தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட வரைபு : சில அவதானங்கள்

87

தமிழ் மக்கள் பேரவையின் அரசியற் தீர்வு தொடர்பான முதல் வரைபு வெளிவந்து மூன்றுவாரங்கள் கடந்துவிட்டன. ஜனவரி முப்பதியோராம் திகதியாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வெளியீட்டு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, மட்டக்களப்பு, திருகோணமலை நகரங்களிலும் அதனை அறிமுகப்படுத்தும் நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. இவ்வபைவங்களில் வழமைக்கு மாறாக அதிகளவு மக்கள் கலந்து கொண்டனர். இருப்பினும், பொதுவெளியில் இவ்வரைவு தொடர்பான கருத்துப் பரிமாற்றங்கள் எதிர்பார்த்ததைவிட குறைந்தளவிலேயே நடைபெற்றுவருவதனை அவதானிக்கமுடிகிறது. சிறிலங்கா அரசதரப்பிலிருந்தோ, வழமையாக இதுபோன்ற விடயங்களில் முந்திக்கொண்டு கருத்து வெளியிடும் சிங்கள `லிபரல்’ களிடமிருந்தோ எந்தக் கருத்தினையும் அறிய முடியவில்லை. எடின்பரோ பல்கலைக்கழக விரிவுரையாளரும், அண்மையில் எடின்பரோவில் கூட்டமைப்பினர் கலந்துகொண்ட `ஸ்கொற்லாந்தின் அதிகாரப்பரவலாக்கம்’ பற்றிய அறிவூட்டல் பட்டறையை ஒழுங்கு செய்தவர்களில் ஒருவருமான கலாநிதி அஸங்க வெலிக்கல ருவிற்றரில் இவ்வரைபு பற்றிய தனதுகருத்துகளைப் பதிவு செய்திருந்தார். அப்பதிவுகளில், இவ்வரைபானது ஆக்கபூர்வமான விடயங்களைக் கொண்டிருப்பதாகவும், அதன் உள்ளடக்கத்தில் வேறுபடுவதற்குரிய விடயங்கள் எதுவுல்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இவ்வரைபு குறிப்பிடும் இலக்கினை எட்டுவதற்கு `படிப்படியான அணுகுமுறையைக்’ கடைப்பிடிக்க வேண்டும் என்ற தனது கருத்தினையும் வெளியிட்டிருந்தார். இங்கு படிப்படியான அணுகுமுறை என அஸங்க குறிப்பிடுவதனை அடிக்கோடிட்டுக் கொள்ளவேண்டும். ஏனெனில், ஒரு அரைகுறைத்தீர்வு எவ்வாறு நியாயப்படுத்தப்படப் போகிறது என்பதனை இது கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளது.

இவ்வரைபுபற்றி, ஐ.பி.சி. தமிழ் தொலைக்காட்சியில் புளொட் அமைப்பின் சித்தார்த்தனைச் செவ்விகண்டபோது, தமிழ் மக்கள் பேரவையின் வரைபானது, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வரைபினை ஒத்திருப்பதாகக் கூறியிருந்தார். அண்மைக்காலத்தில் கூட்டமைப்பு அரசியற்தீர்வு தொடர்பான வரைபு எதனையும் வெளியிட்டிருக்கவில்லை. 2009ம்ஆண்டில் கனக ஈஸ்வரன், சுமந்திரன் உள்ளிட்டகூட்டமைப்பு ஆதரவு கொழும்புத் தமிழ் சட்டத்தரணிகளினால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புப் பற்றிய ஒரு ஆவணம் கசியவிடப்பட்டிருந்தது. அவ்வரைபையே சித்தார்த்தன் பேரவையின் வரைபுடன் ஒப்பிட்டிருக்கக்கூடும். அவ்வாறானால்,தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் சித்தார்த்தன் இவ்விரண்டு வரைபிலும் உள்ள முக்கியவேறுபாடுகளை அறிந்திருக்கவில்லையா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் கூட்டமைப்பின் தேர்தல்விஞ்ஞாபனங்களின் அடிப்படையில், அல்லது தமிழ் மக்கள் மத்தியில் கூட்டமைப்பின் தலைவர்கள் வெளியிடும் கருத்துகளை வைத்து, தமிழ்மக்கள் பேரவையின் அரசியல் வரைபுடன் கூட்டமைப்பின் தீர்வு யோசனைகளை ஒப்பிடமுடியும் என்பதனை மறுப்பதற்கில்லை.

லண்டனுக்கு வந்திருந்த சம்பந்தன், சித்தார்த்தனுடனான தனிப்பட்ட உரையாடலின்போது, பேரவையின் வரைபு தமக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பதாகக் கூறியதாக உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவல் உள்ளது. அதுபோல் அண்மையில் லண்டனில் தமிழரசுக்கட்சியின் ஆதரவாளர்கள் நடாத்திய கலந்துரையாடலிலும் இவ்வரைபுபற்றி வியந்து பேசப்பட்டதாக அக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஊடகத்துறை நண்பர் ஒருவர்தெரிவித்தார். ஆனால் இது பற்றி மேற்படிகுழுவைச் சேர்ந்த ஜேசன் என்பவருடன் தொடர்புகொண்டபோது, அவர் இதுபற்றி கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார். அதே சமயம், கூட்டமைப்பினரால் ஒரு எழுத்துமூலமான ஆவணத்தை வெளியிட முடியாத நிலையினை பேரவையின் வரைபு ஏற்படுத்தியுள்ளமை தமிழரசுக் கட்சி வட்டாரங்களில் பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போதைய சூழலில், (குறிப்பாக ஆறாம் திருத்தச்சட்ட மூலம் அமுலில் உள்ள நிலையில்) இதனைவிட அதிகமாக ஒரு வரைபினைத் தயாரிக்கமுடியாதுள்ளது. மறுபுறத்தில், கூட்டமைப்பு ஒருஎழுத்துமூலமான ஒரு வரைபை முன்வைக்குமாயின், அது தனது உண்மையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி ஒற்Ûயாட்சிக்குள் அதிகாரப் பகிர்வை நோக்கிய தீர்வை நோக்கியதாக அமைந்திருக்கும். ஆகவே இவற்றைவைத்துப் பார்க்கையில், தமிழ் மக்கள் பேரவைஉருவாக்கியுள்ள வரைபு முழுமையை அண்மித்தாக அமைந்திருப்பதே அது பற்றிய விமர்சனங்கள் அதிகளவில் எழாமைக்கான காரணம்என எடுத்துக் கொள்ளவேண்டியுள்ளது. இனி,பேரவையின் வரைபினைப் பார்ப்போம்.

இவ்வரைபு விடயத்தில் ஒன்றை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். அது என்னவெனில், பல்வேறுநாடுகளில் சட்டமாக்கப்பட்டுள்ள அல்லது கடைப்பிடிக்கப்பட்ட, சர்வதேச சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டே இந்த வரைபு தயாரிக்கப்பட்டுள்து. இதுபற்றி சுருக்கமாக்க் கூறுவதானால், இவ்வரைபில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்களுக்கு வேறுநாடுகளிலிருந்து முன்னுதாரணங்களைக் காட்டமுடியும்.

இரண்டு பகுதிகளாகப்பிரிக்கப்பட்டுள்ள இவ்வரைபில், ஒன்று, எத்தகைய தீர்வு முயற்சிக்கும் முன்னதாக சிங்கள – தமிழ் தேசங்களுக்கிடையில் சர்வதேச மத்தியஸ்துடனான ஒரு அரசியல் உடன்படிக்கையில் கைச்சாத்திடுதல் பற்றியது, மற்றயது,சுயநிர்ணய அடிப்படியிலான சமஸ்டி முறையிலான அதிகார அலகு பற்றியது. இவ்விரண்டு விடயங்களும் தமிழ் மக்களின் அரசியற் போராட்டமானது மீளவும் விட்ட இடத்திலிருந்து தொடருவதற்கான விருப்பினைக் குறிகாட்டிநிற்கிறது.

தமிழ் நெற் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளவாறு, இவ்வரைபானது வெளித்தரப்புகளைத் திருப்திப்படுத்தும் வகையில் தயாரிக்கப்ட்டிருந்தாலும், சில முக்கியவிடயங்களில் சமரசத்திற்கு இடமில்லை என்பதனை வெளிப்படுத்தியிருக்கிறது.

`ஒஸ்லோ ஆலோசனைகளில்’ குறிப்பிட்டுள்ளது போன்று `உள்ளக சுயநிர்ணய உரிமை’ போன்ற குழப்பமில்லாமல், முழுமையான சுயநிர்ணயஉரிமை வலியுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும்,ஆவணத்தில் பகுதி 1.4 இல் குறிப்பிடப்பட்டிருக்கும், `தமிழ் மக்கள் பாரதீனப்படுத்த முடியாத சுயநிர்ணய உரிமையைக் கொண்ட மக்கட் கூட்டமாவர். தனது சுயநிர்ணய உரிமையை ஏற்று அங்கீகரிக்குமிடத்து பிளவுபடாத ஒற்றுமையான இலங்கை அரசிற்கு தமிழ்மக்கள் தங்கள் பற்றுறுதியை வெளிப்படுத்துகின்றனர்’. என்ற விடயம் மீளவும் உள்ளக சுயநிர்ணய உரிமையை வேறுவிதமாகக் கூறுகிறதோ என்ற ஐயப்பாட்டை எழுப்புகிறது.

ஒற்றையாட்சியை மறுதலித்து, தமிழர் தேசம் சுயநிர்ணய உரிமைக்கு உரித்தான அலகாக கூட்டாட்சியில் இலங்கைத்தீவின் ஆட்சிமுறையில் இணைந்து கொள்கிறது என்பதனை ஆவணம் தெளிவாகக் குறிப்பிடுகிறது. ஒற்றையாட்சியில் அதிகபட்ச அதிகாரப்பரவாலக்கம் என்ற கூட்டமைப்பின் நிலைப்பாட்டை இவ்வாவணம் மறுதலிக்கிறது. தமிழ்மக்களை சுயநிர்ணய உரிமைக்கு உரித்தான மக்கள் கூட்டம் எனக் குறிப்பிடாமல்,`தேசம்’ என்றே குறிப்பிடுதல் அவசியமானது. இவ்வியடத்தில், பேரவையின் அங்கத்துவம் வகிப்பவர்களின் தனிப்பட்ட நபர்களின் கருத்துகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதுபோல் தெரிகிறது. இறுதி ஆவணத்தில் தமிழ்மக்கள் தேசம் என்றே குறிப்பிடப்படவேண்டும் என்பதே பலரதும் எதிர்பார்ப்பாக உள்ளது.

கூட்டமைப்பினர் கூறிவருவதுபோல் தமிழ்மக்கள் பகிரப்பட்ட இறைமையை கொண்டிருப்பதாகக் கூறாமல், பகுதி 2.1. இல் “இறைமை தனித்துவாமான மக்களுக்குரியதும் பாரதீனப்படுத்த முடியாததும் ஆகும். முழு சமஸ்டி அரசின் இறைமையும் அதன் அங்கத்துவ மக்கள் கூட்டங்களின் இறைமை மூலம் உய்த்தறியப்படுவதாகும்.” என தமிழ்மக்களின் இறைமைபற்றிக் குறிபிடப்பட்டிருப்பது இந்த ஆவணத்தின் ஒரு சிறப்பம்சம்.

இந்த ஆவணத்தில் காணப்படும் முக்கிய குறைபாடு என்னவெனில் பகுதி 21.1 இல் அவசரகால அதிகாரங்கள் பற்றிய விடயத்தில், “அரசியலமைப்பிற்கு முரணாக மாநில அரசாங்கமொன்று சமஸ்டியிலிருந்து பிரிவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது என்றும் அவ்வாறான பிரிவு உடனடியானதொன்று என மத்தியின் தலைவர் திருப்திப்படுமிடத்து, அவர் அவசரகால நிலையினைப் பிரகடனப்படுத்தலாம். அவ்வாறு பிரகடனப்படுத்துமிடத்து ஆளுநர் நிறைவேற்று அதிகாரங்களையும் மற்றும் முதலமைச்சரினதும் மாநில அமைச்சரவையினதும் அதிகாரங்களையும் அந்நிலமைகளுக்கு ஏற்றவாறு, கையகப்படுத்தலாம்.” எனக்குறிப்பிடப்பட்டிருக்கிறது. எடுத்த எடுப்பில், இதுஅரைகுறை கூட்டாட்சி முறையைக் கொண்டிருக்கும் இந்தியக் குடியரசின் சட்டப்பிரிவு 356 ஐ நினைவுபடுத்துகிறது (ARTICLE 356 OF THE CONSTITUTION) ஆனால் இவ்வரைபில் அரசியலமைப்பு நீதிமன்றத்தின் ஒப்பதலின்றி அவசரகால நிலை பிறப்பிக்கமுடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ள போதிலும்.அரசியலமைப்புக்கு முரணான சமஸ்டியிலிருந்துபிரிவதற்கான நடவடிக்கை எதுவென்பது பற்றிவிளக்கமளிக்கப்படவில்லை. இவ்விடயத்தில் சுயநிர்ணய உரிமைக்கு உரித்தான `மக்கள் கூட்டத்தின்’ நிலை எவ்வாறிருக்கும் ? அவ்வாறான சந்தர்ப்பத்தில் அவர்களது கருத்தறிய ஒப்பங்கோடல் முறையிலான வாக்கெடுப்பு நடாத்தப்படுமா? என்ற கேள்விகள் எழுகின்றன.

தமிழ் மக்கள் பேரவையின் அரசியற்தீர்வு யோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தயாரக இல்லை என்பதனை இந்த வரைபைத் தயாரித்தவர்கள் நன்கு உணர்வார்கள். இருப்பினும், சர்வதேச தரப்புகளால் மறுதலிக்க முடியாத ஒரு திட்ட வரைபினை கொண்டுவந்ததன் மூலம் தமிழ்மக்களின் அரசியல் வேணவாவை ஜயத்திற்கு இடமின்றி வெளிப்படுத்தியுள்ளார்கள். அதனைச் செழுமைப்படுத்தி இறுதி வரைபாகக் கொண்டுவருவது தமிழ் மக்களின் கைகளிலேயே விடப்பட்டிருக்கிறது.