாற்று பலமானதாகவும்அமைந்திருக்கும். யார் கண்டார்கள், அது வைகோவாகவும் இருந்திருக்கலாம். அந்த அரிய சந்தர்ப்பத்தை தவறவிட்டனர் தமிழ் நாட்டு மக்கள்.

சந்தர்ப்பத்தை தவறவிட்டது தமிழ் நாட்டு மக்கள் மாத்திரமல்ல, வைகோவும் கூடத் தான். நியாயமான காரணங்களுக்காக வைகோ தி.மு.க.வை விட்டு நீங்கினார் அல்லதுநீக்கப்பட்டார். தன் மகனுக்கு முடி சூட்டுவதற்காக கருணாநிதியால் காட்டுக்குத் துரத்தப்பட்டவர் வைகோ. ம.தி.மு.க.வை வைகோ ஆரம்பித்தது எல்லாம் சரிதான். கறை படியாக் கரங்கள் அவருடையவை. கடும்உழைப்பு, தொண்டர்களுடன் அணுக்கம், கம்பீரம் யாவும் இணைந்து தமிழ் நாட்டை கட்டியாளக்கூடியவர் வைகோஎன்ற கற்பனையை எம்மிடையே விதைத்தது. கருணாநிதிமீதான எமது அவநம்பிக்கைகளினால் வைகோ மீது பெரும்நம்பிக்கை கொண்டோம்.

வைகோ அப்படியே இருந்திருக்க வேண்டும். அதே கம்பீரத்துடன் விட்டுக் கொடுக்கா வீரத்துடன். நிச்சயமாக தமிழ் நாட்டில் மகத்தான சக்தியாக வளர்ந்திருப்பார் வைகோ. எப்போது அவர் ஜெயலலிதாவிடம் சரணாகதி அடைந்தாரோ, எப்போது அவர் எதையும் புரட்டாத ஒருவரை புரட்சித் தலைவி என்று அழைத்தாரோ அந்தக் கணம்அவர் தமிழ் மக்களின் நெஞ்சிலிருந்து இறங்கத் தொடங்கினார். அவரது கம்பீரம் உருக்குலைந்து போனது, உண்மையில் அக்கணம் நான் நம்பினேன் நமது தேசியத் தலைவரை உச்சியில் வைத்துக் கொண்டாடுவது எல்லாம் நடிப்போ என்று. தலைவர் பிரபாகரனை புகழ்ந்த அதே வாய் தானே. ஜெயலலிதாவை புரட்சித் தலைவி என்றது.

இப்போது வைகோ இன்னும் இறங்கிப் போவதனைப் பார்க்க மிகமிக அசிங்கமாக இருக்கின்றது. “கப்டன் விஜயகாந்த் நமது முதல்வர் வேட்பாளர்” என்று அறிவிக்கிறார் வைகோ. ஒரு சிங்கம் சிறு எலியின் முன் பவ்வியமாக எதிரில் குனிந்து நிற்கும் மர்மம் எனக்குப் புரியவில்லை. தம்பி பிரபாகரன் என்று ஆசை தீர அழைத்த வாய், கப்டன் விஜயகாந்த் என்று முழங்குவதைப் பார்க்கிறபோது என்னளவில் சிற்றெலியாகக் குன்றிப் போகிறார் வைகோ. அந்தக் கம்பீர மனிசனை எப்போது காண்பேன் இனி?

ஈழமக்கள் மத்தியில் கருணாநிதிக்கு இருக்கும் அவப்பெயர் இப்போதைக்கு நீங்குகிறபாடாக இல்லை. 2009 மே மாத ஈழத்தமிழர் இனப்படுகொலை நிகழ்ந்தவேளை கருணாநிதி நடந்துகொண்ட விதமே அதன் காரணம். யாவரும் சொல்கின்ற ஒரு விடயம், தனது கட்சியின் அத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களையும் பதவி விலகச்செய்திருக்க வேண்டும் என்பது. இந்திய மத்திய கூட்டாட்சியில் இருந்து விலகியிருந்திருக்க வேண்டும் என்பது மற்றையது. கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம்தான் யாவரையும் எரிச்சலும் அசூயையும் அடையச் செய்தது. தமிழ்நாட்டில் எழுந்த அனைத்துவகைப் போராட்டத்தையும் இரும்புக்கரம் கொண்டு அடக்கியமைபோன்றன கருணாநிதி மீது படர்ந்த கழுவப்பட முடியாத கறை எனலாம்.

யாவற்றுக்கும் ஒற்றைக் காரணம் உண்டு. கருணாநிதி தன குடும்ப நலன்மீது கொண்ட அதீத அக்கறை.

ஆனால் நாமும் ஒன்றை மறந்தும் மறுத்தும் விடுகிறோம். கருணாநிதி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தாலும்கூட, மத்திய அரசு, சிங்கள அரசுடன் இணைந்து தமிழர் மீது இனவழிப்புப் போரை நிகழ்த்தியே இருக்கும். நாம் எமது கையாலாகத்தனத்தினை கருணாநிதிமேல் சுமத்தி ஒதுங்கிப் போகிறோம்.

மறுபுறம், இனவழிப்புப் போர் நிகழ்ந்த சமயம் ஜெயலலிதா சொன்ன ஒன்றை நாம் மறந்துவிடலாகாது. ‘போர் ஓன்று நிகழ்ந்தால் பொதுமக்கள் கொல்லப்படத்தானே செய்வார்கள்’ இந்த வாக்கியம் ஹிட்லர், முசோலினி போன்றோர் உரைக்கும் வாக்கியத்துக்கு ஒப்பானது. பிராமணியக் கருத்துநிலை கொண்ட ஒரு பெண்ணால் அவ்வாறுதான் உரைக்க முடியும். சோ, இந்து ராம், மாலன் போன்றோர் உரைக்கும் வார்த்தை அது. அதற்கு முன்னால் கருணாநிதி `பாதி உண்ணாவிரதம்’ இருந்தது ஒன்றும் மோசமானது அல்ல. யாவும் இருக்கட்டுமன்.

தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக யார் வரவேண்டும்?வைகோவோ சீமானோ முதல்வர் ஆக வரப் போவதில்லை. விஜயகாந்த் வரவே வேண்டாம். கருணாநிதி, ஜெயலலிதா யார் வரவேண்டும்? அல்லது யார் வரக்கூடாது? ஜெயலலிதா வரக்கூடாது என்பேன். காரணம்:
பிராமணிய சக்திகளின் கூட்டு உரு அவர்.

எதேச்சதிகாரி. தமிழ்த்தேசியத்தின் முக்கிய எதிர்சக்தி. பெரும் ஊழல்வாதி. ஜனநாயக அரசியலைக் காலில் போட்டு மிதிப்பவர். மக்கள் வழங்கும் நம்பிக்கைக்குத் துளியும் பொறுப்பாளி ஆகாதவர். பிராமணிய சக்திகளைத் தவிர வேறெவரையும் மதியாதவர். மத்திய அரசாங்கத்துடன் போராடியோ ஒத்துழைத்தோ தமிழ்நாட்டுக்கான உரிமைகளைப் பெறாதவர். பொதுமக்கள் மீது கிஞ்சிற்றும் அக்கறை அற்றவர். மக்களின் மூடநம்பிக்கைகளையும் சீரழிவுக் கலாசாரங்களையும் நிறுவனரீதியாக வளர்ப்பவர். கட்சியில் திராவிடத்தின் பெயரை வைத்துக்கொண்டு திராவிடத்திற்கு எதிரான பணி புரிபவர். `தான்` எனும் தனிஒருத்திக்காகவே `இந்த உலகம்` எனும் இறுமாப்புக் கொண்டவர். மேலாக, அனைத்து மக்கள்திரளுக்கும் மேல் அடக்குமுறையினை ஒடுக்குமுறையினை ஏவி விடுபவர்.

இனியும் அவர் முதல்வரானால் இந்தக் குற்றச்சாட்டுக்கள் இன்னும் பன்மடங்காகப் பெருகும்.

இந்தக் குற்றச்சாட்டுக்களில் பல கருணாநிதிக்கும் பொருந்துகின்றன. கவனியுங்கள், முழுமையும் அல்ல பல என்றே சொன்னேன். அப்போ யார் முதல்வராக வரவேண்டும்? பதட்டப்படாத என் பதில் இதுதான்: கலைஞர் கருணாநிதி.