தமிழ் மாவட்டங்களில் அதிகரிக்கும் டெங்கு,சிறிலங்கா அரசின் அசமந்த போக்கு

டெங்கு வைரசால் அதிக பாதிப்பை எதிர்கொள்ளும் தமிழ் மாவட்டங்கள்…

டெங்கு வைரஸ் காச்சல் இலங்கைத்தீவில் தொடர்ந்தும் சுகாதார சவாலை ஏற்படுத்திய வண்ணமே உள்ளது. நன்னீர் பகுதியில் உருவாகும் நுளம்பு வகையால் பரவும் இவ் டெங்கின் தாக்கம் அவ்அவ்வாண்டு நிலவும் காலநிலைக்கேற்ப மாறுபட்டாலும் அனைத்து மாவட்டங்களிலும் அதன் தாக்கம் உண்டு.

இவ்வாண்டு மே நடுப்பகுதி வரையிலான ஜந்து மாதங்களில் கொழும்பு மாவட்டத்தில் அதிகப்படியாக 2763 பேர் டெங்கு தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். அடுத்து இரண்டாவது இடத்தில் 2211 பேருடன் திருகோணமலையும் அடுத்து 2096 பேருடன் மட்டக்களப்பும் அடுத்து 1788 பேருடன் யாழ்ப்பாண மாவட்டமும் உண்டு.

அதாவது டெங்கு வைரஸ் தாக்கத்தில் முதல் நான்கு இடங்களில் மூன்றிடத்தை தமிழ் மாவட்டங்கள் பிடித்துள்ளன. ஆனால் சனத்தொகையில் யாழ்ப்பாணம் மாவட்டம் 16ஆவது இடத்திலும் மட்டக்களப்பு மாவட்டம் 17ஆவது இடத்திலும் திருகோணமலை மாவட்டம் 21ஆவது இடத்திலுமே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுமிடத்து மேற்க்கண்ட தமிழ் மாவட்டங்களே ஏனைய மாவட்டங்களை விட இதே காலப்பகுதியில் அதிகரிப்பை வெளிப்படுத்துகின்றன. இது அரச தரப்பிலான அசட்டையை வெளிப்படுத்துகிறதா? என்ற கேள்வியையும் எழுப்புகிறது. அதேவேளை அவ்வாறாயின் அதைக் கடந்தான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மக்களினதும் சுகாதாரத் துறையினரின் அசமந்தப் போக்கையும் கூட அது வெளிப்படுத்துகிறது.

சனத்தொகையில் குறைந்த 25ஆவது மாவட்டமாக முல்லைத்தீவும் 23ஆவது இடத்தில் கிளிநொச்சியும் இருந்தாலும் இவ்விரு மாவட்டங்களும் 2010 முதல் அனைத்து ஆண்டுகளிலும் குறைந்தளவு டெங்கு தாக்கத்தையே வெளிப்படுத்துகின்றன. இவ்வாண்டு இதுவரை டெங்கு தாக்கத்திற்கு உள்ளான 19474 பேரில் முல்லைத்தீவில் 64 கிளிநொச்சியில் 105 பேரிலான தாக்கத்தையே வெளிப்படுத்தியுள்ளது.

2011இல் ஆண்டு முழுமையாக முல்லைத்தீவு 19 கிளிநொச்சி 66 பேர் எனவும் 2016இல் கிளிநொச்சி 86 முல்லைத்தீவு 182 பேர் எனவும் கடைசி இடத்திற்கே இரு மாவட்டங்களும் போட்டியிட்டுள்ளன. 2009 இற்கு முற்ப்பட்ட காலத்தில் அமைந்த தமிழ் நிழல் அரசில் டெங்கு குறித்து தமிழ் மக்கள் தமிழீழ சுகாதாரத் துறையால் விழிப்பூட்டப்பட்டு அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் அவர்கள் முனைப்புடன் முறைமைப் படுத்தப்பட்டிருந்தமையே தற்போதும் அம் மக்கள் டெங்கு தாக்கத்தை தவிர்த்து வருவதற்கான காரணியாக அமையலாம்.

அவ்வாறாயின் கொழும்பு அரசுகளின் எதிர்பார்க்கப்படும் அசமந்தப் போக்கைக் கடந்து ஏனைய தமிழ் மாவட்டங்களிலும் மக்கள் விழிப்பூட்டப்பட்டு சமூகமாக தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த அதற்கான தலைமையை வழங்கப்போபவர்கள் யார்? அன்றைய பன்முகத் தலைமை மீது இன்று கல்லை வீசும் சிலர் தமிழ்மக்கள் நலன் என்பது டெங்கு வரை இருக்கிறது என்பதை எப்போது புரிந்து கொள்வார்கள் என்பதுவும் பெரும் கேள்வியே?