[dropcap]1.[/dropcap]
ஐக்கிய நாடுகள் மனித உரிமையாளர் ஆணையாளரினால் வெளியிடப்பட்ட சிறிலங்கா தொடர்பான விசாரணை அறிக்கை குறித்து தமிழ் அரசியற் செயற்பாட்டாளர்கள் மத்தியில் வெவ்வேறுவகையான கருத்துக்கள் வெளிப்பட்டிருக்கின்றன. இவ் அறிக்கை சிறிலங்காவின் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையினை நிராகரித்தமையினை அனைவருமே ஏற்றுக் கொள்கின்றனர். இதேவேளை கலப்பு நீதிமன்றப் பரிந்துரையை அனைவரும் ஏற்றுக் கொள்ளவில்லை.
உண்மையில் ஆணையாளரின் அறிக்கையின் நம்பகத்தன்மையும் நன்மதிப்பும் உள்நாட்டு விசாரணைப்பொறிமுறையினை நிராகரித்தமையிலேயே பெரிதும் தங்கியிருக்கிறது. இதனைப் புரிந்து கொள்வுதற்கு ஒரு எடுகோள் நிலைப்பாட்டை சிந்தித்துப் பார்ப்போம். சிறிலங்கா அரசதரப்பால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களைப் பற்றிக் குறிப்பிட்டு விட்டு சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. புதிய ஆட்சியாளர்கள் பொறுப்புக்கூறல் விடயத்தில் அக்கறையாக இருக்கிறார்கள். இதனால்நடைபெற்றிருக்கக்கூடிய குற்றங்கள் தொடர்பாக சிறிலங்கா அரசு அனைத்துலக தராதரத்துக்கேற்ப குற்ற விசாரணையை நடத்த வேண்டும் என்ற பரிந்துரையினை ஐக்கிய நாடுகள் மனித உரிமையாளர் ஆணையாளின் அறிக்கை வழங்கியிருப்பின் இவ் அறிக்கையின் நம்பகத்தன்மையும் நன்மதிப்பும் காற்றிலே போய் இருக்கும்.
இதனால் கலப்புப் பொறிமுறை தொடர்பான பரிந்துரை பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்ற பெருவிருப்பில் இருந்து மட்டும் எழுந்தது என்று நாம் கருத முடியாது. ஐக்கிய நாடுகள் மனித உரிமையாளர் ஆணையாளரின் அறிக்கையின் ஏற்புடைத்தன்மையினைப் பேணுவதற்கும் கலப்பு நீதிமன்றப் பரிந்துரை அவசியமாக இருந்திருக்கிறது. இருப்பினும் அறிக்கை சிறிலஙகா அரசால் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட அநீதிகள் பலவற்றை காத்திரமாகப் பதிவு செய்திருக்கிறது என்பதனையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
இவ் அறிக்கை அனைத்துலக குற்றவியல் நீதிவிசாரணைப் பொறிமுறை குறித்துப் பரிந்துரைக்காமையும், தமிழின அழிப்புத் தொடர்பாகக் காட்டியுள்ள மெத்தனமான போக்கும் செயற்பாட்டாளார்கள் பலருக்கு கவலையை அளித்துள்ளது. தமிழ் மக்கள் ஒரு தேசம் என்ற வகையில், தமது சுயநிர்ணய உரிமையினை வென்றெடுப்பதற்கு தமிழின அழிப்பு ஏற்றுக் கொள்ளப்படுதல் அவசியமானதென இவர்கள் கருதுகிறார்கள். இனஅழிப்பை ஏற்றுக் கொள்வதில் உள்ள அரசியல் விளைவுகள் காரணமாகவே தமிழன அழிப்பத் தொடர்பாக விசாரைணகளை நடத்தவதற்கு அனைத்துலச சமூகம் தயங்குகிறது என்ற கருத்தும் இவர்களிடம் உண்டு.
[dropcap]2.[/dropcap]
இந்த அறிக்கையின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்குமா என்பது குறித்து தமிழ் மக்கள் மத்தியில் ஆழமான சந்தேகம் உள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமையாளர் ஆணையாளரின் அறிக்கை வெளியாக முன்னரே உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை குறித்து அமெரிக்க வெளியுறவுத்தறைத் துணைச் செயலர் நிஷா பிஸ்வால் கருத்து வெளியிட்டு விட்டார். இதனால் பலம் வாய்ந்த அரசகளின் நகர்வுகளால்தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பது சாத்தியமற்றுப்போய் விடலாம் என்ற அச்சமும் உண்டு. உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையிலோ அல்லதுஅதற்கு நெருங்கிய பொறிமுறையிலோ சிறிலங்கா அரசு திட்டமிட்டு மேற்கொண்ட இனஅழிப்பு தனிப்பட்ட படைவீர்கள் சிலரின் அத்துமீறல்களாக குறுக்கப்படக்கூடிய ஆபத்தும் உண்டு.மேலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமையாளர் ஆணையாளரின் அறிக்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருப்பதால் புலிகள் அமைப்பில் போராளிகளாக இருந்தவர்கள் சிலரையும் இராணுவத்தினரின் எண்ணிக்கைக்கு நிகராக விசாரணை செய்வதன் ஊடாக தமது பக்க குற்றப் பொறுப்பை சிறிலங்கா அரசு நீர்த்துப் போகச் செய்து விடும்என்ற அச்சமும் பலரிடம் உண்டு.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையின் ஊடாகக் கிடைக்கக்கூடிய நீதி என்பது நிலாந்தன் குறிப்பிட்டவாறு `அரசுகளின் நீதிபீதான். அனைத்துலக சமூகம் என்று கூறும் போது அதில் அரசுகளே முக்கிய பாத்திரம் வகிக்கின்றன. ஐக்கிய நாடுகள் மன்றமேஅரசுகளின் அவைதான். இங்கு எல்லா நாடுகளுக்கும் உறுப்புரிமை இருக்கின்ற போதும் அதிகாரங்கள் சமத்துவமாக இருப்பதில்லை. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் வீட்டோ உரித்து இதற்கு நல்லதோர் உதாரணம். நாடுகள் வழங்கும் நிதிஉதவியும் இங்கு முக்கியம் பெறுகின்றன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையும் 47 நாடுகளைக் கொண்டஅரசுகளின் அவைதான். இங்கு மனித உரிமைகள் என்பது மொழியாக இருந்தாலும் இவற்றின் அடியில் அரசுகளின் நலன்கள் பொதிந்து கிடக்கும். இத்தகைய அரசுகளின் அவையிடம் இருந்துதான் தமிழ் மக்கள் நீதியைப் பெற்றுக் கொள்ளப் போராட வேண்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை வெளியாகிய பின்னர் இரண்டு வகையான செயற்பாடுகளை தமிழ் அரசியல் அமைப்புகள் செய்து வருகின்றன. ஒன்று கலப்புப் பொறிமுறையில் சர்வதேசப் பரிமாணத்தை அதிகரிக்கச் செய்யும் வகையிலான செயற்பாடுகள். மற்றையது கலப்புப் பொறிமுறை பயனன்றது என நிராகரித்து அனைத்துலக குற்றவியல் நீதி விசாரணையைக் கோரி நிற்கும் வகையிலான செயற்பாடுகள். இரண்டாவது உடனடியாக அனைத்துலக சமூகத்தின் அக்கறைக்குரியதாக இருக்கப் போதில்லை. முதலாவது விடயத்தில் அனைத்துலக சமூகம் சற்று அக்கறை காண்பிக்கும். ஆனாÖல் அரசுகளின் நலன்களின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகளில் எந்தளவு தாக்கத்தை இவை ஏற்படுத்தும் என்பது கேள்விக்குரியதுதான்.
[dropcap]3.[/dropcap]
தற்போது பேசப்படும் கலப்புப்பொறிமுறையும் சிக்கல் வாய்ந்த ஒரு நடைமுறையாகத்தான் உள்ளது. எந்த சட்ட நியாயாதிக்கத்தின் கீழ் இது இயங்கும் என்பதும் தெளிவாக வரையறுக்கப்படுவதில்லை. நான் அறிந்தவகையில் உள்நாட்டு சட்ட நியாயாதிக்கம் (National jurisdiction) அல்லது அனைத்துலக சட்ட நியாயாதிக்கம் (International jurisdiction) என்ற இரண்டு வகையான சட்ட நியாயாதிக்கங்களே உள்ளன. இவற்றின் ஊடாகவே மக்கள் நீதியைப் பெற்றுக் கொள்ள முயல்கிறார்கள்.கலப்பு சட்ட நியாயாதிக்கம் (Hybrid jurisdiction) என்று ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை.
கலப்பு நீதி மன்றங்கள் என்பது ஒரு பொறிமுறையே. சட்ட நியாயாதிக்கம் அல்ல. உள்நாட்டு சட்ட பொறிமுறையின் ஊடாக நீதி வழங்க முடியும் என்பதனை மக்களை நம்ப வைக்க முடியாதபோது, அனைத்துலக பொறிமுறையினை முழுமையாக பயன்படுத்த விரும்பாத போது இக் கலப்பு நீதிமன்றப் பொறிமுறை பரிந்துரைக்கப்படுகிறது.
இங்கு முக்கியமான விடயம் என்னவென்றால் இக் கலப்பு நீதிமன்றப் பொறிமுறை எந்தச் சட்ட நியாயாதிக்கத்துக்கு உட்பட்டு இயங்கப் போகிறது என்பதுதான். இது உள்நாட்டு சட்டநியாயாதிக்கத்துக்கு உட்பட்டுத்தான் இயங்கப் போகிறது என்றால் இதற்கும் உள்நாட்டுப் பொறிமுறைக்கும் பெரிய வேறுபாடுகள் எதுவும்இருக்கப் போவதில்லை. அனைத்துலக நீதிபதிகள் பங்குபற்றுவது பெரிய அதிசயங்கள் எதனையும் நிகழ்த்தப் போவதில்லை.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையின் தொடர்ச்சியாக, சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கா ஐக்கிய நாடுகள்மனித உரிமைப் பேரவையில் முன்மொழியும் தீர்மானத்துக்கூடாக சிறிலங்காவின் உள்நாட்டுசட்ட நியாயாதிக்கத்தின் அடிப்படையிலேயே யுத்த மீறல்கள் குறித்து விசாரணைகள் நடைபெறும் எனத் தெரிகிறது. இது அடிப்படையில் சிறிலங்காவின் உள்நாட்டு விசாரணைப்பொறிமுறையாகவே இருக்கும். இதன் ஊடாகத் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கப் போவதில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த சட்டநியாயாதிக்கத்தின் கீழ் விசாரணை நடைபெறவேண்டும் என்பது குறித்துப் பேசாது அனைத்துலக நீதிபதிகள் வேண்டும் எனப் பேசுகிறது. சிறிலங்காவின் சட்ட நியாயாதிக்கத்தின் கீழ் இடம் பெறும் விசாரணையில் பொதுநலவாய மற்றம் அனைத்துலுக நாடுகளில் இருந்து நீதிபதிகள் பங்கு பெறுவதனால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைத்து விடுமா ? கூட்டமைப்புத் தலைவர்கள்தான் பதில் கூற வேண்டும்.
இதில் கவலையான விடயம் என்னவென்றால்எல்லோரும் தத்தம் நலன்களில் அக்கறையாகஇருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட நாம் மட்டும்தான் இன்னும் ஏனைய தரப்புகளது நலன்களுக்குச் சேவகம் செய்து கொண்டிருக்கிறோம்.
இப்போது மனதைக் குடையும் கேள்வி இதுதான்!
தமிழ் மக்கள் அனைத்துலக சமூகத்திடம் நீதி கோரும் போராட்டத்தில் தோற்றுப் போய்க் கொண்டிருக்கிறார்களா?